ரணில் எனும் பச்சைக் கள்ளன்?

இலங்கை அரசியலில் சுமார் நாற்பதாண்டுகளிற்கு மேலான அனுபவமுள்ள ரணில் விக்கிரமசிங்க இதுவரை அரசியலில் சாதித்தது தான் என்ன? இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணவல்ல முதிர்ச்சிடைந்த தலைமைப் பண்பு (statesmanship) அவரிடம் இருக்கிறதா? இலங்கையையின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்கான திட்டங்களை தீட்டி நடைமுறைப்படுத்த வல்ல ஆற்றல் (ability) அவரிடம் இருக்கிறதா போன்ற கேள்விகள் வியாபிக்கத் தொடங்கியிருக்கிறது.

கடந்த கால் நூற்றாண்டிற்கு மேலாக, இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியை தலைமை தாங்கி வரும் ரணில் விக்கிரமசிங்க, தேர்தல் களங்களில் அந்தக் கட்சிக்கு ஈட்டிக் கொடுத்த தோல்விகள் ஏராளம்.

1994ல் ஐதேக கட்சியின் தலைமைப் பொறுப்பை ரணில் ஏற்ற பின்னர், அந்தக் கட்சி எதிர்கொண்ட ஆறு பொதுத் தேர்தல்களில் நான்கிலும், ஐந்து ஜனாதிபதி தேர்தல்களில் நான்கிலும் ஐதேக தோல்வியைத் தழுவியிருக்கிறது. இதைத் தவிர இந்தக் காலப் பகுதியில் இடம்பெற்ற உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களிலும் மாகாண சபைகளுக்கான தேர்தல்களிலும் ரணிலின் பச்சைக் கட்சி தோல்விக்கு மேல் தோல்விகளை சந்தித்திருக்கிறது.

1977 பொதுத் தேர்தலில், கொழும்பை அண்டிய பியகம தேர்தல் தொகுதியில் இருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவான ரணிலை, பிரதி வெளி விவகார அமைச்சராக நியமித்தார் அவரது அங்கிளான ஜனாதிபதி ஜெயவர்த்தனா.

கொழும்பு ரோயல் கல்லூரியில் அனுர பண்டாரநாயக்காவோடும் தினேஷ் குணவர்தனவோடும் ஒரே வகுப்பில் கல்வி கற்ற ரணில் விக்கிரமசிங்கவை, அமைச்சரவை அந்தஸ்துள்ள கல்வி, இளைஞர் விவகார மற்றும் தொழில்வாய்ப்புக்கள் அமைச்சராக நியமிக்க ஜெயவர்தனவிற்கு அதிக காலம் எடுக்கவில்லை.

எண்பதுகளில் ரணில் கல்வி அமைச்சராக இருந்த காலத்தில் தான் பாடசாலைகளில் ஒப்படை (assignment) முறை அறிமுகப்படுத்தப்பட்டு பின்னர் மீள பெறப்பட்டது.

முப்பது வயதில் இலங்கையின் மிகவும் இளமையான Cabinet அமைச்சராக பதவியேற்ற ரணில், 1989ல் நடந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர், ஜனாதிபதி பிரேமதாசவின் அரசில் ஜதேகவின் சபை முதல்வராகவும், தொழிற்துறை, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சராகவும் பதவியேற்றார்.

1993ல் பிரேமதாச கொல்லப்பட, DB விஜேதுங்க ஜனாதிபதியாக, ரணில் முதல் முறையாக பிரதமரானார். 1994ல் ஐதேகவை விட்டு, பிரிந்திருந்த காமினி திசைநாயக்க மீண்டும் கட்சியில் இணைந்து, இரண்டே இரண்டு வாக்குகளால் ரணிலை தோற்கடித்து கட்சியின் தலைவராகி, சந்திரிக்கா பிரதமான 1994 தேர்தலில் எதிர்க் கட்சித் தலைவரானார்.

