முன்னோடிகள்:
தோழர் பொன் கந்தையா
– எம்.குமாரசாமி
இக்கட்டுரை, இலங்கை கம்யூனிஸ்ட் இயக்க முன்னோடிகளில் ஒருவரும், கம்யூனிஸ்ட் கட்சியின் பருத்தித்துறைத் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான (1956 – 60) தோழர் பொன்.கந்தையா அவர்களின் 104 ஆவது பிறந்த தினத்தை (0.1.07.1914 – 08.09.1960) ஒட்டிப் பிரசுரிக்கப்படுகின்றது.
காலஞ்சென்ற முன்னாள் பருத்தித்துறைத் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினர் பொன்.கந்தையா (பொன்னம்பலம் கந்தையா) அவர்கள் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் முதற் தலைமுறையைச் சேர்ந்தவர். வட பகுதியிலே மு.கார்த்திகேசன், அ.வைத்திலிங்கம் போன்றோருடன் 1952 தொடக்கம் 1960 வரை, ஏலவே ஸ்தாபிக்கப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டியெழுப்பியவர். பாராளுமன்றத்தை நன்கு பயன்படுத்தி நாட்டிற்குப் பல சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியவர். சரித்திரப் பிரசித்தி பெற்ற 1953 ஆகஸ்ட் 12 இல் நிகழ்ந்த மாபெரும் ஹர்த்தால் வடபகுதியில் வெற்றி பெற உழைத்தவர்.
அக்காலத்தே இலங்கையின் முதலாளி வர்க்கத்தினருக்கும், நிலவுடமையாளர்களுக்கும், மேல்குடிமக்களுக்கும் கம்யூனிஸ்ட்டுகள் பரம விரோதிகளாகத் தென்பட்டனர். 1943 ஆம் ஆண்டு யூலை 3 ஆம் திகதி கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பித்ததைத் தொடர்ந்து, கட்சி உறுப்பினர்கள் மீது தீவிர கண்காணிப்பும் அடக்குமுறைகளும் (பிரித்தானிய காலனித்துவ) அரசினால் கட்டவிழ்த்து விடப்பட்ட காலமது. இரகசியமாக ஆரம்பிக்கப்பட்ட இக்கட்சியில் ஸ்தாபக உறுப்பினர்களாக வைத்தியக் கலாநிதி எஸ்.ஏ.விக்கிரமசிங்க, பீட்டர் கெனமன், பொன்னம்பலம் கந்தையா, ஆரியரட்ன, ஏ.குணசேகர, கே.இராமநாதன், எம்.கார்த்திகேசன், என்.சண்முகதாசன், வை.யசோதிஸ், எல்.ஆரியவன்ச போன்றவர்கள் தியாக உணர்வுடன் இயங்கிக் கட்சியின் கொள்கைகளையும், செயற்பாடுகளையும் முன்னெடுக்கப் பெரிதும் உதவினர். இவர்களில் பீட்டர் கெனமன், அ.வைத்திலிங்கம், பொன்னம்பலம் கந்தையா ஆகியோர் ஐரோப்பாவிலிருந்து சர்வகலாசாலைப் பட்டப் படிப்புகளை முடித்துக் கொண்டு இலங்கை வந்து கம்யூனிஸ்ட் இயக்கத்துடன் இணைந்து கொண்டவர்கள்.
இம்மூவரோடு நான் கட்சி ரீதியாகத் தோழமையையும், நட்பையும் பேணி வந்திருப்பினும், செ.தர்மகுலசிங்கம் (ஜெயம்) மீதுள்ள அபிமானமும், பொன்னம்பலம் கந்தையாவுடனான தொடர்புமே என்னை இற்றைவரையொரு மார்க்சியவாதியாக வழி நடத்துகின்றன. பொன்னம்பலம் கந்தையா எப்பெயர் கொண்டு எண்ணற்றோரால் அழைக்கப்பட்டாலும், எம் போன்றோருக்கு அன்னார் “கந்தையா அண்ணை”யாகவே மனதில் நிறைந்திருக்கிறார்.
