அடங்காத வட கொரியா நேற்றுமோர் ஏவுகணையை அனுப்பியது!

அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாது, ஐக்கிய நாடுகள் சபையின் கண்டனங்களுக்குச் செவி மடுக்காது, சீனாவின் ஆலோசனைகளுக்கு மதிப்பளிக்காது, ஐரோப்பிய நாடுகளின் எதிர்ப்பலைகளைக் கவனத்திற் கொள்ளாது வட கொரியா நேற்று ஞாயிற்றுக் கிழமையும் ஓர் ஏவுகணையை வானில் செலுத்தியுள்ளது.

வடகொரியத் தலைநகரமான பியோங்கியாங் (Pyongyang) கிற்கு வடமேற்குப் பகுதியில் உள்ள குசோங் பிரதேசத்திலிருந்து நேற்று முற்பகலில் இந்த பல்லிஸ்டிக் ஏவுகணை (Ballistic Missile) ஏவப்பட்டுள்ளது. இது சுமார் 430 மைல் (700 கிலோ மீற்றர்) தூரம் சென்று விழுந்துள்ளது.

இந்த ஏவுகணை முப்பது நிமிடங்கள் பறந்ததாகவும் பின்னர் வடகிழக்கு கடற் பிராந்தியத்துக்கும் ஜப்பானுக்குமிடையேயுள்ள கடற்பகுதியில் வீழ்ந்ததாகவும் ஜப்பான் குறிப்பிட்டுள்ளது.

கடந்த இரு வாரங்களுக்கு முன்னம் வடகொரியா செலுத்திய ஏவுகணை ஏவப்பட்ட சிறிது நேரத்திலேயே வெடித்துத் தோல்வியைத் தந்திருந்ததன் பின்னர் இந்த ஏவுகணை ஏவப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த ஏவுகனைச் சோதனைக்கெதிராக ஜப்பான் தனது கடுமையான கண்டனங்களைத் தெரிவித்திருக்கும் அதேவேளை, தென் கொரியாவின் புதிய அதிபர் மூன்-ஜெ-இன் அவசரமாகத் தனது நாட்டின் தேசிய பாதுகாப்புச் சபையைக் கூட்டியுள்ளார்.