பொறுமை இழக்கலாமா?

நாட்டில் இப்போது என்ன நடக்கிறது? ஒவ்வொரு பிரஜையும் எழுப்புகின்ற கேள்வி இது. உயரிய மக்கள் சபையான பாராளுமன்றம் கூட்டப்படுவதும், அடிதடி சண்டைகளுடன் ஒத்திவைக்கப்படுவதும் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன. மக்கள் பிரதிநிதிகள் சபையொன்றில் நடக்கின்ற மயிர்க் கூச்செறியும் சண்டைக் காட்சிகளை மக்கள் தினமும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். என்றாலும் ஏக்கப் பெருமூச்சு ஒன்றுதான் அவர்களது உணர்வு வெளிப்பாடாக இருக்கின்றது.

கடந்த மாதம் 26ஆம் திகதி ஏற்பட்ட ஜனநாயக புரட்சியின் பின்னர் உருவான அரசியல் நகர்வுகளும் பாராளுமன்றக் கலைப்பும் நாட்டில் ஒருவகையான அரசியல் கொதி நிலையை ஏற்படுத்தியது.

புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ச ஒக் 26ம் திகதி பதவியேற்றார். அதன் பின்பு பாராளுமன்றம் நவம்பர் 16க்கு ஒத்துவைக்கப்பட்டதும். அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட மாற்றங்களும் நாட்டில் பரபரப்பான சூழ்நிலையை ஏற்படுத்தியது என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக எதிரணி முயற்சிப்பதும், புதிய அரசாங்கத்தின் மீதும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச மீதும் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வருவதும் எதிரணியின் தொடர் முயற்சியாக இருக்கிறது. பாராளுமன்ற ஜனநாயகம் இதற்கு எந்த தடையையும் விதிக்கவில்லை. பிரேரணைகளைக் கொண்டு வரும்போது நிலையியல் கட்டளைகள் முறையாகப் பேணப்படவில்லையென்பது வெளிப்படையாகவே தெரிகிறது.

ஒரு நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வருவதாக இருந்தால் பாராளுமன்ற நிலையியற் கட்டளைக்கும் சம்பிரதாயங்களுக்கும் உட்பட்ட விதிமுறைகள் இருக்கின்றன.

இந்த நடைமுறைகள் எதிரணியால் பின்பற்றப்படவில்லை என்பது தான் ஆளும் தரப்பின் குற்றச்சாட்டாக இருக்கின்றது. சபாநாயகரின் ஒரு தலைப்பட்சமான செயற்பாடுகளும் பாராளுமன்றத்தில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலைகளுக்குக் காரணமாக இருக்கிறதென்பதை நாம் திறந்த மனத்துடன் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

ஒரு நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படும் போது வெறுமனே ஒப்பமிடப்பட்ட தாள்களை ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படி ஏற்பது பாராளுமன்ற நடைமுறையும் இல்லை.

122 பேர் ஒப்பமிட்ட பிரேரணையை சபாநாயகர் சிம்மாசனத்திலிருந்தவாறு கையேற்பது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.

அவ்வாறு ஏற்பதும் சம்பிரதாயம் இல்லை.

அன்று என்ன நடந்தது. சிம்மாசனத்தில் சபாநாயகர் கரு ஜயசூரிய அமர்ந்ததும் ஜே.வி.பி எம்.பி விஜித ஹேரத் அவசர அவசரமாக ஓடிச் சென்று மடித்த தாள்களை ஒப்படைத்தார். அதனைத்தான், 122 பேர் ஒப்பமிட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை என சபாநாயகர் அறிவித்தார்.

சபையில் அன்று ஏற்பட்ட அமளிதுமளிக்கு மத்தியில் எதிரணியினரின் நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார்.

குழப்பங்களைக் காரணம்காட்டி பிரேரணையை நிறைவேற்றுவது பாராளுமன்ற சம்பிரதாயமுமில்லை. அரசியல் நாகரீகமும் இல்லை. இந்த இடத்தில் சபாநாயகரின் பக்கச்சார்பு பட்டவர்த்தனமாகத் தெரிகிறது.

பிரதமருக்கு அல்லது அமைச்சரவைக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரும் போது, 12 விதிமுறைகளைத் தாண்டித்தான் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும். பிரேரணையில் ஒப்பமிட்ட 122 பேரும் உண்மையானவர்களா? அல்லது ஒப்பமிட்டதுயார்? போன்றவைகளை ஊர்ஜிதம் செய்வதற்கு ஒரு குழு இருக்கிறது. அது ஆராய்ந்த பின்னர் அது நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டு, கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே விவாதமும் வாக்கெடுப்பு திகதியும் தீர்மானிக்கப்படும். இதுதான் பாராளுமன்ற நிலையியல் கட்டளை.

ஆனால், நடந்தது என்ன என்பதை நாம் கூறவேண்டியதில்லை.

பாராளுமன்றத்தைக் கலைத்ததில் மற்றொரு சர்ச்சை. எதிரணியினரால் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு டிசம்பர் 7ஆம் திகதி வரை இடைக்காலத் தடை விதித்தது. உச்ச மன்றின் இந்தத்தடை பாராளுமன்ற கலைப்பை இடைநிறுத்தியிருக்கிறது. அதேநேரம் சபை அமர்வையும் தடுத்திருப்பதாகவே சட்ட வல்லுனர்கள் வியாக்கியானம் கூறுகின்றனர்.