பொன்.கந்தையா ஒரு தலைசிறந்த கல்விமான். சமூக சேவையாளன். இதற்கும் மேலாக ஒரு கம்யூனிஸ்ட். ஒரு கம்யூனிஸ்ட்டாகவோ அல்லது பொதுவுடமைவாதியாகவோ இருந்ததின் காரணமாக முன்னிரு நிலைகளிலும் முன்னின்றார். இலங்கையில் வடமராட்சிப் பகுதி கல்விக்குப் பிரசித்தி பெற்றது. வடமராட்சியின் கல்விப் பரப்பையும், பாரம்பரியத்தையும் வளம்படுத்த கந்தையா அவர்களும் தனது கல்விப்பயணத்தை உடுப்பிட்டி அமெரிக்க மிசன் கல்லூரியில் ஆரம்பித்து, பின்னர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும், கொழும்பு பல்கலைக்கழகக் கல்லூரியிலும் பயின்று, பிரித்தானியாவிலுள்ள கேம்பிரிட்ஜ், ஒக்ஸ்போட் பல்கலைக்கழகங்களில் பூரணப்படுத்தி;யதையிட்டு நாம் அனைவரும் பெருமையடைகின்றோம்.
1956 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலை கந்தையா அவர்கள் சந்தித்தபோது அவரின் கல்வியாளுமையையும், தன்னலமற்ற செயற்றிறனையும் நோக்கிய கல்விமான்களும், அறிஞர்களுமான தமிழ்த் தாத்தா கந்தமுருகேசனார், பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை, கலாநிதி கே.சிவப்பிரகாசம், கல்லூரி அதிபர்களான வி.சோமசுந்தரம், கே.குமாரசாமி, எஸ்.சிவப்பிரகாசம், வித்துவான் நடராசா, எம்.ஏ.தங்கராசா, கே.சீனித்தம்பி, வ.தம்பிப்பிள்ளை, வி.அருள்சுந்தரம், நடிகர் கிருஸ்ணாழ்வார் போன்றோர் அவர் பக்கம் நின்று அவரின் வெற்றிக்கு உதவினர். இதிலுள்ள முதல் மூன்று பெரியார்களும் தமதில்லங்களிலிருந்து கொண்டே, கந்தையா அவர்களுக்கு ஆதரவான தேர்தல் நடவடிக்கைகளை எம் போன்ற வாலிபர்கள் மூலம் முடுக்கி விட்டவர்கள்.
1956 ஆம் ஆண்டுத் தேர்தலை நாம் நோக்கும்போது, கந்தையாவின் வெற்றி ஆரம்பத்திலேயே தீர்மானிக்கப்பட்டதொன்றாகும். கலவிமான்கள், கல்லூரி அதிபர்கள், ஆசிரியர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், சிறுபான்மைத் தமிழர் சமூகத்து முன்னோடிகளெனப் பல தரப்பினர் கந்தையாவின் தேர்தல் பணியிலீடுபட்டிருந்தனர். இவர்களின் ஒத்தாசையும் கடின உழைப்புமே அன்னாரை எண்ணாயிரத்திற்கும் அதிகப்படியான வாக்குகளால் வெற்றியீட்ட வைத்தது.
1952 இல் நடந்த பொதுத் தேர்தலில் மணியகாரர் பரம்பரையைச் சேரந்தவரும், பிற்போக்கு அரசியலை முன்னெடுத்தவருமான கே.சி.நடராஜா அவர்கள் தேர்தலில் இறங்காதிருந்தால், அந்த ஆண்டே பிற்போக்கு இனவாத இயக்கமான அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் வேட்பாளரான த.இராமலிங்கத்தை, கந்தையா அவர்கள் தோற்கடித்திருப்பார்.
