‘இந்த தேசத்தின் எழுச்சிக்காக’93 ( மாகே தேஸய அவதிதருனுமென’93) எனும் தொனிப்பொருளில் நடாத்தப்படும் கலை இலக்கிய பெருவிழாவுக்கு ( கலா உலெல) கவிதை, கட்டுரை, சிறுகதைகள் என ஆக்கங்கள் எழுதி அனுப்பலாம் என்பதுதான் அந்த அறிவித்தல்.
‘ இந்த தேசத்தின் எழுச்சிக்காக’ எனும் தலைப்பிலேயே ஒரு கவிதையை எழுதி அனுப்பினேன். சில மாதங்களுக்குப்பிறகு எனக்கு பரிசு இருப்பதாகக் கூறி அழைப்பிதழும் தபாலில் வந்து சேர்ந்தது.
இப்போது பரீட்சைகள் முடிந்து பாடசாலையில் இருந்து விலகி இருந்தேன் . ஆனாலும் மாணவனாக எழுதியதுதானே என்ற எண்ணத்தோடு ஒரு மாதத்துக்கு பிறகு ( 93 செப்டெம்பர்) மீண்டும் ‘வெள்ளைச் சீருடையில்’ பேராதனைப் பல்கலைக் கழகம் போயிருந்தேன்; பரிசு வாங்க.
நான் பார்த்த முதல் பிரமாண்ட மேடை அது. உள்ளக விளையாட்டரங்கம் மத்தியில் மேடை மண்டபம் முழுக்க மூன்று பக்கத்திலும் பெரும் அளவில் பல்கலைக் கழக மாணவர்கள் கூட்டம் … இப்படி பிரமிப்பாக இருந்தது.
பல பிரபலமான சிங்கள பாடகர்களின் இசை கச்சேரி உரைகள் பரிசு வழங்கல்களுக்கு இடையிடையே ஒலித்துக் கொண்டு இருந்தது. அடுத்ததாக தமிழ் மொழி படைப்புகளுக்கான பரிசளிப்பு என அறிவித்தார்கள் .
அப்போதுதான் தமிழ் மொழியில் முதன் முறையாக ஒலித்தது. அதுவரை அத்தனை அறிவிப்புகளும் நிகழ்ச்சிகளும் சிங்கள மொழியிலேயே அமைந்திருந்தன.. “சிறுகதை – வேலாயுதம் மருத்துவ பீடம் பேராதனைப் பல்கலைக் கழகம்” பரிசு வாங்க அவர் வந்திருக்கவில்லை.( இவரை அப்போது தெரியாது. இப்போது எனது நண்பரின் நண்பராக அறிமுகம் கிடைத்துளள்து)
“கட்டுரை – வி.குணசேகரன், கலை பீடம் , பேராதனைப் பல்கலைக்கழகம்” அறிவிப்பு வந்தாலும் ஆள் வரவில்லை ( இவர் எனது பூண்டுலோயா பாடசாலை நண்பர். நாங்கள் சாதாரண தரம் படித்த போது உயர்தர வகுப்பில் இருந்தவர். நாங்கள் ஒன்றாக நாடகம் நடித்தவர்கள்
“கவிதை – மயில்வாகனம் திலகராஜா ,ஹைலன்ட்ஸ் கல்லூரி, ஹட்டன்”முழு வெள்ளைச் சட்டையுடன் பாடசாலை மாணவன் என்று தெட்டத் தெளிவாகத் தெரிய பிரமாண்ட மேடையை நோக்கி ஓடினேன்.
அரங்கம் நிறைந்த கைதட்டல்.முன்னையவர்கள் இருவரும் பரிசு பெற வராத நிலையில் பள்ளிக்கூட மாணவனாக பல்கலைக்கழக மாணவர்களின் மேடையில் ஒரு சிறுவன் ஏறியது கைதட்டலுக்கு காரணமாக இருக்கலாம்.
அடுத்து ஒரு தேவதை வருவது போல மேடையில் ஓர் அழகிய காட்சி. வெண்ணிற சேலையில் வந்த அந்த அம்மையார் சிங்களத்தில் பேசினார். “நாம் பெரும் எண்ணிக்கையில் சிங்கள மொழி பேசுவோர் கூடி இருக்கும் இந்த விழாவில் தமிழ் மொழி பேசும் ஒரே ஒரு குழந்தை (தருவா) பரிசு வாங்கிச் செல்கிறார்.
நீங்கள் அனைவரும் அந்தக் குழந்தைக்கு வழங்கிய கைதட்டல் அவருக்கு உற்சாகம் அளித்திருக்கும். எனது பங்கிற்கு அவருக்காக ஒரு தமிழ்ப்பாடலைப் பாடப்போகிறேன்” அரங்கத்தில் மீண்டும் பலத்த கரகோஷம்.
அப்போதுதான் அப்சராஸ் எம். மோகன்ராஜ் குழுவினருடன் இணைந்து அவர் வெளியிட்டிருந்த ‘குங்குமப் பொட்டு’ ஒலி நாடா ( கெசட்) வில் இருந்து ஒரே பாடல் பாடினார்…. அன்று முதல் ஒரு தாயின் தோற்றத்தில் அவரை அவரது பாடல்களை ரசித்து வருகிறேன்.
அந்த அம்மா ‘நந்தா மாலினி’ காலமானார் எனும் செய்தியோடு இன்றைய காலை விடிகிறது. அரசாங்கம் மூன்று நாட்களை தேசிய துக்க தினமாக அறிவித்து இருப்பதில் தெரிகிறது.
உங்கள் குரல் இந்த தேசத்தின் குரல் என. அஞ்சலிகள் அம்மா !பல்கலைக்கழக மட்டத்தில் நான் பெற்ற முதல் பட்டம் அந்தப் பாட்டும் உங்கள் பாராட்டும்.