அதாவது, டிசம்பர் 7ஆம் திகதி வரைக்கும் பாராளுமன்ற கலைப்பும் செல்லுபடியாகாது; சபை அமர்வும் நடத்த முடியாது என்பதே அவர்களது வாதம். அப்படியென்றால், பாராளுமன்றம் இப்போது கூடிக்கலைவதெல்லாம் ஒரு சட்டவிரோத செயற்பாடு என்ற முடிவுக்கே நாம் வரவேண்டியிருக்கிறது.

பாராளுமன்றத்தில் ஏற்பட்டிருக்கின்ற நிலை பெரும் சங்கடத்துக்குரியது. பாராளுமன்ற கலைப்பு இடை நிறுத்தப்பட்டிருப்பதால் தனக்கு முழுமையான அதிகாரம் இருக்கிறதென்ற ஒருமையில் சபாநாயகர் கரு செயற்படுகிறார். நீதிமன்றம் தடை விதித்திருக்கும் நிலையில் சபை அமர்வை நடத்துவது சட்டவிரோதமென ஆளும் தரப்பு அடித்துச் சொல்கிறது. ஆகவே, சபாநாயகர் சட்ட விரோதமாகச் செயற்படுகிறார் என்பதும் அவர்களது வாதமாக இருக்கிறது.

இந்தச் சிக்கலை சபாநாயகர் மிகவும் நுணுக்கமாகக் கையாண்டிருக்கலாம். சட்டமா அதிபரிடம் அவர் உரிய முறையில் விளக்கம் கோரியிருந்தால், உச்ச மன்றத்தின் இடைக்காலத்தடைக்கு சரியான வியாக்கியானம் கிடைத்திருக்கும்.

1991ஆம் ஆண்டு, அப்போதைய ஜனாதிபதி பிரேமதாஸாவுக்கு எதிராக குற்றவலுப் பிரேரணை (Impeachment) கொண்டுவரப்பட்டபோது, அப்போதிருந்த சபாநாயகர் எம்.எச். முஹம்மது சட்டமாஅதிபர் மற்றும் சட்ட ஆலோசகர்களோடு பேசி மிகவும் சாதூரியமாக நடந்து கொண்டார். இதன்மூலம், பாராளுமன்ற வரலாற்றில், எம்.எச். முஹம்மது விதிவிலக்கான ஒருவராகவே திகழ்கிறார்.

சபாநாயகர் கரு ஜயசூரிய அப்படி நடந்து கொண்டதாகத் தெரியவில்லை. அவர்தான் சார்ந்த கட்சியின் ஆலோசனையைப் பெற்று செயற்படுவது அவரது குறிதவறாத நடுநிலையைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.

நிறைவேற்று அதிகாரம், நீதித்துறை, சட்டவாக்க சபை (பாராளுமன்றம்). இவை மூன்றையும் மையமாக வைத்துத்தான் இன்றைய நிலைமையையும் நெருக்கடியையும் நாம் பார்க்க முடியும். ஒட்டு மொத்தத்தில் இதுவோர் அரசியலமைப்புப் பிரச்சினை.

என்றாலும், பாராளுமன்றத்தினுள் அடித்துக்கொள்வதையும், கட்டிபபுரள்வதையும், கத்தியால் குத்த முயல்வதையும் எந்த வகையிலும் ஏற்கவே முடியாது. கடந்த மூன்று தினங்களாக நடந்த கேவலம், பாராளுமன்ற ஜனநாயகத்தைக் கொச்சையாக்கியிருக்கிறது. சிம்மாசனத்தை இழுத்துச் சென்றார்கள். கதிரைகள் உடைக்கப்பட்டன. மிளகாய்த்தூள் கலந்த தண்ணீரும் வீசப்பட்டன.

பாராளுமன்ற உறுப்பினர் தெவரப்பெரும எம்.பி கத்தியோடு சபைக்குள் நின்றதால் நிலைமை மேலும் மோசமடைந்தது.

எல்லாமே மயிர்க்கூச்செறியும் காட்சிகளாகவே இருந்தன. என்றாலும், நமது கௌரவம் காற்றில் பறந்தன என்பதை ஒவ்வொரு எம்.பிக்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

பிரச்சினைகளை சட்டதிட்டங்களுக்கு உட்பட்டுத் தீர்த்துக்கொள்வதே நமது ஜனநாயகம். நாட்டிலும் உயரிய சபையினுள்ளும் அராஜகம் தலையெடுக்க ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

நிலைமையைப் பார்க்கின்ற போது பாராளுமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தலுக்கு செல்வது சிறந்த ஜனநாயகம். மக்கள் வழங்கும் தீர்ப்பு நாட்டில் ஸ்திரமான அரசை உருவாக்கும். இதில் சந்தேகமே இல்லை.

பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் புதிய தேர்தலுக்கு செல்லவே விரும்புகின்றனர். மதகுருமார்களும் கல்விமான்களும் தேர்தலுக்குச் செல்வதுதான் ஒரே வழியென்கின்றனர்.

ஏன் தாமதிக்க வேண்டும்? நாட்டில் ஸ்திரநிலையை உருவாக்க பொதுத் தேர்தல் மூலம் மக்கள் ஆணையைப் பெறுவதே நாடு; மக்கள் நலன் சார்ந்த செயற்பாடாக இருக்கும்.

(Thinakaran)