22Aக்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை: சட்ட மாஅதிபர்

பிரதம நீதியரசர்  பிரீதி பத்ம சுரசனை மற்றும் நீதியரசர்களான அலால வெங்காப்புலி, அர்ஜுன ஒபேசேகர, சம்பத் அபயகோன் மற்றும் கிகான் குலதுங்க ஆகியோர் அடங்கிய ஐந்தங்க நீதியரசர்கள் குழாம் முன்னிலையில், உத்தேசிக்கப்பட்டுள்ள திருத்தச் சட்டத்தின் அரசியலமைப்புச் செல்லுபடித்தன்மையைச் சவாலுக்கு உட்படுத்தித் தாக்கல் செய்யப்பட்டுள்ள 67 சிறப்புக் தீர்மான மனுக்கள் இரண்டாவது நாளாக, புதன்கிழமை (02) அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, சட்ட மாஅதிபர் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன இந்தச் சமர்ப்பணங்களை முன்வைத்தார்.

உத்தேசிக்கப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தமானது மக்களின் இறையாண்மையைப் பாதிக்கும் வகையில் அரசியலமைப்பின் 3 மற்றும் 4 ஆம் உறுப்புரைகளை எவ்வாறு மீறுகிறது என்பதை மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நிரூபிக்கத் தவறிவிட்டதாகச் சொலிசிட்டர் ஜெனரல் சமர்ப்பணத்தில் தெரிவித்தார்

நாட்டின் நீதித்துறையின் ஒட்டுமொத்தத் திறனை மேம்படுத்தும் நோக்கிலேயே நீதிபதிகளின் எண்ணிக்கையையும் அவர்களின் ஓய்வூதிய வயதையும் அதிகரிக்குமாறு உத்தேசிக்கப்பட்டுள்ளதாக அவர் நீதிமன்றத்தில் மேலும் தெரிவித்தார்.

உத்தேசிக்கப்பட்டுள்ள திருத்தத்தை அறிமுகப்படுத்துவதற்கு முன்னர் போதிய கலந்தாலோசனைகள் மேற்கொள்ளப்படவில்லை என்ற வாதங்களுக்குப் பதிலளித்த தயாரத்ன, அத்தகைய கலந்தாலோசனைக்  சட்டத்தினால் கோரப்படவில்லை என்று வாதிட்டார்.

“கலந்தாலோசனை என்பது நல்லதாகவோ கெட்டதாகவோ இருக்கலாம்; ஆனால், அத்தகைய நடைமுறை பின்பற்றப்பட்டதா என்பதைத் தீர்மானிப்பது இந்த நீதிமன்றத்திற்கு இந்தச் கட்டத்தில்   (அளிக்கப்பட்ட) கடமை அல்ல” எனச் சொலிசிட்டர் ஜெனரல் எடுத்துரைத்தார்.

உத்தேசிக்கப்பட்டுள்ள திருத்தம் நிறைவேற்றப்பட்டால் என்ன நடக்கும் அல்லது என்ன நடக்காது என்பது தொடர்பில் பல்வேறு தரப்பினரால் செய்யப்படும் எதிர்காலக் கணிப்புகளை உயர் நீதிமன்றம் கவனத்தில் கொள்ளக்கூடாது என்றும் அவர் மேலும் வாதிட்டார்.

இடைக்கால மனுதாரரும் பாராளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் நிபுண ஆராச்சியின் சார்பாக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி நிமல் ஹட்ச்   உத்தேசிக்கப்பட்டுள்ள 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் கீழ் திருத்தப்படவுள்ள ஏற்பாடுகள் பலமான சரத்துகள் அல்லவென்றும், எனவே அவற்றுக்குச் சர்வஜன வாக்கெடுப்பின் ஒப்புதல் தேவையில்லை என்றும் உயர் நீதிமன்றத்தில் தனது சமர்ப்பணத்தை சமர்ப்பித்திருந்தார்.

எனவே, உத்தேசிக்கப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தங்களை மக்கள் மத்தியில் சர்வஜன வாக்கெடுப்புக்கு விடாமல், பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என்று அவர் வாதிட்டார்.

பதிமூன்றாவது திருத்தச் சட்டம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பைக் குறிப்பிட்ட ஹட்ச், அரசியலமைப்பின் 4 ஆம் உறுப்புரை ஒரு பலமான சரத்து அல்ல என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.

உத்தேசிக்கப்பட்டுள்ள திருத்தம் நீதித்துறையின் சுதந்திரத்தைக் குலைக்கும் என இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கம் (BASL) முன்வைத்த வாதத்தை நிராகரித்த ஹட்ச், நீதிபதிகளின் ஓய்வூதிய வயதை அதிகரிப்பது அவர்களின் நேர்மையையோ அல்லது நீதித்துறைச் சுதந்திரத்தையோ பாதிக்காது என்று வாதிட்டார்.

இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கமும் ஏனைய மனுதாரர்களும் முன்வைத்த வாதங்கள் திடமான ஆதாரங்களை விட கருதுகோள்கள், அனுமானங்கள் மற்றும் கற்பனையான வாதங்களை அடிப்படையாகக் கொண்டவை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

உத்தேசிக்கப்பட்டுள்ள திருத்தம் நீதித்துறையின் சுதந்திரத்தை எவ்வாறு சாதகமற்ற முறையில் பாதிக்கும் என்பதை நிறுவுவதற்கான எந்தவொரு முறையான அடிப்படையையும் இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கம் சமர்ப்பிக்கத் தவறிவிட்டதாக அவர் கூறினார்.

நீதிபதிகளின் ஓய்வூதிய வயதை அதிகரிப்பது மற்றும் நீதிபதிகளின் எண்ணிக்கையை விரிவுபடுத்துவது உள்ளிட்ட பல நீதித்துறைச் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துவதே உத்தேசிக்கப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தத்தின் பிரதான நோக்கம் என்றார் அவர்.

“நீதிபதிகளின் ஆளணியை அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள அதேவேளை, நீதிப்பேராணைச் சட்டத்தில் (Judicature Act) மேற்கொள்ளப்படும் திருத்தங்கள் ஊடாக உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படவுள்ளது” என ஹட்ச் சமர்ப்பித்தார்.

மற்றொரு இடைக்கால மனுதாரரான சரத் மனமேந்திரா சார்பாக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி மோகன் வீரக்கோன், 107(5) ஆம் உறுப்புரைக்கு உத்தேசிக்கப்பட்டுள்ள திருத்தமானது அரசியலமைப்பின் பலமான சரத்து ஒன்றைக் குறித்ததல்ல என்றும், எனவே அதற்குச் சர்வஜன வாக்கெடுப்பின் ஒப்புதல் தேவையில்லை என்றும் சமர்ப்பித்தார்.

ஐக்கிய இராச்சியத்திலும் எளிய பெரும்பான்மை மூலமாகவே நீதிபதிகளின் ஓய்வூதிய வயது அதிகரிக்கப்பட்டதை அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

மற்றொரு இடைக்கால மனுதாரர் சார்பாக ஆஜரான சட்டத்தரணி சாமர நநாயக்காரவசம், பிரதம நீதியரசரின் ஓய்வூதிய வயது தொடர்பான புதிய விதிவிலக்கானது அரசியலிருப்பில் காணப்பட்ட தெளிவின்மையை நீக்குவதை நோக்கமாகக் கொண்டது என்றார்.

உத்தேசிக்கப்பட்டுள்ள திருத்தமானது பிரதம நீதியரசரின்  ஓய்வூதிய வயதை இப்போது வெளிப்படையாகக் குறிப்பிட்டுள்ளதாகவும், இதன் மூலம் அந்தத் தெளிவின்மை நீக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

உத்தேசிக்கப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தமானது அரசாங்கக் கொள்கை விவகாரமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதனை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என்றும் நாயக்காரவசம் மேலும் வாதிட்டார்.

உத்தேசிக்கப்பட்டுள்ள திருத்தம் அரசியலமைப்பின் 3 ஆம் உறுப்புரையைப் பாதிக்காது என்றும், அத்த திருத்தத்தைச் சர்வஜன வாக்கெடுப்புக்கு உட்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் வாதிட்டார்.

உத்தேசிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டத்தின் அரசியலமைப்புச் செல்லுபடித்தன்மையைச் சவாலுக்கு உட்படுத்தி 67 சிறப்புக் தீர்மான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவசியமான பாராளுமன்றப் பெரும்பான்மைக்கு மேலதிகமாக, குறித்த மசோதாவுக்கு மக்கள் சர்வஜன வாக்கெடுப்பு மூலம் ஒப்புதல் அளிக்க வேண்டுமா என்பதைத் தீர்மானிப்பதில் உயர் நீதிமன்றம் இந்த மனுக்களை விசாரித்து வருகிறது.

இதற்கிடையில், 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட மசோதாவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் முன்வைக்கப்பட்ட வாதங்களை உயர் நீதிமன்றம் புதன்கிழமை (02) உடன் நிறைவுக்குக் கொண்டுவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, உத்தேசிக்கப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தச் சட்ட மசோதா தொடர்பான உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் ஜனாதிபதிக்கும் சபாநாயகருக்கும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.

Leave a Reply