வியட்நாமின் தவப்புதல்வன்

வியட்நாம் மக்களின் வீரம் செறிந்த விடுதலைப் போராட்ட வரலாறு உலகப்பிரசித்தமானது. இன்று சுமார் ஒரு இலட்சம் மக்கள் கொரோனா வைரஸ் நோயினால் இறந்ததைக் கண்டு உலகம் பதறித் துடித்து நிற்கிறது. ஆனால் வியட்நாமை 1955 முதல் 1975 வரை ஆக்கிரமித்திருந்த அமெரிக்கா இந்த 20 வருட காலத்தில் 30 இலட்சம் வியட்நாம் மக்களை குண்டு வீசியும் சுட்டும் வெடடியும் கொன்றது என்றால் நம்புவீர்களா? ஆனால் உண்மை நம்பித்தான் ஆக வேண்டும். அப்படியான ஒருவன்தான் நிகுnயென் வான் ட்ரோய். ஆனால் ஒரு கோழையாக அல்ல, வீரனாகவே அவன் மரணித்தான். அதற்கு காரணம் என்ன?

ட்ரோய் தென் வியட்நாமை ஆக்கிரமித்திருந்த அமெரிக்காவுக்கு எதிராக போரடிய தென் வியட்நாம் தேசிய விடுதலை முன்னணியின் கெரில்லாப்படைப் பிரிவான ‘வியட்கொங்’ அமைப்பின் ஒரு உறுப்பினன். அமெரிக்க ஆக்கிரமிப்புப் படைகளுக்கெதிரான பல கெரில்லா தாக்குதல்களில் அவன் ஆர்வமுடன் பங்குபற்றி வந்தான்.

இந்த நிலைமையில் அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்த லின்டன் பி.ஜோன்சன் அரசின் பாதுகாப்பு செயலாளர் ரொபேர்ட் மக்னமாரா – Robert Mcnamara – (பிற்காலத்தில் உலக வங்கி தலைவராக இருந்தவர்) தென் வியட்நாமுக்கு 1964 மே மாதத்தில் விஜயம் ஒன்றை மேற்கொண்டார். அவரது வாகனத் தொடரணி கொங் லை என்ற பாலத்தைக் கடக்கும் போது குண்டு வைத்து மக்னமாராவை கொல்வதற்கு ‘வியட்கொங்’ அமைப்பு திட்டமிட்டிருந்தது. ஆனால் திட்டமிட்ட நேரத்தில் குண்டு வெடிக்காததால் மக்னமாரா தப்பிவிட்டார். ஆனால் தாக்குதலில் ஈடுபட்டவர்களில் ஒருவனான நிகுயென் அமெரிக்க மற்றும் வியட்நாம் கூலிப்படைகளிடம் மாட்டிக்கொண்டான்.

அவனைக் கைது அமெரிக்காவின் தென் வியட்நாம் பொம்மை அரசின் படையினர் ட்ரோயை சித்திரவதை செய்து வியட்கொங் போராளிகள் பற்றிய தகவல்களை கறக்க முயன்றனர். சித்திரவதை பயனளிக்காத போது, ஆசை வார்த்தைகள் கூறியும் அவனை வசியப்படுத்த முயன்றனர். அவன் தனது இயக்கம் பற்றிய தகவல்களை வழங்கினால், தனது சக போராளிகளைக் காட்டித்தந்தால், அவனை மன்னித்து விடுதலை செய்வதுடன், அவன் தனது அழகிய இளம் மனைவியுடன் அமெரிக்காவில் பாதுகாப்பாகவும், வசதியாகவும் வாழ்வதற்கு ஏற்பாடு செய்வதாக ஆசை வார்த்தை கூறினர். ஆனால் ட்ரோயோ சித்திரவதைக்கோ ஆசை வார்த்தைக்கோ மசிந்து கொடுக்காமல் தனது விடுதலை இலட்சிய நிலைப்பாட்டில் உறுதியாக நின்றான். இறுதியில் அமெரிக்க – தென் வியட்நாம் கூட்டுப்படைகள் அவனைப் பகிரங்கமாகச் சுட்டுக்கொன்று தமது வெஞ்சினத்தை தீர்த்துக் கொண்டனர்.

