‘பிரதமர் பங்கேற்கும் வைபவத்தில் பங்கேற்க மாட்டேன்’

காத்தான்குடியில் நாளை நடைபெறவுள்ள நகரசபை கட்டடத் திறப்பு விழாவில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதம அததியாய் கலந்துகொள்கிறார். இவ்விழாவில் நான் கலந்துகொள்வதில்லையெனத் தீர்மானித்துள்ளதாக, மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். காத்தான்குடியில் அமைந்துள்ள மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரியில் நேற்றிரவு (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்தபோதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர், காத்தான்குடி நகரசபைக்கான கட்டடம் எனது நிதியொதுக்கீட்டில் கட்டப்பட்டது. இதற்கும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட்டுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. ஆனால் குறித்த கட்டடத்தை, தான் கட்டியதாக முதலமைச்சர், பிரதமரை அழைத்து வந்து திறப்பு விழாச் செய்ய ஏற்பாடு செய்துள்ளார். இதனை வன்மையாகக் கண்டிப்பதுடன், குறித்த நிகழ்வில் கலந்துகொள்வதில்லையெனவும் தீர்மானித்துள்ளேன்.

இந்தக் கட்டடம், கிழக்கு மாகாண முதலமைச்சரின் அயராத முயற்சியால் நிர்மானிக்கப்பட்டதாக, விளம்பரப்படுத்தப்பட்டு வருகின்றது.

நான் பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சராக இருந்த போது, எனது அமைச்சிலே இருந்து சுமார் 42 மில்லியன் ரூபாய்களை நிதியொதுக்கீடு செய்து, இதைக் கட்டியிருக்கின்றோம்.

இந்தக் கட்டடம், நகர சபைக்குச் சொந்தமான கட்டடம் என்றாலும் நகர சபை அலுவலகத்துக்கு, இக்கட்டடத்தை நாங்கள் கட்டவில்லை. காத்தான்குடிக்கான வாசிகசாலைக்கான கட்டடமாகவே அதைக் கட்டியுள்ளோம்.

இந்தக் கட்டடத்தின் மேல் பகுதி முடிக்கப்பட வேண்டும் என்பதற்காக நிதியில்லாத போதிலும் எங்களுடைய சொந்த நிதியிலிருந்து 30 இலட்சம் ரூபாயைச் செலவு செய்து, மேல் தளத்தை முழுமையாக முடித்து, இந்தக் கட்டடத்தை நிறைவு செய்துள்ளோம்.

கட்டடத்தைத் திறப்பதற்கு, பிரதமரை அன்புடன் வரவேற்கின்றோம். அவரைக் கௌரவப்படுத்துகின்றோம். ஆனால், இந்தக்கட்டடத்துக்கு நிதியொதுக்கீடு செய்து, பல கஸ்டங்களுக்கு மத்தியில் இந்தக் கட்டடத்தைக் கட்டியவர்கள் நாங்கள்.

எனினும், இதன் திறப்பு விழா அழைப்பிதலில் உரிய அந்தஸ்த்து வழங்கப்படவில்லை. கட்டட நினைவுக்கல்லிலும் எனது பெயர் போடப்படவில்லையென நான் அறிகின்றேன்.

இவைகளை கருத்திலே கொண்டு, இந்த நிகழ்வில் கலந்துகொள்ளாமல் தவிர்ப்பது என, எனது மத்திய குழு தீர்மானித்து.

பிரதமர் வருகின்ற போது, நான் அதில் கலந்துகொள்ளாமல் விட்டால் மக்கள் மத்தியில் தவறான கருத்துகள் நிலவும். அதனாலேயே, இதனை நான் மக்களுக்குச் சொல்ல வேண்டியுள்ளது.

இவ்வாறு பல கட்டடங்கள் எனது முயற்சியால் எனது நிதியொதுக்கீட்டால் கட்டப்பட்ட பல கட்டடங்களை, கிழக்கு மாகாண முதலமைச்சரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சிப்லி பாறூக்கும் திறந்துவருகின்றார்கள்.

இந்த கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டு, தேர்தல் நடைபெற்று புதிய பிரதிநிதிகள் வந்ததன் பின்னர், அதேபோன்று காத்தான்குடி நகர சபைக்கான புதிய ஆட்சி வந்ததன் பின்னர் இந்தக்கட்டடத்துக்குப் போடப்பட்டுள்ள நினைவுக்கல்லை கழற்றி வீசி விட்டு, புதிய கல்லை வைப்போம் என்பதை பகிரங்கமாகச் சொல்லி வைக்க விரும்புகின்றேன்” என்றார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கே.எல்.எம்.பரீட், காத்தான்குடி நகர சபை முன்னாள் தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர், நகர சபை முன்னாள் உறுப்பினர் ரவூப் ஏ மஜீத் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.