முஸ்லிம்களின் இனவிகிதாசாரத்துக்கு ஏற்ப காணி இல்லை

(மொஹமட் பாதுஷா)
மரணித்த பிறகு, எல்லோருக்கும் அதிகபட்சம் ஆறடி நிலம்தான் சொந்தம். என்றிருந்தாலும், உலகத்தில் வாழ்கின்றபோது, தனிமனிதர்களும் குழுக்களும் அரசாங்கங்களும் நாடுகளும் நிலத்துக்காக நடத்திய போராட்டங்கள் எண்ணிலடங்காதவை. சர்வதேச அளவில் மண்ணுக்காக நடந்த யுத்தங்கள்தான் அதிகம். காணிப் பிரச்சினையும் நிலப்பற்றாக்குறையும் உலக அளவில் பொதுவாக எல்லா நாடுகளிலும் எதிர்நோக்கப்படுகின்ற பிரச்சினை என்றாலும், இன, மத அடிப்படையிலோ அல்லது ஆளுகைக் கட்டமைப்பு ரீதியாகவோ வேறுபட்டுள்ள மக்கள் கூட்டத்தாரிடையே இந்நிலைமை தீவிரமாகக் காணப்படும்.

அந்த வகையில், இலங்கையிலும் காணிப்பிரச்சினை மிகவும் சிக்கல் வாய்ந்ததாகவும் புரையோடிப்போனதாகவும் இருக்கின்றது. குறிப்பாக, முஸ்லிம்களும் தமிழர்களும் தாம் வாழ்கின்ற பிரதேசங்களில் இனத்துவ விகிதாசாரப்படி நிலங்களைப் பெற்றுக் கொள்ளவில்லை.

ஒரு தீவுக் கூட்டத்தில் வாழும் மக்களைப் போல, வரையறுக்கப்பட்ட நிலத்துக்குள்ளேயே அவர்கள் தமது வாழ்க்கையை சுருக்கிக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால், இந்த மிக முக்கியமான விவகாரத்தைத் தீர்த்து வைப்பதற்காக, கடந்த ஐம்பது வருடங்களுக்கும் மேலாக, எந்தக் காத்திரமான நடவடிக்கைகளும் பெருந்தேசிய அரசியலின் பக்கமிருந்து எடுக்கப்படவில்லை.

நமது தாய்மார், ஏதாவது பொருளைக் காண்பித்து ஆசைகாட்டி, பிள்ளைகளுக்கு சோறூட்டுவது போல, ஆட்சிக்கு வருகின்ற அரசாங்கங்கள், சிறுபான்மை மக்களின் உரிமைகள், அபிலாஷைகளைத் தருவதாகவும் பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதாகவும் விஞ்ஞாபனங்களை வெளியிடுகின்றனவே தவிர,அதைச் செயலுருப்படுத்துவதில்லை.

இலங்கையைப் பொறுத்தமட்டில், இது தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் பொதுப்படையான பிரச்சினையாக இருக்கின்ற போதிலும், தமிழ் மக்கள் ஆரம்பம் தொட்டு, காணிகளைத் தக்க வைத்துக் கொள்வதற்காக, நிலங்களை மீட்பதற்காகப் போராடி வந்திருக்கின்றார்கள்.

வடக்கு, கிழக்கை மையப்படுத்தியதாக மேற்கொள்ளப்பட்ட விடுதலைப் போராட்டம், பிற்காலத்தில் வேறு உருவெடுத்திருந்த போதும், ஒருவகையில் பார்த்தால் அதுவும் கூட நிலபுலத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்கான முனைப்பென்றும் கூற முடியும்.
இவ்வாறு, எத்தனையோ ஆயுத, வெகுஜன மற்றும் ஜனநாயக ரீதியான போராட்டங்களை மேற்கொண்டு, தமிழ் அரசியல் தலைமைகளும் மக்களும் பலவற்றில் வெற்றிகண்டிருக்கின்றார்கள்.

