பொறுப்புக்கூறலும் புலம்பெயர் அலப்பறைகளும்

நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு, அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும். பொறுப்புக்கூறல், வெறுமனே சிலரைப் பதவியில் இருந்து அகற்றுவதுடன் முடிந்து போவதில்லை.

மாறாக, இந்நிகழ்வைத் தடுக்கத் தவறியதற்கு பொறுப்பேற்று, ஜனாதிபதி முதல் பிரதமர் வரை அனைவரும் பதவி விலகியிருக்க வேண்டும்.

இலங்கை அரசியல், ஜனநாயகத்தின் பால் வழிநடத்தப்படுவதில்லை. அதனால், மேற்குலக ஜனநாயக விழுமியங்களைப் பின்பற்றுவதாகச் சொல்லும் பதவிவிலகல் என்ற பேச்சுக்கே வாய்ப்பில்லை.

அதேவேளை, நாட்டின் பாதுகாப்பு அமைச்சராகவும் முப்படைகளின் தளபதியாகவும் உள்ள ஜனாதிபதியும் இந்தக் கோரநிகழ்வுக்குப் பொறுப்பேற்று, பதவி விலகியிருக்க வேண்டும்.

வெளிநாட்டு உளவுத்துறையால் வழங்கப்பட்ட தகவல், தமக்குத் தெரியாது என்று ஜனாதிபதியும் பிரதமரும் சொல்கிறார்கள். இவ்வாறு தெரியாமல் இருக்கும் ஓர் அரசாங்கத்தை நடத்தியதற்காகவே இருவரும் பதவி விலகியிருக்க வேண்டும்.

சுதந்திரத்துக்குப் பிந்தைய அரசியல் வரலாற்றில் 1953 ஹர்த்தாலில் ஏற்பட்ட வன்முறைக்குப் பொறுப்பேற்று, பிரதமர் டட்லி சேனாநாயக்க பதவிவிலகிய சம்பவத்தைத் தவிர்த்து, பொறுப்புக்கூறல் என்பது இருந்ததல்ல.

பொறுப்புக்கூறல் தனிமனித பொறுப்புமட்டுமல்ல; அது கூட்டுப்பொறுப்பும் கூட. அது ஜனாதிபதி, பிரதமர், மந்திரிசபை என, அரசாங்கத்துடன் தொடர்புடைய அனைவரையும் சார்ந்தது. இலங்கை வரலாற்றில் கொலைகள், கடத்தல்கள், காணாமல்போதல்கள் என வன்முறை வாழ்க்கை சாத்தியமாவதற்குப் பொறுப்புக்கூறல் இன்மை ஒரு முக்கிய காரணம் என்பதை நாம் விளங்க வேண்டும்.

இன்று 250க்கு மேற்பட்டோரின் சடலங்களின் மீது ஏறி நின்று, அனைவரும் அரசியல் நடத்துகிறார்கள். இது இழிநிலையை அடைந்துள்ள இலங்கை அரசியலின் நிலையையும் பதவிக்கான வெறியையுமே காட்டி நிற்கின்றது.

இலங்கை மக்கள், அரசியல்வாதிகளைப் பொறுப்புக்கூறலுக்கு உள்ளாக்க வேண்டும். எதிர்காலத்தில் இவ்வாறான நிகழ்வுகள் நடக்காமல் இருப்பதற்குப் பொறுப்புக்கூறல் அவசியமானது. இதை ஒரு மக்கள் இயக்கமாகக் கட்டியெழுப்புதல் காலத்தின் தேவையாகும்.

இத்தாக்குதல்களை மய்யப்படுத்திய புலம்பெயர் புலம்பல்கள், ஒருபுறம் இது தமிழர்களை இலக்குவைத்து நடத்திய தாக்குதல்கள் என்ற கதையாடலைத் தமது வசதிக்காகப் பயன்படுத்துகின்றன.

