கூனிக்குறுகிப்போய் நிற்கும் வட மாகாண சபை

(கருணாகரன்)

வட மாகாண சபையில் மூன்று அமைச்சர்களின் நடவடிக்கைகளையும் ஊழல் குற்றச்சாட்டுக்களையும் விசாரணை செய்வதற்கு குழுவொன்று அமைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கான பிரேரணையை முதலமைச்சரே கொண்டுவரவேண்டியதாகிவிட்டது. இது விசித்திரமான ஒன்று. ஆளும் தரப்பினரே ஆளும் தரப்பின் அமைச்சுகளின் மீதும் அமைச்சர்களின் மீதும் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருப்பது வேடிக்கையன்றி வேறென்ன? மட்டுமல்ல, வட மாகாண சபை ஆட்சிப்பொறுப்பை ஏற்ற மூன்று ஆண்டுகள் நிறைவுக்குள்ளேயே, ஊழல் குற்றச்சாட்டுக் கொண்டாட்டங்கள் அமர்க்களப்படுத்துகின்றன.

உண்மையில் இது முதலமைச்சர் விக்னேஸ்வரனின் கைகளை மீறி நிகழ்ந்த செயலாகும். தான் நியமித்த அமைச்சர்களின் மீது யாரும் குற்றச்சாட்டுகளைச் சுமத்த முடியாது என்று விக்னேஸ்வரன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார். அப்படிக் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக இருந்தால், அதற்கான ஆதாரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

ஆனால், சபையின் உறுப்பினர்கள் முதலமைச்சரின் நிலைப்பாட்டைத் தகர்த்தெறிந்து விட்டனர். அவர்கள் சபையிலும் முதலமைச்சருக்கு சமர்ப்பிக்கப்பட்ட கடிதங்களிலும் தொடர்ச்சியாகக் கொடுத்த அழுத்தங்களை அடுத்து, முதலமைச்சரே அமைச்சர்களை விசாரிப்பதற்கான குழுவை நியமிப்பதற்கான சபையேற்பைக் கோரினார். ஆனால், இந்த விசாரணைக்குழுவை நியமிக்கும் அதிகாரம் முதலமைச்சருக்கு உண்டு. இதைச் சுட்டிக்காட்டிய பின்னர், தானே அதற்கான குழுவை நியமிப்பதாக சபைக்கு முதலமைச்சர் அறிவித்திருக்கிறார்.

இப்படி அமைச்சர்களின் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து முதலமைச்சருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியவர்கள், எதிர்க்கட்சியினர் அல்ல. ஆளும்தரப்பைச் சேர்ந்த சகபாடிகளே. ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியிருப்போர், கல்வி அமைச்சர் தம்பிராஜா குருகுலராஜா, விவசாயம் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் ஆகியோர். சத்தியலிங்கத்தின் மீதான குற்றச்சாட்டுகள் அவர் பதவியேற்ற ஓராண்டுக்குள்ளேயே பகிரங்கமாகியிருந்தன.

குடும்ப உறுப்பினர்களை பதவிகளில் நியமித்தது தொடக்கம், ஒப்பந்த வேலைகளை உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் வழங்கினார் என்பது வரையில் பல குற்றச்சாட்டுகள். இதனையடுத்து, சத்தியலிங்கத்தின் பொறுப்பின் கீழிருந்த சில அமைச்சுகளை முதலமைச்சர் விக்னேஸ்வரன் பொறுப்பேற்றுக்கொண்டார்.

‘அந்தப் பொறுப்புகள் முதலமைச்சரின் நிர்வாகத்தின் கீழிருந்தே தன்னுடைய சம்மதத்தின் மூலமாக சத்தியலிங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டன. இருந்தும் அவற்றின் வினைத்திறன் போதாமையாக இருப்பதனால், அதைத் தான் மீளப்பெறுவதாக’ இதற்குச் சில காரணங்களை முதலமைச்சர் சொல்லியிருந்தார். இருந்தாலும் அது சத்தியலிங்கத்தின் மீதான நம்பிக்கையீனமாகவே பொதுவெளியில் பார்க்கப்பட்டது. அதில் ஓரளவு உண்மையுமுண்டு.

