பேரினவாதம் யுத்தத்தை நடாத்திய போது மொழி கடந்து இருதரப்பிலும் ஏற்பட்ட உயிர் இழப்புக்களுக்கு குரல் கொடுத்தவர்.
அதற்கான இசையை மேடைகளில் பாவித்து அரசுகளால் தொந்தரவிற்கும் இசை பாடுவதற்கு தடைகளை சந்தித்தவர்.
தனக்குள் இருந்த இடதுசாரிகச் சிந்தனை அதுசாரந்த செயற்பாடுகள்தான் இலங்கையில் நடைபெற்ற அனைத்து ஒடுக்குமுறைகளுக்கு எதிராக அரசுக்கு எதிராக இன மத மொழி வேறுபாடுகள் கடந்து பறிக்கப்பட்ட இளைஞர்களின் உயிர்களுக்கு எதிர் குரலாய் அவரின் கானங்கள் இசைத்தன மேடைகளில்.
அது சார்ந்த பாடல்களை திரை இசையிற்கு அப்பால் பாடியவர் இதனால் இவரின் கலைப் படைப்புகள் பாடல்கள் இலங்கை அரசால் தடை செய்யப்பட்ட போது எந்த சமரசத்திற்கும் இடம் கொடாது செயற்பட்டவர்.
அதனால் இன்று அவரின் மரணத்திற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மூன்று நாட்களை தேசிய துக்க தினமாக அறிவித்தும் இருக்கின்றது.
மொழி அடிப்படையில் அனைத்து இலங்கை வாழ் மக்களுக்குமாக தமது இசைக் குரலை எழுப்பியவர் என்றால் அதனை நாம் நந்தா மாலினியிற்கு நிச்சயம் கொடுக்கலாம்.
அரசு அவையில் ஆளும் வர்க்கத்தை மேலாதிக்கவாதிகளை புகழ்பாடி தம்மை அடையாளப்படுத்தி கான இசையில் ஈடுபட்ட பலரும் செயற்பட்ட மிகவும் இக்கட்டான காலங்களில் 1980 களில் மிக உறுதியாக அரசின் ஓடுக்கு முறைகளுக்கு எதிராக தனது பாடல்கள் மூலம் பதில் சொன்னவர்.
ஒரு தடவை ஈழவிடுதலைப் போராட்ட காலத்தில் திருகொணமலை மாவட்டம் தம்பலகாமத்தில் தங்கியிருந்து போராட்டதிற்கான மக்கள் பணியைச் செய்திருந்தபோது…
தம்பலகாமம் இராணுவச் சுற்று வளைப்பிற்கு உள்ளான போது எம்மை தற்காத்துக்கொள்ள கிராமம் தாண்டி ஓடி ய போது சிங்கள் மக்கள் வாழும் ஒரு கிராமத்திற்குள் நுளைந்து விட்டோம்.
எம்மை அக்கிராமத்து மக்கள் மரத்தில் கட்டி வைத்து இராணுவத்திற்கு சொல்லி அனுப்பிவிட்டார்கள்.
இராணுவம் வருவதற்கு இடையேயான நேர இடைவெளியில் எனது சக தோழன் அவருக்கு தெரிந்த சிங்களப் பாடல் ஒன்றை பாட அப்பாவியான கிராமத்து மக்கள் அதனை இரசிக்க…
எம்மை நெருங்க இரு மொழி தெரிந்தவர் ஒருவரிடம் நாம் எமது உரிமையிற்காக போராடும் போராளிகள் சிங்கள மக்கள் எங்கள் சகோதர்கள் என்றாக வகுப்பு எடுக்க…
அவர்கள் மனம் மாற கூட்டத்தில் நின்ற ஒரு சிங்கள இளைஞர் நந்தா மாலினியை நினைவூட்டி ஒரு பாடல் பாடி
அந்தப்பாடலின் உள்ளடக்கம் எம்மமை இராணுவத்திற்கு மறைக்க வைத்தது.
தொடர்ந்த நாட்களில் எமது அரசியல் வேலைகள் பகல் வேளைகளில் தம்பலகாமம் பகுதியி என்றாக அமைய இரவுப் பாதுகாப்பு உறக்கம் அந்த சிங்களக் கிராமம் என்றாக கடந்த போக வைத்த இசை இன்று எம் நினைவுகளில் மட்டும் என்றான இயற்கை மரணம் வலிக்கவே செய்கின்றது.
