மாற்றங்களுக்கு வாய்ப்பு இல்லாததால் ஈ.பி.டி.பியிலிருந்து விலகினேன் – முன்னாள் எம்.பி சந்திரகுமார்-

கடந்த 05.06.2016 அன்று தினக்குரல் பத்திரிகையில் வெளியான நேர்காணல்
கேள்வி – ஈ.பி.டி.பி. ஐ ஆரம்பித்து அதனைப் பதிவு செய்தவர்களில் நீங்களும் ஒருவர். அப்படியிருந்தும் கட்சித் தலைமையுடன் உருவாகிய பிரச்சினைகளை உங்களால் ஏன் பேசித் தீர்க்க முடியவில்லை?
பதில் – எமது மக்களுடைய உரிமைகளுக்கான விடுதலைப்போராட்டத்தில் 1980 களின் ஆரம்பத்தில் இணைந்ததிலிருந்து கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியற் செயற்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன். இந்த முப்பது ஆண்டுகளிலும் எமது போராட்டமும் இலங்கை மற்றும் சர்வதேச அரசியற் போக்குகளும் பாரிய மாற்றங்களைச் சந்தித்து வந்திருக்கிறது. அதற்கேற்ற வகையில் ஒரு காலகட்டத்தின் தேவையாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியை உருவாக்க வேண்டியிருந்தது.

அதற்கான முயற்சிகளில் நானும் முக்கிய பங்களிப்பைச் செய்திருந்தேன். ஆனால் காலமாற்றமும் சூழலின் தேவையும் இன்றைய யதார்த்தங்களும் புதிய மாற்றங்களைக் கோருகின்றன. புதிய சூழலுக்கும் எதிர்காலத்தேவைக்குமாக நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. பல மாற்றங்களைச் செய்ய வேண்டும். நம்மைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இவையெல்லாம் வளர்ச்சிக்குத் தேவையானவை. நாம் மாற்றங்களைச் செய்தால்தான் மக்களிடமும் அந்த மாற்றங்கள் உண்டாகும் என்பது என்னுடைய புரிதலாகும்.
கட்சியில் நான் பிரச்சினைகளை உருவாக்கவில்லை. மாற்றங்களைச் செய்வதற்கான சூழலைக் குறித்தே என்னுடைய சிந்தனை இருந்தது. அதற்கான வாய்ப்புகளையே எதிர்பார்த்தேன். அது சாத்தியமில்லை என்பதால் விலகிக் கொண்டேன்.
கேள்வி – ஈ.பி.டி.பி.யிலிருந்து வெளியேறிவிட்டீர்கள். உங்களுடைய அடுத்த கட்ட நகர்வு என்ன? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் நீங்கள் இணைந்துகொள்ளலாம் எனக் கூறப்படுவது குறித்து…?
பதில் – அடுத்த கட்டத்தைத் தீர்மானிப்பது என்பது முக்கியமானது. இன்றைய தமிழ் அரசியல் தேக்கமடைந்துள்ளது. இதைப்பற்றிய விமர்சனங்களும் உரையாடல்களும் தீவிரமாக ஆரம்பித்துள்ளன. இதை மக்களும் கூர்மையாக அவதானித்துக் கொண்டிருக்கிறார்கள். நானும் அவதானித்துக் கொண்டிருக்கிறேன். அதேவேளை பாதிக்கப்பட்ட மக்களுடைய பிரச்சினைகளில் அக்கறையெடுத்துச் செயற்படுகிறேன். மக்களுடைய அரசியல் உரிமைக் கோரிக்கையிலிருந்து வாழ்க்கைப் பிரச்சினைவரையில் ஒரு பெரிய பரந்த பரப்பில் நாங்கள் வேலை செய்ய வேண்டியிருக்கு. தமிழ் அரசியலில் உள்ள இந்தத் தேக்கம் இப்படியே நீண்டகாலத்துக்கு நீடிக்காது. அதேவேளை புதியதொரு சூழலை உருவாக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறேன்.. விரைவில் என்னுடைய அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கைகள் எப்படி அமையும் என்பதை அறிவிப்பேன்.