ஐங்கரநேசனின் மீதான குற்றச்சாட்டுகள் பளைப்பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் காற்றலை மூலம் மின்பெறு நிலையம் வழங்கும் நிதியைப் பயன்படுத்தியது தொடக்கம், பார்த்தீனியச் செடி ஒழிப்பு, மர நடுகை எனப் பலவற்றிலும் முறைகேடுகள் நடந்துள்ளன என ஊடகங்களிலும் முறைப்பாடுகளிலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இதையெல்லாம் விட அதிகமான ஊழல் கல்வி அமைச்சர் தம்பிராஜா குருகுலராஜாவின் மீதே சுமத்தப்பட்டிருப்பதாகத் தகவல். கட்டிட ஒப்பந்தங்களை வழங்குவதில் செய்யப்பட்ட முறைகேடுகள் தொடக்கம் ஏராளமான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. ஏற்கெனவே அதிகார துஷ்பிரயோகம் செய்வதையிட்டு குருகுலராஜாவின் மீது கசப்புடன் இருக்கும் மக்களுக்கும் கல்விப் புலம் சார்ந்தவர்களுக்கும் குருகுலராஜா மீதான இந்தக் குற்றச்சாட்டுகள் இனிப்பைத் தந்திருக்கின்றன.

ஆனால், குற்றச்சாட்டுகள் எல்லாம் நிரூபிக்கப்பட வேண்டும். அதுவே முக்கியமானது. அப்படி நிரூபிக்கப்பட்டால் நிச்சயமாக இந்த மூன்று அமைச்சர்களின் மீதும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படக்கூடிய சூழல் ஏற்படும். சிலவேளை இதில் ஒரு அமைச்சரோ அல்லது இரண்டு அமைச்சரோ மாட்டுப்பட மற்றவர் தப்பி விடவும் கூடும். இருந்தாலும் அபகீர்த்தி ஏற்பட்டிருப்பது என்பது உண்மையே.

இத்தகைய முறைகேடுகள் எல்லாம் நடந்து கொண்டிருக்கின்றன என வட மாகண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா அடிக்கடி வலியுறுத்தியிருக்கிறார். பல சந்தர்ப்பங்களில் ஆதாரங்களை முன்வைத்துச் சுட்டிக்காட்டியுமிருக்கிறார். தவராசா சுட்டிக்காட்டிய நியாயத்தையும் உண்மைகளையும் அப்பொழுது யாரும் பொருட்படுத்தவில்லை. பதிலாக ஏனையவர்கள் ஒன்று சேர்ந்து தவராசாவைப் பேசவிடாது தடுத்து விட்டனர்.

ஆனால், பயிரை மேயும் வேலிகள் ஆட்டைக்கடித்து மாட்டைக்கடித்து ஆளையும் கடிக்கத்தொடங்கின. அடிமடியில் சூடு பிடித்தபோதே எல்லாம் கைமீறிச்செல்வதாக ஏனையவர்கள் உணர்ந்தனர். உடனே அலக்கப்பலக்க விழுந்தடித்துக்கொண்டு களத்தில் புகுந்திருக்கின்றனர். விஷம் தலைக்கேறினாலும் வெள்ளம் தலைக்கு மேலே போனாலும் ஒன்றுதான் என்பது எத்தனை சரியானது? இப்பொழுது மாகாண சபை கூனிக்குறுகிப்போய் நிற்கிறது.

