ருவாண்டா படிப்பினைகள் – 05

ருவாண்டா நாட்டின் அநேகமான இடங்களில் மலைகள் இருக்கின்றன. அவை அந்நாட்டிற்கு அழகு சேர்க்கின்றன.

1994 ஆம் ஆண்டு இனப்படுகொலையின் போது பத்து இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டார்கள்.

300,000 மேற்பட்ட பெண்கள் பாலியல் வண்புணர்விற்கு உட்படுத்தப்பட்டார்கள்.

75,000 இற்கு மேற்பட்ட சிறுவர்கள் தமது பெற்றோர்களை இழந்தார்கள்.

இருபது இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் அயல் நாடுகளில்

தஞ்சமடைந்திருந்தார்கள்.

இவர்கள் அனைவருமே ருட்சி(Tutsi) இன மக்களும் கூட்று(Hutu) இன மக்களில் நடுநிலையாக செயற்பட்டவர்களும் துவா(Twa) இன மக்களுமாவர்.

1994 ஜூலை

04 ஆம் நாள் இனப்படுகொலை முடிவிற்கு வந்தாலும் 1994

ஜூலை 17 ஆம் நாள் தான் ருவாண்டா நாட்டுற்பற்றாளர் முன்னணி ருவாண்டாவை தமது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது.

மிகப் பயங்கரமான வார்த்தைகளால் விபரிக்க முடியாத இனப்படுகொலையின் பின்னர் அந்த நாடும் அந்த நாட்டில் அந்நேரத்தில் வாழ்ந்த மக்களும் எப்படியான மனநிலையுடன் வாழ்ந்திருப்பார்கள் என்பதனை மனிதநேயம் கொண்டவர்களால் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாது.

கொல்லப்பட்டவர்களின் உடலங்களை தெருக்களிலிருந்தும் தேவாலயங்களிலிருந்தும் வீடுகளில் இருந்தும் அகற்றுவதற்கு பல மாதங்கள் வரை சென்றன.

நாடு முழுவதிலும் பிண வாடைகளினூடே மனிதநேயத் தொண்டர்களும் அப்போதைய ஆட்சியாளர்களும் நாட்டு மக்களின் ஒத்துழைப்புடன் பணியாற்றினார்கள்

.

போராளிகள் நாட்டைக் கைப்பற்றிய பின்னர் தமது ஆட்சியை நிறுவினார்கள். போராளிக் குழுவான ருவாண்டா நாட்டுப்பற்றாளர் முன்னணியின் தலைவர் போல் ககாமே அவர்கள் நாட்டின் தலைவராகவில்லை.

அவருடன் இணைந்து போராடிய பெரும்பான்மை இனமான கூட்று இனத்தைச் சேர்ந்த பாச்சர் பிசிமுங்கு (Pāccar picimuṅku)

அவர்களைத் குடியரசுத் தலைவராக தெரிவு செய்ததுடன் குடியரசுத் துணைத்தலைவராகவும் நாட்டின் பாதுகாப்பிற்குப் பொறுப்பாகவும் போல் ககாமே செயலாற்றினார்.

ஆட்சிப் பொறுப்பினை ஏற்றதும் முக்கியமான இரண்டு தீர்மானங்களை ஆட்சியாளர்கள் அறிவித்து நிறைவேற்றினார்கள்.

1. ருவாண்டா நாட்டில் இன அடையாளங்கள் பாவிப்பதற்குத் தடை. அனைவரும் ஒரே இனமக்களே. அனைவரும் ருவான்டா நாட்டினரே.

2. தனியார் ஊடகங்களுக்குத் தடை.

இந்த இரண்டு தீர்மானங்களும் ருவாண்டாவின் வேகமான மேம்பாட்டிற்கும் உளவியல் ரீதியாக மோசமாக பாதிப்படைந்திருந்த மக்களை மீள தங்கள் நிலைக்கு கொண்டு வருவதற்கு துணை புரிந்ததாக ஆட்சியாளர்கள் கூறினார்கள்.

ஆனால் மனித உரிமைச் செயற்பாட்டார்களும் உலகமும் இச்செயற்பாடுகளைக் கண்டித்தன.

ஆனால் ருவாண்டா மக்கள் அரசின் தீர்மானத்திற்கு முழுமையான ஒத்துழைப்பை மிக விரைவாகக் கொடுக்கத் தொடங்கினார்கள்.

பத்து இலட்சம் மக்கள் கொல்லப்பட்ட போது ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படையினர் ருவாண்டாவில் நிலை கொண்டிருந்தனர்.

அவர்களது கண் முன்னாலேயே படுகொலைகள் நடைபெற்றன.

அப்படுகொலைகளை தடுத்து நிறுத்த முடியாத சர்வதேசம் ருவாண்டாவின் தீர்மானங்களை விமர்சித்தமை வேடிக்கையானது என அப்போதைய ருவாண்டி நாட்டின் ஆட்சியாளர்கள் தெரிவித்தனர்.

ஆட்சியாளர்களின் தீர்மானத்திற்க முழுமையான ஒத்துழைப்பினை மக்கள் கொடுத்தமையினால் உலகின் கண்டனக் குரல்கள் பொய்ப்பிக்கச் செய்யப்பட்டன.

(ருவாண்டா படிப்பினைகள் தொடரும்)