1956 இல் அவர் ஈட்டிய வெற்றியின் பயனாக அவர் பிறந்த மண்ணான கரணவாய் கிராமமும், படித்த பாடசாலைகளான உடுப்பிட்டி அமெரிக்க மிசன் கல்லூரி, யாழ்.இந்துக் கல்லூரி ஆகிய ஸ்தாபனங்களும் கீர்த்தியடைந்தன. எனினும் இப்பாடசாலைகளின் வளர்ச்சியில் அவ்வளவு அக்கறை காட்டாது, நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தின் அபிவிருத்தியில் பெரிதும் ஈடுபட்டிருந்தார். இதற்கான பிரதான காரணமென்னவெனில், யாழ்.குடாநாட்டிலுள்ள பல பாடசாலைகள் அப்போது தனியார்துறைப் பாடசாலைகளாகவும், தாழ்த்தப்பட்ட சமூகப் பிள்ளைகளுக்கு அனுமதி வழங்காமையுமேயாகும். அவர் மேற்கொண்ட முயற்சியால் இப்பாடசாலை முன்னேற்றமடைந்து வர, குடாநாட்டிலிருந்து சாதி வேறுபாடின்றிச் சகல தரப்புப் பிள்ளைகளும், அரச உபகாரப் பணம் பெற்ற பிள்ளைகளும் இங்கு வந்து கல்வி கற்க ஆரம்பித்ததைப் பலரும் இன்றும் நினைவு கூருவர்.
சாதி ஒடுக்குமுறைக்குள் சிக்கிய சிறுபான்மைத் தமிழருக்காக அவர் கல்வித்துறையில் ஆற்றிய சேவை மகத்தானது. ஏறத்தாழ பதினைந்து பாடசாலைகளை யாழ்.குடாநாட்டில் உருவாக்கி, தகுதி வாய்ந்த சிறுபான்மைத் தமிழ் இளைஞர்களை ஆசிரியர்களாக்கி, தாழ்த்தப்பட்ட சமூக மக்களின் கல்விக் கண்களைத் திறந்துவிட்ட பெருமை அவரையே சாரும். பிற ஊர்களில் கடமையாற்றிய அச்சமூகத்து ஆசிரியர்கட்கு இடமாற்றம் பெற்றுக் கொடுத்து இப்பாடசாலைகளிலும், மற்றும் அரசினர் பாடசாலைகளிலும் சேவை செய்ய வைத்து, குடாநாட்டின் பொதுவான கல்வி வளர்ச்சிக்குப் பெரிதும் உதவி வந்தார். இம் முயற்சிக்கு அன்றைய கல்வியமைச்சராகவிருந்த டபிள்யு.தகநாயக்கவும், கல்விப் பணிப்பாளர் ரி.துரைசிங்கமும் பெருமுதவியாகவிருந்தனர்.
அன்றைய காலத்தே சிறுபான்மைத் தமிழர் மத்தியில் குடியிருப்புப் பிரச்சினையும் தலைதூக்கியிருந்தது. இவர்கள் மேட்டுக்குடியினரின் காணிகளில் வாழ்ந்து பல வதைகளுக்கு ஆளாக்கப்பட்டிருந்தனர். இந் நிலையைக் கருத்திற் கொண்ட கந்தையா, அவர்களுக்கு அரசாங்க காணிகளைப் பெற்றுக் கொடுத்து அச்சமூகத்தின் குடியிருப்புப் பிரச்சினைகளை ஓரளவு தீர்த்து வைத்தார். இப்பணிகளில் அவருக்கு உறுதுணையாக விளங்கியவர் சிறுபான்மைத் தமிழர் மகாசபையின் தலைவரும், வடபுல கம்யூனிஸ்ட் முன்னோடிகளில் ஒருவருமான எம்.சி.சுப்பிரமணியமேயாவார். இப்பணிகளுக்கு எம்.சி.சுப்பிரமணியம் சுக்கானாயிருக்க, கவிஞர் பசுபதி, என்.கே.ரகுநாதன், எஸ்.இராசையா, கே.டானியல், டொமினிக் ஜீவா, எஸ்.செல்லையா, கே.தவசிப்பிள்ளை, எஸ்.கணேசன், பீ.ஜே.அன்ரனி, ரி.வி.செல்வரட்ணம், வ.சின்னத்தம்பி, கே.தங்கவடிவேல் ஆகியோர் படகோட்டிகளாகச் செயற்பட்டனர்.
கந்தையா அவர்கள் சிறுபான்மைத் தமிழ் மக்களின் சகல மட்டத்திலுமுள்ள அடிப்படை மனித உரிமைகளுக்காகத் தனிப்பட்ட முறையிலும், கம்யூனிஸ்ட் கட்சி வாயிலாகவும் குரல் கொடுத்தும், போராடியும் வந்துள்ளார். 1956 இல் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்துக்கு எம்.சி.சுப்பிரமணியம் ஒரு சமயம் சென்றபோது, அங்குள்ள பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அவருக்கு ஆசனம் வழங்காது நிற்க வைத்துப் பேசியதை கந்தையா அவர்கள் அறிந்து மிகவும் சினமும் கோபமும் அடைந்திருந்தார்.
