வடகிழக்கு மாநிலங்கள் – அனைவருக்கும் வளமளிக்கும் திரிபுரா

(வீ.பா.கணேசன்)
இந்திய வரைபடத்தில் கிழக்கு மூலையில் ஒரு சிறிய மாநிலமான திரிபுரா இந்தியாவின் மூன்று சிறிய மாநிலங்களில் ஒன்று. இந்திய விடுதலைக்கு முன்புவரை வடகிழக்குப் பகுதியில் இருந்த இரண்டு சமஸ்தான அரசவைகளில் ஒன்றாக அது இருந்தது. மாணிக்யா என்ற அரச பரம்பரை கிட்டத்தட்ட 400 ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதியை ஆட்சி செய்தது. ஒரு காலத்தில் வங்காளத்தின் சுந்தரவனக் காடுகள், இன்றைய மியான்மரின் சிட்டகாங் காட்டுப் பகுதிகள் ஆகியவற்றை உள்ளடக்கி இருந்த இந்த நாடு காலப்போக்கில் சுருங்கிப் பிரிட்டிஷ் ஆட்சிக்குக் கப்பம் செலுத்தும் பகுதியாக மாறியது.

அன்றைய வங்காளத்துக்கு அருகில் இருந்ததால் தேவ்பர்மா என்ற பழங்குடிப் பிரிவைச் சேர்ந்த அரசப் பரம்பரையினர் அந்த நேரத்தில் கல்வியில் சிறந்திருந்த வங்காளிகளையே தமது அமைச்சர்களாக, அதிகாரிகளாக நியமித்தனர். பிரிட்டிஷ் காலத்தில் பல ஐரோப்பியர்களும் அமைச்சர்களாக இருந்தனர். எனவே வங்காள மொழியும் வங்காள் கலாசாரமும் பரவிய பகுதியாக இது இருந்தது.

விடுதலை பெற கல்வி

பழங்குடிகளின் தலைவராக இருந்தபோதிலும் திரிபுராவின் அரசரான வீர விக்ரம் கிஷோர் தேவ்பர்மா இந்தப் பழங்குடிகள் எழுதப் படிக்கத் தெரியாதவர்களாகவே இருக்க வேண்டும் என நினைத்தார். இதற்குப் பின்னால் அப்போதுதான் தன் ஆட்சிக்கு ஆபத்து வராது என்ற சிந்தனையே இருந்தது. பின்னாளில் முதல்வரான தசரத் தேவ்பர்மா 1945-ல் ஜனசிக்ஷா சமிதி என்ற அமைப்பைத் தொடங்கினார். பழங்குடிகள் வசித்து வந்த பகுதிகளில் படித்த பழங்குடி இளைஞர்களை ஆசிரியர்களாக நியமித்து 400க்கும் மேற்பட்ட பள்ளிகளைத் தொடங்கி மாற்றத்தைக் கொண்டுவந்தார்.

1946-ல் அவர் காலமானார். அதன் பிறகு அவரது மகன் சிறு குழந்தையாக இருந்ததால் ஆட்சி பொறுப்பில் இருந்த மகாராணி காஞ்சன் பர்வா தேவி இந்திய அரசுடன் இணையும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அதனை அடுத்து அக்டோபர் 15, 1949-ல் சுதந்திர இந்தியாவுடன் திரிபுரா இணைந்தது. மத்திய அரசின் துணைநிலை மாநிலமாக இருந்து 1972-ல் தனிமாநிலமாக மாறியது.

பலருக்குப் பாதுகாப்பு

19 வகையான பழங்குடி இனப் பிரிவினர் வசிக்கும் இம்மாநிலத்தில் 1901-ல் 52.89 சதவீதமாக இருந்த பழங்குடிகளின் எண்ணிக்கை 2011-ல் 31.8 சதவீதமாகக் குறைந்தது. 1947-ல் தொடங்கிய வங்காளிகளின் குடியேற்றம், 1971 வங்கதேசப் போரின்போது அதிகரித்து இன்று அவர்களே பெரும்பான்மை என்பதாக மாறியுள்ளது. இதன் விளைவாகப் பழங்குடிகளின் அதிருப்தி ஆயுதம் ஏந்தும் நிலைக்கு இட்டுச்சென்றது. 1993-ல் கிட்டத்தட்ட 100 ஆயுதக் குழுக்கள் இம்மாநிலத்தில் செயல்பட்டுவந்தன.

