இலங்கையின் புதிய வரவு செலவுத் திட்டம்

நல்லாட்சி அரசாங்கத்தின் மூன்றாவது வரவு செலவு திட்டம் கடந்த வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் சமரப்பிக்கப்பட்டது.இதனை நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர பாராளுமன்றத்தில் சமர்பித்தார். 30 வருட கால யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு முழுஅளவில் முக்கியத்துவம் வழங்கும் வகையில் இந்த வரவு செலவு திட்டத்தில் முன்மொழிவுகள் இடம்பெற்றுள்ளமை விசேட அம்சமாகும்.

நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக அமைச்சர் மங்கள சமரவீர முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் நிர்வாக காலப்பகுதியில் தவளம வீதி நாடகங்கள் மூலம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டவர்.

இந்த வகையில் இவர் சமர்பித்துள்ள நல்லிணக்கத்திற்கான விடயம் தொடர்பிலான வரவு செலவு திட்டத்தை உள்நாட்டில் விசேடமாக வடக்கு கிழக்கு உள்ளிட்ட தமிழ் பேசும் மக்கள் மத்தியிலும் புத்தி ஜீவிகள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இது போன்று வெளிநாடுகளிலும் தற்போது இந்த வரவு செலவு திட்டம் குறித்து பேசப்பட்டு வருவதையும் சுட்டிக்காட்டுவது விசேடமானது.

மேம்படுத்தப்பட்ட பொருளாதாரத்திற்கு தேவையான விடயங்களுடன் நல்லாட்சி அரசாங்கத்தின் எதிர்கால திட்டமான ஜனநாயகத்திற்கான வலுவான அடிப்படை மற்றும் நல்லிணக்கத்திற்கான விடயங்களை உள்ளடக்கியே சமர்பிப்பதாக அமைச்சர் தமது வரவுசெலவுத்திட்ட உரையில் குறிப்பிட்டு இருந்தார்.

கடந்த காலங்களில் நாடு எதிர் கொண்டிருந்த மோசமான நிலை மீண்டும் ஏற்படக் கூடாதென அமைச்சர் தமது உரையில் சுட்டிக்காட்டியிருந்தார்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு கிழக்கு மக்களின் மனதை வெல்வதற்கும் அமைதியை ஏற்படுத்துவதற்கும் அந்த மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த வேண்டும். அதே போன்று பொருளாதார அபிவிருத்தி மூலமான பலன்களும் இந்த மக்களை சென்றடைய வேண்டும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு கிழக்கு மக்களை போன்று மலையகத்தில் நீண்ட காலமாக பெருந்தோட்ட தொழிற்துறை மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செய்து வரும் மலையக மக்களையும் நிதி அமைச்சர் என்ற ரீதியில் அமைச்சர் மறந்து விடவில்லை.

அவர்களின் லயன்குடியிருப்பு வாழ்கை முறையில் இருந்து மீண்டு தனியான வீடுகளில் வாழ தற்போது உள்ள வீடமைப்பு திட்டங்களை விரிவுபடுத்தும் வகையில் முன்மொழிவுகளை முன்வைத்துள்ளார். இந்த வீடமைப்பிற்காக 2ஆயிரம் மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்தமை குறிப்பிடத்தக்கது.

அரசாங்கம் 2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பொருளாதார அபிவிருத்திக்கும் அங்குள்ள மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வான திட்டங்களை முன்னெடுப்பதற்காக 12.75பில்லியன் ரூபாவை இந்த வரவு செலவுத் திட்டத்தில் ஓதுக்கீடு செய்துள்ளது.இது தொடர்பான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை தற்போது அவதானிப்போம்.

(1)நல்லிணக்க செயற்பாடு மூலம் கால்நடை அபிவிருத்தி பொருளாதார மேம்பாடு மற்றும் சமூக உட்கட்டமைப்பு அபிவிருத்தியில் விசேட தேவைகளை கொண்ட வடக்கு பெண்களின் நலனுக்காக 2.75 பில்லியன் நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

(2)1970 ஆம் ஆண்டு வடக்கில் இருந்து எல்ரிரியினால் வெளியேற்றப்பட்ட முஸ்ஸிம் மக்களை மீள குடியமர்த்துவதற்காக உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் வீடுகள் நிர்மாணிப்பதற்கு 2.5 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் மன்னார் நகர புனரமைப்பு மற்றும் சிலாபத்துறை நகர மேம்பாடும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

(3)காணாமல் போனோர் தொடர்பான அலுவலக நடவடிக்கைகளை அமைப்பதற்காக பாராளுமன்றம் அங்கீகரித்துள்ளது. இதன் நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கென 1.4 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

