யேமனில் சிவிலியன்களைத் தாக்கியது சவூதி

சவூதி தலைமையிலான கூட்டணி, யேமனிலுள்ள பொதுமக்கள் மீது இலக்கு வைத்ததாகத் தெரிவித்ததாகத் தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை, அக்கூட்டணியின் சில தாக்குதல்கள், மனிதத்துக்கு எதிரான குற்றமாக அமையக்கூடுமெனத் தெரிவித்துள்ளது. பாதுகாப்புச் சபையின் வருடாந்த அறிக்கையிலேயே, இத்தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. சவூதி தொடர்பான அறிக்கையில், கூட்டணியின் 119 தாக்குதல்கள் ஆவணப்படுத்தப்பட்டு, அவை, சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தின் மீறல் தொடர்பிலானவை எனக் குறிப்பிடத்தப்பட்டுள்ளது. பல தாக்குதல்கள், பொதுமக்கள் இலக்குகள் மீது மேற்கொள்ளப்பட்ட பல் விமானத்தாக்குதல்களாக அமைந்தன எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சில சந்தர்ப்பங்களில், பொதுமக்கள் மீதான தாக்குதல், பரந்தளவிலும் கட்டமைப்புரீதியிலும் இடம்பெற்றதாகத் தெரிவித்துள்ள அவ்வறிக்கை, அதன் காரணமாக, அத்தாக்குதல்கள், மனிதத்துக்கு எதிரான குற்றங்களாக அமையுமெனத் தெரிவித்துள்ளது. சர்வதேச மனிதாபிமானச் சட்டங்கள் மீறப்பட்டமை தொடர்பாக, விசாரணைகளை மேற்கொள்ளுமாறு, குறித்த அறிக்கையைத் தயாரித்த நிபுணர்கள் குழு, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையைக் கேட்டுக் கொண்டுள்ளது.

சவூதி தலைமையிலான கூட்டணி, போர்க் குற்றங்களில் ஈடுபடுவதாகவும், அதன் காரணமாக, சவூதிக்கான ஆயுத விற்பனையை நிறுத்துமாறும், ஐக்கிய அமெரிக்காவுக்கும் ஐக்கிய இராச்சியத்துக்கும், சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் கோரிக்கை விடுத்துவரும் நிலையிலேயே, இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த அறிக்கையில், ஹூதி போராளிகளும் அவர்களது தோழமைக் குழுக்களும், பொதுமக்கள் மீது தாக்குதல்களை நடத்தியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.