‘காணிகளின் உரிமைத்துவத்தை இழந்து விடக் கூடாது; அது நமக்கு அவசியப்படாவிட்டாலும் அடுத்த தலைமுறைக்குத் தேவையானது’ என்பதை முன்னுணர்ந்து கொண்ட தமிழ் மக்களின் காணிமீட்பு உணர்வு, இன்று கேப்பாப்புலவு வரைக்கும் வெளிப்பட்டு நிற்கின்றது.

ஆனால், முஸ்லிம் சமூகத்தில் இந்தப் பண்பியல்பைக் காண்பது மிக அரிதாகவே இருக்கின்றது. எனவே, அது குறித்துப் பேச வேண்டியிருக்கின்றது.

இலங்கையில் இரண்டாவது சிறுபான்மை இனமாக வாழ்கின்ற முஸ்லிம்களுக்கு, தம்முடைய சனத்தொகை விகிதாசாரத்துக்கு ஏற்ப, குடியிருப்பு மற்றும் விவசாயக் காணிகள் இல்லை என்பது பொதுவான அபிப்பிராயமாகும்.

அந்தந்தப் பிரதேசங்களில் அல்லது மாவட்டங்களில் வாழ்கின்ற முஸ்லிம்களின் குடித்தொகை விகிதாசாரத்துக்கு அமைவாக அரச காணிகளைப் பகர்ந்து கொடுப்பதில், அரசாங்கங்கள் மாற்றாந்தாய் மனப்பாங்கைக் காட்டி வந்துள்ளன.

சர்வதேச சாசனங்களில், குடித்தொகைப் பரம்பலுக்கு ஏற்ப, காணிகளை உரித்தாக்க வேண்டிய கடப்பாடு, அரசாங்கத்துக்கு இருந்தாலும் கூட, எந்த அரசாங்கமும் அதை முறையாகச் செய்யவில்லை.

காணிகள் முஸ்லிம்களின் விகிதாசாரத்துக்கு அமைவாகப் பகர்ந்தளிக்கப்படவில்லை என்பது ஒருபுறமிருக்க, ஏற்கெனவே முஸ்லிம்களிடமிருந்த காணிகளை அபகரிக்கின்ற, சூறையாடுகின்ற, உரிமையைப் பறிக்கின்ற செயற்பாடுகளும் பல தசாப்தங்களாக நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தொல்பொருள் ஆராய்ச்சி என்றும் வனவளம் என்றும் சரணாலாயம் என்றும் புராதன பௌத்த தலம் என்றும் பேணற்காடு, ஒதுக்கக்காடு என்றும் அபிவிருத்தித் திட்டங்கள் என்ற பெயர்களால் பல்லாயிரக்கணக்கான ஹெக்டேயர் காணிகளைச் சொந்தம் கொண்டாட முடியாத நிலைக்கு, முஸ்லிம்கள் தள்ளப்பட்டிருக்கின்றார்கள்.

அதாவது, இனப்பரம்பலுக்கு அமைய, இன்னும் காணிகளைப் பிரித்துக் கொடுக்க வேண்டிய அரசாங்கமே அதைச் செய்யாது, ஏற்கெனவே முஸ்லிம்களுக்கு உரித்தாக இருக்கின்ற காணிகளைச் சட்டத்தின் பெயரில் கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு ஆசிர்வாதம் வழங்கிச் செயற்படுவதைக் காண முடிகின்றது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற முஸ்லிம்களின் காணிப்பிரச்சினையும் அதற்கு வெளியில் வாழ்கின்ற முஸ்லிம்களின் காணி விவகாரங்களும் ஒன்றுக்கொன்று வேறுபட்ட தன்மைகளைக் கொண்டவையாக இருக்கின்றன.

இருந்தபோதிலும், பொதுவாக நாட்டின் எல்லாப் பாகங்களிலும் வாழ்கின்ற முஸ்லிம்கள், வரையறுக்கப்பட்ட காணிகளுக்குள் தமது இருப்பையும் எதிர்கால வாழ்வின் விஸ்தரிப்பையும் சுருக்கிக் கொண்டுள்ளார்கள்.

