கல்விச் சாளரங்களை அசுத்தப்படுத்தும் காமுகர்கள்

அம்பாறை, அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் பீடத்தில் பயிற்சி பெறும் பெண் ஆசிரியர் மாணவியருக்கு அநாகரிகமான காணொளிகளைக் காண்பித்து, நீண்ட காலமாகப் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படும் விரிவுரையாளர் ஒருவரின் கைது, கல்வித்துறையில் நிலவும் பாரிய சீரழிவின் கோர முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

இது ஒரு தனிப்பட்ட குற்றச் செயல் மட்டுமல்ல; மாறாக, கல்விச் சமூகத்தின் அடிப்படை அறத்தை உலுக்கியெறியும் ஒரு பெரும் புற்றுநோயாகும்.

இந்தச் சம்பவத்தில் மிகவும் கவனிக்கப்பட வேண்டிய மற்றும் கண்டிக்கப்பட வேண்டிய மிக முக்கியமான விடயம், பாதிக்கப்பட்ட மாணவிகள் உடனடியாக முறைப்பாடு செய்யாமல் மௌனம் காத்ததுவே ஆகும். “பாடங்களுக்கான புள்ளிகளை வழங்கும் அதிகாரம் விரிவுரையாளரிடம் இருப்பதால், புகார் அளித்தால் எமது எதிர்காலம் பாழாகிவிடும்; புள்ளிகள் குறைக்கப்பட்டு பரீட்சைகளில் தோற்றுப் போய்விடுவோம்” என்ற அச்சம் அந்த இளம் பெண் ஆசிரியர்களின் குரல்வளையை நீண்ட காலமாக நெரித்துள்ளது.

கல்வியைக் கற்பிக்க வேண்டிய ஒருவரே, அதிகாரத் திமிரைக் கொண்டு மாணவியரின் பலவீனத்தைச் சாதகமாகப் பயன்படுத்தி பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியிருப்பது மன்னிக்க முடியாத குற்றமாகும். அறிவுக்கூடங்கள் அபயமளிக்க வேண்டிய இடங்கள், ஆனால் இன்றோ அங்கு பயம் கோலோச்சுவது எத்தகைய அவலம்?

இந்த அவல நிலைக்கு எதிராக அம்பாறை கோட்டத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி பிரியந்த பண்டார கஸ்தூரிஆராச்சியின் துரித தலையீடும், அம்பாறை கோட்டப் பெண்கள் பணியகத்தின் அதிகாரிகளின் சட்ட நடவடிக்கையும் பாராட்டுக்குரியவை. எனினும், இத்தகைய சட்ட நடவடிக்கைகள் மட்டும் போதாது.

இலங்கையில் உள்ள அனைத்து தேசிய கல்வியியற் பீடங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களின் பாதுகாப்புப் பொறிமுறைகள் குறித்து அரசாங்கமும் கல்வி அமைச்சும் தீவிரமான மறுமதிப்பீடு செய்ய வேண்டும்.

மாணவிகள் எந்தவித பயமும் இன்றி, சுதந்திரமாகவும் தைரியமாகவும் தமக்கு எதிராக நடக்கும் முறைகேடுகளைப் புகார் செய்வதற்கான பாதுகாப்பான, இரகசியப் பொறிமுறை உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

கல்வித் துறையில் ஊடுருவியுள்ள இத்தகைய நச்சுக்களை வேரோடு களையெடுக்காவிட்டால், நாளைய சந்ததியின் ஒழுக்கமும் பாதுகாப்பும் கேள்விக்குறியாகிவிடும்.

குற்றவாளிக்குச் சட்டத்தின் முன் உச்சபட்ச தண்டனை பெற்றுக்கொடுக்கப்படுவதோடு, இதுபோன்ற அநாகரிகச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு கல்வித்துறையில் எக்காலத்திலும் இடமளிக்கப்படக் கூடாது என்பதே ஒட்டுமொத்த சமூகத்தின் எதிர்பார்ப்பாகும்.

Leave a Reply