வடமாகாணசபையின் அலட்சியப்போக்குகள்

(கருணாகரன்)

கடந்த வாரம் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனை கனடாவிலிருந்து வந்திருந்த முதலீட்டாளர் குழுவொன்று சந்தித்திருந்தது. இந்தக் குழுவில் முதலீட்டாளர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய 29 பேர் அடங்கியிருந்தனர். இந்தச் சந்திப்பின் நோக்கம், போரினால் பாதிக்கப்பட்டிருக்கும் வட பகுதியை அபிவிருத்தியடைய வைப்பதற்கான முதலீடுகளைச் செய்வதற்குரிய ஏதுநிலைகளை ஆராய்வதாகும். ஆனால், “சந்திப்பு இனிக்கவில்லை. திருப்தியளிக்கவில்லை. உரிய முறையில் இதற்கான பதில்கள் கிடைக்கவில்லை. சரியான அக்கறை காட்டப்படவில்லை. சி.வி.விக்னேஸ்வரனிடம் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னரே எழுத்தில் தெரியப்படுத்தியிருந்த போதிலும் அவரிடம் இருந்து எந்த ஒத்துழைப்பும் கிட்டவில்லை என்று முதலீட்டாளர்கள் குழு கவலை தெரிவித்திருக்கிறது.

இந்த ஏமாற்றம் ஏன்?

இந்தச் சந்திப்புக்கான முதல் தொடக்கப்புள்ளி, விக்கினேஸ்வரனுடைய கனடியப் பயணத்தின்போது போடப்பட்டது. கனடாவுக்குச் சென்றிருந்த விக்கினேஸ்வரன், போரினால் பாதிக்கப்பட்ட வட பகுதியை முன்னேற்றுவதற்கு கனடாவிலிருந்து முதலீகளைச் செய்வோருக்கான அழைப்பை விடுத்திருந்தார். விக்கினேஸ்வரனுடைய அழைப்பைத் தொடர்ந்தே இந்தக் குழுவினர் இலங்கை வருவதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். இதற்கமைய முதற்கட்டமாக அவர்கள் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பாக, தமது நோக்கத்தைத் தெரிவித்து, அது தொடர்பான திட்டங்களை ஆராய்வதற்கான முன்விவரங்களை விக்கினேஸ்வரனுக்கு அனுப்பி வைத்திருந்தனர்.

கூடவே தமது வருகை தொடர்பாக வடக்கிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் (றிஸாட் பதியுதீன் உள்ளிட்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் விஜயகலா மகேஸ்வரன், அங்கயன் ராமநாதன் போன்ற அரச சார்ப்புப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் மற்றும் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் அறிவிக்கப்பட்டதா என்று தெரியவில்லை) வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க போன்றோருக்கும் தங்களுடைய வருகை தொடர்பாக அறிவித்திருந்தனர்.

விக்கினேஸ்வரனைச் சந்திக்கும்போது, எதற்காக ஏனையவர்களைச் சந்திக்க வேணும் என்று யாரும் இந்த இடத்தில் கேள்விகளை எழுப்பக்கூடும். வடக்கில் மட்டுமல்ல இலங்கையின் எந்தப் பகுதியில் முதலீடுகளைச் செய்ய வேண்டுமாக இருந்தாலும் மேற்படி தரப்பினரின் ஒத்துழைப்புகளும் அனுமதியும் தேவை. இது நிர்வாக அடிப்படையில் தேவையானது. மட்டுமல்ல சம்பிரதாய புர்வமாகவும் அமைவது. ஆகவே இந்தக் குழுவின் நிகழ்ச்சி நிரல் ஓரளவுக்குச் சரியானது என்றே கூற வேணும். இதன்படியே குழுவினர் ஏனையவர்களுடனும் சந்திப்புகளை மேற்கொண்டிக்கின்றனர். இது யதார்த்தத்தைக் கவனத்திற் கொண்டு செயற்படும் புத்திபுர்வமான நடவடிக்கையாகும்.