சிங்கள மக்களுக்கு மத்தியில், சனத்தொகையில் குறைந்த மக்களாக, மலைநாட்டு மற்றும் தென்னிலங்கை முஸ்லிம்கள் வாழ்கின்றனர். அவர்களுக்கு விளைச்சல் நிலம் அல்லது மேய்ச்சல் காணி தொடர்பான பிரச்சினைகள் பெரிதாக இல்லை. அவர்களுக்கு இருப்பது தமது பிள்ளைகள், எதிர்காலச் சந்ததியினரை எங்கே குடியமர்த்துவது என்பது பற்றிய பிரச்சினையாகும்.

கண்டி, கொழும்பு, காலி, பதுளை, குருணாகல், பொலனறுவை போன்ற இடங்களில், சிங்கள மக்களுக்கு நடுவே, சிறிய தொகையில் வாழ்கின்ற முஸ்லிம்கள், வருங்காலத்தில் தமது தேவைக்காகக் காணிகளைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது.

தென்னிலங்கையில் சில மாவட்டங்களில் முஸ்லிம்களின் இன விகிதாசாரத்துக்கு அமைவாக இல்லாவிட்டாலும் ஓரளவுக்கு அண்மித்த விகிதாசாரத்தில் காணிகளை உரித்தாகக் கொண்டிருக்கின்றார்கள் என்று எடுத்துக் கொண்டாலும், அவர்கள் காணிப்பற்றாக்குறையை எதிர்கொண்டிருக்கின்றார்கள் என்பது மறுக்கமுடியாதது.

எதிர்காலத்தில் அவர்களது அடுத்த தலைமுறைகள் வாழ்வதற்கான நில உரிமைகள் அவர்களிடம் இல்லை. அதற்கான ஏற்பாடுகளை அரசாங்கமோ முஸ்லிம் அரசியல்வாதிகளோ காத்திரமான முறையில் மேற்கொள்ளவும் இல்லை.

எனவே, இதுபற்றிக் கவனம் செலுத்த வேண்டியிருக்கின்றது. வடக்கு,கிழக்குக்கு வெளியில் முஸ்லிம்களின் இனப்பரம்பல் மற்றும் எதிர்கால சனத்தொகை விருத்திக்கு ஏற்றாற்போல், காணிகளைப் பெற்றுக் கொள்வதற்கான முன்னேற்பாடுகளை அரசாங்கம் செய்தாக வேண்டும்.

அவ்வாறில்லாவிடின், அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்குள் வாழ்க்கையைச் சுருக்கிக் கொள்ள நேரிடும். அன்றேல், கொழும்பின் சேரிப்புற முஸ்லிம்களைப் போல, ஓர் அறையில் இரண்டு குடும்பங்கள் காலத்தைக் கழிக்க வேண்டிய நிர்ப்பந்தமே ஏற்படும்.

இதேவேளை,வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இருக்கின்ற காணிப் பிரச்சினைகள் பெரும்பாலும் காணிப் பங்கீடு, காணி அபகரிப்பு, காணிப் பற்றாக்குறையுடன் தொடர்புபட்டவையாகவும் பன்முகத்தன்மை கொண்டதாகவும் காணப்படுகின்றன.

இதற்கு அடிப்படைக் காரணம், இவ்விரு மாகாணங்களில் சிங்கள மக்களை விடச் சனத்தொகையில் அதிகமானவர்களாகவும் சில மாவட்டங்களில் தமிழர்களைவிட அதிக எண்ணிக்கையிலான குடித்தொகையை கொண்டவர்களாக முஸ்லிம்கள் வாழ்வதும், அதற்கேற்றாற்போல காணிகள் உரித்தாக்கப்படவில்லை என்பதுமாகும்.

