இந்த புதிய வழிகாட்டல்களின்படி, சிற்றுண்டிச்சாலைகள் சுத்தமாகவும், பாதுகாப்பாகவும், நோய்க்கிருமிகள் அற்ற சூழலிலும் பேணப்பட வேண்டும் என்பதுடன், அவற்றின் செயல்பாடுகள் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்பட வேண்டும். சிற்றுண்டிச்சாலைகளில் பணிபுரிபவர்கள் உயர்ந்த தனிநபர் சுகாதாரத்தைப் பேணுவதுடன், தங்கள் பொறுப்புகளை நன்கு உணர்ந்து செயற்பட வேண்டும். மாணவர்களின் விருப்பம், உணவின் போஷாக்கு மதிப்பு மற்றும் இலங்கையின் உள்ளூர் உணவு கலாச்சாரம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டே சிற்றுண்டிச்சாலை மெனுக்கள் வடிவமைக்கப்பட வேண்டும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தடைசெய்யப்பட்ட உணவுகளின் பட்டியல்:
பதப்படுத்தப்பட்ட இறைச்சி உணவுகள்: சொசேஜ் (Sausages), இறைச்சி உருண்டைகள் (Meatballs), பேக்கன் (Bacon), ஹாம் (Ham) மற்றும் இவற்றை உள்ளடக்கிய பர்கர்கள், ஹொட்-டொக்ஸ் (Hot dogs) மற்றும் பீட்சா (Pizza).
மா மற்றும் சர்க்கரை அதிகமுள்ள உணவுகள்: பேஸ்ட்ரிகள் (Pastries), டோனட்ஸ் (Doughnuts), எக்லேர்ஸ் (Éclairs), பிஸ்கட் மற்றும் கேக் வகைகள்.
துரித உணவுகள் மற்றும் சுவையூட்டிகள்: உடனடி நூடுல்ஸ் (Instant noodles), சூப் கியூப்ஸ் (Soup cubes), சுவையூட்டும் பொடிகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட ஊறுகாய் வகைகள்.
இனிப்புப் பண்டங்கள்: சூயிங்கம், டொபி, லொலிபொப்ஸ், புடிங், ஐஸ்கிரீம் மற்றும் பிற பதப்படுத்தப்பட்ட இனிப்பு வகைகள்.
உப்பு அதிகமுள்ள தின்பண்டங்கள்: பூந்தி, மஸ்கட், தொதல், முறுக்கு மற்றும் ‘டிப்பி டிப்’ (Tipi Tip) போன்ற உருளை வடிவ தின்பண்டங்கள்.
பானங்கள்: காபனேற்றப்பட்ட மென்பானங்கள், சர்க்கரை அதிகமுள்ள பானங்கள், சுவையூட்டப்பட்ட பால் மற்றும் தயிர் பானங்கள், சக்தி பானங்கள் (Energy drinks) மற்றும் உடனடி தேநீர் மற்றும் காபி தயாரிப்புகள்.
மாணவர்களிடையே ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்களை ஊக்குவிக்கும் நோக்கில் இந்தத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.