மாயாவதி, இந்தியாவின் பிரதமர் ஆகப்போகிற முதல் தலித்திய அரசியல்வாதியாக ஆரம்பத்தில் அரசியல் நோக்கர்களால் பார்க்கப்பட்டவர். பிறகு அடிப்படைவாத இந்துத்துவ அரசியல் ஒருகட்டத்தில் சமரசம் செய்து கொண்டார்.

தாழ்த்தப்பட்டோரின் நலன்களுக்காக பாடுபடுவதாகக் கருதப்பட்ட மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, தொடக்கத்தில் அந்த சமுதாயத்தினரின் நலன்கள் சார்ந்த பிரச்னைகளுக்காக மட்டும் தீவிரமாகக் குரல் எழுப்பியது. பின்னர் தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு சிறுபான்மையினர், முன்னேறிய வகுப்பினர் ஆகியோருக்கும் கட்சிக்குள்ளும் அரசு பதவி வகிக்கவும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைமை வாய்ப்பு அளித்தது.
மிகபெரும் பிம்பமாக உருவானார்,உபி மாநில முதல்வர் பொறுப்பும் தேடிவந்தது. தலித் மக்களின் நம்பிக்கை என அவர் பெரும் வடிவம் பெற்றார். தலித்துகளுக்கு பாதகம் நிகழ்ந்தாலும் கூட தனது உயர் சாதிக் கூட்டாளிகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் வராமல் மாயாவதி காத்தார்.
உயர் சாதி வாக்கு வங்கியைக் குறிவைத்து அவர் நடத்திய அந்த சதுரங்க ஆட்டத்தில் மாயாவதியால் வெற்றியடைய முடியவில்லை. கடைசியில் இரண்டு பக்கமும் வாக்குகளை இழந்து பரிதாபமான ஒரு இடத்தில் வந்து தற்போது நிற்கிறார்.
தலித்துக்களுக்கு என்ன செய்தார் என்றால் இல்லை, மாறாக ஜெயலலிதாவின் சாயலில் இல்லை இல்லை, அவரை விட மேலாக ஆட்டம் போட்டார். ஊரெல்லாம் தன் சிலையும்,தன் கட்சியின் யானை சிலையுமாக திறந்து அவர் செய்த அட்டகாசத்தின் பலன், அடுத்த தேர்தலிலே வீழ்த்தபட்டார்.
இந்த தலித் இம்சைகளுக்கு, சாமியார் கோஷ்டியே பரவாயில்லை என அங்கு பாஜக வந்துவிட்டது.
ராம்விலாஸ் பாஸ்வான் ஒரு காலத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் சித்தாந்த ரீதியான தலைவர்களில் மிக முக்கியமானவராக அறியப்பட்டார், அடிப்படை இந்துத்துவ ஆற்றல்களுக்கு எதிரான போரில் முக்கியமான தளகர்த்தராக இருந்தவர்.
அவரது பதவி ஆசை அதே வலது சித்தாந்த அரசியலுக்குள் அவரை மூழ்கடித்தது. பீகார் முதல்வராவதற்கான கனவில் ராம் விலாஸ் பாஸ்வான் ஒரு தலித் + முஸ்லீம் சூத்திரத்தை உருவாக்க விரும்பினார், ஆனால் அது நிதீஷ்குமாரின் காரணமாக இதுவரை கனவாகவே போய்விட்டது.
பீகாரின் 16 சதவீத தலித்துகளில், நிதீஷ் சுமார் 11 சதவீத மக்களை மகாதலித் பிரிவில் சேர்த்துள்ளார். இதன் காரணமாக மகாதலித் சாதிகள் நிதீஷுடன் நிற்கத் தொடங்கியுள்ளன. அதே சமயம், நிதீஷ் குமார், பாஜகவுடனான தனது நட்போடு சேர்ந்து, பல விஷயங்களில் முஸ்லிம்களை எதிர்ப்பதன் மூலம் ஏராளமான வாக்குகளைப் பெறுகிறார்.
இதன் காரணமாக பீகாரில் கூட ராம் விலாஸ் பாஸ்வானால் தலித் + முஸ்லிம் கூட்டணியை உருவாக்க முடியவில்லை. 2009 மக்களவை மற்றும் 2010 பீகார் சட்டமன்றத் தேர்தல்களில், லாலு யாதவுடன் சேர்ந்து ராம் விலாஸ் பாஸ்வான் இந்த சூத்திரத்தைப் பயன்படுத்த முயன்றார், ஆனால் அதிலும் அவருக்கு தோல்வியே கிடைத்தது .
கடைசியில் அவர் ஆரம்பத்தில் அரசியலில் தூக்கி பிடித்த தலித்திய சித்தாந்தங்களுக்கு பொருந்தாத ஒரு அடையாளத்தோடு ஒரு சாதாரண அரசியல்வாதியாக இறந்து போனார்.
தமிழகத்தில் டாக்டர்.கிருஷ்ணசாமி ஒரு காலத்தில் தேவேந்திர குல வேளாளர்களின் உரிமைக்காக போராடும் ஒரு தலித்திய போராளியாக அறியப்பட்டவர், அவருடைய அரசியல் பயணத்தில் குறிப்பிடத்தகுந்த சாதனைகளைப் படைத்தவர்.