வடக்கைப் பொறுத்தமட்டில், அம்மாகாணத்தில் இருந்து, புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களில் கணிசமானோர், இன்னும் மீளக் குடியேற்றப்படவில்லை. வடக்கையும் கிழக்கையும் இணைக்க விரும்புகின்ற தமிழர் அரசியல் தம்மோடு வாழ்ந்த வடபுல முஸ்லிம்களை மீளக் குடியேற்றுவதற்கு தயங்குவது போல, வடக்கின் நிலைவரங்கள் தென்படுகின்றன.

இந்நிலையில், வடக்கில் 1990ஆம் ஆண்டு வரை முஸ்லிம்களுக்கு சொந்தமாகவிருந்த வீடுகள், சொத்துகள், நிலபுலங்கள் இன்னும் நிஜத்தில் அவர்களது கைகளுக்கு வந்து சேரவில்லை.

விடுதலைப் புலிகளாலும், ஓரிரு இடங்களில் அரசாங்க (பாதுகாப்பு) தரப்பினராலும் ஏனைய சில தனியாட்களாலும் முஸ்லிம்களின் காணிகளைக் கையகப்படுத்தி வைத்துள்ளதாகச் சொல்லப்படுகின்றது.

மறுபக்கத்தில், “இல்லையில்லை, முஸ்லிம்களின் காணிகளை, சொத்துகளை தமிழ் மக்கள், இத்தனை வருடங்களாகப் பாதுகாத்து வைத்திருக்கின்றார்கள்” என்று கருத்தும் முன்வைக்கப்படுகின்றது. எது எவ்வாறிருப்பினும், அந்தக் காணியில், வீடுகளில் முஸ்லிம்கள் மீளக் குடியேற்றப்படவில்லை என்பதால் நடைமுறையில் அவர்கள், ‘இது நமக்குரித்தான காணி’ என்ற உணர்வை இன்னும் பெறவில்லை என்றே கூற வேண்டும்.

இது இவ்வாறிருக்க, வடக்கில் முஸ்லிம்களின் பூர்வீக நிலங்களும், குடியிருப்புக் காணிகளும் பாதுகாக்கப்பட்ட வனாந்திரங்களாக, சரணாலயங்களாக பிரகடனப்படுத்தப்படுகின்ற ஒரு கைங்கரியத்தையும் சிங்கள ஆட்சி இயந்திரம் செய்து வருகின்றது.

2012ஆம் ஆண்டு, மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் ‘விளாத்திக்குளம் ஒதுக்கக்காடு’ பிரகடனத்துக்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது. இதற்கமைய, முஸ்லிம்களின் பெருமளவிலான காணிகள், தமிழர்களின் சிறிதளவிலான காணிகள் உள்ளடங்கலாக விளாத்திக்குளத்தை மையமாகக் கொண்ட காட்டின் சுமார் 15ஆயிரம் ஹெக்டேயர் நிலப்பரப்பு ‘விளாத்திக்குளம் ஓதுக்கக்காடு’ என பிரகடனம் செய்யப்பட்டது.

இந்நிலையில், முஸ்லிம்களின் பேராதரவுடன் ஆட்சிக்கு வந்த இன்றைய அரசாங்கம், கடந்த சில மாதங்களுக்கு முன்னர்,’மாவில்லு பேணற்காடு’ பிரகடனத்தை வெளியிட்டிருக்கின்றது. இதற்கமைய,முசலி, விளாத்திக்குளம் உள்ளிட்ட பூர்வீக முஸ்லிம் கிராமங்களின் மக்களுக்கு உரித்தான காணிகள் பேணற்காடுகளாக அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

அந்த அடிப்படையில், ஒதுக்கக்காடு என்ற பெயரிலும் பேணற்காடு என்ற பெயரிலும் வேறு திட்டங்களின் ஊடாகவும் வடபுல முஸ்லிம்கள் காணிகளை இழந்து கொண்டிருக்கின்றனர்.

