மோடியின் அமெரிக்க விஜயம், இந்தியாவில் வளமாக்க வழிவகுக்குமா?

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்றபிறகு, நரேந்திர மோடி முதன்முறையாக அவரைச் சந்தித்ததால், மோடியின் இந்த விஜயம் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இம்மாநாடு பற்றி பைடன் கூறுகையில், நான்கு ஜனநாயக நாடுகளின் இந்தக் குழு உலக நன்மைக்கான சக்தியாக செயல்படும். இந்தோ பசிபிக் மற்றும் முழு உலகிலும் அமைதியையும் செழிப்பையும் உறுதிசெய்யுமென்று நம்பிக்கை தெரிவித்தார்.

முன்னதாக முதல் இருதரப்பு சந்திப்பு வெள்ளைமாளிகையில் இடம்பெற்றபோது உலகின் மிகப்பெரிய இரண்டு ஜனநாயக நாடுகளான இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான உறவு வலுவானதாகவும், இறுக்கமானதாகவும், நெருக்கமானதாகவும் இருக்கவேண்டுமென்று அமெரிக்க அதிபர் கூறினார்.

பிரதமர் மோடி இச் சந்திப்புபற்றி விபரிக்கையில், ‘இந்த நூற்றாண்டின் மூன்றாவது தசாப்த ஆரம்பத்தில் பைடனுடன் நடத்தும் இந்த இருதரப்பு சந்திப்பு முக்கியமானது என்று கூறினார். அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் தலைமையில் அமெரிக்க-இந்திய இருதரப்பு உறவு இன்னும் பல உச்சங்களைத் தொடும் என்று நம்புகிறேன். இரு நாட்டு மக்களின் ஒற்றுமைதான் இரு நாடுகளுக்கு இடையே ஒரு பாலமாக இருக்கிறது. கொரோனா காலகட்டத்தில் அமெரிக்கா இந்தியாவுக்குச் செய்த உதவிகள் மறக்க முடியாதவை. இரு நாட்டு உறவும் தொடர்ந்து, மேம்படப் பாடுபடுவோம்’ என்றார்.

இணைந்து செயல்படுவதாக குவேட் தலைவர்கள் உறுதிமொழி

இந்தோ பசிபிக் மற்றும் உலகெங்கிலும் அமைதியையும் செல்வச்செழிப்பையும் ஏற்படுத்துவதற்கு இணைந்து செயல்படப்போவதாக இந்தியா, அவுஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் அமெரிக்க தலைவர்கள் உறுதிமொழி கூறினர்.

வெள்ளை மாளிகையின் கிழக்கு அறையில் இடம்பெற்ற குவேட் ஒன்றுகூடலில் பைடனால் உரையாற்றுவதற்கு முதலில் அழைக்கப்பட்ட தலைவர் என்னும் பெருமையும் மோடிக்குக் கிடைத்தது. முன்னதாக மோடியுடனான ஒரு மணித்தியாலத்துக்கும் மேற்பட்ட சந்திப்பின்போது பைடன் மோடியை எனது நண்பர் என்று கூறி பெருமிதமடைந்தார்.

ஏனைய நாடுகளைத் தாக்கும் தீவிரவாத நடவடிக்கைக்கு பாகிஸ்தான் தனது நாட்டில் இடமளிக்காது என்பதை உறுதிபடத் தெரிவிக்க வேண்டும் எனவும், மும்பை பயங்கரவாதத் தாக்குதல், பதான்கோட் தாக்குதல், மற்றும் இந்திய எல்லையை அத்துமீறும் தாக்குதல்களை நடத்தும் தீவிரவாதக் குழுக்களைப் பாகிஸ்தான் நீதியின் முன் நிறுத்த வேண்டும் என இரு நாட்டுத் தலைவர்களும் கூட்டாக கோரிக்கை விடுத்தனர்.

இரு தலைவர்களும் சந்தித்த போது உரையாடிக்கொண்ட முக்கிய விடயம் பாகிஸ்தான் பயங்கரவாதத்திற்கு துணைபோகக் கூடாது என்பதும் இரு நாட்டுக்குமான வர்த்தகத் தொடர்புகளை அதிகரிக்க வேண்டும் என்பதுமாகும்.

