அன்று நடிகராக இருந்த விஜய் தேர்தல் காலத்தில் அளித்த வெற்று வாக்குறுதிளை நம்பி வாக்களித்த விவசாயிகளுக்கும், பெண்களுக்கும் பட்டை நாமத்தை போட்டுள்ளார். விவசாய கடன்கள் முழுமையாக ரத்து செய்யப்படும் என்று அளித்த வாக்குறுதி அம்போவாக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு மாதம் 2500 ரூபாய் உதவித்தொகை அளிக்கப்படும் என திரு.விஜய் அறிவித்த வாக்குறுதி பொய்யாகி காற்றில் கரைந்து போனது.
கல்வியும், மருத்துவமும் கட்டணமின்றி கிடைக்கப்பெறுவது மக்களின் அடிப்படை உரிமை. ஆனால் இத்துறைகளின்பால் விஜய் அரசின் கவனம் செல்லவே இல்லை. பள்ளி கல்விக்கும் உயர் கல்விக்குமான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது.
திமுக ஆட்சி காலத்தில் செயல்படுத்தப்பட்ட பல்வேறு நலத்திட்டங்களுக்கு பெயரை மட்டும் மாற்றி தங்களது திட்டம் போல அறிவிக்கும் மோசடி வேலைதான் இந்த பட்ஜெட்டில் நடந்துள்ளது.
மேலும் தமிழகத்தில் புதிய தொழில் வளர்ச்சிக்கோ, விவசாய மேம்பாட்டிற்கோ, வேலையின்மையை போக்குவதற்கோ, கல்வித்துறை வளர்ச்சிக்கோ, மின்சாரத் துறை குளறுபடிகளை போக்குவதற்கோ எந்த ஒரு உருப்படியான திட்டமும் அறிவிக்கப்படவில்லை.
சென்னை நகரில் ஏற்கனவே கட்டத் தொடங்கப்பட்டு, பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ள மேம்பாலப் பணிகளை தொடர்ந்து நடத்தி முடிப்பதற்கான நிதி ஒதுக்கப்பட்டதாக தெரியவில்லை. மெட்ரோ ரயில் சேவைகளை மேலும் பல பகுதிகளுக்கு நீட்டிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது, ஆனால் அதற்கான காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. அதேவேளையில் ஏற்கனவே பணிகள் நடந்து கொண்டுள்ள மெட்ரோ ரயில் திட்டப் பணிகளில், பூந்தமல்லியில் இருந்து ஆலந்தூர் வரையிலான சேவையும், பூந்தமல்லியில் இருந்து வடபழனி தியாகராய நகர் பகுதிகளை இணைக்கும் மெட்ரோ ரயில் பயண சேவையும் எப்பொழுது தொடங்கும் என்பதற்கான அறிவிப்பும் இந்த பட்ஜெட்டில் இல்லை. இவை தமிழகத்தின் தலைநகர் சென்னை மக்களை மிகப்பெரிய ஏமாற்றத்துக்கு உள்ளாக்கி உள்ளது.
மொத்தத்தில் புதிய தமிழக அரசின் இந்த பட்ஜெட் நாங்கள் இந்த அறிக்கையின் ஆரம்பத்தில் கூறியது போல ஏமாற்றம் அளிக்கும் வெற்று பட்ஜெட் மட்டுமல்ல மொத்தத்தில் ஒட்டுமொத்தமாக தமிழக மக்களை ஏமாற்றும் பட்ஜெட் என்று எமது இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி(எம்.கே) கருதுகிறது.
S.பாஸ்கரன்,
தமிழ்நாடு மாநில செயலாளர்,
இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி -UCPI (M.K)