தோழர் கௌரிகாந்தன்

யாழ் மைய தமிழ்தேசியத்தின் பாரம்பரிய தலைமைகள் பற்றிய தீவிரமான கேள்விகளை எழுப்பி யது இன்னும் ஞாபகத்திரைகளில்.
பின்னர் யாழ்குடா நாட்டு செம்மண் பிரதேச கிராமங்களில் வாரம் ஒரு கருத்தரங்கு ஞாயிற்றுக்கிழமைகளில் சந்தித்துக் கொண்டோம்.

யாழ்குடா நாட்டில் சாதி ரீதியாகவும் வர்க்க ரீதியாகவும் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகள் 1980 களின் முற்பகுதியில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் பழி வாங்கப்பட்ட விடயம் மலையகதோட்டத் தொழிலாளர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தேசிய பிரச்சனை உலக சோசலிச முகாம் என பல்வேறு விடயங்கள் பேசப்பட்டன.

இடது பார்வை கொண்ட தேசிய விடுதலை இயக்கங்களும் பாரம்பரிய இடது மரபுகளில் வந்தவர்களும் சங்கமம் ஆகிய ரகசிய கருத்தரங்குகள் தொடர்ச்சியாக நடைபெற்றன.

பயங்கரவாத தடைச் சட்டம் காணாமல் ஆக்கப்படுதல் அடுத்தடுத்து இன வன்முறைகள் அகதிகளாக மக்கள் தெற்கில் இருந்தும் மலையகத்தில் இருந்தும் இடம்பெயர்ந்து புலம்பெயர்ந்து கொண்டிருந்த காலம்.

தோழர் கௌரிகாந்தன் அவர்கள் அரசியல் சமூகவிவகாரங்களை எடுத்துரைப்பதில் மிகவும் தர்க்கபூர்வமானவர்.

இருபாலையிலும் பின்னர் மானிப்பாய் உடுவிலிலும் என 1980 களின் நடுப்பகுதி வரை யாழில் வாழ்ந்தவர்.

சக தோழர்களுடன் இணைந்து கிராமிய உழைப்பாளர் சங்கத்தின் உருவாக்கத்திலும் அகில இலங்கை விவசாயிகள் சங்கத்துடன் இணைந்து பணியாற்றுவதிலும் பங்களித்தவர்.

1980 களில் கிராமிய தொழிலாளர் விவசாயிகள் முன்னணியும் கிராமிய உழைப்பாளர் சங்கமும் இணைந்து பணியாற்றின.

நாங்கள் ஒரு காலத்தில் மிகவும் அன்னியோன்யமாகவும் நெருக்கமாகவும் பயணித்தோம். எழிலார்ந்த காலமது.

சகல உரையாடல்களிலும் சமூக நீதியே அடிநாதமாக இருக்கும்.
ஈழ மாணவர் பொதுமன்றம் கிராமிய தொழிலாளர் விவசாய முன்னணி ஊடாக முன்னெடுத்த பல்வேறு அரசியல் சமூக நடவடிக்கைகளில் போராட்டங்களில் அவர் அவ்வப்போது ஆலோசனைகளையும் கருத்துக்களையும் கூறி வந்திருக்கிறார்.

பின்னர் தமிழகம் சென்னையில் லயோலாக்கல்லூரியில் சந்தித்தது ஞாபகம்.

அதன் பின்னர் வெவ்வேறு திசைகளில் சென்றுவிட்டோம்.
மிக நீண்ட காலம் கால்நூற்றாண்டுகளுக்கு மேல் தர்மபுரியில் உள்ள ஏதிலியர் முகாமில் தனது மனைவியார் பிள்ளைகளுடன் வாழ்ந்திருக்கிறார் .அவர்களுடைய தியாகம் குறிப்பிடத்தகுந்தது.

தமிழகத்தில் வாழ்ந்த காலம் இந்திய தத்துவ மரபை சமூக நீதி இயக்க மரபை வரலாற்று இயங்கியல் முறையில் ஆராய முற்பட்டிருக்கிறார். ஓயாத தேடல் இறுதி மூச்சு வரை.

1980 களின் நடுப்பகுதியில் லங்கா கார்டியனில் யாழ் வறிய விவசாயிகள் பற்றிய கட்டுரைகளை எழுதியுள்ளார். யாழ்ப்பாணச் சமூக உருவாக்கமும் சுவாமி விபுலானந்தரும், அறமும் போராட்டமும் அவர் எழுதிய முக்கிய நூல்கள்.

வரலாற்றின் ஒரு கட்டத்தில் சமூக அரசியல் பயணத்தில் நாம் சக பயணிகள்.

அந்த பயணத்தில் எம்முடன் இருந்த தோழர்கள் பலர் மெல்ல விடை பெற்று விட்டார்கள் . இன்னும் சிலர் வாழ்கிறோம்.

ஞாபகங்கள் தொலைந்து போகமுன் எல்லாவற்றையும் பதிவு செய்து விட வேண்டும் என்ற மன அவசரம் நண்பரும் தோழருமான முத்து ஸ்ரீதரன் துயர செய்தியை காலையில் தெரிவித்திருந்தார் .

ஆழ்ந்த இரங்கல்கள். எம் இதய அஞ்சலிகள் .