சில நாட்களுக்குள் அந்தப் பொலிஸ் அதிகாரிக்கு கந்தையாவின் முயற்சியால் இடமாற்றம் வழங்கப்பட்டது. பின்பு அந்தப் பொலிஸ் உத்தியோகத்தர் தனது இடமாற்றத்தை ரத்துச் செய்யுமாறு கேட்பதற்காக கந்தையாவின் ஸ்கோபீல்ட் பிளேசிலுள்ள கொழும்பு வீட்டுக்குச் சென்று அங்குள்ள ஓர் ஆசனத்தில் அமர்ந்திருந்தார். வீட்டு அறையினுள்ளிருந்து வெளியே வந்த கந்தையா, சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரியைப் பார்த்து, “எழும்பு கதிரையாலை, மக்கள் தலைவன் எம்.சி.சுப்பிரமணியத்துக்கு ஆசனம் கொடுக்காத நீ, என் வீட்டுக் கதிரையில் எவ்வாறு இருப்பாய்?” என்று கேட்டு, அந்த அதிகாரியை அனுப்பிய செய்தி எம் காதுகளில் வீழ்ந்தபோது, முற்போக்கு எண்ணம் கொண்ட வாலிபராகிய எமக்கு அன்று அது தேனமுதமாயிருந்தது. இச்சம்பவம் அவரது கொள்கைப் பிடிப்பிற்கும், போராட்ட உணர்வுக்கும், நீதியின்பாற் செயற்படும் சுபாவத்துக்கும் ஓர் எடுத்துக்காட்டு. பிழை கண்டு நீதியின்பாற் செயற்படும் போது அவருக்கு இயற்கையாகவே முற்கோபம் வந்துவிடும்.
இத்தகைய பண்புகளையும், திறன்களையும் கொண்ட கந்தையா, உருவகம் கொடுத்த கம்யூனிஸ்ட் இயக்கம் சர்வவியாபகமானது. என்னை இந்த இயக்கத்துடன் இணைப்பதற்கு நெல்லியடிப் பிரதேசமே களமாகவும், அத்திவாரமுமமாக விளங்கியது. இன்றும் அந்த அத்திவாரம் பல சோதனைகள் மத்தியிலும் நிலைத்து நிற்பது மனநிறைவு தருகின்றது. இச்சூழலை உருவாக்க அன்று பாடசாலை மாணவர்களாகவிருந்த இளைய பத்மநாதன், எஸ்.நாகேந்திரன் உழைத்தமையையும், பிற்காலத்தே அதனைத் தொடர்ந்து கம்யூனிஸ்ட் இயக்கத்துடன் இணைந்த காலஞ்சென்ற இ.சிவஞானம், இ.மோகன், கு.சிவராஜா, கே.கெங்காதரன், தெ.நாகேந்திரன், தெ.இராசேந்திரன், எஸ்.ராஜேந்திரன், கே.சிவபாதம் ஆகியோரின் பங்களிப்பையும் நாம் மனதிற் கொண்டேயாக வேண்டும். கந்தையா அவர்கள் 1947 இலும், 1952 இலும் பாராளுமன்றத் தேர்தலில் இறங்கித் தோல்வி கண்டபின், 1953 தொடக்கம் 1956 வரை மானிப்பாய் இந்துக் கல்லூரியில் ஆசிரியராகக் கடமையாற்றினார்.
அக்காலத்தே வார இறுதி நாட்களில் அவர் மார்க்சிச அரசியல் வகுப்புகளை நெல்லியடி லக்சுமி தியேட்டரில் நடத்துவார். அப்போதுதான் காலஞ்சென்ற சீ.வே.கமலநாதன், கரவைக் கந்தசாமி, சைவம் திருநாவுக்கரசு, க.நவரத்தினம், வ.மகாலிங்கம், எஸ்.பொன்னம்பலம், எஸ்.செல்லையா, வி.சிற்றம்பலம் மற்றும் வேறு சிலரும் நானும் சேர்ந்து நெல்லியடி கம்யூனிஸ்ட் வாலிபர் சங்கத்தை உருவாக்கினோம். தலைவராக சி.வே.கமலநாதனும், காரியதரிசியாக கரவைக் கந்தசாமியும், உதவிக் காரியதரிசியாக நானும் செயற்பட்டோம்.