ஆனால், மையச்சந்திப்பு, முதலமைச்சர் விக்கினேஸ்வரனுடனேயே நடந்தது. சந்திப்பின் முக்கிய நோக்கம், வடக்கில் முதலீடுகளைச் செய்வதற்கானது என்பதால் முதலமைச்சருடனான சந்திப்பே பிரதானமானது. ஆனால், முதலீட்டாளர்கள் குழுவைச் சந்தித்திருந்த முதலமைச்சர், அவர்கள் முன்யோசனை தெரிவித்ததற்குரிய விளக்கத்தையோ பதிலையோ அளித்திருக்கவில்லை. அத்துடன், இவற்றையிட்டு மேலதிகமாக ஆர்வத்தோடு உரையாடியிருக்கவும் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இத்தகைய குற்றச்சாட்டுகளை முன்னரும் பல தரப்பினர் முன்வைத்திருக்கின்றனர். குறிப்பாக இந்திய முதலீட்டாளர்கள், ஒரு திட்டத்தைக் கையளித்திருந்தனர். அது தொடர்பாக இறுதிவரை விக்கினேஸ்வரன் பதிலே அளிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இப்படிப் பல.

அப்படியானால், வடக்கு மாகாணத்தின் முதலீடுகள், தொழில்துறை ஊக்குவிப்பு, தொழில் வழங்குதல் அல்லது வேலைவாய்ப்புத் தொடர்பாக சபையின் நிலைப்பாடு என்ன? ஏற்கனவே நடந்த போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் அதிலிருந்து மீள முடியாத நிலையில் உள்ளனர். உடல் உறுப்புகளை இழந்தவர்களாகவும் பாதிக்கப்பட்டவர்களாகவும் உளப்பாதிப்புக்குள்ளானவர்களாகவும் ஆண் துணையிழந்தவர்களாகவும் பெற்றோரையும் உழைப்பாளர்களையும் இழந்தவர்களாகவும் என ஆயிரக்கணக்கான குடும்பங்கள் நிர்க்கதி நிலையில் இருக்கின்றன.

இவர்களைக் கவனித்து, மீள் நிலைப்படுத்துவது அவசியப்பணியாக உள்ளது. ஆனால், போர் முடிந்து எட்டு ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், அரசாங்கமும் இந்த மக்களை மீள் நிலைப்படுத்துவதற்கான உரிய திட்டங்களை உருவாக்கவில்லை. இந்த மக்களை நேரடியாகவே பிரதிநிதித்துப் படுத்தும் மாகாணசபையும் எதையும் செய்யவில்லை. இப்படித் தானாகவே தேடி வருகின்ற வாய்ப்புகளைப் பயன்படுத்தி, பாதிக்கப்பட்ட பிரதேசங்களையும் பாதிக்கப்பட்ட மக்களையும் மீள் நிலைப்படுத்துவதற்கும் மாகாணசபை தயாரி்ல்லாமல் இருக்கிறது. இது ஏன்?

சிலவேளை வெளி முதலீட்டாளர்களை உள்ளே அனுமதிப்பதில் நடைமுறை ரீதியில் பிரச்சினைகள் வரலாம் என்று யாரும் வாதிடக்கூடும். அப்படியானால், அதை வெளிப்படையாகவே வடக்கு மாகாணசபை தெரிவிக்க வேணும். வெளி முதலீட்டாளர்களின் உள் நுழைவு எத்தகைய பிரச்சினைகளை உண்டாக்கும் எனத்தாம் கருதுவதாக அதற்குரிய காரணங்களை ஆதாரத்தோடு முன்வைக்கலாம்.

அதேவேளை அதற்குப் பதிலாக, உள்ளுர் முதலீட்டாளர்களை ஊக்குவிக்கவும் அவர்களுக்கு ஆதரவளிக்கவும் மாகாணசபை முன்வரவேணும். அதற்குரிய திட்டங்களையும் முன்வைக்க வேணும். இதையெல்லாம் செய்யாமல், சும்மா சாட்டுப்போக்குகளைச் சொல்வதும் பாராமுகமாக, கேளாச் செவியாக இருப்பது நல்லதல்ல. அது பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்பார்ப்புக்கும் நம்பிக்கைக்கும் இழைக்கின்ற அநீதியாகும்.

வடக்கிலே இன்று வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை வரவரக் கூடிச் செல்கிறது. நாடு முழுவதிலும் வேலையில்லாப் பிரச்சினை உள்ளது. இது தனியே வடக்கிற்கு மட்டும் உரிய பிரச்சினை இல்லை என இதற்கும் யாரும் மறுப்பும் விளக்கமும் சொல்லக்கூடும். ஏனைய பகுதிகளை விட வடக்குக் கிழக்கில் இந்தப் பிரச்சினை அதிகம் உள்ளது என்பது அவதானமும் புள்ளிவிவரங்களின் கூற்றுமாகும்.

