யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கும் அதனைச் சூழவுள்ள தீவுகளுக்கும், குறிப்பாக நெடுந்தீவுக்கும் இடையில் பெருமளவிலான பயணிகளைப் பாதுகாப்பாக அழைத்துச் செல்வதற்குப் போதுமான போக்குவரத்து வசதிகள் இல்லாத நிலையைப் போக்கும் நோக்கில் இத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
இதன்படி, ஒரே நேரத்தில் சுமார் 150 பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய பயணிகள் கப்பல், நெடுந்தீவு – யாழ்ப்பாணம் இடையிலான கடல் மார்க்கத்தில் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.
இக்கப்பல் ‘Sinor Foundation Limited’ நிறுவனத்தினால் தயாரிக்கப்படவுள்ளதுடன், சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்டுள்ள ‘நெடுந்தீவு அபிவிருத்திச் சங்கம்’ ஊடாக இயக்கப்படவுள்ளது.
இந்தக் கப்பல் சேவையின் மூலம் கிடைக்கும் வருமானம், அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட நெடுந்தீவில் வசிக்கும் குறைந்த வருமானம் பெறும் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டங்களுக்கு பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.