’’உதயநிதியை இன்றைக்குள் விடுவிக்கவும்’’: உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழக முதல்வரை அவதூறாகவும் ஆபாசமாகவும் பேசியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை தஞ்சாவூர் காவல்துறையினர் இன்று காலை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

இதற்கிடையில், அவர் கைது செய்யப்படக்கூடிய சூழல் நிலவுவதாகக் கூறி, உதயநிதி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர முன்கூட்டிய ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இம் மனு இன்று பிற்பகல் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் வழக்கறிஞர் விஜய் நாராயணும், உதயநிதி தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் என்.ஆர். இளங்கோ மற்றும் ஹசன் முகமது ஜின்னாவும் ஆஜராகினர்.

அப்போது வாதிட்ட அரசுத் தரப்பு வழக்கறிஞர், “உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்படவில்லை; இது கைதுக்கு முந்தைய விசாரணை மட்டுமே. காவல்துறையினர் விசாரணையை முடித்தவுடன் அவர் விடுவிக்கப்படுவார்” என்று தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி இளந்திரையன், உதயநிதி ஸ்டாலினை இன்றைக்குள் விடுவிக்க வேண்டும் என உத்தரவிட்டதோடு, காவல்துறையின் விசாரணைக்கு அவர் உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தார்.

Leave a Reply