இவர்களது காணிப்பிரச்சினை என்பது, தென்னிலங்கையில் அல்லது கிழக்கில் வாழ்கின்ற முஸ்லிம்களைப் போல, எதிர்கால விஸ்தரிப்புக்கான காணி இல்லாத பிரச்சினை அல்ல; மாறாக, இப்போது ஒரு சிறிய வீட்டை அமைத்து வாழ்வதற்கான காணி கூட கிடைக்காத ஆதங்கமாகும்.

எனவே, இதை வில்பத்துவோடு முடிச்சுப்போடுவதை நிறுத்திவிட்டு, பொறுப்பு வாய்ந்த தரப்புகள் வடபுல முஸ்லிம்களைத் தமது சொந்த மண்ணில் மீளக் குடியேற்றுவது மட்டுமன்றி, அந்தந்த மாவட்டங்களில், அவர்களது இன விகிதாசாரத்துக்கு அமைவாக (அரச) காணிகளை பகர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கவும் வேண்டும்.

கிழக்கு மாகாணத்தில் காணி விவகாரம் என்பது, காணிப் பிரச்சினை, காணிப் பற்றாக்குறை, அபகரிப்பு, காணிப்பிணக்கு, காணிப் பங்கீட்டில் முறைகேடு என்ற பல விடயங்களை உள்ளடக்கி இருக்கின்றது.

கிழக்கின் மூன்று மாவட்டங்களிலும் முஸ்லிம்கள் காணிசார் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்திருக்கின்றனர். இம்மாகாணத்தில் சிங்களவர்களை விட சனத்தொகையில் அதிகமானவர்களாகவும் தமிழர்களுக்குச் சரிசமமானவர்களாகவும் வாழ்கின்ற முஸ்லிம்கள், சர்வதேச நியதிகளுக்கு முரணாக, ஒப்பீட்டளவில் மிகக் குறைந்த காணிகளையே உரித்தாகக் கொண்டிருக்கின்றனர்.

திருமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் முஸ்லிம்கள் செறிவாக வாழும் ஒவ்வொரு பிரதேசத்திலும் இந்நிலைமை இருக்கின்றது. ஆனால் அதை அரசாங்கம் வசதியாக மறந்து விடுகின்றது.

உதாரணமாக, அம்பாறை மாவட்டத்தை எடுத்துக் கொள்வோம். முஸ்லிம்களின் பூர்வீகம் மற்றும் காணியுடமைகள் பற்றி ஆய்வு செய்யும் ஓர் ஆய்வாளரின் தகவலின் பிரகாரம், சுமார் 40ஆயிரம் மக்கள் தொகையைக் கொண்ட அக்கரைப்பற்று பிரதேசத்தில் 102 சதுர கிலோமீற்றருக்குள்ளேயே மக்கள் வாழ்கின்றனர்.

42ஆயிரம் மக்களைக் கொண்ட அட்டாளைச்சேனையில் 52 ச.கிமீற்றருக்குள் மக்கள் வாழ்கின்றனர். 25ஆயிரம் சனத்தொகை கொண்ட நிந்தவூரில் 55 ச.கி மீற்றரிலும்,சம்மாந்துறை, இறக்காமம், நாவிதன்வெளி, கொலனி போன்ற பிரதேசங்களில் வாழும் சுமார் 94ஆயிரம் முஸ்லிம்கள் வாழ்வது 268 ச.கி மீற்றர் நிலப்பரப்பிலேயே ஆகும்.

