மலையை விட பழுவான இழப்புக்களை சுமந்த அம்மா மனோன்மணி

தோழர் சிவா தோழர் காணேஸ் ஆகியோரின் தாயார் மனோன்மணி செல்லத்தம்பி மறைவு.

 

1940-04-13—–2017-09-10

தோழர் சிவலிங்கம் அர்ப்பணம் தியாகத்தின் உருவம்.
அம்மா மனோன்மணி செல்லத்தம்பியின் பெருமைக்குரிய மூத்த புதல்வர் சமூகவிடுதலையுடன் -தேசிய விடுதலை என்ற உன்னத கனவைக்கண்ட தாய்தந்தையருக்குரிய பொறுப்புணர்ச்சி வாய்ந்த நேர்த்தியான நேர்மையான உணர்வு கொண்ட தோழர்.
1980 களின் முற்பகுதியில் தமிழ் முஸ்லீம் தோழர்களுடன் கஞ்சிக்குடியாறில் பாசறையை முன் நின்று நடத்திய தோழர்.
சமணர் குகைபோன்ற பாறை மேடுகள் இயற்கை எழில் மிகு சூழ்நிலையில் சமையல் தொடக்கம் பாசறை அமைத்தல் பயிற்சி வழங்குதல் வரை எல்லாவற்றையும் இழுத்துப்போட்டுக் கொண்டு செய்தவர்.


உணவுக்காக சோலை காடுகளில் இருந்து கஞ்சிக் குடியாறு- குளக் கரையோரம் முழுவதும் நாம் வரட்சி தாகத்துடன் அலைந்து திரிந்த ஞாபகங்கள்.
மறைந்த தோழர் சண்முகநாதசிவத்துடன் சேர்ந்து அக்ரைப்பற்று திருக்கோயில் தம்பிலுவில் என கருத்தரங்குகள் நடத்திய ஞாபகங்கள் தமிழ்முஸ்லீம் தோழர்கள் நாம் இணைந்து பணியாற்றிய அள்ளுண்டு போன கால ஞாபகங்கள் .
1981 ஆம் ஆண்டு அமைப்பாளர் மாநாட்டில் கலந்து கொண்ட 16 பேரில் தோழர் சிவாவும் ஒருவர் குடந்தை பெரியார் மண்பத்தில் பெரும் கனவுகளுடன் மாநாட்டில் பங்கு பற்றினோம்.
ஜே. ஆர் 1982 பாராளுமன்ற காலத்தை நீட்டிப்பதற்காக சர்வசனவாக்கெடுப்பு நடத்திய போது அந்த ஜனநாயக விரோத நடவடிக்கைக்கு எதிராக றோனியோ துண்டு பிரசுரங்களை கல்லாற்றில் உள்ள அவரது வீட்டில் கொண்டு சேர்ப்பித்த ஞாபகங்கள்
கல்லாறு களுவாஞ்சிக்குடி அயற்கிராமங்களில் தோழர் சிவாவுடன் இணைந்து கருத்தரங்குள் வைத்த ஞாபகங்கள்
காரைநகரில் களப்பலியான சகதோழரும் பாலிய நண்பருமான தோழர் வேலுவின் ஞாபகங்கள்
மறைந்த வந்தாறு மூலை பாலா தோழர் கல்முனை தைரி களுவாஞ்சிக்குடி ரஞ்சித் என பல ஆளுமைகளுடன் பணியாற்றியவர்.
சத்துருக்கொண்டானில் மார்க்ஸ் நூற்றாண்டு கருத்தரங்கில் பலதோழர்களுடன் கைதுசெய்யப்பட்ட தோழர் சிவா வெலிகடை படுகொலையில் உயிர்தப்பியவர்களில் ஒருவர். மட்டக்களப்பு சிறையுடைப்பில் விடுதலையானவர் தோழர் சிவா
பின்னர் குடந்தை கோமளவல்லிப் பேட்டையில் தோழர்களுக்கான பாசறையில் அயரா உழைப்பின் வாசனையுடன் நின்றிருந்தார். மீண்டும் கஞ்சிக்குடியாறு ஞாபகங்கள்
நேர்த்தியாக உடையணிந்து பரபரப்பும் அமைதியும் கலந்து தவள அழகான தோழர் சிவாவை கோமளவல்லிப்பேட்டையில் கண்டது தான் இறுதி ஞாபகம்;
நான் யாழ் இராணுவ சிறையில் இருந்தபோது அவர் களுவாஞ்சிக்குடியில் அரச பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட செய்தி
அவருடைய தம்பியார் தோழர் கணேஸ் யாழ் பல்கலைக்கழக மாணவர். பின்னர் ஈபிஆர்எல்எப் இல் இணைந்து முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்.
ஈபிஆர்எல்எப் தடைசெய்யப்பட் காலத்தின் பின்னர் சிறையிலிருந்து விடுதலையாகிய பின்னர் சென்னை கோடம்பாக்கத்தில் சுறுசுசுப்பாக இயங்கிக் கொண்டிருந்தவர்.
தோழர் நாபா தோழர் கேதீஸ் போன்றவர்களின் அபிமானத்திற்குரியவராகவும் இருந்தார்.
தமது தமையனாரைப்போல சக பல தோழர்களைப்போல அபாயங்களுக்குள் மரண வெளிக்குள் சமூகப் பணி புரிதல் என்ற அர்ப்பணத்தை அவர் மேற் கொண்டார். அவரும் ஜனநாயகவிரோத சக்திகளால் படுகொலை செய்யப்பட்டார்.
இந்ததோழர்களின் தாயார் தான் மனோன்மணி.
இவ்வாறு தமது பிள்ளைகளை சமூக தேசிய விடுதலைக்காக தியாகம் செய்தவர் தான் அம்மா மனோன்மணி
தமது பிள்ளைகளை தியாகித்த பலநூறு அம்மாக்கள் போல கைமாறு கருதாது அம்மா மனோன்மணி நிரந்தரமாக உறங்கிவிட்டார்.
அன்னாருக்கு எமது இதய அஞ்சலிகள். அவரது பிள்ளைகள் உறவுகள் தோழர்களுடன் துயர் பகிர்கிறோம்.