இதற்குக் காரணம், இந்தப்பிரதேசங்களில் யுத்தம் நடைபெற்றதால், ஏற்கனவே இருந்த முதலீடுகளும் தொழில் முயற்சிகளும் முற்றாகவே அழிந்து விட்டன. அரச தொழில் மையங்கள் மற்றும் உற்பத்தி மையங்களான சீமெந்துத் தொழிற்சாலை, உப்பளம், இரசாயனக் கூட்டுத்தாபனம், ஓட்டுத்தொழிற்சாலை எனப் பல உற்பத்தி மையங்கள் இன்னும் மீள இயங்கவில்லை. முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் இந்த மையங்களில் ஏறக்றைய இருபது ஆயிரம்பேர் வேலை செய்தனர். இவை தொடர்ச்சியாக இயங்கியிருக்குமாக இருந்தால் இன்னும் இவற்றின் வளர்ச்சியில் கூடுதலானவர்கள் வேலைவாய்ப்பைப் பெற்றிருக்க முடிந்திருக்கும்.

இதைவிடத் தனியார் தொழில் மையங்களாக கண்ணாடித்தொழிற்சாலை, அலுமினியப் பொருட்கள் உற்பத்திச் சாலை, படகு கட்மானத் தொழிற்சாலை, கைத்தறி மற்றும் மின்தறிகள், ஆணி மற்றும் வாளி உற்பத்தி நிறுவனங்கள், மென்பான உற்பத்தி நிறுவனங்கள், சவர்க்கார உற்பத்தி மையங்கள் எனப் பல தொழில்சாலைகள் இருந்தன. இவையும் பல ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கின. யுத்தம் எல்லாவற்றையும் இல்லாதொழித்து விட்டது.

தெற்கில் அப்படியல்ல. அங்கே தனியார் தொழில் மையங்களும் உற்பத்தி நிறுவனங்களும் இயங்கி வந்தன. மட்டுமல்ல, வடக்குக் கிழக்கில் முதலீடுகளைச் செய்ய முடியாத நிறுவனங்களும் கொம்பனிகளும் தெற்பகுதியிலேயே முதலீடுகளைச் செய்தன. இதனால் அங்கே ஓரளவுக்கு வேலைவாய்ப்புகளைப் பெறக்கூடிய சூழல் இருந்தது, இப்போதும் இருக்கிறது.

அப்படியானால் யுத்த காலத்தில் மக்கள் எப்படி வாழ்ந்தனர்? அவர்களுக்கான வேலை வாய்ப்புகள் எப்படியிருந்தன? என்ற கேள்விகள் எழலாம்.

யுத்த கால வாழ்க்கை என்பது, பாதி வாழ்க்கையாக, அடிப்படைய வசதிகளே இல்லாத நிலையில் ஒவ்வொருவரும் வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட ஒரு சூழல். அதை ஏனைய காலத்தோடும் இயல்பு நிலையோடும் ஒப்பிடுவது பொருத்தமல்ல. அப்போது வெளித்தொடர்புகளில்லை. மின்சாரமில்லை. பிற செலவுகளுக்கு இடமில்லை. அது ஒரு நெருக்கடிக்கால குறைவாழ்க்கைக் காலம்.

ஆனால், அந்த நெருக்கடிக் கால இடர் வாழ்க்கையை முடிந்தவரையில் நிரப்ப வேணும் என போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை இயக்கங்கள் முயற்சித்தன. விடுதலைப்புலிகள் தமது ஆளுகைக்காலத்தில் இதற்குப் பல உருப்படியான தி்ட்டங்களை முன்வைத்திருந்தனர். உற்பத்திப் பண்ணைகள், வாணிப நிலையங்கள், நிர்வாக அலகுகள், புதிய தொழில்துறைகள் எனப் பலவற்றைப் புலிகள் உருவாக்கியிருந்தனர். குறிப்பாக 1990 க்குப்பின்னான புலிகளின் ஆட்சிக்காலத்தில் அவர்களுடைய நிர்வாக அலகுகள் தொடக்கம் பிற தொழில்துறைகள் வரையில் சுமார் ஒரு லட்சம் வரையானவர்கள் வேலை வாய்ப்புகளைப் பெற்றிருந்தனர். ஆண், பெண், முதியவர்கள், இளையோர், படித்தவர்கள், படிக்காதவர்கள் என எல்லாத்தரப்பினருக்கும் புலிகளிடத்தில் வேலை வாய்ப்பிருந்தது. இதைவிட அன்று ஏராளமானவர்கள் போராளிகளாக இருந்தனர். இதனால் சமூகத்தில் வேலையற்றவர்களின் எண்ணிக்கை இல்லாதிருந்தது என்றே சொல்ல முடியும்.

