இயேசுவின் சிலுவை மரணம்: ஏன்….? எதற்காக?

(Terrence Mohan)
இயேசுவின் மரணமும் உயிர்த்தெழுதலும் தான் எமது கிறிஸ்தவ விசுவாசத்தின் அடிப்படையாகும். மரணமில்லாமல் உயிர்த்தெழுதல் சாத்தியமில்லை. இயேசுவின் மரணம் குறித்து புதிய ஏற்பாட்டிலுள்ள நான்கு சுவிசேஷங்களிலும் விபரமாகக் கூறப்பட்டுள்ளது. இயேசுவின் பிறப்பைப் பற்றி இரண்டு சுவிசேஷங்களில் (மத்தேயூ, லூக்கா) மாத்திரமே குறிப்பிடப்பட்டுள்ளது என்பது கவனத்துக்குரிய விடயமாகும். நான்கு சுவிசேஷ ஆசிரியர்களும் பின்வருவனவற்றில் உடன்படுகிறார்கள்.

இயேசு யூத அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு தெய்வ நிந்தனை(Blasphemy) என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு யூத நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டார். அங்கு அவர் குற்றவாளியாகக் காணப்பட்டு உரோம தேசாதிபதிபதியாகிய பொந்தியு பிலாத்துவிடம் கொண்டுசெல்லப்பட்டார். ஆரம்பத்தில் பிலாத்து இயேசுவிடம் ஒரு குற்றத்தையும் காணவில்லை. ஆனாலும் பிரதான ஆசாரியரும் மூப்பர்களும் கொடுத்த அழுத்தங்கள் காரணமாக பிலாத்து மரணதண்டனையை இயேசுவிற்கு விதித்தான். மரணதண்டனைக் கைதியாகத் தண்டனை நிறைவேற்றப்படும் இடத்திற்கு இழுத்துச்செல்லப்பட்டு அங்கு அடித்து துன்புறுத்தப்பட்டு தேசத்துரோக குற்றத்திற்காக மரணதண்டனை விதிக்கப்பட்ட இரண்டு கைதிகளுக்கு நடுவில் சிலுவையில் அறையப்பட்டார்.

இயேசுலின் சிலுவை மரணம் சம்பவித்து ஏறக்குறைய 35 வருடங்களின் பின்னர்தான் முதலாவது சுவிசேஷம்(மாற்கு) எழுத்துருவம் பெற்றது. இவ்விடைப்பட்ட காலத்தில் இடம்பெற்ற சில வரலாற்று சம்பவங்களும் இவ்வெழுத்துக்களில் தாக்கங்களை ஏற்படுத்தின. இறையியல் வியாக்கியானங்களை (theological interpretation) வரலாற்று நிகழ்வுகளிலிருந்து (historical happenings) வேறுபடுத்துவது இலகுவான காரியமல்ல. ஆதித் திருச்சபையினர் இயேசுவின் மரணத்தை இந்த 35 வருடகால இடைப்பட்ட காலத்தில் நடைபெற்ற வரலாற்று சம்பவங்களினூடாக பார்க்கும் பொழுது இயேசுவின் மரணம் ஆண்டவரால் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட ஓன்று. ஆரம்பத்திலிருந்தே இது ஆண்டவரின் திட்டமும் இதுவே. கடவுளின் ஒரே பேறான குமாரன் உலகத்தின் பாவங்களுக்காகப் பலியாக்கப்பட்டார். எனவே சிலுவை மரண விபரங்களில் பழைய ஏற்பாட்டின் எதிரொலியும் தொனியும் பின்னிப்பிணைந்துள்ளது.

கிறிஸ்தவர்களாகிய நாம் இயேசுவின் மரணத்தை பின்நோக்கி பார்க்கும்பொழுது யூதர்கள் இயேசுவை தேவகுமாரன் என ஏற்றுக்கொள்ளாததே அதற்கான மிக முக்கிய காரணமென எண்ணுகிறோம். அந்நாட்களில் உரோம அதிகாரிகளால் மாத்திரமே சிலுவை மரணத்திற்குக் கட்டளையிட அதிகாரம் இருந்தது. ஆனால் புதிய ஏற்பாட்டு விபரங்கள் இயேசுவின் மரணத்தில் யூதர்களின் பொறுப்பை வலியுறுத்துகின்ற அதேவேளை உரோமர்களின் பங்களிப்பை அடக்கி வாசிக்கின்றன. இப்போக்கு இறுதியில் இயேசுவின் மரணத்திற்கான முழுப்பொறுப்பையும் யூதர்களின் மேல் சுமத்திவிட்டு உரோமர்களை அப்பழியிலிருந்து விலக்கிவிடுகிறது.