இதேவேளை பல தரப்பினர்களோடும் உரையாடி வருகிறேன். உரிய வேளையில் பொருத்தமான நடவடிக்கைகளைச் செய்வோம்.
கேள்வி – உங்களுடைய வெளியேற்றம் தொடர்பாக கட்சித் தலைமைக்கு உத்தியோகபூர்வமாக நீங்கள் அறிவிக்கவில்லையா?
பதில் – பொருத்தமான முறையில் என்னுடைய விலகலைச் செய்தேன்.
கேள்வி – ஈ.பி.டி.பி.யிலிருந்து வெளியேறியமை அடுத்த கட்ட அரசியல் செயற்பாடுகள் குறித்து உங்களுடைய ஆதரவாளர்களுடன் பேசினீர்களா? அவர்கள் என்ன கருத்தைக்கொண்டுள்ளார்கள்?
பதில் – இதைப்பற்றியெல்லாம் ஆதரவாளர்களோடும் ஏனைய மக்களோடும் பேசியுள்ளேன். என்னுடைய நிலைப்பாட்டையும் தீர்மானங்களையும் அவர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆகவே வரவேற்கிறார்கள். தமிழ் அரசியலைப் புதிய திசையை நோக்கி வலுவோடு முன்கொண்டு செல்ல வேண்டும் என்று விரும்புகிறார்கள். அதற்காக சேர்ந்து செயற்படத் தயாராக இருப்பதாகச் சொல்லி இணைந்து செயற்பட முன்வந்திருக்கிறார்கள்.
கேள்வி – ஈ.பி.டி.பி. உட்பட சுமார் பத்து கட்சிகள் இணைந்து புதிய கூட்டணி ஒன்றை உருவாக்கியுள்ளன. இது போன்ற கூட்டணிகளால் எதனையாவது சாதிக்க முடியும் என நினைக்கின்றீர்களா?
பதில் – இப்படிக் கூட்டணிகளும் புதிய தரப்புகள் எனவும் காலத்துக் காலம் அமைப்புகள் வரும். ஏற்கனவே இதுபோலப் பல தரப்புகளும் கூட்டணிகளும் வந்திருக்கின்றன. இயக்கங்களின் தலைவர்கள் கூடக் கைகோர்த்துச் செயற்பட முன்வந்ததும் நடந்தது. ஆனால்இ தமிழ் மக்களின் பிரச்சினைகள் இன்னும் அப்படியேதான் உள்ளன. ஆகவே அவற்றை உரியமுறையில் கையாள்வதற்கான திறனோடு அமைப்புகள் உருவாக வேண்டும். இதற்கான அழுத்தங்களை மக்களும் கொடுக்க வேண்டும்.
எதிர்கால அரசியற் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு ஒன்றிணைந்து செயற்படுவது அவசியம். ஆனால் இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபடும் தரப்புகள் அரசியலைப் புரிய பரிமாணத்துடன் அறிவு புர்வமாகக் கையாள முன்வரவேண்டும். கடந்த கால அரசியற் பட்டறிவை ஆதாரமாகக் கொண்டு செயற்படுவது அவசியம் என்பது என்னுடைய அபிப்பிராயம். நாம் வெற்றிகளை நோக்கிச் செல்ல வேண்டும். தமிழ் மக்களின் வரலாற்றுத்துயரங்களை இனினும் நாம் மடியில் வைத்திருக்க முடியாது.
கேள்வி – மாகாண சபை முறையோ 13 வது திருத்தமோ இனநெருக்கடிக்கான தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் என நம்புகிறீர்களா?
பதில் – மாகாணசபை முறையும் 13 ஆவது திருத்தமும் சாதாரணமாக உருவாகவில்லை. அதற்குப் பின்னணியாக பெரியதொரு பங்களிப்பு இருந்தது. போராளிகளின் உச்சமான பங்களிப்பின் காரணமாகவே இந்தியத் தலையீட்டினால் மாகாணசபை முறையும் 13 ஆவது திருத்தமும் தமிழ்பேசும் மக்களுக்குக் கிடைத்தது.
