தேசியவாத முதலாளித்துவம்: உலகமயமாக்கலிலிருந்து விடைபெறல்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

பூமி, சூரியனைச் சுற்றுவதோடல்லாமல் தன்னைத் தானேயும் சுற்றி வருகிறது. அதேபோலவே, நிதி மூலதனமும் புதிய புதிய வழிகளில் தனக்கான போக்கிடத்தைத் தேடினாலும் செல்லக்கூடிய இடங்கள் மட்டுப்பாடானவை. இதனால், செல்வதற்கான வழிகளை அது மாற்ற வேண்டி ஏற்படுகிறது. இது இயற்கை நிகழ்வல்ல. தொடர்ந்து மாற்றத்துக்குள்ளாகும் உலக அரங்கில், இது தவிர்க்கவியலாததாகிறது. அதேபோல, ஏற்படுகின்ற நெருக்கடிகள் இம்மாற்றங்களை விரைவுபடுத்துவதோடு குழப்பத்துக்கும் நிச்சயமின்மைக்கும் ஆளாக்குகின்றன. இதுவே இப்போது நடந்தேறுகிறது.

உலகமயமாக்கல் இப்போது பாரிய விமர்சனங்களுக்கு உட்பட்டுள்ளது. நிதி மூலதனம் வினைத்திறனுள்ள முறையில் செயற்பட இயலாமைக்கு உலகமயமாக்கலே காரணம் எனவும் அத்தோடு சேர்ந்தியங்குகின்ற திறந்த பொருளாதார கட்டமைப்புகள் பற்றிய மாற்றுக்கருத்துகள் வலுப்பெற்று, உலகப் பொருளாதார ஒழுங்கை மீள்கட்டமைக்கின்ற திசையில் உரையாடல்கள், கொள்கை மாற்றங்கள், இவைசார் அரசியல் என்பன நகர்ந்துள்ளன.

இவை இன்னொரு வகையில், உலகமயமாக்கலின் முடிவுக்கு அறைகூவல் விடுக்கின்றன. இன்னொரு வகையில் சொல்வதானால், கடந்த அரை நூற்றாண்டு காலமாக ஏகாதிபத்தியத்தைக் காவிச்செல்வதோடு மட்டுமல்லாமல், தக்கவைக்கும் கருவியாக அதன் பயன் முடிவுக்கு வந்துள்ளது எனச் சொல்லவும் இயலும்.

வரலாற்றில் முதன் முறையாக நிதியால், இராணுவத்தால், நிறுவனங்களால், தத்துவங்களால் மேலாதிக்கம் செய்கின்ற அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் தலைமை தாங்கப்பட்டு, மிக வெளிப்படையான முறையில் மூலதனத்தால் உலகமயமாக்கப்பட்ட நவீன பேரரசாக, உலகமயமாக்கல் தோற்றம் பெற்றது. இது நிதிமூலதனத்தின் வரலாற்றில் புதிய கட்டமாகும்.

கடந்த நூற்றாண்டில், இடம்பெற்ற இரண்டு உலக யுத்தங்கள் அக்காலப்பகுதியில் உலகின் வலிய நாடுகளாக இருந்த நாடுகளின் பொருளாதாரத்தைச் சிதைத்தன.

ஆனால், அமெரிக்க மண்ணில் எந்த யுத்தமும் நடைபெறவில்லை. இரண்டு உலகப் போர்களுக்கு இடைப்பட்ட காலத்தில், அமெரிக்கா ஏனைய நாடுகளை விட மிகவும் வேகமாக வளர்ந்தது. இரண்டாம் உலக யுத்த காலத்திலிருந்து மற்றப் பகுதிகளைச் சேர்ந்த வளர்ச்சியடைந்த முதலாளித்துவத்தின் அடிப்படைக்கான ஆதாரங்களும் இரண்டாம் உலக யுத்த காலத்திலிருந்து அமெரிக்காவின் தயவிலேயே இருந்தன.

இவையனைத்தும் உலக அரங்கில் நிதி மூலதனத்தைக் கருவியாக்குவதனூடு தன்னிகரற்ற நிலையை அடைவதற்குரிய வழியை அமெரிக்கா வேண்டி நின்றது. இதன் கருவியாக உலகமயமாக்கல் உருப்பெற்றது. இதற்குக் காரணியான சில முன்நிபந்தனைகளை இங்கு நோக்கல் தகும்.