இந்த லெந்து நாட்களில் இயேசுவின் மரணம் குறித்து யூதர்களின் மேல் வெறுப்பின்றி நடுநிலையாக சிந்திக்கும் பொழுது அவருடனான எமது உறவு மேலும் வலுவடைந்து யூதர்களின் மேல் எமக்குள்ள வெறுப்பைக் குறைவடையச் செய்யும். இயேசு இவ்வுலகில் வாழ்ந்த நாட்களில் அவர் வாழ்ந்த தேசமாகிய யூதேயாவில் மரணதண்டனைக்குக் கட்டளை இடுகின்ற அதிகாரம் உரோம தேசாதிபதியாகிய பிலாத்துவிற்கு மாத்திரமே இருந்தது. பல வடிவங்களில் மரணதண்டனைகள் நிறைவேற்றப்பட்டது. சிரச்சேதம் ஒருவகை.

ஆனால் சிலுவை மரணம் இரண்டு பிரிவினர்களுக்கு மாத்திரமே நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து வேலை செய்ய மறுத்த அடிமைகள் மற்றும் உரோமர்களின் அதிகாரத்தை ஏற்க மறுத்தவர்கள் இப்பிரிவுகளில் அடங்குவர். பொதுமக்களை எச்சரிக்கும் முகமாக மரணதண்டனை பகிரங்கமாகவே நிறைவேற்றப்ப்டும். மற்றும் சிலுவையில் அறையப்பட்டவர்கள் உடனடியாக மரணிப்பதில்லை. அணுவணுவாக சித்திரவதைக்குட்பட்டு இரண்டு மூன்று நாட்கள் குற்றுயிராக இருந்தே மரணிப்பர்.

இயேசுவை வேறுவகைகளில் உரோமதேசாதிபதி இலகுவில் இரகசியமாக கொலை செய்திருக்கமுடியும். தங்களை எதிர்ப்பவர்களுக்கு என்ன நடக்கும் என்பதை பகிரங்கப்படுத்தும் முகமாகவே அவருக்கு பகிரங்க சிலுவை மரணம் விதிக்கப்பட்டது. ஏனெனில் அவர் தனது நாட்டில் உரோமரின் ஆட்சியை ஏற்கவில்லை. சிலுவையின் மேல் “யூதர்களின் இராஜா” (அதாவது சீசரின் எதிரியின் இராஜா) என்று எழுதி வைக்கப்பட்ட வாசகம் இயேசுவுக்கு எதிராக சுமத்தப்பட்ட தேசத்துரோக குற்றச்சாட்டை வெளிப்படையாக எடுத்துக்காட்டுகிறது.

இயேசு ஒருபோதும் வன்முறையை ஆதரித்தவர் அல்லர். அதை உற்சாகப்படுத்தியவரும் அல்லர். மாறாக அவர் அன்பைத்தான் போதித்தார். பரலோக இராஜ்ஜியத்தைக் குறித்தே மக்களுக்கு எடுத்துக் கூறினார்.  இயேசு உரோமரின் அதிகாரத்தை ஏற்காதது மாத்திரம் அல்ல, கடவுளின் பெயரைக் கூறிக்கொண்டு மக்களை சுரண்டியவர்களையும் கடும் வார்த்தைகளால் விமர்சித்தார் ( மத்தேயு 23 மாற்கு 12: 38-40 லூக்கா 11: 37-52 20:45-47).

பிரதான ஆசாரியருக்கும் அவரைச் சுற்றியிருந்த கூட்டதினருக்கும் இயேசுவின் வார்த்தைகள் பெரும் எரிச்சலை ஏற்படுத்தின. இயேசுவின் போதனைகளால் பல மக்கள் கவரப்பட்டு அவரை பின்பற்றத் தொடங்கினர். இது உரோமருக்கும் பிரதான ஆசாரியர் கூட்டத்தினருக்கும் பீதியை ஏற்படுத்தியது. தங்களது அதிகாரங்களுக்கு இயேசுவால் அச்சுறுத்தல் ஏற்படுகிறதென உணர்ந்தார்கள். அதன் நிமித்தம் இயேசுவைக் கொலை செய்வதற்கு இவர்கள் ஒன்றிணைந்தார்கள்.