அவருக்கு எம் மரியாதை கலந்த அஞ்சலி வணக்கங்கள்.
சில மாதங்களின் பின்பு ஆனையிறவு இராணுவக் கடவையால் பயணம் செய்யும் போது இராணுவச் சிப்பாய் ஒருவர் எனது சக தோழனை அடித்த போது அதனை வாங்கிய வண்ணம் ஒரு கவிதையை எழுதினான்….
அது ‘… வறிய சிங்கள் சிப்பாயே உன் காக்கி சட்டையிற்குள் இருக்கும் மெலிந்து உடம்பிற்கு பின்னால் கல்யாணத்திற்கு காத்திருக்கும் உன் தங்கைமார்களையும் உழைத்துக் களைத்து செலலாற்ற முடியாத உன் வறிய தாயையும்…. தந்தையையும்… நான் காண்கின்றேன்.
நீ காக்கி சட்டை போட்டத்திற்கு பின்னால் உள்ள பொருளாதார ஏற்றத் தாழ்வை நான் அறிவேன் நீ என் எதிரி அல்ல உன்னை எய்திய அந்த அம்புதான் எம் எதிரி என்றான என்ற வரிகளும்….
இதற்கு இசையமைத்து பாடிய ஈழவிடுதலைப் பாடலும் இன்று இசை குயில் நந்தா மாலினியின் மறைவு நாளில் என் நினைவில் வந்து போகின்றது.
என் தோழன் சுகுவின் உணர்வலைகள் நந்தா மாலினியின் ஆத்மாவை பேசும் விடயமாக இருப்பதுவும் இங்கு முக்கியம் பெறுகின்றது. ‘…..1984 கொழும்பு முட்டுவாள் கவச வாகன படையணி முகாமில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த நாட்களில் அந்த சிறை அறையின் அரை அடி துவாரத்தின் ஊடாக இராணுவ காவல் அறையின் வானொலியில் நந்தா மாலினி அவர்களின பாடல் ஒலித்தது .அவரின் பாடல்கள் அந்த இருண்ட நாட்களில் தடைசெய்யப்படவில்லை…..’
‘….மனிதம் ஒரேயடியாக செத்து விடவில்லை என்ற நம்பிக்கை மனதில் . தனிமை வதைகளுக்கு இடையே இந்த நாட்டின் ஆன்மாவின் குரல் பெளத்த விழுமியங்கள் சகவாழ்வு மானிட நேயம் ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான வாஞ்சை காற்றின் மரங்களின் கடலின் வானின் பேரமைதியின் வனப்பின் பிழிசாராமான குரல் மொழி கடந்த உணர்வுகளை அர்த்தங்களை மனதில் சேர்பிக்கும்…..’
இது அவருடன் சிறையில் அன்று அடைக்கப்பட்டிருந்த பல நூறு போராளிகளின் உணர்வாகவும் என்னை பார்க்க வைக்கின்றது.
‘….எல்லைக் கோடுகளும் துப்பாக்கிச் சத்தங்களும் மட்டுமல்ல, ‘மொழித் திரை’ எனும் அரூப சுவரும் அந்த ஆதரவுக் குரல்களை நம்மை வந்தடையவிடாமல் மறைத்திருந்தது.பேரினவாதத்தின் இருள் சூழ்ந்த அக்காலத்தில், நீதிக்காகக் குரல்கொடுத்த கலைஞர்கள் தடைசெய்யப்பட்டார்கள்….’
‘…. வடக்கில் ஒரு தமிழ்த் தாய் உகுத்த கண்ணீருக்கும், அரச அடக்குமுறையால் ஒரு சிங்களத் தாய் உகுத்த கண்ணீருக்கும் வேறுபாடேயில்லை என்பதை அவரது குரல் மீண்டும் மீண்டும் நினைவூட்டியது….’
என்றான என் சக தோழி மோகனவின் வரிகள் இங்கு மிகவும் பொருந்துவதாகவே அமைகின்றன.
அவரைப் பற்றி வாழ்க்கை குறிப்பாக…
முறைப்படி இசையை இந்தியாவில் கற்றுத்தான் தனது இசைப் பயணத்தை ஆரம்பத்தவர் மாலினி
கலாநிதி நந்தா மாலினி (Nanda Malini) இலங்கையின் மிகவும் புகழ்பெற்ற, முதன்மையான மூத்த சிங்கள மொழிப் பாடகியும் இசைக் கலைஞரும் ஆவார்.
ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கை இசைத்துறையில் நீங்கா இடம்பிடித்த இவர், தனது 82 வது வயதில், 2026 ஆகத்து 20 அன்று கொழும்பு நாவலையில் காலமானார்.
ஓகஸ்ட் 23, 1943 அன்று அளுத்கமை லேவந்துவ என்ற கிராமத்தில் பிறந்தார்.
இந்தியாவின் லக்னோவில் உள்ள புகழ்பெற்ற ‘பத்கண்டே இந்துஸ்தானி இசைக்கல்லூரியில்’ (Bhatkhande College of Hindustani Music)(தற்போதைய பத்கண்டே சமஸ்கிருதி விஸ்வவித்யாலயா) இசை பயின்றார்.
1963 ஆம் ஆண்டு வெளியான வரலாற்றுச் சிறப்புமிக்க ‘ரன்முத்து தூவ’ (Ranmuthu Duwa) திரைப்படத்தில் “கலன கங்ககி ஜீவிதே” என்ற பாடலின் மூலம் பின்னணிப் பாடகியாக அறிமுகமானார்.
வெறும் காதல் பாடல்களோடு நின்றுவிடாமல், சமூக அநீதி, மனித உரிமைகள், ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரப் போராட்டங்கள் மற்றும் அரசியல் அடக்குமுறைகளுக்கு எதிராகத் தனது பாடல்கள் மூலம் துணிச்சலாகக் குரல் கொடுத்தார்.
1987 இல் வெளியான இவரது ‘பவன’ (Pawana) என்ற பாடல் தொகுப்பு, இலங்கையின் அரசியல் கொந்தளிப்பான காலப்பகுதியில் மக்களின் புரட்சிக் குரலாக விளங்கியது.
இலங்கையின் மிக உயரிய சரசவி விருதுகள் (Sarasavi Awards) மற்றும் ஜனாதிபதி விருதுகள் உள்ளிட்ட பல அரச கௌரவங்களை வென்றுள்ளார்.
அரசாங்கத்தின் தணிக்கைகள் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும், கொள்கை மாறாமல் சாதாரண மக்களின் துயரங்களை உலகறியச் செய்த “தேசத்தின் குரலாக” நந்தா மாலினி போற்றப்படுகிறார்.
நந்தா மாலினி பக்தி, காதல், சமூக விழிப்புணர்வு எனப் பல்வேறு தளங்களில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார்.
அவற்றுள் மிக முக்கியமானவை. கலன கங்ககி ஜீவிதே (Galana Gangaki Jeevithe). இது 1963 இல் ‘ரன்முத்து தூவ’ திரைப்படத்தில் பாடிய இவரின் முதல் பாடல்.
இன்றுவரை இலங்கையின் ஆகச்சிறந்த உன்னதப் பாடல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
அம்மா வருணே (Amma Warune): தாய்மையின் உன்னதத்தையும், ஒரு தாயின் தியாகத்தையும் உருகிப் பாடும் இப்பாடல் ஒட்டுமொத்த இலங்கையர்களையும் கவர்ந்த ஒரு காவியப் பாடலாகும்.
பாராமிதா பல பூஜித (Paramitha Bala Poojitha): பௌத்த தத்துவங்களையும் ஆன்மீக அமைதியையும் வழங்கும் இவரின் மிகப்பிரபலமான பக்திப் பாடல்.
மே சாரதா (Me Saradha): வசந்த காலத்தின் அழகையும், மனித உணர்வுகளையும் மிக மென்மையாக வெளிப்படுத்தும் காதல் கலந்த பாடல்.
விகார மகா தேவி (Vihara Maha Devi): இலங்கையின் வரலாற்றுப் பின்னணியையும் பெண்மையின் வீரத்தையும் போற்றும் பாடல்.
தனது பல பாடல்களில் நந்தா மாலினி இலங்கையில் நிலவும் சமூக யதார்த்தங்களின் அடிப்படையில் பெண்களின் உணர்வுகளை அழகாகவும் யதார்த்தமாகவும் வெளிப்படுத்தினார் என்பதும் இங்கு முக்கியம் ஆகின்றது
நந்தா மாலினி வெறும் மேடைப் பாடகியாக மட்டும் இருக்கவில்லை; ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகவும், அரசியல் மாற்றங்களுக்கான வினையூக்கியாகவும் திகழ்ந்தார்.
