புலிப் பயங்கரவாதம்/ கரிகாலன் உங்கள் அப்பாவிடம் பேச வேண்டும்.

பாஷிச விடுதலைப்புலிகள் ஏறாவூரின் இயல்பான வாழ்க்கையை தலைகீழாக மாற்றியிருந்தனர். கல்வி, கலாசாரம்,மார்க்க வழிபாடுகள்,மனிதநேயம் ஆகியவற்றின் மீது அச்சத்தின் நிழல் படர்ந்திருந்தது.

அந்த இருளின் மத்தியில் வாழ்ந்தவர் என் தந்தை மர்ஹூம் யூ.எல். தாவூத் (BA, SLEAS). அவர் ஒரு அதிபர் மட்டுமல்ல. ஒரு எழுத்தாளர், இலக்கியவாதி, சமூக சேவையாளர். ஏறாவூர் பாடசாலைகளின் கொத்தணி அதிபராகவும், சம்மேளனத்தின் தலைவராகவும், ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலையின் அதிபராகவும் பணியாற்றிய கல்வியாளர்.

புத்தகங்களை நேசித்தவர். சகோதர இனத்து சமூகத்தை ஒன்றிணைப்பதில் நம்பிக்கை கொண்டவர். கல்வியே ஒரு சமூகத்தின் எதிர்காலம் என்ற உறுதியுடன் வாழ்ந்தவர்.தான் ஆசையாக கட்டிய புதிய வீட்டில் குடியேறுவதற்கு முன்பே தனது சேமிப்பில் இருந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களை அன்போடு ஒழுங்குபடுத்தி வைத்திருந்தார்.

அதே நாளில் ஊரின் பொது வாசிகசாலை விடுதலைப்புலிகளால் தீக்கிரையாகி சாம்பலானது. ஒரு பக்கம் புத்தகங்கள் எரிந்தன; மறுபக்கம் என் தந்தை தான் எழுதிய புத்தகங்களுக்கு தான் கட்டிய வீட்டில் அறை ஒன்றை ஒதுக்கி நூலகமாக்கிக் கொண்டிருந்தார்.

அந்த இரவு, இஷா தொழுகையை முடித்துவிட்டு தந்தை வீட்டிற்கு வந்தார். குடும்பத்தினர் அனைவரும் இரவு உணவை முடித்திருந்தோம். தந்தை வீட்டின் முற்றத்தில் பாயில் சாய்ந்து, இரவு 9 மணிக்கு ஓலிபரப்பாகவுள்ள இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் இரவு செய்தியையும், அதனைத் தொடர்ந்து BBC தமிழ் ஒலிபரப்பையும் கேட்கத் தயாராக இருந்தார்.

உம்மா பெருநாள் பலகாரங்கள் தயாரிப்பதில் மும்முரமாக இருந்தார்.அது எங்கள் குடும்பத்தின் கடைசி அமைதியான இரவு என்பதை அப்போது எங்களில் யாரும் உணரவில்லை.

இரவு சுமார் 8.45 மணி.தாஸ் எனப்படும் பாஷிச விடுதலைப்புலிகளின் பிராந்தியப் பொறுப்பாளர்களில் ஒருவன் அவனது குழுவினரில் நாங்கு பேரும் தனது ஆயுததாரிகளுடன் எங்கள் வீட்டை வந்தடைந்தான்.

நான் சைக்கிளை எடுத்துக்கொண்டு வெளியே போகச்சென்ற தறுணம்.“தம்பி, அப்பா வீட்டில் இருக்கிறாரா?” என்று கேட்டான்.“ஆம்,” என்றேன்.“அவரை மட்டும் வெளியே வரச் சொல்லும்.”நான் உள்ளே சென்று வாப்பாவிடம் கூறினேன்.

அந்தச் செய்தியைக் கேட்டதும் எதற்கும் அஞ்சாத என் தந்தையின் முகத்தில் ஒரு கணம் பதற்றம் தெரிந்தது. வாசலுக்கு வந்த உம்மா அதைப் புரிந்துகொண்டார்.“ஏதாவது ஆபத்து என்று தோன்றினால் பின்வழியாக வெளியேறிவிடுங்கள்,” என்று அவர் பதற்றத்துடன் கூறினார்.ஆனால் தந்தை மறுத்துவிட்டார்.“நான் தவறு எதுவும் செய்யவில்லை.”அதுவே அவரது பதில்.

வாப்பா வெளியே சென்றார்.“கரிகாலன் உங்களுடன் அவசரமாக பேச வேண்டும்,” என்று தாஸ் கூறினான்.“அவர் ஏன் இங்கு வரவில்லை?” என்று தந்தை கேட்டார்.“ஆர்மி வரலாம் என்று தயங்குகின்றார்,” என்றான்.சட்டை அணிந்து வருகிறேன் என்ற தந்தையின் வேண்டுகோளையும் நிராகரித்து, “பக்கத்தில்தான்,” என்று கூறி அவரை அழைத்துச் சென்றனர்.

அப்போது எனக்கு 16 வயது.நானும் எங்கள் எட்டுவயது இளைய சகோதரன் ரியாஸும் அவர்களைப் பின்தொடர முயன்றோம். ஆனால் சில மீட்டர் சென்றவுடன் எங்களைத் தடுத்தனர்.

