வடக்கு முதலமைச்சர்: உள்ளூர் தீர்மானிக்கும் வியடமல்ல

(க. அகரன்)

உலக அரங்கில், அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், இலங்கை போன்ற மூன்றாம் உலக நாடுகளில் அதன் தாக்கங்கள் அதிகமாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. மூன்றாம் உலக நாடுகளைப் பொறுத்தவரை, அதன் அரசியல் நிலைப்பாடுகள், உள்ளூரில் நிர்ணயிக்கப்படுவதில்லை என்ற கருத்தியல் பரவலாகவே உள்ளது. ஏனெனில், அதன் இயங்கு நிலை தொடர்பிலும் அதன் ஸ்திரத்தின் பெறுமதி தொடர்பிலும், அதைத் தீர்மானிப்பது வல்லரசு நாடுகளின் அல்லது அயலில் உள்ள பலம் பொருந்திய நாடுகளின் கைகளிலேயே உள்ளது என்பதே உண்மை.

இந்த வகையில், இலங்கையின் தேசிய அரசியலை, மூன்று நாட்டு அணிகள் நிர்ணயம் செய்வதற்கான மும் முனைப்போட்டியில் ஈடுபட்டுள்ள அரசியல், பொருளாதார செல்நெறியை அதன்போக்கில் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

இந்தியா, தனது வல்லாதிக்கத்தை தெற்காசிய நாடுகளில் நிலை நிறுத்திக்கொள்ள, தன்னாலான அழுத்தங்களைப் பிரயோகிக்கும் நிலையிலுள்ளது.

சீனா, தனது பிராந்தியப் பாதுகாப்பு மற்றும் பொருளாதார விரிவாக்கலும் அதன் ஸ்திரத்தன்மையை பாதுகாத்தலும் என்ற போக்கில் முன்னகர்கின்றது.

உலக வல்லாதிக்க சக்தியான அமெரிக்கா, இந்நாடுகளுக்கும் மேலாக, தனது பிராந்திய இராணுவ நலன்களுக்கு அப்பால், தனது அரசியல் ஆளுமையை வெளிப்படுத்தித் தக்கவைப்பதற்காக இலங்கையில் தனது அரசியல், இராணுவ ஆதிக்கங்களைச் செலுத்த முனைகின்றது.

இந்த வகையில், பசுபிக் – ஆசிய பிராந்தியங்களின் பாதுகாப்புக்கான கட்டளைப்பீட கப்பலை, இலங்கைக்கு அண்மையில் நிலைநிறுத்தியுள்ள அமெரிக்கா, இலங்கையின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மற்றும் நிதி அமைச்சர் ஆகியோரை, ஹெலிகொப்டரில் அழைத்துச்சென்று, தனது கட்டளைப்பீட கப்பலைக் காட்டியிருந்தமைக்கான உள்நோக்கம், காரணங்களை அறிந்துகொள்ள வேண்டும்.

வெறுமனே விருந்தோம்புவதற்காகவோ அல்லது பொழுதுபோக்குச் சுற்றுலாவாகவோ கட்டளைப்பீட கப்பலுக்கு இவர்கள் அழைத்துச் செல்லப்படவில்லை.

பிராந்தியத்தில் தங்களுடைய பலத்தையும் இலங்கை போன்ற நாடுகள், தங்களது சொற்படி கேட்டுநடப்பது நல்லது என்ற எச்சரிக்கை சமிக்ஞையையும் வழங்குவதற்காகவுமே இந்த நடவடிக்கையை அமெரிக்கா மேற்கொண்டிருந்தது.

இவ்வாறாக இலங்கையின் தேசிய அரசியலின் போக்கை நிர்ணயிப்பதில் வேறு நாடுகளின் தலையீடுகள் இருக்கும் நிலையில், இலங்கையின் பிராந்திய மட்டத்தில் முக்கியமாக மாகாண அரசியலில், மாத்திரம் தனது ஆதிக்கத்தை, அயல் நாடுகள் செலுத்தாது இருந்து விட முடியுமா என்ற கேள்வி இருக்கச்செய்கின்றது.