கரவைக் கந்தசாமி அப்போது மிகவும் உயிர்த்துடிப்புடன் செயற்பட்டார். பெரும்பாலான அரசியல் வகுப்புகளை கந்தையாவும், கே.ஜனகாவும், சில வேளைகளில் கார்த்திகேசனும் நடத்துவர். ஒரு சமயம் அரசியல் வகுப்புக்கு பொன்.குமாரசாமி வந்திருந்தார். நான் முதன்முதலில் பொன்.குமாரசாமியைச் சந்தித்தது அன்றேயாகும். அன்று அரசியல் வகுப்பு முடிந்ததும் கந்தையா அவர்கள், பொன்.குமாரசாமியுடன் வெளியே போகும்போது என்னருகே வந்து, “எமக்கு இன்னொரு கும் வந்துள்ளார், அவர் எம்.கும்” என்று கூறி என்னை அன்புடன் அவருக்கு அறிமுகம் செய்து வைத்தார். அன்றிலிருந்து பி.கும்மும் நானும் அரசியற் தொடர்புகளை வலுப்படுத்திக் கொண்டோம்.
1914 ஆம் ஆண்டு யூலை 1 ஆம் திகதி பிறந்த கந்தையா, 1960 செர்டெம்பர் 8 ஆம் திகதி வரை வாழ்ந்து, தனது பயன்மிக்க வாழ்வை சுகயீனம் காரணமாகக் குறுகிய 46 ஆண்டுகளுக்குள் முடக்கிக் கொண்டமை, மார்க்சிச – லெனினிசவாதிகளாகிய நமக்கெல்லாம் பேரிழப்பேயாகும். அவர் இறந்த பின்பு கம்யூனிஸ்ட் இயக்கம் பல நாடுகளில் அரசுரிமை பெற்றும், சில நாடுகளில் அரசுரிமையை இழந்தும் வருவது யதார்த்த நிலையாகும். அரசுரிமையை இழப்பதற்கு அமெரிக்காவின் தலைமையிலான ஏகாதிபத்தியம் காரணியாக விளங்குகின்றது.
இன்று அமெரிக்க ஏகாதிபத்தியம் உலகத் தனி இராணுவ அரசொன்றை உருவாக்குவதிலும், உலகமயமாக்கல் கொள்கை மூலம் அபிவிருத்தியடையும் நாடுகளை அடிமைப்படுத்துவதிலும், இன்னும் சில நாடுகளில் மாபியா (ஆயகயை) கும்பல்களை உருவாக்குவதிலும், முன்னெப்போதையையும் விட முனைப்பாகச் செயற்பட்டு வருகிறது. இந்தப் பேராபத்தை மனதிற் கொண்டு, உலகில் பரந்து வாழும் மார்க்சிச – லெனினிசவாதிகளான நாம் ஒன்றுபட்டு, எவ்வாறு பொன்.கந்தையா போன்ற தலைவர்கள் 1930 களில் பாசிசத்திற்கெதிராகப் போராடினார்களோ, அதே பாணியில் போராடுவோமென, கந்தையாவை நினைவுகூரும் இந்நாளில் திடசங்கற்பமொன்றை மேற்கொள்வோமாக.
(இக்கட்டுரை, இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவை வெளியிட்ட “வடபுலத்து இடதுசாரி இயக்க முன்னோடிகள்” என்ற தொகுப்பு நூலிலிருந்து எடுத்துப் பிரசுரிக்கப்படுகின்றது. இக்கட்டுரையை எழுதிய தோழர் எம்.குமாரசாமி தனது மாணவப் பருவத்திலிருந்து இரு வருடங்களுக்கு முன்னர் காலமாகும் வரை கம்யூனிஸ்ட் இயக்கத்தில் உறுதியுடன் செயற்பட்ட ஒருவராவார்)