பொறுப்பேற்கப்பட்ட மூன்று ஆண்டுகளில் அது சில சாதனைப்புள்ளிகளையாவது எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி எதுவுமே நடக்கவில்லை. வெளிநாட்டுப்பிரதிநிதிகளுடன் அடிக்கடி முதலமைச்சர் கைகுலுக்கிப் படங்களை எடுத்துக்கொண்டதற்கு அப்பால் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய சாதனைகள் என்று எதுவுமே இல்லை. எதிர்பார்ப்புகள் நொருங்கி கைதடிவெளியில் சிதிலங்களாகக் கிடக்கின்றன. ஜனங்களுடைய மனங்களிலும்தான். மக்களுக்கு இந்த மாகாண சபையிலும் விக்னேஸ்வரனுடைய நிர்வாகத்தின் மீதும் ஏராளமான நம்பிக்கைகளும் எதிர்பார்ப்புகளும் இருந்தன.

போரினால் பாதிக்கப்பட்ட மக்களை நிர்வகிப்பதற்கும் இராணுவ நெருக்கடிகளிலிருந்து விடுபடுவதற்கும் மாகாண சபை பங்களிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இன்று எல்லாமே சரிந்து விட்டன. ஒரு காலத்தில் மதிப்பாக மாகாண சபையைப் பற்றிப் பேசியவர்கள் எல்லாம் இன்று அதைக் காறி உமிழும் நிலை வந்துள்ளது.

இந்த இடத்தில் மூத்த அரசியல்வாதியான ஆனந்தசங்கரியின் கூற்றினை இங்கே குறிப்பிட வேண்டும். ‘வட மாகாண சபையில் மூன்று அமைச்சர்களின் நடவடிக்கைகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்கு குழுவொன்று அமைக்கப்பட்டு, விசாரணை செய்வதற்கான தீர்மானத்தை வட மாகாண சபை நிறைவேற்றியுள்ளதானது மிகவும் அதிர்ச்சியை தருகின்றது. குற்றச்சாட்டுக்கள் உண்மையா, பொய்யா என்பது வேறு விடயம். இக்குற்றச்சாட்டுகளை கேள்விப்பட்டவுடன் தம்மீதுள்ள குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படும் வரை அமைச்சு பதவிகளில் இருந்து தாமாகவே விலகியிருக்க வேண்டும். அதுதான் ஒழுக்கமான அரசியல் பண்பாடாகும்’ எனச் சங்கரி குறிப்பிட்டிருப்பதைச் சம்மந்தப்பட்ட அமைச்சர்கள் கவனத்திற் கொள்வது நல்லது.

ஏனென்றால், ஒரு அரசியற் பண்பாட்டை வட மாகாண சபை இந்தச் சந்தர்ப்பத்தில் உருவாக்க வேண்டும். வட மாகாண சபை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் நடக்கின்ற முதலாவது ஆட்சி இதுவாகும். இந்த ஆட்சியில் வரையப்படும் அடிப்படைகளும் முன்மாதிரிகளும் வரலாற்றிற்குச் சிறப்பூட்டுவதுடன், எதிர்காலத்தில் அமையவுள்ள ஆட்சிகளுக்கும் வழிப்படுத்தலாக இருக்கும்.

ஆகவேதான் குறிப்பிட்ட அமைச்சர்கள் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளின் விசாரணைகள் நடந்து முடியும் வரையிலும் அமைச்சுப் பொறுப்புகளில் இருந்து விலகியிருப்பது மாண்புடைய செயலாகும். ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களே, தமது தரப்பைச் சேர்ந்த அமைச்சர்களின் மீதான புகார்களை வெளிப்படையாகத் தெரிவித்து, அரசியல் நாகரீகமொன்றை நடுநிலைத்தன்மைமிக்கதாக வெளிப்படுத்தியிருக்கின்றனர். இந்த மாண்பை அமைச்சர்களும் பின்பற்றுவது சிறப்பானதாகும்.