1994 சனாதிபதி தேர்தலிற்கு சில மாதங்களிற்கு முன்னர் பேலியகொடவையில் காமினி கொல்லப்பட, சந்திரிக்காவை ஜனாதிபதி தேர்தலில் எதிர்கொள்ள காமினியின் மனைவி சிறிமாவை தேர்தல் களத்திற்கு அனுப்பி வைத்தார் ரணில் என்ற ஐதேக தலைவர். பிறரை களத்திற்கு அனுப்பி விட்டு தான் ஒதுங்கியிருக்கும் அரிய தலைமைத்துவ பண்பை 2010லும் 2015லும் ரணில் மீண்டும் மீண்டும் வெளிக்காட்ட தவறவில்லை.

2000 ஆண்டளவில் சந்திரிக்கா முன் வைத்த அரசியல் யாப்பு யோசனைகளை ஐதேகவும் இணைந்து தான் தயாரித்தது. இறுதியில் பாராளுமன்றில் புதிய அரசியல் யாப்பை ஒரு சட்டவாக்கமாக முன்வைக்க சந்திரிக்கா முன்வந்த போது, அதை சட்டமாக நிறைவேற்றக் கூடாது சட்டவலுவற்ற ஒரு White Paperஆக தான் முன் வைக்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் குழப்பம் விளைவித்து, பாராளுமன்றத்தில் அரசியல் யாப்பு யோசனைகளை தீவைத்து கொளுத்திய descentஆன அரசியல்வாதி தான் ரணில் விக்கிரமசிங்க.

அதே காலப்பகுதியில் சந்திரிக்காவும் கதிர்காமரும் நோர்வேயை இலங்கை இனப் பிரச்சினையை தீர்க்க, விடுதலைப் புலிகளுடன் பேச மத்தியஸ்தம் வகிக்க அழைத்திருந்தார்கள். கொழும்பு வந்திருந்த எரிக் சொல்ஹேய்மின் நோர்வே தூதுக்குழு மரியாதை நிமித்தம் எதிர்க்கட்சித் தலைவரான ரணிலையும் சந்தித்திருந்தது. தங்களுடனான சந்திப்பில் ரணில் அதிகம் ஆர்வம் காட்டவில்லை என்று நோர்வே தரப்பினர் பின்னர் எழுதிய To end a Civil War எனும் புத்தகத்தில் பதிவு செய்தார்கள்.

தொண்ணூறுகளின் கடைசிக் காலத்திலிருந்து நோர்வேயின் அனுசரணையில் புலிகளுடனான பேச்சுவார்த்தைகளை சந்திரிக்கா ஆரம்பித்திருக்க, 2001 இறுதியில் பிரதமாரான ரணில், ஜனாதிபதி சந்திரிக்காவை பேச்சுவார்த்தைகளில் இருந்து ஓரம் கட்டியதும் பேச்சுவார்த்தைகள் குழம்புவதற்கான பிரதான காரணிகளில் ஒன்று என்று To end a Civil War எனும் புத்தகத்தில் இடம்பெறும் பலரது கருத்துக்கள் சுட்டிக் காட்டுகின்றன.

1999ல் தன்மீது நடந்த தற்கொலைத் தாக்குதலிற்கு பின்னரும் தொடர்ந்து புலிகளுடன் பேச வேண்டும் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்ற ஓர்மத்துடன் இருந்த சந்திரிக்காவை ஓரம் கட்டிய ரணில், பேச்சிவார்த்தை மேடைகளில் புலிகள் விடுத்த கோரிக்கைகளை நிராகரிக்க கூறிய சாட்டு “ஜனாதிபதி ஒத்துழைக்க மறுக்கிறார்”.