(4)ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்பட்டுள்ள வீடமைப்பு திட்டத்தில் மேலும் விரிவுப்படுத்தும் திட்டத்தில் செங்கற்கள் முதலானவற்றிலான 50ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்க 750 மில்லியன் ரூபா நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

(5)வடக்கு கிழக்கில் கிராமிய நீர்பாசன அபிவிருத்திக்காகவும் மழை நீர் மூலமான உற்பத்திக்காகவும் ஒருங்கிணைந்த கிராம அபிவிருத்தி திட்டத்திற்காக 2 பில்லியன் ரூபா நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

(6)கடன் சுமையை எதிர் கொண்டுடிருக்கும் மக்கள் மத்தியில் குறைந்த வட்டியிலான கடன் மற்றும் உதவிகளை மேற்கொள்வதற்கும் கூட்டுறவு கிராமிய வங்கிகள் மற்றும் கடன் உதவிகளை வழங்கும் கூட்டுறவு சங்கங்களில் இருந்து இவர்களை விடுவிப்பதற்காகவும் உதவுவதற்காக 1 பில்லியன் ரூபா நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

(7)வடக்கு கிழக்கில் தெரிவு செய்யப்பட்ட கைத்தொழில் துறைகளுக்கு உதவுவதற்காக 1 பில்லியன் ரூபா ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பரந்துப்பட்ட வகையில் இத்துறையிலான கூட்டுறவு சங்கங்கள் இதன் மூலம் மேம்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

(8)தேசிய மொழி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அரச மொழி கொள்கையை வலுப்படுத்துவதற்கும் தேசிய ரீதியிலான திட்டங்களை முன்னெடுப்பதற்காக 200 மில்லியன் ரூபா நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

(9)மயிலிட்டி துறைமுகத்தை முக்கிய மீன்பிடி துறைமுகமாக அபிவிருத்தி செய்யவும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் பாரம்பரிய வாழ்வாதார செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கும் மீன்களை பதப்படுத்தவும் குளிரூட்டப்பட்ட அறைகளை அமைக்கவும் பிடிக்கப்படும் மீன்களை களஞ்சியப்படுத்துவதற்கான அறைகளை அமைக்கவும் 150 மில்லியன் ரூபா நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

(10)அச்சுவேலி கைத்தொழில் வலயத்தில் தொழில் நடவடிக்கையை மேம்படுத்த நிறுவனங்கள் மின்சாரத்திற்காக செலவிடும் தொகையில் 50 சதவீதத்தை அரசாங்கம் பொறுப்பேற்க்கும். 2 வருட காலத்திற்கு இந்த உதவி வழங்கப்படும் இதற்கு 100 மில்லியன் ரூபா நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

(11)தம்புள்ள பொருளாதார மத்திய நிலையம் மற்றும் கொழும்புடனான பொருளாதார செயற்பாடுகளை முன்னெடுக்கும் வகையில் யாழ்ப்பாணத்தில் நவீன பொருளாதார மத்திய நிலையம் அமைக்கப்படவுள்ளது. இதற்காக 100 மில்லியன் செலவிடப்படவுள்ளது.

(12)நெடுந்தீவு மற்றும் கிளிநொச்சியில் 2 உணவு பொருட்கள் பதனிடும் நிலையம் அமைக்கப்படவுள்ளன. போசாக்கு மிகுந்த பனங்கருப்பட்டி அதனுடன் தொடர்புப்பட்ட கிழங்கு வகைகள் இதன் மூலம் பதப்படுத்தபடவுள்ளன.

(13)ஐ.டி.என் மற்றும் வசந்தம் தொலைக்காட்சி சேவையை வடக்கில் மேம்படுத்துவதற்காக 30 மில்லியன் ரூபா நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

(14)போரினால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கு உதவும் வகையில் முன்னெடுக்கும் அம்மாச்சி என்ற சிறிய வர்த்தக நடவடிக்கையை மேம்படுத்த 25 மில்லியன் ரூபா நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

(15)புனர்வாழ்வு அளிக்கப்பட்ட வடக்கு இளைஞர்கள் தனது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் NVQ தர சான்றிதழ் பயிற்சியை பெற்றுக்கொள்ள 25 மில்லியன் ரூபா நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

(16)புனர்வாழ்வு அளிக்கப்பட்ட இளைஞர்களுக்கு தொழில்வாய்ப்புகளை வழங்கும் தனியார் நிறுவனங்களை ஊக்குவிப்பதற்காக 250 மில்லியன் ரூபா நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.