அவனைச் சுட்டுக்கொன்ற போது தென் வியட்நாம் தலைநகர் சைகோனில் இருந்த பல உள்நாட்டு – வெளிநாட்டு நிருபர்கள் பிரசன்னமாக இருந்தனர். அவனை சுடும் காட்சியும் படமாக்கப்பட்டது. அவன் தனக்கு முன்னால் நின்ற நிருபர்களிடம் இறுதியாக பின்வருமாறு கூறினான்:
“நீங்கள் நிருபர்கள் என்றபடியால் என்ன நடக்கிறது என்பது உங்களுக்கு நன்கு தெரிந்திருக்கும். அமெரிக்கர்கள் எமது நாட்டை ஆக்கிரமித்திருக்கிறார்கள். அவர்கள் விமானங்கள் மற்றும் குண்டுகள் மூலம் எமது மக்களைக் கொல்கிறார்கள். நான் ஒருபோதும் எனது மக்களின் நலன்களுக்கு எதிராகச் செயல்படவில்லை. அமெரிக்கர்களுக்கு எதிராகவே நான் நடவடிக்கையில் இறங்கினேன்”.

அங்கு பிரசன்னமாகியிருந்த மதகுரு ஒருவர் ட்ரோய்க்கு இறுதியாக பாவ விமோசனம் வழங்க முன் வந்தார். அதற்கு ட்ரோய், “நான் எந்தப் பாவமும் செய்யவில்லை, அமெரிக்கர்களே பாவம் செய்துள்ளார்கள்” எனக்கூறி அவரது வேண்டுகோளை நிராகரித்துவிட்டான்.

ட்ரோய் மீது முதல் துப்பாக்கி சூடு நிகழ்த்தப்பட்ட போது, “வியட்நாம் நிடூழி வாழ்க” என முழக்கமிட்டவாறே வீர மரணத்தை ஏற்றுக்கொண்டான்.

இதற்கிடையே நிகுயென் வான் ட்ரோயை அமெரிக்க படைகள் கைது செய்து மரணதண்டனை விதித்ததை அறிந்து ஆத்திரமடைந்த வெனிசூலா கம்யூனிஸ்ட் கட்சியின் கெரில்லாபடையான FALN அமைப்பு பழிவாங்கும் நடவடிக்கையாக அமெரிக்க விமானப்படையின் லெப்டினன்ட் கேர்ணலான ஆiஉhயநட ளுஅழடநn என்பவரைக் கடத்திச் சென்று வைத்திருந்ததுடன், ‘ட்ரோய் கொலை செய்யப்பட்டால் அமெரிக்க கேர்ணலை கொலை செய்வோம்’ என மிரட்டியது. ஆனால் பின்னர் அவர் தொந்தரவேதுமின்றி விடுதலை செய்யப்பட்ட போதும் ட்ரோய் கொல்லப்பட்டுவிட்டார்.

1975 ஏப்ரலில் தென் வியட்நாம் (அருகிலிருந்த கம்போடியா, லாஓஸ் நாடுகள் உட்பட) அமெரிக்க ஆக்கிரமிப்பிலிருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டது. அதன் பின்னர் பிரிந்திருந்த வடக்கு தெற்கு வியட்நாம்கள் ஒரே நாடாக இணைக்கப்பட்டன. ஒன்றிணைக்கப்பட்ட வியட்நாம் சோசலிச குடியரசு நிகுயென் வான் ட்ரோய்க்கு மிக உயரிய கௌவத்தை அளித்தது.

ட்;ரோய் வியட்நாமின் தேசிய வீரர்களில் ஒருவராக அறிவிக்கப்பட்டார். பல வீதிகள், பாடசாலைகள், குடியிருப்புகள், பூங்காக்கள், பாலங்கள் (ட்ரோய் மக்னமாராவை கொலை செய்ய எத்தனித்த பாலம் உட்பட), கலை அரங்குகள், மண்டபங்கள் என்பனவற்றுக்கு அவரது பெயர் சூட்டப்பட்டது. பல இடங்களில் சிலைகள் நிறுவப்பட்டன. அவரது ஞாபகார்த்தமாக தபால்தலை வெளியிடப்பட்டதுடன், அவர் பெயரில் தேசிய விருதுகளும் உருவாக்கப்பட்டன.

அவரது இளம் மனைவி பான் தி குயென் (Phan Thi Quyen) அவர்களுக்கு வியட்நாமிய கம்யூனிஸ்ட் கட்சியிலும், அரசிலும் உயர் பதவிகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. அவர் தனது கணவரைப் பற்றி 1965இல் எழுதிய, “உன் அடிச்சுவட்டில் நானும்” என்ற நூல் உலகப் பிரசித்தி பெற்றதுடன், உலகின் பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டது.

தாய்நாட்டின் விடுதலை என்ற உன்னத இலட்சியத்தைத் தழுவி அமரத்துவம் அடைந்துவிட்ட நிகுயென் வான் ட்ரோய் வியட்நாமிய மக்களுக்கு மக்களுக்கு மட்டுமின்றி, ஏகாதிபத்தியவாதத்திறகு எதிராகப் போராடும் அனைத்துலக மக்களுக்கும் ஒளிவீசும் விடுதலை நட்சத்திரமாக இன்று திகழ்கிறார்.