தந்தை திரும்பி வருவார் என்று காத்திருந்தோம்.அவர் திரும்பி வரவில்லை.இரவு ஒன்பது மணி, இலங்கை ஓலிபரப்புக்கூட்டுத்தாபனம் செய்தியறிக்கை ஆரம்பமானது…முடிவுற்றது.

தந்தை வரவில்லைஅச்சம் எங்களை உந்தியது. இருளில் நான் தனியாக அவர்கள் கூறிய இடத்திற்கு சென்றேன். அங்கே யாரும் இல்லை. மேலும் நடந்தேன்.ஐந்தாம் குறிச்சியை நோக்கி நடந்தேன்.இறுதியில் பம்மியடி பாலம் அருகே என் தந்தையை கண்டேன்.

பாஷிச விடுதலைப்புலிகள் அவரைச் சூழ்ந்து நின்றிருந்தனர்.நான் அவரிடம் ஓடிச் சென்றேன்.“நீ ஏன் மகன் வந்தாய்?” என்று வாப்பா கேட்டார்.நான் எதுவும் பேசவில்லை. அவரின் அருகிலேயே நின்றேன்.

சில நிமிடங்களில் ஒரு கெப்ரக வாகனம் வந்தது.அதில் காந்தனும் அவனது குழுவினரும் அமர்ந்திருந்தனர். வாகனத்தை சூழ சைக்கில்களிலும் புலிகள் ஆயுதம் தரித்து படையெடுத்து வந்தனர்.

வாப்பாவை அதில் ஏறுமாறு கட்டளையிட்டனர்.அவர் அமைதியாக, ஆனால் உறுதியாகக் கேட்டார்.“நான் என்ன குற்றம் செய்தேன்? எங்கள் சமூகத்திற்கு நீங்கள் இவ்வளவு கொடுமை செய்வது ஏன்?”அவர் நியாயம் பேசினார்.

ஆனால் அங்கே நியாயத்திற்கான இடமில்லை.கட்டளையே சட்டமாக இருந்தது.நானும் வாகனத்தில் ஏற முயன்றேன்.“நீ ஏற வேண்டாம்.”அவர்கள் என்னைத் தடுத்தனர்.

அந்த நொடியில் என் தந்தை ஓடிவந்து என்னை இறுக்கமாக அணைத்துக்கொண்டார்.நான் இதற்கு முன் அவரை அழுததைக் கண்டதில்லை.எப்போதும் தைரியமாக இருந்த எனது வாப்பா, அந்த ஒரு கணத்தில் ஒரு தந்தையாக மட்டும் இருந்தார்.“என் மகனுக்காகவாவது என்னை விட்டுவிடுங்கள்…”என்று கதறினார்.

நானும் அவரை விடாமல் பற்றிக்கொண்டு அழுதேன்.“என் தந்தையை அழைத்துச் செல்ல விடமாட்டேன்.”என்று கதறினேன்.

ஆனால் பாஷிச விடுதலைப்புலிகளிடம் இரக்கம் இல்லை.ஒருவன் என் தலைமுடியைப் பிடித்து இழுத்தான்.மற்றொருவன் துப்பாக்கியின் பின்பகுதியால் என் தலையில் பலமாக அடித்தான்.நான் தரையில் சரிந்தேன்.

அந்த நிலையிலும் என் தந்தை என்னை அடித்தவனை நோக்கி,“டேய்… என் மகனை ஏன் அடிக்கிறாய்?”என்று பாய்ந்தார்.அது நான் கேட்ட அவரது கடைசி வீரக் குரல்.சிலர் அவரை வலுக்கட்டாயமாகத் தூக்கி வாகனத்தில் ஏற்றினர்.அவர் தொடர்ந்து கதறினார்.“என் மகனுக்காகவாவது என்னை விட்டுவிடுங்கள்…”அந்தக் குரல் இருளில் கரைந்தது.

நான் பாதையோரத்தில் விழுந்தபடி அழுதேன்.என்னால் எழ முடியவில்லை.என்னால் என் தந்தையை காப்பாற்ற முடியவில்லை.அந்த இரவு அவர்கள் என் தந்தையை மட்டும் அழைத்துச் செல்லவில்லை.எங்கள் குடும்பத்தின் அமைதியையும், உம்மாவின் நிம்மதியையும், எங்கள் எதிர்காலத்தின் திசையையும் பறித்துச் சென்றனர்.

அன்று இரவு நான் 16 வயது சிறுவன்.அந்த ஒரு இரவிலேயே நான் முதிர்ந்துவிட்டேன்.இன்று பல ஆண்டுகள் கடந்துவிட்டன.ஆனால் பம்மியடி பாலம் இன்னும் எனக்கு ஒரு பாலமல்ல.

அது ஒரு மகனிடமிருந்து தந்தையைப் பறித்த இடம்.ஒரு குடும்பத்தின் விதியை மாற்றிய இடம்.ஒரு கல்வியாளரின், எழுத்தாளரின், இலக்கியவாதியின், சமூக சேவையாளரின் குரல் மௌனமாக்கப்பட்ட இடம்.சில நினைவுகள் மறக்கப்படுவதில்லை.அவை வரலாறாக வாழ்கின்றன.இந்தக் கதையும் அப்படிப்பட்ட ஒரு வரலாறு.

Leave a Reply