இப்போது தமிழக அரசியல் களத்தில் டாக்டர் கிருஷ்ணசாமி பதவிக்காக தலித் மக்களை வைத்து வெளிப்படையாக இந்துத்வ சார்பு அரசியல் செய்யம் ஒரு அரசியல்வாதியாகவே பார்க்கப்படுகிறார் அவரை உயர்த்தி பிடித்த, அவருக்கு அரசியல் அடையாளம் கொடுத்த தலித்திய போராளி என்னும் அடையாளத்தை அவர் இழந்து பல காலம் ஆகிறது .
எஞ்சி இருந்தது திருமா மட்டுமே. திருமாவளவன் மீது வலதுசாரிகள் எப்போதும் ஒரு கண் வைத்திருந்தார்கள், தமிழகத்தைப் பொறுத்தவரை, அவரது அரசியல் பாதையை நாக்பூர் (RSS /BJP) நோக்கித் திருப்பிவிட்டால், ஏறத்தாழ முற்றிலுமாக ஒடுக்கப்பட்ட மக்களின் வாக்கு வங்கியைக் கைப்பற்றிய மாதிரி என்றொரு கணக்குப் போட்டு அவருக்கு பல்வேறு அரசியல் அழுத்தங்கள் அவருக்கு கொடுக்கப்பட்டன.
கடந்த 25 ஆண்டுகளில் தோழர் திருமாவின் வலதுசாரிகளுக்கு எதிரான உறுதியான கருத்தியல் பயணம் திசை மாறவே இல்லை. வருங்காலத்தில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் எளிதாக அதிமுகவின் முதுகில் ஏறி சட்டமன்றத்துக்குள் நுழையலாம் என்கிற அவர்களின் பகற் கனவை மெய்ப்பிக்க வேண்டுமென்றால் , அவர்கள் தோழர் திருமாவளவனை திமுக கூட்டணியில் இருந்து வெளியேற்றியாக வேண்டும்.
இல்லையென்றால், திமுகவின் தலைமையில் ஒரு வலிமையான கூட்டணி உருவாகும் போது, அதை சித்தாந்த ரீதியாக ஒருங்கிணைக்கக் கூடிய மிகப்பெரிய ஆற்றலாக தோழர் திருமாவளவன் இருப்பார் என்பது வலதுசாரிகள் முழுமையாக உணர்ந்து இருக்கும் உண்மை.
நாக்பூர் RSS குருமார்கள் கடந்த தமிழக சட்டமன்ற தேர்தலை குறிவைத்து தமிழக பாரதீய ஜனதாவுக்கு வழங்கிய முக்கியமான அசைன்மென்ட் தோழர் திருமாவளவனை திமுகவிடம் இருந்து எப்பாடுபட்டாவது தனிமைப்படுத்துவது.
அதற்காக அவர்கள் விஜய் மூலமாக விரித்த வலையில் சிக்கி இந்திய அளவிலும் தமிழகத்திலும் தலித் அரசியலின் பிரதான முகமாக பார்க்கப்பட்ட தன்னுடைய அடையாளத்தை முற்றிலுமாக தொலைத்துவிட்டு பரிதாபமாக நிற்கிறார் திருமா என்றுதான் சொல்ல வேண்டும்.
பதவிக்காக கொள்கைகளில் கொஞ்சமும் யோசிக்காமல் சமரசம் செய்து கொள்ளும் அரசியல்வியாதிகளுக்கு நடுவில் , தன் அரசியல் கொள்கையை எந்த தருணத்திலும் நீர்த்துப்போக விடாமல் விளிம்பு நிலை வாழ் மக்களோடு, அவர்களின் வாழ்க்கையோடு ஒன்றிணைந்து, கண்ணிய எல்லைகளை மீறாத அரசியல் நாகரீகத்தோடும், அரசியல் அடக்குமுறைகளை கண்டு பணியாத நெஞ்சுரத்துடனும் இதுவரை களமாடி வந்த திருமா இன்று தன்னுடைய அரசியல் மற்றும் தலித் போராளி அடையாளங்களை மொத்தமாக தொலைத்துவிட்டு விடுதலை சிறுத்தைகளின் வாக்கு வங்கியையும் பெருமளவில் தவெகவிடம் இழந்துவிட்டு கையறு நிலையில் நிற்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.
தலித் அரசியல் என்பது அவர்களுக்கான அரசியலே அல்ல , யாரோ ஒருவர் ஆட்சிக்கு வருவதற்காக ஓட்டை பிரிக்கும் தந்திரம். அதைத்தான் தலித்களின் அரசியல் கட்சிகள் அம்பேத்கர் பேரை முன்னிறுத்தி நாடெங்கும் செய்து வருகின்றன.
அவர்களுக்கு எதிரிகள் அவர்களேத்தான் என்பதைத்தான் தலித்திய அரசியலை பேசும் திருமா மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீண்டும் ஒரு முறை அழுத்தமாக நிரூபித்து இருக்கிறார்கள்.