1. பிரிந்து கிடக்கும் பழைய கொலனிய சாம்ராஜ்யங்களிலிருந்து வெளிவருவதன் மூலம், உலக முதலாளித்துவம் ஒரு தனி மேலாதிக்கத்தின் கீழ் ஒன்றிணைக்கப்பட வேண்டிய தேவை இருந்தது. இதைச் செய்து முடிக்க, அதற்கு ஏற்ற தயார் நிலையிலுள்ள ஓர் ஒப்புயர்வற்ற அதிகாரம் தேவைப்பட்டது.

2. சோசலிச அரசுகள் கலைக்கப்பட்டு, அவை மீண்டும் முதலாளித்துவச் சந்தைக்குள் கொண்டு வரப்படுவதன் மூலம் உலகம் உண்மையிலேயே உலகமயமாக்கப்பட வேண்டியிருந்தது.

3. முன்னாள் கொலனிகள் முதலாளித்துவச் சந்தையை ஆழமாக்கும் வகையில் தொழில்மயமானதாக மாறுவது அவசியமாகியது.

4. உலக அளவில் முதலாளியச் சந்தைகளை ஒருங்கிணைக்கவும் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்குத் தொழில் மூலதனத்தைக் கொண்டு செல்லவும் புதிய வகையிலான தொழில்நுட்பம் தேவைப்பட்டது.

5. அதுபோல, உலகம் முழுவதும் பெருகி வருகிற, பெருமளவும் மறைந்திருந்து தாக்குகின்ற, சிறிய எதிரிகளைச் சக்தி வாய்ந்த முறையில் வேகமாகத் தாக்கியழிக்கக் கூடிய கண்காணிப்புடன் கூடிய பாதுகாப்பு வழங்கக்கூடிய தொழில்நுட்பங்கள் அவசியமாகின.

6. இவற்றின் அடிப்படையில், உருவாகின்ற மாதிரிக்கு தத்துவார்த்த அடிப்படையில் அங்கிகாரம் வழங்கப்பட வேண்டியதோடு, அம்மாதிரியைப் பண்பாடு ரீதியில் ஏற்கச் செய்ய வேண்டிய தேவையும் பிரதானமானது.

உலகத்தை முழுமையாக இணைக்கும் நிதியமைப்பே இந்தப் பேரரசை ஒன்றுபடுத்தும் கருவியாகும். மூலதனத்தின் நேரடி ஆதிக்கத்திலிருந்து இந்த உலகின் எந்தவொரு முக்கிய இடமும் தப்பவில்லை என்கிற வகையில், சோவியத் யூனியன் கலைந்து போனதும், உலகச் சந்தையோடு சீனா முழுமையாக ஐக்கியமடைந்ததும், எல்லைகளற்ற வகையில் இந்தப் பேரரசு, உலகம் முழுவதும் விரிந்து பரவ வழிவகுத்தது.

சந்தை பரவலாக விரிவுபடுத்தப் பட்டதோடு, தீவிரமாக ஆழப்படுத்தப்பட்டது. எனவே, முன்னாள் கொலனிகள் ஓரளவு தொழில்மயமாவதும் உலகின் பெரும்பகுதி விவசாயம், பணப் பொருளாதார அடிப்படையில் மாற்றம் கண்டது.

உலகம் முழுவதும், ஒரே வித மதிப்பு விதியின் கீழ் திறமையாகக் கொண்டு வரப்பட்டது. ஆயினும், இந்த விதியானது உலகம் முழுவதும் அந்தந்தப் பகுதிக்கான மற்றும் தேசத்துக்கான ஊதியங்கள் மற்றும் விலைகள் என்ற அளவிலேயே நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

வொஷிங்டன் டி.சி, இந்தச் சாம்ராஜ்யத்தின் தலைநகராகும். இது நியூயோர்க் நகரத்தோடு சேர்ந்து, அமெரிக்காவின் தலைநகராக மட்டுமின்றி, ஏகாதிபத்திய இறையாண்மைக்கான முக்கிய நிறுவனங்களான ‘வோல் ஸ்ற்றீற்’ (Wall Street), சர்வதேச நாணய நிதியம் (International Monetary Fund), உலக வங்கி (World Bank), உலக வர்த்தக நிறுவனம் (World Trade Organisation) என்பவற்றின் தலைமைப்பீடங்களாகவும் உள்ளது.