குறிப்பாக, தம்மால் நிர்ணயிக்கப்படும் தேசிய அரசியலுக்கு, மாகாண அரசியலால் தாக்கமோ பங்கமோ ஏற்படாது இருப்பதற்கான வேலைத்திட்டத்தையும் அந்த மறைமுகச் சக்திகள் செய்யத்தவறாது என்பதே உண்மை.

இந்த வகையிலேயே வடக்கு அரசியல் களத்தையும் வெறுமனே உள்ளூர் அரசியல் சக்திகள் நிர்ணயித்து விட முடியாது என்பதே உண்மை. வடக்கு அரசியலை அல்லது தமிழர்களின் அரசியல் செயற்பாட்டைக் காலத்துக்குக் காலம், தமக்கான வியூகங்களில் இந்தியா மாற்றியமைத்து வந்துள்ளமை கண்கூடு.

அந்த வகையில், வடக்கு மாகாணசபைத் தேர்தலிலும் சரி, அதைத்தொடர்ந்து வரும் செயற்பாடுகளிலும் சரி, இந்தியாவின் தாக்கம் அதிகமாகவே இருந்துள்ளது.

இந்தியத் துணைத்தூதராகச் செயற்பட்ட பலரும் வடக்கு முதலமைச்சரின் நிழலாக, பின்தொடர்ந்து சென்ற சந்தர்ப்பங்களைக் கடந்த காலங்களில் கண்டிருந்தோம்.

இந்த வகையில், வடக்கில் தற்போது சூடுபிடித்துள்ள முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கான விடையையும் இந்தியாவே கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை என்றே கொள்ளலாம்.

ஏனெனில், தமிழர் தரப்பில் ஒரு வலுவான அரசியல் சக்தியொன்றை ஏற்படுத்த வேண்டிய தேவை இந்தியாவுக்கு உள்ள போதிலும், அது தமக்குச் சாதகமானதாக அமையவேண்டும் என்ற கருத்தியலையும் அவர்கள் கொண்டுள்ளனர்.

இந்த வகையில் தற்போதைய மாகாணசபை, இந்தியாவுக்கு ஏற்றாற்போல் செயற்படுகின்றதா என்பதான சந்தேகம் அவர்களுக்கே இருப்பதற்கான வாய்ப்புள்ளது. ஏனெனில், தமக்குள்ளேயே முட்டிமோதி, நீதிமன்றம் வரை சென்றுள்ள மாகாணசபையும் அதன் முதலமைச்சரும் சூட்சுமமான இராஜதந்திர நகர்வுகளுக்கு ஏற்றவர்களாக இல்லை என்பதைப் பல தடவைகளில் நிரூபித்து விட்டனர்.

இந்தியாவின் கருத்தியலை ஏற்றுச்செல்லும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் தலைமையும் மாகாண முதலமைச்சரின் சில அறிக்கைகளாலும் கருத்துகளாலும் திக்குமுக்காடிப்போயுள்ளன. இதன் காரணமாகத் தொடர்ந்தும் தற்போதைய முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை அரியாசனத்தில் வைத்து அழகுபார்க்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரும்பாது என்பது மாத்திரமல்ல, இந்தியாவும் விருப்பம் கொள்ளாது என்பதே உண்மை.

இந்நிலையில், வடக்குத் தமிழர் அரசியல் பரப்பில், யார் முதலமைச்சர் வேட்பாளர் என்ற தேடல் ஆரம்பித்துள்ள நிலையில், மீண்டும் விக்னேஸ்வரனே என்றும் மாவை சேனாதிராஜாவே என்றும் ஊகங்கள் கிளப்பப்பட்டாலும் கூட, மாவை சேனாதிராஜாவே இறுதித் தெரிவாக இருக்க கூடும் என்ற ஐயம் பெரும்பாலான மக்களிடம் காணப்படுகிறது.

இந்நிலையில், விக்னேஸ்வரனைப் புறந்தள்ளி, புதிய அரசியல் களத்தை உருவாக்கி விடக் கூடாது என்பதில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவதானமாக உள்ளது. இதனால், விக்னேஸ்வரனை மீண்டும் தமக்குள் அழைப்பது போன்றதான தோரணைகளையும் கூட்டமைப்பு வெளிப்படுத்தி வருகின்றது.

