இரு பேரினவாத கட்சிகளின் கூட்டு ஆட்சியே நாட்டில் நடக்கின்றது! – ஈரோஸ் ஜனநாயக முன்னணி ஆவேசம்

இரு பேரினாவாத கட்சிகளின் கூட்டு ஆட்சியே நாட்டில் நடக்கின்றது என்று ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் செயலாளர் நாயகம் இராஜ. இராஜேந்திரா தெரிவித்து உள்ளார்.தற்போதைய அரசியல் நிலைவரம் குறித்து ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் கல்முனை தலைமை காரியாலயத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து பேசியபோதே இவர் இவ்வாறு தெரிவித்தார். இவர் இங்கு முக்கியமாக தெரிவித்தவை வருமாறு:-

இரு பேரினவாத கட்சிகளின் கூட்டு ஆட்சியே நடக்கின்றது. மக்கள் எதிர்பார்த்து இருந்த மாற்றங்கள் கொண்டு வரப்படாமல் ஏமாற்றங்கள்தான் மிஞ்சி உள்ளன. தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை. மக்களின் காணிகள் விடுவிக்கப்படவில்லை. இளைஞர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. அரசியல் அமைப்பின் 13 ஆவது திருத்த சட்டம் உண்மையில் ஆனை பசிக்கு கிடைத்த சோள பொரியே ஆகும். அதைகூட தட்டி பறிப்பதற்காகவே மாகாண சபைகள் திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது.அரசியல் தீர்வு இழுத்தடிப்பு செய்யப்படுகின்றது. ஆகவேதான் மக்கள் மாற்றங்களை வேண்டி இந்த அரசாங்கத்துக்கு எதிராக போராட நேர்ந்து உள்ளது.

மனித உரிமைகள் சம்பந்தமாக சொல்வதாக இருந்தால் நல்லாட்சி என்று சொல்லப்படுகின்ற இந்த ஆட்சி வந்த பிற்பாடு சித்திரவதைகள், காணாமல் போதல்கள், கடத்தல்கள் ஆகியவற்றுக்கு உட்பட்டார்கள் என்று புலம்பெயர் நாடுகளுக்கு வந்து உள்ள சுமார் 50 இற்கும் அதிகமான இலங்கையர்கள் தெரிவித்து உள்ளார்கள் என்று அமெரிக்காவில் இருந்து இயங்குகின்ற உலக பிரசித்தி வாய்ந்த அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டு உள்ளது.
தமிழ் பேசும் மக்களுக்கான பிரச்சினைகள் என்றே எல்லா பிரச்சினைகளையும் ஈரோஸ் அமைப்பு பார்த்தது.

அதே போலதான் எல்லா பிரச்சினைகளையும் தமிழ் பேசும் மக்களுக்கான பிரச்சினைகள் என்றே ஈரோஸ் ஜனநாயக முன்னணியும் பார்க்கின்றது. தமிழ் – முஸ்லிம் உறவை நாம் ஒரு போதும் புறம் தள்ள முடியாது. அனைத்து சமூகங்களும் புரிந்துணர்வுடனும், நல்லிணக்கத்துடனும் ஐக்கியமாக வாழ வேண்டும் என்பதே எமது கட்சியின் பார்வை ஆகும். குறிப்பாக வடக்கு, கிழக்கு இணைந்த சுயாட்சியில் தமிழ் – முஸ்லிம் உறவு பிரதான பங்களிப்பு செலுத்துகின்ற விடயமாக இருக்கும்.