இங்கே ஊன்றிக் கவனிக்க வேண்டியது, சமூகத்திலுள்ள அனைத்துத்தரப்பினருக்குமான தொழில் வாய்ப்பைப்பற்றிப் போராளிகள் சிந்தித்தனர். அதிலும் ஒரு பக்கத்தில் போருக்கு முகம் கொடுத்துக் கொண்டு, மறு பக்கத்தில் சிறப்பான நிர்வாகத்தையும் வேலை வாய்ப்புகளையும் வழங்கினர் என்பது.

ஆனால் இன்று?

எவருக்குமே வேலையில்லை. இதைவிடப் போராளிகளாக இருந்தவர்கள் சமூகத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் ஒரு சிறிய தொகுதியினருக்கு மட்டுமே சிவில் பாதுகாப்புப் படை என்ற பெயரில் பண்ணைத்திட்டங்களில் வேலை வாய்ப்பை அரசாங்கம் வழங்கியது. அதுவும் படைக்கட்டமைப்பின் வழியாக மட்டுமே. ஏனையவர்களின் நிலை பரிதாபரமானது. பலர் உடற்காயங்களுக்குள்ளாகி, உடல் உழைப்பைச் செய்ய முடியாதவர்கள். தொழில் தேர்ச்சியற்றவர்கள். தவிர, இப்போது இயக்கத்துக்குப் போராளிகளாகச் செல்வோரின் தொகை இல்லை. படிப்பை இடையில் கைவிடுவோரின் தொகை இல்லை. எனவே இவர்கள் எல்லாம் படித்து முடித்து விட்டு வேலை வாய்ப்புக்காகக் காத்திருக்கின்றனர்.

இவர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவற்குரிய பொறுப்பை யார் கையில் எடுப்பது? மாகாணசபை இதற்குரிய ஏற்பாடுகளை என்ன வகையில் செய்திருக்கிறது? வடக்குக் கிழக்கு மக்களின் ஆதரவைப் பெருமளவில் பெற்றிருக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இந்தப் பிரச்சினையைக் குறித்துக் கொண்டிருக்கும் அக்கறையும் நடவடிக்கையும் என்ன? இப்போது கூட்டமைப்பு ஆதரிக்கும் மைத்திரி – ரணில் அரசின் வரவு செலவுத்தி்ட்டத்தின் போது கூட இந்தப் பிரதேச மக்களுடைய நலன்களுக்கு விசேட கவனம் செலுத்தும்படி கோரப்படவில்லை. எந்த நிபந்தனைகளையும் முன்வைக்காமலே கூட்டமைப்பு இரண்டு வரவு செலவுத்திட்டத்துக்கு ஆதரவளித்திருக்கிறது. இது எவ்வளவு பெரிய தவறு?

தம்மால் இந்த மக்களுக்குரிய வகையில், பிரதேசத்தின் முன்னேற்றத்துக்கான முதலீடுகளைச் செய்து, தொழில் துறைகளை உருவாக்கி, வேலை வாய்புகளை வழங்க முடியாது போனாலும் தானாக் கிடைக்கின்ற வாய்ப்புகளையாவது பயன்படுத்திக் கொள்ளலாம் அல்லவா. வலிய வருகின்ற சீதேவியை காலால் தள்ளி ஒதுக்கும் செயலாகவே தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் அரசியலும் மாகாணசபையின் அணுகுமுறைகளும் உள்ளன. இதற்கெல்லாம் முகப்பாக இருக்கிறார் முதலமைச்சர் விக்கினேஸ்வரன்.

“நல்லவற்றைச் செய்யாது விட்டாலும் பரவாயில்லை. தீயவற்றை நிச்சயமாகச் செய்யாதீர்கள்“ என்று சொல்லப்படுவதுண்டு. வருகின்ற முதலீடுகளையும் கிடைக்கின்ற உதவிகளையும் தடுக்காதிருந்தாலே போதும் என்கின்றனர் மக்கள். வெளி முதலீடுகள் சிலவேளை பொருத்தமில்லாதவையாக இருக்கலாம். அவற்றை ஆராய்ந்து, பொருத்தமான சட்டவிதிகளையும் நிபந்தனையும் விதித்து அவற்றை உள்வாங்க முடியும். அல்லது புலம்பெயர் சமூகத்தின் நிதிப்பங்களிப்பு, மூளைப்பங்களிப்பு போன்றவற்றோடு புதிய தொழில்முயற்சிகளையும் முதலீடுகளையும் கூட உருவாக்க முடியும். ஆனால், இதில் சிறிய அளவுக்குக் கூட அக்கறை தமிழ் அரசியற் தரப்புக்கும் கிடையாது. மாகாணசபைக்கும் இல்லை.

