யுத்த பாதிப்புக்குள்ளானவர் தேவைகள் முதன்மைப்படுத்தப்பட வேண்டும்!

யுத்தத்தின் பாதிப்புகளை வடக்கில் அதிகம் எதிர்கொண்டவர்கள் என்ற அடிப்படையில், முல்லைத்தீவு மாவட்ட மக்களின் தேவைகள் முதன்மைப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டுமென வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஜப்பானிய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் 24 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட முல்லைத்தீவு உடையார்கட்டு தமிழ் கலவன் பாடசாலையை நேற்று (புதன்கிழமை) மாலை திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே வடக்கு முதல்வர் மேற்குறித்தவாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் ‘கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலான கொடிய யுத்தத்தினால் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதியான இந்த முல்லைத்தீவு மாவட்டம், பல தேவைகளைக் கொண்ட ஒரு பிரதேசமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இங்குள்ள மக்கள், பொதுவாக மாணவ மாணவியர், உடல் உள ரீதியாகப் பல பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளதாக அறியவருகின்றது. ஆகவே இவர்களின் தேவைகள் முதன்மை அடிப்படையில் நிறைவேற்றப்பட வேண்டியவை.

இவர்களின் தேவைகளை அறிந்து உதவக்கூடிய வெளிநாட்டு, உள்நாட்டு நிறுவனங்களுக்கு இதுபோன்ற உதவிகளை இப்பகுதி மாணவர்களுக்கு எமது மேற்பார்வையின் கீழ் நல்கி உதவும்படி கோருகிறேன். சில தருணங்களில் வடமாகாணத்தின் மக்கள் பிரதிநிதிகளுக்குத் தெரியாமலே சில செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. வெறுமனே எமது அலுவலர்களுக்குத் தெரியப்படுத்திவிட்டு செயற்திட்டங்களை முன்னெடுத்துச் செல்வது அவ்வளவு ஆரோக்கியமானதன்று.

அலுவலர்கள் தொழில்நுட்ப ரீதியில் பிரச்சனைகளை அணுகக்கூடியவர்கள். ஆனால் மக்கள் நலம் சார்ந்து நடவடிக்கைகளைக் கண்காணிப்பவர்கள் மக்கள் பிரதிநிதிகளே என்பதை நாம் மனதில் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும். என்னிடம் கல்வி கற்றவர்கள் ஒரு கால கட்டத்தில் வடகிழக்கு மாகாணங்களில் எல்லாமட்ட நீதிபதிகளாகவும் கடமையாற்றியுள்ளார்கள். இன்றைய பிரதம நீதியரசர் என்னுடைய மாணவர் என்று கூறிக் கொள்வதில் பெருமை அடைகின்றேன்.

ஆகவே நானும் கற்பித்தல்த் துறைக்கு எனது பங்களிப்புக்களை வழங்கியிருக்கின்றேன். ஆசிரிய ஆசிரியைகள் எப்போதும் மாணவ மாணவியரின் முன்னேற்றத்திலேயே குறியாக இருப்பவர்கள். ஒவ்வொரு மாணவ மாணவியும் தமக்கு ஒப்பான அல்லது தமக்கு மேம்பட்ட நிலையை அடைகின்றபோது உள்ளம் பூரிப்படைகின்ற முதலாவது மனிதராக விளங்குபவர், அம்மாணவ மாணவியரின் ஆசிரிய ஆசிரியைகளாத் திகழ்ந்தவர்களே.

ஆனால் மாணவர்களோ இந்த ஆசிரியர்களின் சேவையை மனதில் ஏற்றுக்கொண்டாலும் உதட்டளவில் பட்டம் சூட்டுவது, இகழ்ந்துரைப்பது போன்ற வினோத செயல்களில் ஈடுபடுவார்கள். ஆசிரியர்களோ இதனைக் கண்டுகொள்வதே இல்லை. மாணவர்கள் உள் அன்புடன் இருக்கின்றார்கள் என்பது ஆசிரியர்களுக்குத் தெரியும். ஆனால் அவர்களின் வினோதத்திற்காக இப்படியான குறும்புகளைப் புரிகின்றார்கள் என்று கூறிப் பொதுவாக அவர்களை விட்டுவிடுவார்கள். இந்த வினோதச் செயலுக்கு நானும் தப்பவில்லை.

என்னிடம் படித்த மாணவர்களே நெற்றிக்கண்ணைத் திறந்தாலும் முதலமைச்சர் செய்த குற்றம் குற்றமே என்று குற்றமேதுஞ் செய்யாத என்னைச் சாடுகின்றார்கள். அதனால் நான் கோபப்படுவதில்லை. நான் முன்பு குறிப்பிட்டது போன்று இது உதட்டளவில் எழுந்த ஒரு கருத்தே ஒளிய, அவர்கள் உள்ளத்தில் எழுந்ததொன்றல்ல என்று தெரியும். இன்று திறந்துவைக்கப்பட்ட இக்கட்டடத்தின் உச்சப் பயன்பாட்டை, இங்கு கல்வி கற்கும் மாணவ மாணவியர்கள் பெற்றுக்கொள்ள வேண்டுமென நான் விரும்புகின்றேன்.

எதிர்வரும் காலங்களில் ஐந்தாம் வகுப்புப் புலமைப் பரிசில் பரீட்சைகளில் முல்லைத்தீவு உடையார்கட்டு ஆரம்பப் பாடசாலை மாணவன் அல்லது மாணவி அபாரமான புள்ளிகளைப் பெற்று, வட மாகாணத்தில் அல்லது அகில இலங்கை ரீதியில் முதலாவது மாணவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி பத்திரிகையில் வரவேண்டும். அதனைக் கண்டு எமது உள்ளம் பூரிப்படைய வேண்டும். அப்போதுதான் இந்த நல்ல கைங்கரியங்களின் உச்சப் பலன் எமக்குக் கிடைத்ததாகக் கருதலாம்’ என்றார்.