மறுவளமாக விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்த சர்வதேச வலைப்பின்னலை பின்னிக் கொண்டும், கருணாவின் பிரிவிற்கு அனுசரணை வழங்கியும், புலிகளை வெறுப்படைய வைத்து, அன்ரன் பாலசிங்கம் 2005 மாவீரர் தின உரையில் “ரணில் ஒரு குள்ளநரி” என்று வர்ணிக்குமளவிற்கு புலிகளின் வெறுப்பை சம்பாதித்திருந்தார்.

விடுதலைப் புலிகளுடன் நடந்த பேச்சுவார்த்தைகளில் எட்டிய SIHRN உட்பட எந்த இணக்கப்பாடுகளும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்பதும், 2002ல் வொஷிங்டனில் நடந்த இலங்கையின் அபிவிருத்தி தொடர்பான மாநாட்டிற்கு புலிகள் அழைக்கப்படாமையில் ரணில் பின்புலத்தில் ஆற்றிய பங்கையும் வரலாறு பதிவு செய்துவிட்டுத் தான் சென்றுள்ளது.

2005 ஜனாதிபதி தேர்தலில், சமஷ்டி தருவேன் என்னு தேர்தல் விஞ்ஞாபனத்தில் ரணில் பகிரங்கமாக குறிப்பிட்டிருக்க, மகிந்தவிற்கு வலுச் சேர்க்கும் வண்ணம் அமைந்த புலிகளின் தேர்தல் பகீஷ்கரிப்பு, ரணிலை 185,000 வாக்குகளால் தோல்வியடைய வைத்தது.

2015ல் சந்திரிக்காவோடு இணைந்து, மைத்ரியை பொது வேட்பாளராக முன்னிறுத்தி, சிங்கள வாக்குகளை பிரித்து, சிறுபான்மையினரின் ஒன்றுபட்ட வாக்குபலத்துடன் ஜனாதிபதி தேர்தலில் மைத்ரியை வெல்ல வைத்தது ரணிலின் சாணக்கியம் தான்.

ஜனவரி 8, 2015ல் மைத்ரி ஜனாதிபதியாக தெரிவாக, அலரி மாளிகையில் இருந்த மகிந்தவை ஹெலிக்கொப்டரில் ஏற்றி தங்காலைக்கு அனுப்ப வழிசமைத்தது என்னவோ அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ரணில் தான்.

2015ன் ஆரம்பத்தில் பொதுத் தேர்தலை எதிர்கொள்ளாமல், பாராளுமன்றத்தின் பெரும்பான்மையை பெற்று பிரதமரான ரணில் முன்மொழிந்த 100 நாள் வேலைத் திட்டத்தை மறக்கத் தான் முடியுமா? அந்த நூறு நாள் வேலைத்திட்டத்தில் அடங்காத தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பாக அளித்த வாக்குறுதிகள் எதுவும் இன்றுவரை முழுமையாக நிறைவேற்றப்பட்டனவா? 2015 செப்டெம்பரில் ஐநாவில் இலங்கையும் இணைந்து நிறைவேற்றிய 30-1 நிறைவேற்ற படாமைக்கு பொறுப்பு கூற வேண்டியது ரணில் இல்லையா?

2015ன் ஆரம்பத்தில் இலங்கையில் நிலவிய நல்லாட்சி பற்றிய பலத்த எதிர்பார்ப்புக்களை, தனது செயல்திறனற்ற
தலைமைத்துவத்தால் நாசமாக்கியது ரணில் இல்லையா? மகிந்த தரப்பினர் மீது சுமத்தப்பட்ட எந்த வழக்குகளின் விசாரணைகளையும் முழுமையடைய விடாமல் ரணில் தடங்கல் செய்கிறார் என்று மைத்ரி குற்றம் சாட்டியது நமக்கு மறந்து விட்டதா?

