கடும் நிலைப்பாடுகளால் அரிய சந்தர்ப்பத்தை பாழடித்துவிடாதீர்கள் – சம்பந்தன்

கடுமையான நிலைப்பாடுகளை எடுப்பதன் மூலம் தேசிய பிரச்சினையைத் தீர்ப்பதற்கு கிடைத்திருக்கும் அரிய சந்தர்ப்பத்தை பாழடித்துவிடக்கூடாது என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தேவையில்லாத கண்டிப்புக்கள் மற்றும் கடுமையான தோரணைகள் ஒருபோதும் உதவியளிக்காது. எந்தவொரு தீர்வும் பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவதுடன், அது தொடர்பான சர்வஜன வாக்கெடுப்பும் மேற்கொள்ளப்பட வேண்டும். அதாவது தேசிய பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வுக்கு பெரும்பான்மையான மக்களை எம்முடன் ஆதரவாக இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் குறித்துக் கருத்து வெளியிட்ட இரா.சம்பந்தன், கடும்போக்குத் தன்மையை கடைப்பிடிப்பதன் நாட்டின் முன்னிலையில் காணப்படும் அரிய சந்தர்ப்பத்தை மக்கள் கெடுத்துவிடக்கூடாது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றிபெற்ற வடமாகாண முதலமைச்சர், கட்சியின் கொள்கைகளுக்குக் கட்டுப்பட்டவராக இருக்கவேண்டும் என்றும் கூறினார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கை தேர்தல் விஞ்ஞாபனங்களில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டன. தேசிய, மாகாண மற்றும் உள்ளூராட்சி தேர்தல்களில் எமது கொள்கைகளை மக்கள் ஏற்றுக்கொண்டனர். இதன் அடிப்படையிலேயே விக்னேஸ்வரன் தெரிவுசெய்யப்பட்டார் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.

கடந்த பொதுத் தேர்தலில் தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட நபர்களே தற்பொழுது விக்னேஸ்வரன் தலைமையிலான புதிய அமைப்பில் அங்கம் வகிக்கின்றனர். அரசியல் தீர்வு தொடர்பான எந்தவொரு தரப்பினதும் கருத்துக்களை செவிமடுப்பதற்குத் தயாராக இருக்கின்றோம். எனினும் விக்னேஸ்வரன் மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் இணைந்திருப்பது துரதிஷ்டவசமானது.

இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. செயற்பாடுகளை நாம் அதானித்து வருகின்றோம். எனினும், மக்கள் விவேகமானவர்களாக இருப்பார்கள் என்றும் நம்புவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மேலும் தெரிவித்தார்.