இயேசுவின் மரணம் முன்கூட்டியே ஆண்டவரால் திட்டமிடப்பட்டதா? அல்லது மனிதகுலத்தை பாவங்களிலிருந்து மீட்க தனது ஒரே பேறான குமாரனை ஆண்டவர் பலி கொடுக்க நேரிட்டதா? அல்லது பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனம் நிறைவேற இயேசு சிலுவையில் அறையுண்டு பாடுபட்டு மரித்தாரா? இயேசுவின் இவ்வுலக வாழ்வு நிறைவு பெற்றபின்இயேசுவின் மரணம் உலகம் தோன்றுவதற்கு முன்னரே பிதாவினால் குறிக்கப்பட்ட ஒன்று என்று அவரைப் பின்பற்றியோர் எண்ணியதை புதிய ஏற்பாட்டில் காணலாம் (1பேதுரு 1:18-20 லூக்கா 24: 26-27).

ஆனால் இவை யாவும் சிலுவை மரணம் நிகழ்ந்த பின்னர் அச்சம்பவம் குறித்து பின்நோக்கி பார்க்கும் பொழுது அது குறித்த அவர்களின் வியாக்கியானங்களாகும். இயேசுவின் மரணம் வீணானதொன்றல்ல அது மனிதர்களுக்கு பிரியோசனமானது என திடமாக நம்பினார்கள். இவ்வியாக்கியானம் இம்மரணம் நிச்சயம் சம்பவிக்கவேண்டுமென அனுமானிக்க வைக்கிறது. ஆனால் இது கட்டாயமாக அனுமானமாகத்தான் இருக்கவேண்டுமென்றில்லை. இக்கூற்றை பழைய ஏற்பாட்டில் யோசேப்பினதும் அவனது சகோதரர்களின் (இஸ்ரேலின் 12 கோத்திரங்களின் பிதாக்கள்) கதை தெளிவுபடுத்துமென நம்புகிறேன்.

யோசேப்பின் மேல் ஏற்பட்ட பொறாமை காரணமாக அவனது சகோதரர்கள் அவனை அடிமையாக விற்று இறுதியில் யோசேப்பு எகிப்தை சென்றடைகிறான். நீண்ட காலங்களின் பின்னர் எகிப்தில் பார்வோன் ராஜாவுக்கு அடுத்தபடியாக அதிகாரமிக்கவனாக உயர்வடைகிறான். பின்னர் தங்கள் நாட்டில் ஏற்பட்ட பஞ்சத்தின் நிமித்தம் யோசேப்பின் சகோதரர்கள் உணவு தேடி எகிப்தை வந்தடைகிறார்கள். அவர்களுக்கு யோசேப்புக்கு என்ன நேரிட்டதென்றோ அல்லது அவன் உயிருடன் இருக்கின்றான் என்றோ தெரியாது. இந்நிலையில் சகோதரர்கள் யோசேப்பைச் சந்திக்க நேரிடுகிறது. யோசேப்பை அடையாளங்கண்ட சகோதரர்கள் அவன் தாங்கள் செய்த செயலுக்காக பழிவாங்கப்படுவோமோ என்று திகில் அடைகிறார்கள்.

ஆனால் யோசேப்போ பழிவாங்குவதற்க்கு பதிலாக பின்வருமாறு கூறுகிறான் “ என்னை இவ்விடத்தில் வரும்படி விற்றுப்போட்டதினால் நீங்கள் சஞ்சலப்பட வேண்டாம். அது உங்களுக்கு விசனமாக இருக்கவும் வேண்டாம். ஏனெனில் உயிர்களை காக்கும் பொருட்டே கடவுள் உங்களுக்கு முன்னே என்னை எகிப்திற்கு அனுப்பினார். நாட்டில் பஞ்சம் தொடங்கி இரண்டு ஆண்டுகளே ஆகியுள்ளன. இன்னும் ஜந்தாண்டுகள் உழவோ அறுவடையோ இராது. பூமியிலே உங்கள் வம்சம் ஒழியாதிருக்கவும் அதை ஆதரிப்பதற்காகவும் பெரிய இரட்சிப்பினால் உங்களை உயிரோடு காப்பதற்காகவும் தேவன் என்னை உங்களுக்கு முன்னே அனுப்பினார். ஆதலால் நீங்கள் அல்ல தேவனே என்னை இவ்விடத்திற்கு அனுப்பி என்னை பார்வோனுக்குத் தகப்பனாகவும் அவர் குடும்பம் அனைத்திற்கும் தலைவராகவும் எகிப்து தேசம் அனைத்திற்கும் அதிபதியாகவும் வைத்தார்”(ஆதியாகமம் 45: 5-8).