இந்தியாவின் கிழக்குப் பகுதியும் மேற்குப் பகுதியும் பாகிஸ்தானை வளர்த்துவிடும் தீவிரவாத அமைப்புக்களின் தாக்குதலாலும், பாகிஸ்தானின் இராணுவ நடவடிக்கையாலும் அதிக ஆபத்தினை எதிர்நோக்கிவருகிறது. இதனால் பாகிஸ்தானின் உறுதிப்பாடு இராணுவ, பொருளாதார வளர்ச்சி என்பன இந்தியாவைப் பாதிக்கும் விடயமாக உள்ளது.

பாகிஸ்தானின் இராணுவ வளர்ச்சியானது இந்தியாவின் இருப்பினை ஆபத்துக்குள்ளாக்கிவிடுமென இந்தியத் தரப்பு அச்சமடைந்துள்ளது.

பாகிஸ்தானுக்கும் சீனாவுக்குமான உறவானது மிக உயர்ந்த நிலையில் உள்ளது. அணுவாயுதப் பரிசோதனையிலிருந்து குவாடர் துறைமுகம் அமைப்பதற்கான நிதி உதவி வரை சீனா பாகிஸ்தானுடன் நெருக்கமடைந்துள்ளது. கொரகொராம் உயர்பாதை ஏறக்குறைய 1300 கி.மீ நீளமுடைய சீன பாகிஸ்தான் வர்த்தகப் பாதையாக உள்ளது. இதனூடாக இரு நாட்டுக்குமான வர்த்தக உறவு மட்டுமன்றி மேற்காசியாவில் கொள்வனவு செய்யும் எண்ணெயை பாகிஸ்தானூடாக பரிமாற்றிக் கொள்வதிலும் சீனா பாகிஸ்தானுடன் நெருக்கடைந்துள்ளது.

பாகிஸ்தானின் அணுவாயுதத் தொழில்நுட்பம் தீவிரவாதத்திடம் சென்றுவிட்டால், அதனால் ஏற்படும் பாதிப்பு இந்தியாவுக்கானது என்பதையே இந்தியா கருதுகிறது. மேலும் இந்தியா பாகிஸ்தான் எல்லையில் நிகழ்ந்து வரும் இரு தரப்பு இராணுவத்தின் தாக்குதல்களும் இந்தியாவுக்கு அதிகமான பாதிப்பினை ஏற்படுத்திவருகிறது. இதனால் எதிர்காலத்தில் ஒரு யுத்தத்திற்கு போக வேண்டிய நிர்பந்தம் ஏற்படுவதனை எப்படி எதிர்கொள்வதென இந்தியத் தரப்பு கருதுகிறது. அவ்வகை யுத்தம் சாத்தியப்படாமல் இருப்பதற்கு இந்திய-அமெரிக்க நட்பு உதவக்கூடியதாக அமையும்.

எனவே பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம் பிராந்திய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் அதிகமான எதிர்பார்ப்பைத் தந்துள்ளது. இந்தியாவின் பிரசன்னம் அமெரிக்கா பக்கம் இருப்பது சீனாவின் சர்வதேச மட்ட வலுவை பாதிப்படையச் செய்யவுள்ளது. பாகிஸ்தானை இலக்கு வைப்பதென்பது சீனாவையும் நெருக்கடிக்குள்ளாக்கும்.

நரேந்திர மோடி டிஜிட்டல் இந்தியா திட்ட மேம்பாடு, கல்வி, சுகாதாரம், தொழில்நுட்பங்கள் மற்றும் பல்வேறு துறைகள் ரீதியான ஆராய்ச்சிகள் குறித்து பல நிறுவனத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். தலைமை நிர்வாக அதிகாரிகளைச் சந்தித்து முதலீடுகள் குறித்து விரிவான ஆலோசனையும் நடத்தினார்.

குவால்காம் நிறுவனத் தலைவர் கிறிஸ்டியானோ ஆர்.அமோனை பிரதமர் மோடி சந்தித்தபோது, இந்தியாவில் 5-ஜி மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களை மேம்படுத்துவது தொடர்பாக குவால்காம் தலைவர் விருப்பம் தெரிவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

மோடியுடனான சந்திப்பு குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள ஃபர்ஸ்ட் சோலார் நிறுவனத் தலைமைச் செயல் அதிகாரி மார்க் விட்மார், தொழில்துறை கொள்கைக்கும் வர்த்தகக் கொள்கைக்கும் இடையே ஒரு வலுவான சமநிலையை உருவாக்க, பிரதமர் மோடி என்ன செய்தார் என்பது தெளிவாகத் தெரிகிறது. இது இந்தியாவில் ஃபர்ஸ்ட் சோலார் போன்ற நிறுவனங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக அமைகிறது என்று பதிவிட்டிருக்கிறார்.