இதேவேளை, மாகாண சபை மீதான தொடர்ச்சியான விமர்சனங்களும் கண்டனங்களும் பல தரப்பினராலும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. மாகாண சபையின் முதலாண்டு நிறைவில் மாகாண சபையின் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் பத்திரிகைகள் காரசாரமாகத் தமது விமர்சனங்களை முன்வைத்துக் கேள்விகளை எழுப்பியிருந்தன. அந்த முதலாண்டிலேயே கவனத்தைச் செலுத்தியிருக்கலாம்.

இப்படி மேலும் இரண்டாண்டுகளுக்காக யாரும் காத்திருந்திருக்கத் தேவையில்லை. மாகாண சபையின் சாதனைகள் என்பது பிரேரணைகளைக் கொண்டு வருவதும் தீர்மானங்களை நிறைவேற்றுவதும்தான் என்று பகடியாக மக்கள் சொல்லுமளவுக்கே நிலைமை உள்ளது. இதை யாரும் மறுக்க முடியாது. ஆனால், வட மாகாண சபை முன்மாதிரியானதொரு மாகாண சபையாக நாடு முழுவதற்கும் முன்னுதாரணப்படும் என்று சொல்லப்பட்டது. அப்படித்தான் பலரும் எதிர்பார்த்தனர். இப்பொழுது ‘தனியொருவன்’ என்று எதிர்க் கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா எழுப்புகின்ற கேள்விகளுக்கு அத்தனை உறுப்பினர்களும் தடுமாறுகிறார்கள். தவராசாவைப் போலத்தான் சம்பந்தனும் எதிர்க் கட்சித் தலைவராக இருக்கிறார்.

ஆனால், அவர் தடுமாறி நடக்கிறரே தவிர ஆட்சியாளர்களைத் தன்னுடைய கேள்விகளால் திணறடிக்கவோ தடுமாற வைக்கவோ முடியாமலிருக்கிறார் என்று ஒரு நண்பர் ஆதங்கத்தோடு சொன்னார். அதில் உண்மையுண்டு. மாகாண சபையில் பொதுவாகவே நிதிக்கையாள்கையில் பல பிரச்சினைகள் உண்டென்பது இன்னொரு சுட்டிக்காட்டாகும். வடக்கு மாகாண சபைக்கு ஒதுக்கப்பட்ட ’67 கோடியே 44 இலட்சம் ரூபாய்க்கு வட மாகாணத்தில் என்ன நடந்தது என தெரியவில்லை’ என எதிர்க்கட்சித் தலைவர் தவராசா, கணக்காய்வு திணைக்கள அறிக்கையை ஆதாரம் காட்டித் தெரிவித்துள்ளார். வட மாகாண சபையின் மாதாந்த அமர்வு செவ்வாய்க்கிழமை(16) நடைபெற்றபோதே அவர் இதனைக் கூறியிருக்கிறார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ‘வட மாகாணத்தின் ஐந்து அமைச்சின் கீழ் உள்ள 28 திணைக்களங்களில் 67 கோடியே 44 இலட்சத்து 35 ஆயிரத்து 63 ரூபாய் பணம் தொடர்பில் கொடுக்கல்இ வாங்கலுக்கான உரிய ஆவணங்கள் எவையும் இல்லை என கணக்காய்வு திணைக்களம் கண்டறிந்துள்ளது. 2014ஆம் ஆண்டுக்குரிய கணக்காய்வு திணைக்கள அறிகையிலேயே இந்த விடயம் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அதேவேளை, 2014ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட 784 மில்லியன் ரூபாய் உரிய நோக்கத்துக்கு பயன்படுத்தப்படவில்லை என்பதனையும் கணக்காய்வுத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. இவ்வாறு 2011ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை இயங்கும் வட மாகாண சபையின் திணைக்களங்கள், அமைச்சு, அமைச்சின் அலுவலகங்கள் என்பன தனியார் வீடுகள் மற்றும் கட்டடங்களில் இயங்கி வருகின்றன. அவற்றில் 28 கட்டடங்கள் உரிய ஒழுங்கு முறைகள் பின்பற்றப்பட்டு பெற்றுக் கொள்ளப்படவில்லை எனவும் கணக்காய்வு திணைக்களம் அடையாளப்படுத்தியுள்ளது’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இதை மறுத்துரைப்பதற்கு ஆளில்லை. மௌனமாகக் கடந்து செல்லுதல் அல்லது கள்ளமௌனம் காக்கப்படுகிறது. இது ஏன்? இது சரியானதா? இது குறித்த சமூக ஆர்வலர்களின் அக்கறைகள் என்ன? புத்திஜீவிகள் இது குறித்து ஏன் இன்னும் பேசாமலிருக்கிறார்கள்? சமூகமே எல்லாத் தவறுகளையும் மறைக்கப் பழகிவிட்டதா? அப்படியென்றால், தவறுகள்தான் இனிமேல் கொடியேறும். யார் தவறுகளைச் செய்தாலும் அவற்றைத் தட்டிக் கேட்கும் பண்பாடும் அறிவுப் பொறுப்பும் ஏனில்லாமல் போகிறது?