இந்த முழுக் கட்டடமும் சிக்கல் மிகுந்த விதிகள் மற்றும் வழிமுறைகள் ஆகியவற்றுடன் கூடிய வகையில் ஒன்றுடன் ஒன்று இடைவெட்டுகின்ற இரண்டு அம்சங்களின்மேல் எழுப்பப்பட்டது.

முதலில் உலகைச் சுற்றி, குறிப்பாக ஏகாதிபத்திய ஆளுகைக்கு உட்பட்ட உலகில், சர்வதேச நாணய நிதியம், உலகவங்கி, சர்வதேச நிதி நிறுவனங்கள் போன்ற கட்டுப்படுத்தும் அமைப்புகளின் வாயிலாக பல்வேறு கடமைகளையும் கட்டுப்பாடுகளையும் விதிக்கும் ஓர் உலக அரசாங்கம் மிக வேகமாக உருவெடுத்தது.

மூன்றாம் உலகில் உலகமயமாக்கல் என்பதை இந்த அமைப்புகள் அந்நாடுகளில் உலகமயாக்கலின் விளைவால் உருவான கடன் நெருக்கடியைப் பயன்படுத்தி நவீன தாராளமயம் என்ற உலக ரீதியிலான கட்டுப்பாட்டு அமைப்பு மூலம் நடைமுறைப்படுத்தின.

இவ்வாறு வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருந்த நிதி மூலதனத்தின் உலக அரசியல் நிகழ்வுகள் மீதான கட்டற்ற நேரடியான மற்றும் மறைமுகமான கட்டுப்பாடு 2008இல் உருக்கொண்ட உலகப் பொருளாதார நெருக்கடியோடு பாரிய நெருக்கடியை எதிர்கொண்டது.

இதனைத் தவிர்ப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட பிணையெடுப்புகள் வெற்றியளிக்காத நிலையில், மூலதனம் செயற்படுகின்ற முறை மாற்றங்களுக்கு உள்ளாகத் தொடங்கியது. இம்மாற்றம் முதலாளித்துவம் முன்பெப்போதும் சந்தித்திராத பின்னடைவைக் கண்டிருப்பதைக் கோடுகாட்டியது.

முதலாளித்துவத்தின் தோல்வியை நோக்கிய பாதையானது, தீவிர வலதுசாரிக் குழுக்களின் கரங்களைப் பலப்படுத்தின. இதன் விளைவால் மேற்குலக நாடுகள் எங்கும் தீவிர வலதுசாரி, வெள்ளை நிறவெறி, குடியேற்றவாசிகளுக்கு எதிரான எனப் பல்வகையில் வெளிப்படத் தொடங்கியது. இது தேசியவாதத்துக்கு மீண்டும் புத்துயிரளித்ததோடு முதலாளித்துவம் மீண்டும் தேசியவாதத்தைத் துணைக்கழைத்ததைச் சுட்டி நின்றது.

தேசியவாதத்துக்கும் முதலாளித்துவத்துக்கும் இடையிலான உறவு மிக நீண்டது. முதலாளியம் ஏகாதிபத்தியமாக விருத்தியடையத் தொடங்கிய காலத்தில், முதலாளியத்துக்குத் தேசியம் பயனுள்ளதாக இருந்தது. ஆக்கிரமிப்புப் போர்களையும் கொலனி, அரைக் கொலனி நாடுகளின் ஆதிக்கத்தையும் நியாயப்படுத்தத் தேச நலன் தேவைப்பட்டது. முதலாம், இரண்டாம் உலகப் போர்களில் தேசநலனும் தேசப்பற்றும் வலியுறுத்தப்பட்டன.

ஐரோப்பிய ஒன்றியம் உருவான போது, ஐரோப்பிய நாடுகளின் தேச அடையாளங்கள் யாவும், ஐரோப்பிய அடையாளத்தினுள் கரையும் எனச் சொல்லப்பட்டது. ஆனால், அவ்வாறு நிகழவில்லை. நிச்சயமாக முதலாம், இரண்டாம் உலகப் போர்க் காலங்களில் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வந்த தேசிய உணர்வுகள் உலகமயமாக்கலுடன் குறைவடைந்தன.

ஆனாலும், முதலாளியம், தன் ஏகாதிபத்திய, பன்னாட்டு முதலாளிய வடிவிலும், தேச அரசு சார்ந்த தன் வேர்களை முற்றாக அறுத்து விடவில்லை. எனவே, முதலாளியப் போட்டிக்கு இன்னமும் ஒரு தேசியப் பரிமாணம் உள்ளது. அது அண்மைய பொருளாதார நெருக்கடியின் போது மீண்டும் வெளிப்பட்டது.