ஜெனரல் அடாமிக்ஸ் நிறுவனத் தலைமைச் செயல் அதிகாரி விவேக் லால், இது ஒரு சிறந்த சந்திப்பு. தொழில்நுட்பம், இந்தியாவில் வரும் கொள்கைச் சீர்திருத்தங்கள் மீதான நம்பிக்கை, முதலீட்டுக் கண்ணோட்டத்தில் இந்தியாவிடம் உள்ள சிறந்த சாத்தியக்கூறுகள் என்பன பற்றிக் கலந்தாலோசித்தோம் என்று தெரிவித்திருக்கிறார்.

அமெரிக்க நிறுவனங்களின் நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசிய பின்னர், நரேந்திர மோடி இந்திய வம்சாவளியான அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸைச் சந்தித்துப் பேசினார். அதைத் தொடர்ந்து, இருவரும் கூட்டாகச் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, இந்தியாவும் அமெரிக்காவும் எப்போதுமே பங்காளிகள்தான். இரு நாடுகளுக்கும் பல்வேறு விஷயங்களில் ஒற்றுமை இருக்கிறது. இந்தியாவும் அமெரிக்காவும் மிகப்பெரிய, மிகப் பழைமையான ஜனநாயக நாடுகள். இரு நாடுகளும் மதிப்புகளைப் பகிர்ந்துகொள்கின்றன. அமெரிக்காவுடனான இந்தியாவின் ஒற்றுமை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேயிருக்கிறது என்று கூறினார்.

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் பேசுகையில் கூறியதாவது,

‘அமெரிக்காவுக்கு விரைவில் தடுப்பூசி ஏற்றுமதி தொடங்கப்படும் என்ற இந்தியாவின் அறிவிப்பை வரவேற்கிறேன். இந்தியா இந்த இக்கட்டான சூழலில் நாள் ஒன்றுக்கு சுமார் ஒரு கோடி பேருக்குத் தடுப்பூசிகளைச் செலுத்திக்கொண்டிருப்பது வியப்பாக இருக்கிறது. இந்தியாவில் கொரோனா பரவல் மிகுதியாக இருந்த நேரத்தில் அதன் தேவையை உணர்ந்து நாங்கள் செயல்பட்டது எங்களுக்குப் பெருமிதமாக இருக்கிறது. இந்தியா, இந்தத் தடுப்பூசி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் மற்ற உலக நாடுகளுக்கு முன்னோடியாக இருக்கிறது. நோய்த்தொற்றின் ஆரம்பகட்டத்தில் இந்தியா பல்வேறு உலக நாடுகளுக்குத் தடுப்பூசி வழங்கி உதவியது. இந்தியா பருவநிலை நெருக்கடியைத் தீவிரமாக கவனத்தில் கொண்டிருக்கிறது என்பது எங்களுக்குத் தெரியும். அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து செயல்படுவதன் மூலம் இந்த நெருக்கடிகளிலிருந்து நம் நாட்டு மக்களைக் காப்பது மட்டுமின்றி உலக அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்’ என்றார்

பிரதமர் மோடியின் இந்த அமெரிக்க பயணம் பிராந்திய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் அதிகமான எதிர்பார்ப்பைத் தந்துள்ளது. இந்தியாவின் பிரசன்னம் அமெரிக்க பக்கம் இருப்பது சீனாவின் சர்வதேச மட்ட வலுவை பாதிப்படையச் செய்யவுள்ளது. பாகிஸ்தானை இலக்கு வைப்பதென்பது சீனாவையும் நெருக்கடிக்குள்ளாக்கும் என்று கருதப்படுகிறது.

கமலா ஹாரிஸுடனான சந்திப்பைத் தொடர்ந்து நரேந்திர மோடி, குவேட் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அமெரிக்கா வந்திருந்த ஜப்பான் பிரதமர் யோஷிஹைடே சுஹாவைச் சந்தித்துப் பேசினார். இரு தலைவர்களின் சந்திப்பு குறித்துத் தகவல் வெளியிட்டிருக்கும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், ஜப்பான் பிரதமருடனான இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சந்திப்பின்போது, இந்தோ-பசிபிக் பிராந்திய வளர்ச்சி, விநியோகச் சங்கிலி பின்னடைவு, வர்த்தகம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டிருக்கிறது.