புத்தர் சிலைகளை பகிரங்கமாக அமைக்கும் நடவடிக்கை, நாட்டின் இன நல்லிணக்கத்திற்கும் மத ரீதியான சகவாழ்விற்கும் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.
குறிப்பாக, தொல்பொருள் ஆராய்ச்சி எனும் பெயரிலும், அரச இயந்திரத்தின் ஆதரவோடும் மேற்கொள்ளப்பட்ட இத்தகைய செயற்பாடுகள், வெறும் வழிபாட்டுத் தேவையைத் தாண்டி, ஒருவித நில ஆக்கிரமிப்பு மற்றும் கலாச்சாரத் திணிப்பாகவே அப்பகுதி மக்களால் பார்க்கப்படுகின்றன.
புத்த பெருமான் போதித்த தர்மமும் போதனைகளும் அகிம்சை, மெய்ஞானம், சகிப்புத்தன்மை மற்றும் சமாதானத்தையே முதன்மையாகக் கொண்டுள்ளன. பிற சமூகங்களின் உணர்வுகளையும் உரிமைகளையும் மதித்து நடப்பதே புத்த தர்மத்தின் சாராம்சமாகும்.
ஆனால், அந்தப் போதனைகளை எள்ளளவும் பின்பற்றாமல், தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களிலும் வழிபாட்டு இடங்களுக்கு அருகிலும் அவர்களின் விருப்பத்திற்கு மாறாக பலவந்தமாக புத்தர் சிலைகளைப் பிரதிஷ்டை செய்ய முனைவது, புத்த பெருமானின் போதனைகளுக்கே எதிரான ஒரு செயலாகும்.
தொல்பொருள் பாதுகாப்பு என்பது ஒரு நாட்டின் வரலாற்று மரபைப் பேணிப்ப பாதுகாக்கும் உன்னதமான பணியாகும். ஆனால், அப்பணியானது ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் அடையாளங்களை அழிப்பதாகவோ அல்லது மற்றொரு மதப் பெரும்பான்மைவாதத்தை நிலைநாட்டுவதற்கான கருவியாகவோ மாறக்கூடாது.
வரலாற்றுச் சான்றுகளை நடுநிலையோடு ஆராய்வதை விடுத்து, தொல்பொருள் இடங்கள் என்ற போர்வையில் மேற்கொள்ளப்படும் எல்லை மீறிய நடவடிக்கைகளும், அதனைத் தொடர்ந்து உருவாக்கப்படும் புதிய விகாரைகளும் அப்பகுதி மக்களின் அச்சத்தையும் சந்தேகத்தையும் அதிகப்படுத்தியுள்ளன.
இத்தகைய நடவடிக்கைகள், போருக்குப் பிந்தைய இலங்கையில் ஏற்கனவே காயமடைந்துள்ள தமிழ் மக்களின் மனங்களில் மேலும் ஆழமான வடுக்களை ஏற்படுத்துகின்றன. அத்துடன், பௌத்த மற்றும் இந்து, இஸ்லாமிய சமூகங்களிடையே காலம் காலமாக நிலவிவரும் நல்லுறவைச் சிதைத்து, மீண்டும் ஒரு தேவையற்ற இன, மத முரண்பாட்டிற்கே வழிவகுக்கும்.
அரசும், மதத் தலைவர்களும், தொல்பொருள் திணைக்களமும் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து உடனடியாகச் செயற்பட வேண்டும். ஆன்மீகம் என்பது மனிதர்களை இணைக்கும் பாலமாக இருக்க வேண்டுமே தவிர, பிரித்தாளும் அரசியலுக்கான ஆயுதமாக மாறக்கூடாது. பௌத்தத்தின் உண்மையான சாரத்தை உணர்ந்து, பிற மதங்களின் மரியாதையையும் உரிமைகளையும் பாதுகாக்கும் போது மட்டுமே நாட்டில் உண்மையான அமைதியும் சகவாழ்வும் சாத்தியமாகும்.
(Tamil Mirror)