மாகாண சபையின் நிர்வாகச் சீர்கேடுகள் பற்றி ஊடகங்கள் செய்திகளை வெளியிட்ட போதும் விமர்சனங்களை முன்வைத்தபோதும் அவற்றைக் கவனத்தில் எடுத்திருக்க வேண்டிய பொறுப்பு முதலமைச்சருக்குண்டு. அவர் ஒரு நீதியரசர். வயதில் முதிர்ந்தவர். பொறுப்புகளையும் பொறுப்புணர்வையும் நன்றாக உணரக் கூடியவர். அப்படியெல்லாம் இருந்தும் இந்தத்தவறுகள் எல்லாம் எப்படிக் கட்டுப்படுத்துவாரின்றித் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன?

மூன்று ஆண்டுகளுக்குள்ளேயே இத்தனை சரிவை வடக்கு மாகாண சபை சந்தித்திருக்கிறது என்றால், இதனுடைய எதிர்காலம் எப்படியிருக்கப்போகிறது? ‘நாடு ஊழல் ஆட்சியிலிருந்து மீண்டு விட்டது என்று மக்கள் சந்தோசப்பட்டுக்கொண்டிக்கும் பொழுதுதான் வடக்கில் ஊழல் என்ற பேச்சுக் கேட்கிறது’ என்றார் சிங்கள நண்பர் ஒருவர்.

அவருக்கு என்ன பதிலைச் சொல்வது என்று தெரியாமல் தடுமாற வேண்டியிருக்கிறது. ‘ஆசை யாரைத்தான் விட்டது?’ என்று ஒற்றை வசனத்தோடு இவற்றைக் கடந்து சென்று விட முடியாது. ஏனென்றால், இது ஜனங்களின் வாழ்க்கையோடும் வரலாற்றோடும் சம்மந்தப்பட்டதல்லவா? மக்களுக்காக உயிரையும் கொடுப்பதற்குத் துணிந்திருந்த சமூகத்திலிருந்துதான், இப்படி தங்களுக்கென இலாபங்களைத் திரட்டும் தலைவர்கள் உருவாகியிருக்கிறார்கள். என்னவொரு காலமாற்றம், பத்து ஆண்டுகளுக்குள்ளேயே என்பதே நிதர்சனம்.

– See more at: http://www.tamilmirror.lk/180120/%E0%AE%95-%E0%AE%A9-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%B1-%E0%AE%95-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%AF-%E0%AE%A8-%E0%AE%B1-%E0%AE%95-%E0%AE%AE-%E0%AE%B5%E0%AE%9F-%E0%AE%AE-%E0%AE%95-%E0%AE%A3-%E0%AE%9A%E0%AE%AA-#sthash.Z3Osuiv0.dpuf