34வது நினைவுதினம்……

தோழர் குமார் என எம்மால் அழைக்கப்பட்ட யாழப்பாணம் குருநகரை சேர்ந்த போல்டன் உதயகுமார் எம்மை விட்டுப்பிரிந்து 34 வருடங்கள் கடந்திருக்கிறது. இன்று அவர் தமிழ் மக்களின் விடிவிற்கான போராட்டத்தில் தன் உயிரை அர்ப்பணித்த தினமாகும்.
ஈபிஆர்எல்எவ் இன் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவரான தோழர் குமார் ஈபிஆர்எல்எவ் இன் இராணுவப்பிரிவான மக்கள் விடுதலைப் படையில் முக்கியத்துவம் மிக்க ஒருவராய் காத்திரமான பங்களிப்பை வழங்கியதுடன் ஈபிஆர்எல்எவ் இன் பிரச்சாரம் மற்றும் அரசியல் வேலைத்திட்டங்களிலும் மக்கள் நலன் சார்ந்த இதர பணிகளிலும் அதிகம் பங்கெடுத்துக்கொண்ட ஒருவராக விளங்கினார்.சிங்கள மொழியை சரளமாக பேசவும் எழுதவும் கூடியவராக விளங்கினார்.
சமூக அடிப்படையில், வர்க்க ரீதியில், இன ரீதியில் பாதிக்கப்பட்ட மக்களின் துயரங்களை போக்குவதற்காகவும், இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களின் புனர்வாழ்வுக்காகவும் அர்ப்பண உணர்வோடு உழைத்தவர். உள உரமும், வேகமாகச் செயற்படும் திறனும் கொண்ட தோழர் குமார் ஈபிஆர்எல்எவ் ஐ பலம் மிக்கதொரு ஸ்தாபனமாகக் கட்டியமைத்ததிலும், அதன் வளர்ச்சிக்கும் அளப்பரிய பங்காற்றியவர்.
1985 பங்குனி 18ம் திகதி யாழ் பிரதான வீதிக்கு சமீபமாக குருநகர் பிரதேசத்தில் இராணுவத்தினர் மறைந்திருந்து நடாத்திய தாக்குதலில் தோழர் குமார் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் அவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த அவரது மரியாதைக்குரிய அணித்தலைவரும், அன்புக்குரிய தோழனுமான தோழர் றொபேட் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார்.
தோழர் குமார் தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தில் குறுகிய காலமே பங்கெடுத்துக்கொண்ட போதும் நிறைவாகவும், நேர்த்தியாகவும், உறுதியோடும், கட்டுக்கோப்புடனும் பணிபுரிந்தார். ஈபிஆர்எல்எவ் இன் அத்தனை அரசியல் இராணுவ நடவடிக்கைகளிலும் பங்கெடுத்துக்கொண்டார்.
அவரது பங்களிப்புக்களுக்காக தோழர்களாலும், நண்பர்களாலும், அவரை அறிந்த அனைவராலும் அவர் என்றென்றும் நினைவு கூரப்படுவார். எம் மனதில் சிம்மாசனமிட்டிருக்கும் அவருக்கு எம் புரட்சிகர அஞ்சலிகள்.