அதன் நீட்சியையே இப்போது காண்கிறோம். முதலாளித்துவம் பொருளாதார விளைவுகளுக்கு முகம்கொடுக்க இயலாமல், மக்களின் கவனத்தைத் திசைதிருப்பு முகமாக, அது நாட்டின் பிற தேசிய இனங்களுக்கு அல்லது மதச் சிறுபான்மையினருக்கு அல்லது அயல் நாடெதற்கும் எதிரான கடும் போக்கை மேற்கொள்ள முயல்கிறது.

ஏகாதிபத்தியம் அதன் விளைவான முரண்பாடுகளைத் தனக்குச் சாதகமாக்கிக் கொள்ளுகிறது. அது மட்டுமில்லாமல் அதுவரை சிநேக முரண்பாடுகளாகவே இருந்து வந்த தேசிய இன, மொழி, மத, பிரதேச, சாதிய முரண்பாடுகளை எல்லாம் பகை முரண்பாடுகளாக்கி, அதில் ஒரு தரப்பையோ இன்னொரு தரப்பையோ ஆதரிப்பது போல தோற்றம் காட்டுகிறது.
அதன்மூலம் தனது இருப்பைத் தக்க வைக்கிறது. இன்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நடவடிக்கைகளை இதன்மூலம் விளங்கிக்கொள்ள இயலும்.

இதில் கவனிக்க வேண்டியது யாதெனில், ஒடுக்குவோரின் தேசியவாதமும் ஒடுக்கப்பட்டோரின் தேசியவாதமும் ஏகாதிபத்தியத்தின் துணையுடன் தங்கள் தங்கள் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள முயல்வதன் பயனாக, அமைதியான முறையில் தீர்க்கப்படக் கூடிய முரண்பாடுகள் பகைமையாக மாற்றப்படுகின்றன. இவை பொருளாதார அடிப்படையிலான முரண்பாடுகளுக்கு வேறொரு முகத்தை வழங்குகின்றன.

இன்று திறந்த சந்தையும் கட்டற்ற வர்த்தகமும் விமர்சனத்துக்கு உள்ளாகின்றன. ஆனால், அவை முதலாளித்துவத்தின் அடிப்படைகளாக விமர்சனத்துக்குள்ளாகவில்லை.

மாறாக உலகமயமாக்கலின் தோல்வியின் அடிப்படையில் அவை விமர்சிக்கப்படுகின்றன. குறிப்பாக, கடந்த ஆண்டு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு எதிராக அரசாங்கங்கள் செயற்படுவது நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.

அரசு மீண்டும் தனது கட்டுப்பாட்டை மீளப் பெறுவதை நோக்கிச் செல்ல முனைகிறது. கட்டற்ற வர்த்தகத்துக்கான தடைகள் உலகின் முதனிலைப் பொருளாதாரங்களாலேயே அதிகம் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

இன்று, அரசுகள் தன் காக்கும் கரங்களை அகல விரித்துள்ளன. பொருளாதாரத் தடைகள், இறக்குமதிக்கான அளவுகோல்கள், சுங்க வரி விதிப்பு, அனுமதி வழங்குதலில் கட்டுப்பாடு, தொழில்நுட்பக் கட்டுப்பாடுகள், அந்நியச் செலாவணி மட்டுப்பாடுகள், வந்தேறு குடிகளுக்கு வேலைவாய்ப்பில் பாரபட்சம் காட்டல் போன்றன நடக்கின்றன.

அரசு ‘ஆயா அரசு’ என்கிற நிலையிலிருந்து மீண்டும் அதிகாரத்தைப் பிரயோகிக்கக் கூடியதாக உள்ளது. இதை வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளில் காணக்கூடியாக உள்ளது.

இவ்விடத்தில், இத்தாலியின் பெனிட்டோ முசோலினியின் கருத்தொன்றை நினைவுகூர்வது தகும். “பாசிசம் என்பதை கோர்ப்பரேட்டிசம் (பெருநிறுவனவாதம்) என அழைப்பதே பொருத்தமானது. ஏனெனில், அது உண்மையில் அரசினதும் பெருநிறுவன அதிகாரத்தினதும் இணைப்பாகும்”.