சி.வி. விக்னேஸ்வரன், புதிய கூட்டு ஒன்றை ஆரம்பிக்க முடியாத சூழ்நிலையில் தற்போது உள்ளமையை, உணர்ந்து கொள்ளவேண்டும். ஏனெனில், அவர் டெனீஸ்வரனால் தொடரப்பட்ட வழக்கில் சந்தித்துள்ள சிக்கல் நிலைமைகளால், தனது முதலமைச்சர் பதவியைகூட இராஜினாமா செய்து விடுவோமா என்கின்ற நிலைக்குத் தள்ளப்பட்டு, சிலருடன் ஆலோசனையை நடாத்தியிருந்தார்.
அதுமாத்திரமின்றி, அவரால் முழுமையாக நம்பப்பட்ட தமிழ் மக்கள் பேரவையும் கூட, இன்று அவரை நட்டாற்றில் விட்டு, அவரவர்கள் தமது பிழைப்பைப் பார்க்கத்தொடங்கியுள்ளதை அவதானிக்க முடிகின்றது. இந்நிலையில், விக்னேஸ்வரனால் தனித்தோ அல்லது கூட்டுச்சேர்ந்தோ மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் நிலையில் இல்லை.

இதற்கும் மேலாக, தந்தை செல்வாவின் மகனும் ‘ஒபர்’ நிறுவனம் எனும் இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் தொடர்பாகக் கரிசனை கொண்டு செயற்படும் நிறுவனத்தின் தலைவருமான சந்திரஹாசனும் வடக்கு மாகாண சபை முதலமைச்சராகப் போட்டியிடுவதற்கான வாய்ப்புள்ளதாகப் பலராலும் பேசப்படுகிறது.

சந்திரஹாசன், இந்தியாவின் செல்லப்பிள்ளை என்பது மறுப்பதற்கில்லை. இந்தியாவின் மேல் மட்டத்துடன் தொடர்புள்ள ஒருவராக காணப்படுகின்றமையால் இந்தியா இவரை விரும்புவதற்கு வாய்ப்புள்ளது. இந்தத் தீர்மானம் இறுதியில் பிரேரிக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஏனெனில், சந்திரஹாசன் இந்தியாவின் கருத்தியலோடு செல்லக்கூடியவர் என்பது மாத்திரமின்றி, இராஜதந்திர செயற்பாடுகளில் கைதேர்ந்தவராகக்கூட உள்ளார். எனவே, இது சாத்தியமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்கவேண்டிய நிலையுள்ளது.

இதற்குமப்பால், அரசியல் முதிர்ச்சியும் இராஜதந்திர நகர்வுகளில் பட்டறிவும் கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர், இவ்விடயத்தில் மௌனம் காத்தே வருகின்றார். அவர் கொண்டுள்ள நிலைப்பாடானது, எவரது கோபமூட்டல்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் வதந்திகளுக்கும் எடுபட்டு, ஆக்ரோஷமாக வார்த்தைகளை வெளிவிடும் மன நிலையில் இல்லை.

இந் நிலையில், தற்போதைய மாகாணசபை பல்வேறு விமர்சனங்களுக்கு உட்பட்டுக் காணப்படும் நிலையில், எதிர்வரும் மாகாணசபை ஆட்சி, தேசிய கட்சிகளின் அதிக பிரசன்னத்துடன் தொங்கு ஆட்சியாக அமையக்கூடிய சூழ்நிலைகளையும் மறுப்பதற்கில்லை.

தேசியக்கட்சிகளைப் புறந்தள்ளி, தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சி அமைக்கும் வல்லமை உருவாக்கப்பட வேண்டிய தேவை மக்களால் உணரப்படும் அளவுக்கு வடக்கு அரசியல்வாதிகளால் உணரப்படுகின்றதா, அல்லது அதை நோக்கிய முன்னகர்வுகள் முன்னெடுக்கப்படுகின்றனவா என்பது இன்னும் தொடுவானமாகவே தொடர்கின்றது.

இச் சூழலில், வெறுமனே முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் கூட்டுச்சேர்தல், மாவையே முதலமைச்சர் என்ற கோசங்கள் மன திருப்திக்கும் அரசியல் வெட்டிப்பேச்சுக்கான சோளப்பொரியாக இருந்தாலும் கூட, இறுதியில் அதைத் தீர்மானிக்கும் சக்தி, உள்ளூரில் இல்லை என்பதே உண்மை.