ஆனால் துரதிருஷ்டவசமாக இணைந்திருந்த வடக்குக் கிழக்கு மாகாணசபை இன்று வடக்கு கிழக்கு என இரண்டு மாகாணசபையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவையெல்லாம் தமிழ்பேசும் மக்களுடைய உரிமைப்பிரச்சினைக்குத் தீர்வாகாது. ஆனால் இதற்கப்பால் செல்ல வேண்டும் என்பதற்காக தமிழ் மக்கள் சிந்திய இரத்தத்தையும் உயிரிழப்புகளையும் காலத்தையும் நாம் மனங்கொள்ள வேண்டும். அரசியல் விருப்புகளைச் செயலாக்கி விளைவை எட்டுவதற்கான சாத்தியப்பாடுகளைப்பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும். ஆனால் இன்றைய உலக ஒழுங்கு புதிய விதிகளை வற்புறுத்துகிறது. அது பன்மைத்துவத்தையும் ஜனநாயகத்தையும் வலுவுட்ட முனைகிறது. நாங்கள் இந்தத்திசையில் சிந்தித்தே ஆக வேண்டும். இது தவிர்க்கமுடியாதது.
கேள்வி – இதனையும் நிராகரித்தால் தமிழர்களுக்கு வேறு எதுவும் கிடைக்கப்போவதில்லை. அதனால் அதனை ஏற்றுக்கொள்ளலாம் என சிலர் கருதுகின்றார்கள். அது குறித்து உங்கள் நிலைப்பாடு என்ன?
பதில் – அப்படியல்ல. ஆனால் அவர்கள் கூறுவதிலுள்ள நியாயத்தையும் நாம் புறக்கணித்து விட முடியாது. அவர்கள் கடந்த கால அனுபவத்தையும் யதார்த்தத்தையும் புரிந்து கொண்டு பேசுகிறார்கள் என்று நம்புகிறேன். அதேவேளை நாம் மேலே முன்னோக்கிச் செல்வதைப்பற்றிச் சிந்திப்பதும் அவசியம். ஆனால் யதார்த்தத்துக்குப் புறம்பாக நமது எல்லைகள் அமைவது பொருத்தமானதல்ல. முதலில் ஒரு இடத்திலிருந்து தொடங்க வேணும். அந்தத் தொடக்கம் வலுவானதாக இருக்க வேண்டும். அதையே தமிழர்கள் இன்று சிந்திக்க வேண்டும் என விரும்புகிறேன்.
கேள்வி – தமிழ் அரசியல் தேக்கம் அடைந்திருப்பதாக கூறுகின்றார்கள் . இந்த தேக்கத்தை உடைப்பது எவ்வாறு?
பதில் – தமிழ் அரசியல் தேக்கம் அடைந்திருப்பது என்ற கருத்து என்னுடையது மட்டுமல்ல தமிழ் அரசியலை ஆய்வு செய்யும் பலரும் இந்தக் கருத்தையே கொண்டுள்ளனர். இந்த தேக்கத்திலிருந்து மீள வேண்டுமாக இருந்தால் அரசியலை தமிழர்கள் விஞ்ஞான பூர்வமாக அணுக வேண்டும். அதற்கு அரசியலில் துறைசார்ந்த பயில்முறை அவசியம். நிபுணத்துவத்துடன் அரசியலை கையாளவேண்டும். இதுவரையான தமிழ் அரசியல் என்பது உணர்ச்சி மையப்பட்டதாகவே உள்ளது. இது மாறாத வரை தமிழ்ர்களுக்கு அரசியல் விமோசனம் கிடையாது.
உணர்ச்சி மையப்பட்ட நிலையில் அரசியலை கையாண்டப்படியினாலேயே கடந்த அரைநூற்றாண்டுக்கு மேலான தமிழ்ர்களுக்குடைய அரசியலும் ஆயுத போராட்டங்களும் வெற்றியடையவி;லலை.
கேள்வி – அப்படியென்னறால் புதிய உள்ளடக்கம் ஒன்று தமிழ் அரசியலுக்கு தேவை என்கிறீர்களா?
