தீண்டாமை ஒழிப்பு போராட்டம்-மந்துவில்(பகுதி 18)

நான்,இதைப் பதிவு செய்ய தவறிவிட்டேன்.எமது ஊரில் தீண்டாமைக்கு எதிரான போராட்டம் நடைபெற்ற வேளையில் ஆசிரியர் அ.பொ.செல்லையா மட்டுவில் மகா வித்தியாலயத்தில் தமிழக பாணியில்,பாவாடை தாவணி மாணவிகள், அணியவேண்டும் என வற்புறுத்தினார்.அங்கே படிக்கும் மாணவர்கள் வறியவர்கள் எனவே பொருளாதார நெருக்கடியை அவர்களுக்கு கொடுக்கும்.எனவே இது வேண்டாம் என அராலியூர்ந.சுந்தரம்பிள்ளை வாதாட இது பெரும் மோதலுக்கு வழிவகுத்தது.இந்த மோதலில் தமிழரசுக்,கட்சி காடையர்கள் மாணவரகளோடு மோதினர்.இதில் மந்துவில்-மட்டுவில் வடக்கு மாணவர்கள் ஒன்றிணைந்து பலமாக போராடி வென்றனர்.

இதைத் தொடர்ந்து சரஸ்வதி பூசை தொடர்பாக போராட்டம் வெடித்தது.இதில் முதலாவது போராட்டம் 1967இல் ஆரம்பமானது.அந்த வருடம் அது தோல்வியில் முடிந்தது.அடுத்த வருடம் மந்துவில் ,மட்டுவில் மாணவர்கள் மிகவும் திட்டமிட்டு செயலாற்றினர்.இதில, கொடிகாமத்தை சேர்ந்த யோகராசா, யோகேஸ்வரி,இவர்கள் சகோதரங்கள்.கோவிய சமூகத்தை சேர்ந்தவர்கள்.தமது சமூகத்தை சேர்ந்த மாணவர்களை எமக்கு எதிராக செயல்படாமல்,பங்கேற்காமல் தடுப்பதில் முன் நின்றனர்.

பெண்கள் தேங்காய் துருவும்போது முதலில் உயர்சாதி மாணவிகளிடமிருந்து பறித்து துருவியதில் யோகேஸ்வரியும்,செல்லக்கிளியுமேஅதில் முன் நின்று செயற்பட்டார்கள்.அதைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதலில் உயர்சாதி மாணவர்கள் விரட்டி அடிக்கப் பட்டனர்.அந்த பாடசாலையில் சரஸ்வதி பூசைகள் நிறுத்தப்பட்டது.இந்த வெற்றி பன்றித்தலைச்சி அம்மன் ஆலயப் பிரவேச போராட்டத்துக்கு உத்வேகம் கொடுத்தது.

இதில் எமக்கு ஆதரவாக செயற்பட்ட யோகராசா என்ற இளைஞர் நமது ஊரவர் நடாத்திய தேனீர் கடை பிரவேசத்தை மிக சுலபமாக நடைமுறைக்கு கொண்டுவந்தார்.இவர் கொடிகாம்ம், அய்யாவின் உறவினர்.படிப்பு முடிந்தபின் அண்ணா தேனீர் கடை என ஒரு கடை திறந்தார்.எல்லோருக்கும் ஒரே கிளாஸ்.விரும்பினவன் வா.தாழ்த்தப்பட்ட மக்கள் அங்கே வாடிக்கையாளராக அவரின் வியாபாரம் களை கட்டியது.

மெதுவாக எல்லாக் கடைகளும் நடைமுறைக்கு வந்தன.நம்மை எதிர்த்த மல்லாகத்தான் கடைகூட திறந்தபோதும் யாரும் கவனிக்கவில்லை.உண்மையில் யோகராசா பாராட்டப்பட வேண்டியவர்.இவர் தமிழரசுக்கட்சியின் தீவிர ஆதரவாளர்.இவர் இது மட்டுமல்ல தமது வீட்டு வைபவங்களிலும் பெரும் சவாலாக நடைமுறைப்படுத்தி காண்பித்தவர்.இவரது மைத்துனர் எனது சகோதர்ரின் சக மாணவ நண்பன்.7வதை தொடக்கம் பல்கலைக்கழகம் வரை.

(தொடரும்….)

(விஜய பாஸ்கரன்)