கியூபாவுக்கு ஒபாமா வரலாற்று விஜயம்

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கியூபாவுக்கு வரலாற்று முக்கியம் வாய்ந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார். பல தசாப்த எதிரி நாடான கியூபாவின் கொம்மியுனிஸ தலைவருடனும் அவர் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார். 1959 கியூப புரட்சிக்குப் பின்னர் பதவியில் இருக்கும் அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் கியூபாவுக்கு விஜயம் செய்வது இது முதல் முறையாக அமைந்தது. இரு நாடுகளும் முன்னாள் பனிப்போர் எதிரி நாடுகளாகும்.

அமெரிக்க நேரப்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை கியூபாவை சென்றடைந்த ஒபாமா, தனது விஜயம் வரலாற்று முக்கியம் கொண்டது என்று மீளத்திறக்கப்பட்ட கியூப தலைநகர் ஹவானாவில் இருக்கும் அமெரிக்க தூதரகத்தில் வைத்து குறிப்பிட்டார். அவர் ஹவானாவில் போதுமான காலத்தை செலவிடவுள்ளார்.

இதன்போது ஒபாமா கியூப ஜனாதிபதி ராவுல் காஸ்ட்ரோவை சந்திக்க இருந்தபோதும், ஓய்வுபெற்ற கியூப புரட்சித் தலைவர் பிடெல் கஸ்ட்ரோவை சந்திக்க திட்டமிடவில்லை. இரு நாட்டு தலைவர்களும் வர்த்தகம் மற்றும் அரசியல் சீர்திருத்தங்கள் குறித்து கலந்துரையாடவுள்ளனர்.

முதல் பெண்மணி மிச்சல் மற்றும் அவரது இரு மகள்களான சாஷா மற்றும் மலியாவுடன் புன்னகைத்தவாறு ஹவானாவை அடைந்த அமெரிக்க ஜனாதிபதிக்கு செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

மழை தூறல் காரணமாக குடையுடன் தோன்றிய ஒபாமாவை கியூப வெளியுறவு அமைச்சர் பிரூனோ ரொட்ரிகோஸ் வரவேற்றார். கியூபாவை அடைந்து இரண்டு மணி நேரத்திற்கு பின்னர் ஒபாமாவை அங்கிருக்கும் அமெரிக்க தூதரக பணியாளர்கள் வரவேற்றனர். “இங்கு வருவது சிறப்பானது” என்று ஒபாமா குறிப்பிட்டார்.

“1928இல் ஜனாதிபதி (கல்வின்) கூலிஜ் போர் கப்பல் ஒன்றில் இங்கு வந்தார். அதற்கு மூன்று நாட்கள் எடுத்தது. ஆனால் எனக்கு வெறும் மூன்று மணி நேரங்களே தேவையானது. எப்போதும் இல்லாமல் முதல் முறையாக கியூபாவில் எமது விமானப்படை தரையிறங்கியது. இது எமது முதல் நிறுத்தமாக இருக்கும்” என்று ஒபாமா குறிப்பிட்டார்.

இந்த பயணம் எமது கடந்த காலத்தை விடவும் ஒரு ஒளிமயமான எதிர்காலத்திற்கு வழி செய்யும் என்று ஒபாமா நம்பிக்கை தெரிவித்தார். தொடர்ந்து ஒபாமா வரலாற்று பிரசித்தி பெற்ற பழைய ஹவானா நகரில் கால்நடையாக பயணம் ஒன்றையும் மேற்கொள்ளவிருந்தார். இதன்போது அவரை சாதாரண கியூப மக்களும் பார்க்க முடியுமான சூழல் இருந்தபோதும் அங்கு நிலவும் சீரற்ற காலநிலை இந்த நடைபயணத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் சூழல் இருந்தது.

கியூபா மற்றும் அமெரிக்காவுக்கு இடையில் சுமுக உறவு திரும்புவதில் ஒபாமாவின் விஜயம் உச்ச கட்டமாக பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு இரு நாடுகளும் பரஸ்பரம் தூதரகங்களை திறந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும் ஒபாமாவின் வருகைக்கு சில மணி நேரத்திற்கு முன்னரும் ஹவானாவில் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது வெள்ளைக் குழுவைச் சேர்ந்த பல டஜன் பெண் ஆர்ப்பாட்டக்காரர்களை பொலிஸார் அப்புறப்படுத்தினர். அரசியல் கைதிகளின் மனைவியரினாலேயே இந்த வெள்ளைக் குழு அமைப்பு நிறுவப்பட்டுள்ளது.