நிச்சயமாக வரலாற்றில் இருந்து நாம் எதைக் கற்றுக்கொண்டுள்ளோம்,சொந்த அனுபவங்களிலிருந்து எதை படித்திருக்கின்றோம், மிக உயரிய தியாகங்களைச் செய்த பின்னரும் எமது அரசியல் பெறுமதிகளையும் பெற்றுக்கொள்ளவில்லை மக்கள் எல்லாம் ஒன்றுப்பட்டு தமது உணர்வை வெளிப்படுத்திய போதும், தமிழ் அரசியல் தலைமைகளால் மக்களுக்கான வெற்றியை பெற்றுக்கொடுக்க முடியவில்லை. அப்படியென்றால் இதற்கு அர்த்தம் என்ன? எனவேதான் எதிர்கால அரசியலை முற்றிலும் புதிய முறையில் கூர்மையாக நுண்மதியுடன் முன்னெடுக்க வேண்டும் என்று சொல்கிறேன்.
சந்திரகுமாரின் செவ்வியிற்கு கேள்வி எழுப்புகின்றார்…….  !

ஈ பீ டீ.பீ. யை விட்டு சந்திரகுமார் வெளியேறியது இதுதான் முதற்தடவையல் ல .இவரது சகாவான அற்புதன் கொலைசெய்யப்பட்ட பின்னரும் இங்கிலாந்துக்கு ஓடி ஆனந்தியுடன் சேர்ந்து புலிகளுக்காக பிரச்சாரம் செய்தவர் .அந்த நேரமும் மாற்றங்களை கொண்டுவர முடியவில்லை என்று தான் வெளியேறினாரா?அந்த நேரம் வெளியேரியதட்ககான காரணம் என்னவென்று கூறுவாரா? அத்துடன் திரும்பி வந்து மீண்டும் இணைந்ததற்கான காரணத்தையும் கூறுவாரா ?
மாற்றங்களை கொண்டுவர முடியவில்லை என்பது தான் காரணமென்றால் ,எதற்காக அவர் கடந்த பொது தேர்தலின்போது மக்களால் தூக்கிஎறியப்ப்படும்வரை ஈ பீ டீ.பீ. யில் தொங்கிக்கொண்டிருந்தார் ?ஈ பீ டீ.பீ. யினால் பெற்ற பதவியை பயன்படுத்தி தன்னை வளர்த்துக்கொள்வதட்காகவா ?
உண்மை என்னவென்றால் ,ஈ பீ டீ.பீ. யின் சகல வளங்களையும் பயன்படுத்தி சந்திரகுமார் தன்னை வளர்த்துக்கொண்டார் . ஊடகங்களை மிகவும் கெட்டித்தனமாக பயன்படுத்தி ,தன்னை ஒரு பிரமுகர் போன்ற ஒரு விம்பத்தை உருவாக்கிவிட்டார் .
தேர்தலில் எப்படியாவது வென்றுவிடவேண்டும் என்ற வெறியுடன் செயற்பட்ட சந்திரகுமாரின் கனவு மெய்ப்படவில்லை .இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு உழைத்தும் வெல்ல முடியவில்லை ,இனி இருந்தாலும் வெல்ல முடியாது என்பதால் தான் சந்திரகுமார் வெளியேறினார்.

மக்களின் மன உணர்வு என்று இவர் கூறுவது ,இனி எவ்வாறு பாராளுமன்றம் செல்வது என்ற இவரது உணர்வு .
ஈ பீ டீ.பீ. யில் இருந்தபோது, “கோடிக்கணக்கில் சேர்த்துவிட்டார் “,”சாராய தவறணை நடத்துகிறார் ” ,”குடும்பத்தை விட்டுவிட்டு கிளிநொச்சியில் ஒன்றை வைத்திருக்கிறார் ” என்றெல்லாம் எழுதியவர்கள் இவர் பிரிந்ததும் இவரது வெளியேற்றத்துடன் பிளந்திவிட்டது என்று மகிழ்ச்சிக்கடலில் குதிக்கிறார்கள் .
கட்சி நலனுக்கப்பால் மக்கள் நலனை முன்னிலைப்படுத்தும் அரசியலை மேட்கொள்ளும்வரை ஈ பீ டீ.பீ. அழியப்போவதில்லை .

(Sriranganathan Velayutham)