நக்ள்ஸ் தோட்டத்தைச் சேர்ந்த, பாடசாலையொன்றில் தரம் 8 இல் கல்வி பயிலும் 13 வயதுடைய கிருஷ்ண மூர்த்தி டிரோன் மற்றும் தரம் 9 இல் பயிலும் 14 வயதுடைய B. சஞ்சன் ஆகிய இரு மாணவர்களே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
நேற்று புதன்கிழமை (22) மாலை 5 நண்பர்கள் இணைந்து பன்வில, நக்ள்ஸ் பம்பரல்ல சந்தலு ஹோட்டலுக்கு அருகிலுள்ள நீர்வீழ்ச்சிப் பகுதிக்குக் குளிக்கச் சென்றுள்ளனர்.
அப்போது, நீர்வீழ்ச்சியின் கற்பாறையிலிருந்து புகைப்படம் (Photo) எடுக்க முயன்றபோதே, எதிர்பாராதவிதமாக இரு மாணவர்களும் தவறி கீழே வீழ்ந்துள்ளனர். இதில் இருவரின் தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
காயமடைந்த சிறுவர்களை மீட்டு உடனடியாக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.
14 வயதான B. சஞ்சன் எனும் சிறுவன் மடுல்கலை மாவட்ட வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்படும் வழியிலேயே உயிரிழந்தார். இவரது சடலம் தற்போது மடுல்கலை மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
13 வயதான கிருஷ்ண மூர்த்தி டிரோன் எனும் சிறுவன் கட்டுகஸ்தொடை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போது வழியிலேயே உயிரிழந்துள்ளார். இவரது சடலம் கட்டுகஸ்தொடை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து பன்விலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி R.M.A.B. இரட்நாயக தலைமையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்