துறைமுக நகர் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க அரசாங்கம் அனுமதி

கொழும்பு துறைமுக நகர்வேலைத் திட்டத்தை மீள ஆரம்பிப்பதற்கு இலங்கை அரசாங்கம் அங்கீகாரம் அளித்திருப்பதை சீன தொடர்பாடல் கட்டுமான துணை நிறுவனம் நேற்று உறுதி செய்தது. இதேவேளை பரஸ்பர நன்மையளிக்க கூடிய தீர்வை நோக்கியதான இலங்கை அரசாங்கத்தின் நேர்மறைவான ஒருபடி முன்னோக்கிய கடப்பாடுகளையும் மேற்படி நிறுவனம் பாராட்டியுள்ளது.

கொழும்பில் துறைமுகநகர் வேலைத் திட்டங்கள், சீன தொடர்பாடல் கட்டுமான துணை நிறுவனத்தாலேயே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பணிகளை மீள ஆரம்பிப்பதற்கான அறிவிப்பு சுமார் ஒரு வருடகால இடை நிறுத்தத்திற்குப் பின்னரே மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்த இக்காலப் பகுதியில் குறித்த நிறுவனமானது இலங்கை அரசாங்கத்தின் பல்வேறு அதிகாரிகளையும் சந்தித்து கலந்துரையாடியதுடன் அவர்களின் கோரிக்கைகளுக்கும் இணங்கியது.

இந்த செயற்திட்டத்தை முன்னெடுப்பதனால் சுற்றாடலில் ஏற்படக்கூடிய தாக்கங்கள் மற்றும் அவற்றை மட்டுப்படுத்தக்கூடிய அளவீடுகள் என்பன குறித்து ஆராய்வதற்காக இலங்கை அரசாங்கத்தினால் மதிப்பீடு ஒன்றும் நடத்தப்பட்டது.

கொழும்பு துறைமுகநகர் செயற்திட்டத்தை மீள ஆரம்பிப்பதில் ஏற்பட்ட நீண்டகால இடை நிறுத்தமானது இரு தரப்பினருக்கும் பாரிய இழப்புக்களை ஏற்படுத்தியிருப்பதாகவும் மேற்படி நிறுவனம் தனது மனவருத்தத்தை தெரிவித்துள்ளது.

இது பெருமளவு பணம் மற்றும் வளங்கள் தேவைப்படும் ஒரு செயற்திட்டமாகும். பணிகளை மீள ஆரம்பிப்பதன் மூலம் எதிர்பார்க்கப்பட்ட காலவரையறைக்குள் இதனை பூர்த்தி செய்ய முடியுமென நம்புவதாகவும் நிறுவனம் கூறுகிறது.

இந்நாட்டின் நடைமுறையிலுள்ள சட்டங்கள் மற்றும் கட்டுப்பாடுகளை முழுமையாக கடைபிடிக்கும் அதேநேரம் இலங்கையின் பொருளாதாரம் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் செயற்பாடுகளில் பங்களிப்பு செய்ய தயாரெனவும் நிறுவனம் தெரிவிக்கிறது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்திலேயே கொழும்பு துறைமுகநகர் வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அதனையடுத்து நாட்டை பொறுப்பேற்ற நல்லாட்சி அரசாங்கம், சுற்றாடல் தாக்கங்களை காரணம் காட்டி இச்செயற்திட்டத்தை இடைநிறுத்தியது. இந்நிலையில் இத்திட்டத்தை மீள ஆரம்பிக்க அண்மையில் கூடிய அமைச்சரவை அங்கீகாரம் அளித்தது. இந்த அங்கீகாரத்தை அடுத்தே பணிகளை மீள ஆரம்பிக்குமாறு குறிப்பிட்டு துறைமுக அதிகார சபை மேற்படி நிறுவனத்துக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.