அம்மாச்சி உணவகம்

இன்று இலக்கஞ்சி அருந்தலாம் என்று கேட்டபோது, வழக்கத்தைவிட 20 ரூபாய் அதிக விலை கூறப்பட்டது. “ஏன் விலை அதிகம்?” என்று கேட்டேன். பணியாளர் மிகவும் எளிமையாக, “இப்போது கண்ணாடிக் குவளைக்குப் பதிலாக ஒருமுறை பயன்படுத்தும் கப்பில் (Disposable Cup) மட்டுமே தருகிறோம். அதற்கான செலவுதான்,” என்றார்.”ஏன்? வழக்கம்போல் கண்ணாடிக் குவளையில் தர முடியாதா?” என்று கேட்டேன்.

அதற்கு, சில நாட்களுக்கு முன்பு சுகாதாரப் பிரச்சினை காரணமாக உணவகம் மூடப்பட்டிருந்ததாகவும், மீண்டும் திறக்கப்பட்டபோது பொது சுகாதாரப் பரிசோதகர் (PHI), ஒருமுறை பயன்படுத்தும் கப்புகளை மட்டுமே பயன்படுத்துமாறு அறிவுறுத்தியதாகவும் கூறினார்.அங்கேயே எனக்கு ஒரு கேள்வி எழுந்தது.ஒருமுறை பயன்படுத்தி குப்பையில் வீசப்படும் கப் உண்மையில் சுகாதாரமானதா? அல்லது முறையாகச் சுத்தம் செய்யப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்படும் கண்ணாடிக் குவளையா அதிக சுகாதாரமானதா?இந்தக் கேள்விக்கு எளிதான பதில் இல்லை.

ஆனால் அதன் பிறகு நான் சிந்திக்க ஆரம்பித்தேன்.ஒரு நாளைக்கு இந்த உணவகத்தில் மட்டும் சுமார் 1,000 முதல் 2,000 கப்புகள் வரை பயன்படுத்தப்படுகின்றன. தேநீர், கஞ்சி வகைகள், பழக்கலவைகள், பால் உள்ளிட்ட பல்வேறு பானங்களுக்காக இந்தக் கப்புகள் பயன்படுகின்றன. அதாவது, தினமும் ஆயிரக்கணக்கான கப்புகள் குப்பையாக மாறுகின்றன.அதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி சிந்தித்தேன்.

அவற்றை அகற்றுவதற்கான செலவு உருவாகும். அவை குப்பைமேடுகளில் சேரும். மழைக்காலங்களில் அவற்றில் நீர் தேங்கி, டெங்கு உள்ளிட்ட நோய்களைப் பரப்பும் கொசுக்கள் மற்றும் பிற நுண்ணுயிர்கள் பெருகும் சூழல் உருவாகும். சுற்றுச்சூழலுக்கும் கூடுதல் பாதிப்பு ஏற்படும்.இது சுகாதாரத்தைப் பாதுகாக்கும் முயற்சியா? அல்லது வேறொரு சுகாதாரப் பிரச்சினையை உருவாக்கும் முடிவா?இன்னொரு பக்கம், பொருளாதாரத்தையும் சிந்தித்துப் பாருங்கள்.

ஒரு கப்பிற்கு கூடுதலாக வசூலிக்கப்படும் 20 ரூபாய் என்றால், 2,000 கப்புகளுக்கு ஒரு நாளில் 40,000 ரூபாய். இந்தப் பணத்தில் ஒரு பகுதியையாவது சுடுநீர் வசதி, தரமான கழுவும் முறை, நவீன சுத்திகரிப்பு உபகரணங்கள் மற்றும் தனிப்பட்ட சுத்தப்படுத்தும் பணியாளர்கள் ஆகியவற்றிற்காக முதலீடு செய்திருந்தால், கண்ணாடிக் குவளைகளையே பாதுகாப்பாகப் பயன்படுத்த முடியாதா?

பொது சுகாதாரம் என்பது உணவகத்தின் மேசை வரை மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றும் அல்ல. அது கழிவு மேலாண்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீர் மேலாண்மை, நோய்க்கட்டுப்பாடு, வளங்களின் பொறுப்பான பயன்பாடு, பொருளாதாரச் செலவு, மக்களின் நடத்தைகள் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய முழுமையான அணுகுமுறையாக இருக்க வேண்டும்.

என்னுடைய ஆதங்கம் ஒரு உணவகத்தைப் பற்றியது மட்டும் அல்ல. இது நமது நிர்வாக அமைப்புகள் எவ்வாறு முடிவுகளை எடுக்கின்றன என்பதையும் பற்றியது.ஒரு விதிமுறையை நடைமுறைப்படுத்தும்போது அதன் உடனடி நன்மைகளை மட்டும் அல்லாமல், நீண்டகால சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் விளைவுகளையும் மதிப்பிட வேண்டியது அவசியம்.

இல்லையெனில், ஒரு பிரச்சினையைத் தீர்க்கும் முயற்சியில் இன்னொரு பிரச்சினையை உருவாக்கும் அபாயம் ஏற்படும்.இது எந்த ஒரு அதிகாரியையும் குறைகூறுவதற்காக எழுதப்பட்ட பதிவு அல்ல.

ஆனால், எனது நீண்ட நாள் ஆதங்கம் ஒன்று இருக்கிறது. எமது கல்வி முறையும், சமூகப் பண்பாடும், பல சந்தர்ப்பங்களில் சிந்திக்கும் குடிமக்களை உருவாக்குவதற்குப் பதிலாக, கூறப்பட்டதை அப்படியே ஏற்றுக்கொள்ளும் மனநிலையையே வளர்த்திருக்கின்றன.

ஒரு அதிகாரி கூறியதால் அது சரி என்ற எண்ணம் ஏன் இன்னும் நிலவுகிறது? அந்த அறிவுறுத்தல் தவறாக இருந்தாலும், அதை விமர்சனப் பார்வையுடன் ஆராயாமல் ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை ஏன் நம்மிடையே காணப்படுகிறது?ஒரு சமூகத்தின் முன்னேற்றம் என்பது விதிமுறைகளைப் பின்பற்றுவதில் மட்டும் இல்லை; அவற்றின் நோக்கம், தாக்கம் மற்றும் விளைவுகளை ஆராய்ந்து கேள்வி கேட்கும் பண்பிலும் உள்ளது. சிந்திக்கும் சமூகம்தான் நிலையான தீர்வுகளை உருவாக்கும்

Leave a Reply