1958 முதல் வடகிழக்குப் பகுதியில் செயல்பாட்டிலுள்ள ராணுவப் படைகளுக்கான சிறப்பு அதிகாரங்களுக்கான சட்டம் (AFSPA) 2015 அக்டோபர் முதல் இந்த மாநிலத்தில் முற்றிலுமாக விலக்கிக் கொள்ளப்பட்டது.

இதன் பின்னணியில் 1982லிருந்து பழங்குடி மக்களுக்கான சுயாட்சிப் பகுதியும் அதை நிர்வகிக்கும் அமைப்பும் செயல்பட்டன. பழங்குடிகளால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படும் இந்த அமைப்பு அவர்களின் பரந்த அளவிலான முன்னேற்றத்திற்கான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

மிசோரம் மாநிலத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்ட ப்ரு இனத்தவரை வரவேற்று அவர்களுக்கெனத் தனிப் பகுதியை உருவாக்கிக் கொடுத்துள்ளது. அதைப் போன்றே வங்கதேச விடுதலைப் போரின்போது அன்றைய கிழக்குப் பாகிஸ்தானிலிருந்து அகதிகளாக வந்தவர்களுக்கும் விடுதலைப் போராளிகளுக்கும் முகாம்கள் அமைத்துப் பாதுகாத்ததும் இந்த மாநிலமே.

இந்தியாவுடன் இணைக்கும் சாலை

மாநிலத்தில் பெரும்பகுதியினர் விவசாயிகள் என்ற போதிலும் வருவாயில் பெரும்பகுதி சேவைத் துறைகளிலிருந்தே வருகிறது. மாநிலத்தில் கிடைக்கும் இயற்கை எரிவாயுவைப் பயன்படுத்தி ஓ.என்.ஜி.சி. மூலம் அரசு உருவாக்கியுள்ள மின் உற்பத்தி நிலையம் வடகிழக்குப் பகுதி மாநிலங்கள் அனைத்துக்கும் தேவையான மின்சாரத்தை வழங்கும் திறன் பெற்றது.

சமீபகாலமாக ரப்பர் பயிரைப் பெருமளவில் ஊக்குவிக்கவும், மூங்கில் பொருட்களை வணிகரீதியாக மேம்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப் படுகிறது. தேயிலை உற்பத்தியில் 5வது இடத்தைப் பிடித்திருக்கும் மாநிலம் இது. கல்வியறிவு பெற்றவர்கள் 87.8% பேர்.

தேசிய நெடுஞ்சாலை எண். 8 என்ற ஒரே ஒரு சாலை மட்டுமே இந்த மாநிலத்தை அசாம் மாநிலத்துடனும் இந்தியாவுடனும் இணைக்கிறது. ஜூலை 31, 2016-ல் தொடங்கப்பட்ட திரிபுரசுந்தரி எக்ஸ்பிரஸ் என்ற ரயில்சேவை 48 மணி நேரப் பயணத்தின் மூலம் மாநிலத் தலைநகர் அகர்தலாவை இந்தியத் தலைநகர் புதுடெல்லியுடன் இணைக்கிறது.

புகழ்பெற்ற இசையமைப்பாளரான எஸ்.டி. பர்மன், டென்னிஸ் உலகில் புகழ்பெற்ற சோம்தேவ் பர்மன், சமீபத்தில் நடந்த ரியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் ஜிம்னாஸ்டிக்ஸில் ஒரு புள்ளியில் வெண்கலப் பதக்கத்தைத் தவறவிட்ட வீராங்கனை தீபா கர்மாகர் ஆகியோர் இந்த மாநிலத்திற்குப் பெருமை சேர்ப்பவர்களாக உள்ளனர்.