2015 நவம்பரில் அரசியல் கைதிகளை இன்னும் ஒரு வாரத்தில் விடுதலை செய்து விடுவேன் என்று கூட்டமைப்பினரிற்கு வாக்குறுதியளித்தத ரணில், இன்று வரை அதை நிறைவேற்றவில்லை. படையினரின் ஆக்கிரமிப்பில் இருக்கும் காணிகளும் விடுவிக்கப்படவில்லை, போரினால் அழிவுண்ட வடக்கு கிழக்கை அபிவிருத்தி செய்ய புலம்பெயர்ந்த தமிழர்களை இணைத்து செயலாற்ற முன்வந்த சர்வதேச முன்னெடுப்புக்களும் முன்னகரவில்லை, இப்படி ரணில் செய்வதாக சொல்லி செய்யாமல் போன கருமங்களை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

அன்றிலிருந்து இன்றுவரை ரணிலின் modus operandi என்பது காலத்தை கடத்துவது தான். கோரிக்கைகள் அனைத்தையும் அனுதாபத்தோடு கேட்பது, கட்டாயம் நிறைவேற்றுவேன் என்று உறுதியளிப்பது, ஜனாதிபதியை சாட்டு சொல்வது, காலத்தை இழுத்தடிப்பது, எதையும் செய்யாமல் இருப்பது, தனது பதவியை தக்க வைப்பது, அவ்வளவு தான்.

புதிய அரசியல்யாப்பு விவகாரமும் இந்த காலங் கடத்தும் கைங்கரியத்தின் இன்னுமொரு வடிவம் தான். ஐதேவும் சுதந்திரக் கட்சியும் இணைந்த நல்லாட்சியின் ஆரம்பத்தில், சந்திரிக்காவின் 2000ம் ஆண்டு அரசியல் யாப்பு யோசனைகளை மீண்டும் பாராளுமன்றத்தில் முன்வைத்து, மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு நிறைவேற்றியிருக்கலாம். அதைச் செய்யாமல் மக்கள் கருத்தறிய மாவட்டம் மாவட்டமாக போய், எல்லா தரப்புக்களையும் அழைத்து கருத்துக் கேட்டு, வட மாகாண சபையையும் தமிழ் மக்கள் பேரவையையும் யோசனைகளை வரையப் பண்ணி, காலத்தை இழுத்தடித்தது தான் மிச்சம், உருப்படியாக எதுவும் நடைபெறவில்லை.

பொருளாதாரத்தை எடுத்துக் கொண்டாலும், ரணில் நியமித்த மத்திய வங்கி ஆளுநரான மகேந்திரனின் கைவண்ணத்தில் மத்திய வங்கி பிணைகளில் நடந்த ஊழல், இலங்கையின் பொருளாதாரத்தில் பின்னடைவை சந்திக்க வைத்தது. விசாரணைகளின் விளைவாக நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட மகேந்திரனை சிங்கப்பூரிற்கு தப்பி ஓட வைத்த Mr. Clean தான் ரணில் விக்கிரமசிங்க.

தீர்க்கமான முடிவுகளை எடுத்து செயலாற்றும் வலுவற்ற ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக்குவதன் மூலமாக தமிழர்களின் முக்கிய பிரச்சினைகளிற்கு தீர்வு வரும் என்ற நம்பிக்கை ஏனோ வர மறுக்கிறது.

இன்றைய இலங்கையின் குழப்பகரமான அரசியல் களத்தில் மிகவும் நிதானமாகவும் சாணக்கியமாகவும் காய்களை நகர்த்தி, உள்நாட்டிலும் சர்வதேச நாடுகளிடமும் நன்மதிப்பை சம்பாதிருக்கும் தமிழ் தலைமைகள், இனிவரும் நாட்களில் எடுக்கும் முடிவுகள் மேற்கூறிய வரலாற்றை கவனத்தில் எடுத்தே எடுப்பார்கள், எடுக்க வேண்டும் என்ற நம்பிக்கை மட்டும் எஞ்சியிருக்கிறது.

நம்பிக்கை தானே வாழ்க்கை.

(எனது கனவுகளிற்கும் நினைவுகளிற்குமான களம்- Jude Prakash)