அதுபோல,சாய்ந்தமருது, கல்முனை, மருதமுனை போன்ற முஸ்லிம் பிரதேசங்களில் சுமார் ஓர் இலட்சம் முஸ்லிம் மக்கள் 50 ச.கி மீற்றர் நிலப்பரப்புக்குள்ளேயே நெருக்கமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

உண்மையில், விகிதாசாரப்படி பார்த்தால், அக்கரைப்பற்று மக்களுக்கு 268 ச.கி மீற்றர் காணிகளும், அட்டாளைச்சேனைக்கு 288 ச.கி மீற்றர் காணிகளும், நிந்தவூருக்கு 188 ச.கி மீற்றர் காணிகளும், சம்மாந்துறை, இறக்காமம் உள்ளிட்ட பிரதேச மக்களுக்கு 639 ச.கி மீற்றர் காணிகளும், கல்முனை, சாய்ந்தமருது மற்றும் மருதமுனை மக்களுக்கு விகிதாசரப்படி 688 ச.கி மீற்றர் காணிகளும் உரித்தாக இருந்திருக்க வேண்டும். அல்லது, இனியாவது பகர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இவ்வாறு, இனவிகிதாசாரப்படி முஸ்லிம்களுக்கு காணிகள் இல்லாத நிலை கிழக்கு மாகாணத்தின் ஒவ்வொரு ஊரிலும் இருக்கின்றது. தென்கிழக்காசியாவிலேயே, ஒரு குறிப்பிட்டளவான வரையறுக்கப்பட்ட நிலப்பரப்புக்குள் அதிகமக்கள் வாழும் பிரதேசமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி சொல்லப்படுகின்றது.

அந்த மக்களுக்கு இதைவிடவும் பன்மடங்கு குடியிருப்புக் காணிகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். இம்மாவட்டத்தின் ஏனைய பிரதேசங்களிலும் காணித் தட்டுப்பாடுகள் நிலவுகின்றன. கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் கீழேயே ஓரளவுக்கு காணிகள் உள்ளன. ஆயினும் அவைகூட இன்னும் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றின் ஊடாக, முஸ்லிம்களுக்கு முறையாக உரிமையாக்கபடவில்லை என்று அறியமுடிகின்றது.

அதேபோன்று,முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் திருகோணமலை மாவட்டத்திலும் சில முஸ்லிம் பிரதேசங்களில் அவர்களது சனத்தொகைக்கு ஏற்ற விதத்தில் காணிகள் உரித்தாக இல்லை என்பதுடன் காணிப் பிணக்குகளும் உள்ளன.

அங்கு, முஸ்லிம்களுக்கு உரித்தான பல நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகள், இராணுவத் தேவைகளுக்காகக் கையகப்படுத்தப்பட்டுள்ளன. 27 தனியார் காணிகளில் முகாம்கள் உள்ளன. காணிஉரித்துப் பத்திரங்கள் உரிய காலத்தில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டிருக்கவில்லை என்பதற்கு மேலதிகமாக, இப்போது சிங்கள மயமாக்கம் மற்றும் தொல்பொருள் திணைக்களத்தால் அபகரிக்கப்படுகின்ற சூழலும் காணப்படுகின்றது. இவ்வாறே, கிழக்கில் தமிழர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, தென்னிலங்கையில் வாழ்கின்ற முஸ்லிம்கள் தங்களது சந்ததியினரோடு அம்மண்ணில் பரந்துவிரிந்து வாழ்வதற்கு ஏதுவாக காணிகள் வழங்கப்பட வேண்டும்.

வடக்கில் முஸ்லிம்கள், தங்களது பூர்வீக நிலத்தில் குடியேற்றப்பட்டு, இனவிகிதாசாரப்படி காணிகள் வழங்கப்பட வேண்டும்.

அதேவேளை, கிழக்கு மாகாணத்தில் அந்தந்த பகுதிகளின் இனவிகிதாசாரப்படி முஸ்லிம்களுக்கு காணிகள் பகர்ந்தளிக்கப்படுவதுடன், திட்டமிட்ட சிங்களமயமாக்கம், தொல்பெருள் திணைக்களம் மற்றும் வனவள திணைக்களத்தால் முஸ்லிம்களின் காணிகள் உரிமை அபகரிக்கப்படுகின்ற செயற்பாடுகளும் உடன் நிறுத்தப்பட வேண்டும்.

அதுவே எதிர்கால முஸ்லிம்களின் இருப்பைப் பாதுகாப்பதாக அமையும்.