‘பவன’ கச்சேரிகள் (Pawana Concerts):
1980களின் பிற்பகுதியில் இலங்கையில் ஏற்பட்ட கடுமையான அரசியல் நெருக்கடி மற்றும் இளைஞர் எழுச்சியின் போது, ‘பவன’ (தென்றல்) என்ற பெயரில் இசை நிகழ்ச்சிகளை நடத்தினார்.
இவை வெறும் பாடல்களாக இல்லாமல், அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிரான புரட்சிக் குரலாக ஒலித்தன.
இளைஞர்களின் குரல்: 1987-1989 காலப்பகுதியில் தெற்கில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்டபோது, அவர்களின் குடும்பங்களின் துயரத்தையும், ஆட்சியாளர்களின் தணிக்கையையும் மீறி மேடைகளில் துணிச்சலாகப் பாடினார்.
இவரது பாடல்களின் வீரியம் காரணமாக, அன்றைய அரசாங்கத்தினால் இவரது பாடல்கள் வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் ஒலிபரப்ப தடை செய்யப்பட்டன.
எனினும், மக்களின் ஆதரவோடு கசட்டுகளாக (Cassettes) இவரது பாடல்கள் நாடு முழுவதும் பரவின.
நந்தா மாலினி, தமிழ் மொழி மீதும், தமிழ் மக்கள் மீதும் கொண்ட அன்பின் காரணமாகவும், இலங்கையின் இன நல்லிணக்கத்தை வலியுறுத்தியும் “குங்குமப் பொட்டு” என்ற பிரத்யேக தமிழ் பாடல் ஆல்பத்தை வெளியிட்டார்.
குங்குமம் பொட்டு என்பது தமிழ் மக்களின் அடையாளமாக அறிந்த சூழலில் பல காலங்களில் பேரினவாதத்தில் தாக்குதலில் இருந்து தம்மை காப்பாற்றிக் கொள்ள தமிழ் மக்கள் பொட்டை அழித்துவிட்டு சென்றதை இதன் மூலம் கருத்தில் கொண்டு பெயரிட்டது மிகச் சிறப்பு.
போரினாலும், இடப்பெயர்வாலும் பாதிக்கப்பட்ட மக்களின் வலிகளையும், தாய்நிலத்தின் மீதான ஏக்கத்தையும் பிரதிபலிக்கும் வகையில் இந்த ஆல்பத்தின் பாடல்கள் அமைந்திருந்தன.
இந்த ஆல்பத்தில் இடம்பெற்ற மிக முக்கியமான மற்றும் பிரபலமான பாடல்கள்…
1. எங்கள் சொந்த மண்ணில்பின்னணி: இந்த ஆல்பத்தின் மிக உருக்கமான, புகழ்பெற்ற பாடல் இதுவாகும்.
உள்நாட்டுப் போரினாலும் இடப்பெயர்வாலும் தங்களது சொந்த வீடுகளையும், விளைநிலங்களையும் இழந்து தவிக்கும் தமிழ் மக்களின் ஏக்கத்தை இப்பாடல் விவரிக்கிறது.
மீண்டும் தங்களது சொந்த மண்ணில் எவ்வித பயமும் இன்றி, சுதந்திரத்தோடும் உரிமையோடும் வாழ வேண்டும் என்ற மக்களின் நியாயமான விருப்பத்தை நந்தா மாலினி தனது கணீரென்ற குரலில் பாடியிருப்பார்.
இவரின் கனவுகள் இது வரை முழுமையாக இலங்கையில் போர் முடிவுற்று 15 வருடங்களுக்கு மேலாக கடந்தும் நிறைவேறவில்லை என்ற நினைவுகளுடனேயே அவரின் இறுதிப் பயணமும் அமைந்தும் விட்டது.
இடதுசாரி மற்றும் முற்போக்கு ஆதரவு: சமூக சமத்துவம், மனித உரிமைகள் மற்றும் ஏழை மக்களின் வாழ்வாதார உரிமைகளுக்காகப் போராடிய முற்போக்கு மற்றும் இடதுசாரி அரசியல் சிந்தனையாளர்களுக்குத் தனது கலை வடிவம் மூலம் வாழ்நாள் முழுவதும் ஆதரவளித்தார். அர்பணிப்புடன் செயற்பட்டார்.