இதனால்தான் யுத்தம் முடிந்து எட்டு ஆண்டுகளின் பின்னும் தமிழ்ச்சமூகம் அவலத்திற் கிடந்து உழன்று கொண்டிருக்கிறது. இந்த நிலை தொடருமாக இருந்தால் சமூகச் சீர்கேடுகள் பெருகும். அண்மைய அவதானிப்பின்படி பாடசாலைகளில் இருந்து இடை விலகும் சிறார்களின் தொகை அதிகரித்துச் செல்வதை வன்னி மாவட்டங்களின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அத்தோடு வடக்கில் மேலும் புதிய சிறார் இல்லங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு, 15 ஏக்கர் நிலப்பரப்பில் புதியதொரு சிறுவர் இல்லம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. புலிகள் முன்னர் இயக்கி வந்த காந்தரூபன் சிறுவர் இல்லத்தைப் புதுப்பித்து, கிளிநொச்சியில் புலம்பெயர் தமிழர் ஒருவர் ஆரம்பித்திருக்கிறார். இப்போது கிளிநொச்சியில் மட்டும் ஐந்து சிறார் இல்லங்கள் இயங்குகின்றன. இதைவிட வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களிலும் ஏராளம் சிறார் இல்லங்கள் உருவாகியுள்ளன. மாற்றுத்திறனாளிகளின் நிலைமையைப்பற்றி விவரிக்கவே முடியாத அளவுக்கு துன்பகரமாக உள்ளது. பெண் தலைமைத்துவக்குடும்பங்களின் நிலையை அறிய வேண்டுமானால், இநதப் பகுதிகளிலுள்ள ஆரம்பக் கல்வியைப் பயிற்றுவிக்கின்ற ஆசிரியர்களிடம் கேட்டால் சொல்வார்கள். தங்கள் குடும்பத்தின் நிலையைப் பற்றிச் சொல்லும் பிள்ளைகளின் துயரத்தை இந்த ஆசிரியர்கள் தினமும் எதிர்கொள்ளவேண்டியுள்ளது.

அந்த அளவுக்குச் சமூக நிலைமை மோசமாகி வருகிறது. ஆனால், நமது அரசியல் தலைவர்கள் எப்போதும் திருமண நிகழ்வில் நிற்பதைப்போல பட்டும் பீதாம்பரமும் கொண்டாட்டமும் கலகலப்புமாக இருக்கிறார்கள். இதைப்பற்றிப் பொது அரங்கில் பேசுவதற்கு இன்று யாருமே இல்லை. அரசியல் நிலைப்பாடுகளைப்பற்றியும் அரசியல் தீர்மானங்களைப்பற்றியும் உரத்துப் பேசுவற்கு முன்னிலை வகிக்கின்ற மதகுருக்களும் சமூக சிற்பிகளும் செயற்பாட்டாளர்களும் புத்திஜீவிகளும் ஆய்வாளர்களும் ஊடகவியலாளர்களும் ஊடகங்களும் சமூக நிலவரத்தைப் பேச முன்வருவதேயில்லை.

தாம் சார்ந்த சமூகத்துக்குத் தம்முடைய இதயம் இழகவில்லை என்றால், பிறருக்கான நீதிக்காக மற்றவர்கள் எப்படி இரங்குவர் என எதிர்பார்க்க முடியும்?

சிலர் கோட்டையைக் கட்டுவார்கள். சிலர் கோட்டையை விட்டு விடுவார்கள். இரண்டாவது வகையைச் சேர்ந்தவர் வடக்கின் முதலமைச்சர் விக்கினேஸ்வரன். இதைத் திரும்பத்திரும்ப அவர் நிரூபித்துக் கொண்டிருக்கிறார். என்றபடியால்தான் விக்கினேஸ்வரனின் நிர்வாகம் கடுமையான விமர்சனத்துக்கும் மிக மோசமான வீழ்ச்சிக்கும் உள்ளாகியிருக்கிறது. அழுவோருடைய கண்ணீரைத் துடைப்பவரே தலைவர். அவலத்தில் தன்னுடைய சமூகம் கிடந்துழலும்போது அதையிட்டுக் கவலைப்படாதவர் நிச்சயமாக வரலாற்றின் இருளில் தள்ளப்படுவார். இது வரலாற்றின் விதியாகும்.