எந்தவொரு பௌத்தனும் கொல்லப்படாமல் கவனமாகத் திட்டமிடப்பட்ட தாக்குதல் என்ற மாபெரும் பொய்யை, அனைத்துமறிந்த அரசியல் ஆய்வாளர் அவிழ்த்து விடுகிறார். அதைச் சிலர் சமூக வலைத்தளங்களில் உலவவிடுகிறார்கள்.

இவ்வளவு காலமும் சிங்கள அரசு என்றும் சிங்களவர்களே தமிழர்களின் எதிரிகள் என்றும் சொல்லி வந்தவர்கள், இப்போது வசதிக்காக அதைப் பௌத்தமாக மாற்றுகிறார்கள்.

மதத்தின் பெயரால் மக்கள் பிரிக்கப்படுகிறார்கள். இவ்வளவு காலமும் ‘சிங்களவர் எதிர் தமிழர்கள்’ என்று சொல்லப்பட்ட கதைகள், இப்போது ‘பௌத்தம் எதிர் கிறிஸ்தவம்’, ‘பௌத்தம் எதிர் இந்து’க்கள் என்று மாற்றப்படுகிறது.

மக்களைப் பிரிக்க மதம் வலுவான கருவியாகின்றது. இனத்தின் பேரால் சிந்திய இரத்தம், இனி மதத்தின் பெயரால் சிந்துவதையும் இந்தக் கதையாடல்களைக் கட்டமைப்பவர்கள் விரும்புகிறார்கள்.

இந்தத்தாக்குதலில் பாதிக்கப்பட்டது தமிழர்கள் மட்டுமல்ல; அனைத்து மதத்தவரும் இனத்தவரும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இலங்கையர் அனைவருமே பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவ்வளவு பெரிய துயரநிகழ்வில், தமது நலன்களை மட்டும் முன்னிறுத்துவது கேவலமான மனித நடத்தை. அந்த அலப்பறைகளையே புலம்பெயர் சூழலில் காணமுடிகிறது. இலங்கையராகத் தன்னை அடையாளப்படுத்தும் ஒவ்வொரு தமிழரையும் துரோகிகளாக அடையாளம் காணும் இயலாமை நடக்கிறது. அவலச்சுவை யாதெனில் அவர்களால் முடிந்தது அவ்வளவே.

ஒருபுறம் அரசாங்கமும் அரசியல்வாதிகளும் மறுபுறம் புலம்பெயர் அரசியல் ஆய்வாளர்களும் கொல்லப்பட்ட பிணங்களை ஆயுதமாக்கித் தமது பிழைப்பை ஓட்டுகிறார்கள்.

இந்தக்குண்டுவெடிப்புகளின் விளைவால் அன்றாடஞ்காய்ச்சிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளார்கள். மக்களிடையே அச்சம் விதைக்கப்பட்டுள்ளது. நிச்சயமின்மை மனதில் தொற்றியுள்ளது. இவை இலங்கையில் உள்ள அனைவரையும் மோசமாகப் பாதித்துள்ளது.

இந்த அச்சத்துக்கும் நிச்சயமின்மைக்கும் எந்தவித மத அடையாளமோ, இன அடையாளமோ கிடையாது. அது இலங்கையெங்கும் சர்வவியாபகமானது. இதை முதலில் புரிந்து கொள்ளவேண்டும்.

இன்னொரு வகையில், புலம்பெயர் போராளிகள் குறித்துப் பேசிப் பலனில்லை. அவர்கள் ஒருபுறம் அடுத்த ஜெனீவாக் காவடிக்கு வழி தேடுகிறார்கள். மறுபுறம், முடிவையெட்டிவரும் தங்களது வங்குரோத்து அரசியலுக்கு உயிர்கொடுக்க இதைப் பயன்படுத்துகிறார்கள். அதற்காகவே உண்மைகளைத் திரிக்கிறார்கள். ‘நித்திரை கொள்பவனை எழுப்பலாம்; நித்திரை கொள்வது போல் நடிப்பவனை எழுப்ப இயலாது’.

(Tamil Mirror)