காரைதீவை பொத்துவில் தொகுதியில் இருந்து பிரிப்பதன் மூலம் தமிழர் பிரதிநிதித்துவத்தை சிதைக்க கூட்டு சதி! – செல்லையா இராசையா ஆவேசம்

காரைதீவு பிரதேச மக்களின் விருப்பம், இணக்கம் ஆகியன பெறப்படாமலும், இவர்களின் ஆலோசனை, அபிப்பிராயம், கருத்து ஆகியன செவிமடுக்கப்படாமலும் மாகாண சபை தேர்தல் தொகுதி எல்லை நிர்ணய ஆணைக்குழுவால் சம்மாந்துறை தொகுதிக்குள் காரைதீவு பிரதேசம் சேர்க்கப்படுகின்ற நடவடிக்கை முறைகேடானது என்று காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளருமான செல்லையா இராசையா தெரிவித்து உள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் மாகாண சபை தேர்தலுக்கான தொகுதிகளை எல்லை நிர்ணயம் செய்ய நியமிக்கப்பட்ட ஆணைக்குழு அதன் அம்பாறை மாவட்ட அமர்வை கடந்த 11 ஆம் திகதி காலை நடத்தி உள்ளது. இவ்வமர்விலேயே காரைதீவை சம்மாந்துறை தொகுதியுடன் சேர்த்து கொள்வது என்று ஆணைக்குழு உத்தேச தீர்மானம் எடுத்து உள்ளது. ஆனால் இவ்வமர்வு மூடுமந்திரமாகவும், முறைகேடாகவும் இடம்பெற்றது என்று செல்லையா இராசையா ஏற்கனவே குற்றம் சாட்டி உள்ளதுடன் இது தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய அலுவலகத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்து உள்ளார்.

பொத்துவில் தொகுதியில் இருந்து காரைதீவை பிரித்து சம்மாந்துறை தொகுதியுடன் இணைப்பதாக அவ்வமர்வில் எடுக்கப்பட்ட உத்தேச தீர்மானத்தை ஆட்சேபித்து வெளியிட்டு உள்ள அறிக்கையிலேயே இவர் இவ்வாறு குறிப்பிட்டு உள்ளார்.
இவர் இவ்வறிக்கையில் மேலும் குறிப்பிட்டு உள்ளவை வருமாறு:-
மூடுமந்திரமாகவும், முறைகேடாகவும் இடம்பெற்றதால் குறிப்பிட்ட சில அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களே அவ்வமர்வில் கலந்து கொண்டுள்ளனர். குறிப்பாக காரைதீவை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டிருக்கவில்லை. ஆனால் காரைதீவை பொத்துவில் தொகுதியில் இருந்து பிரித்து சம்மாந்துறை தொகுதியுடன் இணைப்பது என்று அவ்வமர்வில் ஆணைக்குழுவுக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. ஆணைக்குழுவும் அப்பரிந்துரையை ஏற்று கொண்டு உள்ளது.
ஆனால் காரைதீவை சேர்ந்த அரசியல் செயற்பாட்டாளர்கள், பொது அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரின் ஆலோசனை, அபிப்பிராயம், கருத்து ஆகியவற்றை செவிமடுக்காமல் காரைதீவை சம்மாந்துறையுடன் இணைப்பதாக உத்தேச தீர்மானம் எடுக்கப்பட்டது அநீதியானதும், இயற்கை நீதிக்கு புறம்பானதும் ஆகும். அதே நேரம் கடந்த காலங்களிலும் அந்த அந்த பிரதேச மக்களின் ஆலோசனை, அபிப்பிராயம், கருத்து ஆகியன கவனத்தில் கொள்ளப்படாமல் எல்லைகள் நிர்ணயம் செய்யப்பட்டதனால் ஏற்பட்ட ஆட்சேபனைகள், குழப்பங்கள், பிரச்சினைகள் இன்னமும் தீர்ந்து விடவில்லை என்பது அவதானத்துக்கு உரிய விடயம் ஆகும். உதாரணமாக அக்கரைப்பற்று பிரதேசம் இரு கூறுகள் ஆக்கப்பட்டு இதில் ஒரு பகுதி பொத்துவில் தொகுதிக்குள்ளும், மறுபகுதி சம்மாந்துறை தொகுதிக்குள்ளும் 1976 ஆம் ஆண்டு பங்கு போடப்பட்டதற்கு பின்னால் அக்கரைப்பற்றின் அரசியல் பலத்தை சிதைக்கின்ற திட்டமிடப்பட்ட சதி இருப்பதாக தூய முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர் நஸார் ஹாஜியார் குற்றம் சாட்டி உள்ளார்.
வருகின்ற மாகாண சபை தேர்தலை தொகுதியும், விகிதாசாரமும் கலந்த முறையில் நடத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் காரைதீவை பொத்துவில் தொகுதியில் இருந்து பிரித்து சம்மாந்துறை தொகுதியுடன் இணைக்க எடுக்கப்பட்ட உத்தேச தீர்மானம் கிழக்கு மாகாண சபையில் அம்பாறை மாவட்ட தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை குறைக்கின்ற அல்லது இல்லாமல் செய்கின்ற கூட்டு சதி நடவடிக்கையாகவே எம்மால் பார்க்கப்படுகின்றது. அதாவது அந்த உத்தேச தீர்மானம் மூலமாக தொகுதிவாரியாக பொத்துவில் தொகுதி தமிழ் மக்களின் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படுவதற்கான வாய்ப்பு அறவே இல்லாமல் செய்யப்படுகின்றது. மறுபுறத்தில் சம்மாந்துறை தொகுதியுடன் காரைதீவு பிரதேசம் சேர்க்கப்படுகின்றபோதுகூட சம்மாந்துறை தொகுதியில் இருந்து தமிழ் மக்களின் பிரதிநிதிகள் தெரிவாவதற்கு வாய்ப்பே இல்லை. மேலும் எதிர்காலத்தில் பாராளுமன்ற தேர்தல்களும் தொகுதியும், விகிதாசாரமும் கலந்த முறையில் நடத்தப்படுகின்றபோது பொத்துவில் தொகுதியில் இருந்து தமிழர் பிரதிநிதிகள் எவரும் பாராளுமன்றத்துக்கு தெரிவாக முடியாது என்பதும் குறிப்பிடத் தக்கது.
பொத்துவில் தொகுதியுடன் காரைதீவு பிரதேசம் தொடர்ந்து இணைந்து இருக்க வேண்டும் அல்லது கல்முனை தொகுதியுடன் இணைக்கப்பட வேண்டும் என்பதே அம்பாறை மாவட்ட மக்களுக்கான நீதியாக இருக்க முடியும். இதுவே காரைதீவு பிரதேச மக்களின் அபிலாஷையும் ஆகும். எல்லை நிர்ணய ஆணைக்குழு காரைதீவை சம்மாந்துறை தொகுதியுடன் இணைக்கின்ற முன்னெடுப்புகளை கை விட வேண்டும். தவறுகின்ற பட்சத்தில் இதற்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுப்போம்.