இதில் கடந்த 88 ஆண்டுகளில் அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் கியூபாவுக்கு விஜயம் செய்வது இதுவே முதல் முறையாக இருந்தது. அத்துடன் இது கியூப மற்றும் அமெரிக்க உறவில் பாரியதொரு திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது. ஒபாமா மற்றும் ராவுல் காஸ்ட்ரோ இரவு விருந்தில் பங்கேற்க இருந்ததோடு இருவரும் கூட்டு செய்தியாளர் சந்திப்பை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

இந்த விஜயத்தின்போது ஜனாதிபதி ஒபாமா அரசியல் எதிர்ப்பாளர்களை சந்திக்க இருப்பதாக வெள்ளை மாளிகை உறுதியாக குறிப்பிட்டுள்ளது. கியூப நிர்வாகம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்த சந்திப்பு நிகழும் என்று அது வலியுறுத்தி இருந்தது.

இதன்போது ஒபாமா வெள்ளைக் குழுவைச் சேர்ந்த பெண்களையும் சந்திக்க எதிர்பார்த்துள்ளார்.

பொருளாதார தடைகள்

எவ்வாறாயினும் இரு நாட்டு உறவுகளும் முழுமையாக சுமுகமடையாத சூழலிலேயே ஒபாமாவின் விஜயம் இடம்பெற்றுள்ளது. கியூபா மீது கடந்த 54 ஆண்டுகளாக நீடிக்கும் அமெரிக்காவின் பொருளாதாரத் தடை இன்னும் தளர்த்தப்படவில்லை. இந்த தடையை அமெரிக்க கொங்கிரஸ் அவையினால் மாத்திரமே அகற்ற முடியும். மறுபுறம் குவன்தனாமோ பேயில் அமெரிக்க கடற்படைத் தளம் தொடர்பான ஆக்கிரமிப்பு குறித்து கியூபா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.

எனினும் பல விடயங்களில் முன்னேற்றமான சூழல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கியூப புரட்சி மூலம் அமெரிக்க ஆதரவு அரசு கவிழ்க்கப்பட்டது தொடக்கம் முடங்கிய இரு நாட்டு உறவுகளை புதிப்பிப்பதற்கு ஒபாமா மற்றும் காஸ்ட்ரோவுக்கு இடையில் கடந்த 2014 டிசம்பரில் இணக்கம் ஏற்பட்டது.

அது தொடக்கம் இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தக உடன்படிக்கைகள் ஏற்பட்டதோடு விமான சேவையும் ஆரம்பிக்கப்பட்டது. சட்ட ஒழுங்கு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையே ஒத்துழைப்பும் ஏற்பட்டது.

கியூப புரட்சிக்கு பின்னர் கடந்த புதன்கிழமை அமெரிக்காவில் இருந்து கியூபாவுக்கு பயணித்த முதலாவது நேரடி தபால் விமானத்தில் ஒபாமா கடிதம் ஒன்றையும் கியூபாவுக்கு அனுப்பி இருந்தார்.

அதேபோன்று 1959 க்கு பின்னர் அமெரிக்காவின் ஸ்டார்வூட் ஹோட்டல் நிறுவனம் முதலாவது அமெரிக்க நிறுவனமாக கியூப நிர்வாகத்துடன் கடந்த ஞாயிறன்று ஒப்பந்தம் செய்து கொண்டது.

எவ்வாறாயினும் ஒபாமாவின் பயண அட்டவணையில் அவர் பிடல் காஸ்ட்ரோவை சந்திப்பதில்லை என்பது உறுதியாகியுள்ளது. ஆனால் பிடெல் காஸ்ட்ரோவை வெனிசுவேல ஜனாதிபதி நிகொலஸ் மடுரோ சந்திக்கும் புகைப்படம் ஒன்றை அந்நாட்டு பத்திரிகைகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரசுரித்திருந்தன.

ஒபாமாவை கியூபா வரவேற்பது குறித்து கொம்மியுனிஸ தரப்புகளை சுமுகப்படுத்தும் முயற்சியாகவே இந்த படம் வெளியிடப்பட்டிருப்பதாக அவதானிகள் கருதுகின்றனர்.