அரசியல் அச்சுறுத்தல்களுக்கு பயந்து பல கலைஞர்கள் மௌனமாக இருந்தபோது, தனது தனித்துவமான குரலால் அதிகார வர்க்கத்தைக் கேள்வி கேட்ட “மக்கள் கலைஞர்” நந்தா மாலினி.
இவர் பற்றி சில நூல்கள் வெளி வந்துள்ளன.
1. நந்தா மாலினி ஜீவனா விஸ்தரய (Nanda Malini Jeevana Vistaraya). இது நந்தா மாலினியின் அதிகாரப்பூர்வ சுயசரிதை (Biography) நூல் போன்றதாகும்.
இதில் அவரது பிறப்பு, லக்னோவில் இசை பயின்ற காலம், ‘ரன்முத்து தூவ’ திரைப்படத்தின் மூலம் பின்னணிப் பாடகியாக அறிமுகமான பின்னணி மற்றும் அவரது ஆரம்பகால இசைப் போராட்டம் குறித்து விரிவாகப் பேசுகிறது.
2. பவனா சாஹித்யய (Pawana Sahithyaya): 1980களின் பிற்பகுதியில் இலங்கையை உலுக்கிய இவரின் ‘பவன’ (Pயறயயெ) இசை ஆல்பம் மற்றும் கச்சேரித் தொடர்களை அடிப்படையாகக் கொண்ட புத்தகம்.
இலங்கையின் புகழ்பெற்ற பாடலாசிரியர் பேராசிரியர் சுனில் ஆரியரத்ன (Sunil Ariyaratne) எழுதிய பாடல்கள் எவ்வாறு நந்தா மாலினியின் குரலில் அரசியல் புரட்சியை ஏற்படுத்தின என்பது பற்றியும், அரசாங்கத்தின் தணிக்கைகளை அவர்கள் எவ்வாறு எதிர்கொண்டார்கள் என்பது பற்றியும் சமூக-அரசியல் பின்னணியில் இந்த நூல் விவரிக்கிறது.
3. கீ போதே விசித்ரய (Gee Pothe Vicharaya): நந்தா மாலினி பாடிய பாடல்களின் இலக்கிய நயம் குறித்த ஒரு விமர்சனப் புத்தகம்.
மாக்ஸ்சிய இலக்கிய விமர்சகரான மறைந்த சுசரித கம்லத் (Sucharitha Gamlath) உள்ளிட்ட அறிஞர்கள் இவரது பாடல்கள் குறித்து முன்வைத்த விமர்சனங்கள், மற்றும் நந்தா மாலினி தனது பாடல்கள் மூலம் பெண்களின் உணர்வுகளையும் (‘பிபுனு மலே ருவ’, ‘சுது ஹாமினே’) சமூக யதார்த்தங்களையும் எவ்வாறு வெளிப்படுத்தினார் என்ற விரிவான ஆய்வை உள்ளடக்கியது.
4. ஸ்வேத ராத்ரிய சாஹித்ய விசித்ரய (Shwetha Rathriya Booklet): 2010 ஆம் ஆண்டு, நீண்ட இடைவெளிக்குப் பிறகு நந்தா மாலினி நடத்திய ‘ஸ்வேத ராத்ரிய’ (வெள்ளை இரவு) என்ற மாபெரும் தனிநபர் கச்சேரித் தொடரையொட்டி வெளியிடப்பட்ட சிறப்பு ஆவணப் புத்தகம்.
இக்கச்சேரியில் பாடப்பட்ட பாடல்களின் வரிகள், அவற்றின் பின்னணிக் கதைகள் மற்றும் சமகால இலங்கை இசைக்கு அவர் ஆற்றிய பங்களிப்புகள் தொகுக்கப்பட்டுள்ளன.
வுரலாற்று ஆவணமாகப் பேணப்பட வேண்டிய இப்புத்தகங்கள் சிங்கள மொழி மூலமே அமைந்திருக்கின்றன. இவை தமிழில் மொழியாக்கம் செய்யப்பட வேண்டிய நூல்கள் ஆகும். அவருக்கான மரியாதை கலந்த நினைவு கூரலாக நாம் இதனைச் செய்தாக வேண்டும்