கோவிட்-19 | உலகம் முழுதும் 100 கோடி மக்கள் வீட்டுக்குள் முடக்கம்; கரோனா வைரஸ் பலி 11,000-த்தைக் கடந்தது

அமெரிக்கா மக்களை வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவில் இன்று மக்கள் சுயக் கட்டுப்பாட்டு ஊரடங்கு அமலாகியுள்ளது, மக்களை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம், ஆரோக்கியமாக இருங்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

உலகம் முழுதும் சுமார் 160-க்கும் மேற்பட்ட நாடுகளில் மக்கள் இயக்கத்தை முடக்கியுள்ளது கரோனா வைரஸ், பள்ளிகள், கல்லூரிகள், சமுதாயக் கூடங்கள், மதவழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டு 10 லட்சத்துக்கும் அதிகமானோர் வீட்டிலிருந்த படியே அலுவலகப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உலகம் முழுதும் பலி எண்ணிக்கை 11 ஆயிரத்தைக் கடக்க சீனாவை விடவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட இத்தாலியில் 4,000 த்திற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.

ஏற்கெனவே சில உடல் கோளாறுகள் உள்ள வயதானோருக்கு கரோனா பெரிய அச்சுறுத்தலாக மாறிவருகிறது எனினும் இளைஞர்களுக்கும் தொற்ற வாய்ப்பிருப்பதாக உலகச் சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

இத்தாலியில் வெள்ளிக்கிழமை மட்டும் ஒரேநாளில் 627 பேர் பலியாகியுள்ளனர். இதன் மூலம் பலி எண்ணிக்கை அங்கு 4032 ஆக அதிகரித்துள்ளது. உலக கரோனா வைரஸ் பலிகளில் 36% இத்தாலியில் ஏற்பட்டுள்ளது. உறுதி செய்யப்பட்ட கரோனா தொற்றுடையவர்கள் பலியாகும் விகிதம் இத்தாலியில் 8.6%.

பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் வீட்டை விட்டு வெளியே வந்தால் சில சமயங்களில் அபராதங்களும் விதிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவில் கலிபோர்னியாவில் 1000 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாக 19 பேர் பலியாகியுள்ளனர். 4 கோடி மக்களும் வீட்டிலேயே இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நியூயார்க் நகரில் 7000 தொற்றுக்கள், 39 பேர் பலி என்பதால் அங்கும் சுமார் 2 கோடி மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

நியூயார்க், லாஸ் ஏஞ்செலஸ், சிகாகோ லாக் டவுனில் உள்ளது.