யோசேப்பை அவனது சகோதரர்கள் அடிமையாக விற்றதில் ஓர் தெய்வ நோக்கம் இருந்ததாக இப்பகுதி குறிப்பிடுகிறது. அப்படியானால் தம்பியை அண்ணண்மார்கள் அடிமையாக விற்றது ஆண்டவருக்குப் பிரியமான செயலா? ஒருபோதும் இல்லை. கடவுள் இப்படியான செயல்களை முற்றாக வெறுப்பவர். இச்சம்பவம் இப்படியாகவா நடந்திருக்க வேண்டும்? இல்லை. இஸ்ரேலின் வம்சங்களை பாதுகாப்பதற்கு ஆண்டவர் வேறு வழிமுறைகளை கையாண்டிருக்க முடியும். இக்காரியத்தை செய்வதற்கு யோசேப்பின் சகோதரர்கள் கடவுளால் முன்னரே குறிக்கப்பட்டவர்கள் அல்லர் (not foreordained)

அப்படியானால் இச்சம்பவம் கூறுவதென்ன? ஆண்டவரால் தம்பியை அண்ணண்மார்கள் அடிமையாக விற்ற ஓர் தீயசம்பவத்தைக் கூட தனது நோக்கத்திற்க்காக உபயோகிக்க முடியும் என்பதை எடுத்துக் காட்டுவதாகவே அமைகிறது. இக்கதையை இயேசுவின் மரணத்துடன் ஒப்பிட்டு நோக்கும் பொழுது அம்மரணம் குறித்து நாம் எவ்வண்ணம் அதை விளங்கிக்கொள்ளலலம்? ஓர் நீதியான நேர்மையான ஒருவர் சித்திரவதைகட்குட்பட்டு பாடுபட்டு இறப்பது பிதாவாகிய
ஆண்டவரின் விருப்பமா? நிச்சயமாக இல்லை. இம்மரணம் இவ்விதம் சம்பவித்திருக்க வேண்டாமா? இது வேறு வகைகளில் கூட நிகழ்ந்திருக்கலாம்.

யூதாஸின் காட்டிக் கொடுப்பு இல்லாமலேயே இது நடந்திருக்கலாம். பிரதான ஆசாரியரும் அவரது கூட்டமும் வேறு தண்டனைகளை வழங்கியிருக்க முடியும். பிலாத்து இயேசுவை மன்னித்திருக்கலாம். ஆனால் இயேசு சிலுவையில் அறையுண்டே மரணித்தார்.
கொடூரமான மரணத்தினூடாகக் கூட ஆண்டவர் மனித குலத்திற்கு இரட்சிப்பை வழங்க முடியும் என்பதை இது எடுத்தக்காட்டுவதாக அமைகிறது. ஆதி கிறிஸ்தவர்கள் இயேசுவின் மரணத்தை திரும்பிப்பார்க்கும் பொழுது அதில் தெய்வீக அர்த்தம் இருப்பதாகவே விசுவாசித்தார்கள். இதனால் இச்சிலுவை மரணம் கட்டாயம் நிகழ்ந்திருக்க வேண்டும் என அர்த்தம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

தேவனின் திட்டப்படி இயேசு மரித்திருக்காவிட்டாலும் கூட மனிதர்கள் அவரை விட்டுவைத்திருக்க மாட்டார்கள். ஆட்சியிலிருப்பவர்களுக்கெதிராக பகிரங்கமாகவும் தீவிரமாகவும் சவால் விடுபவர்களின் முடிவு பயங்கரமானதாகவும் பரிதாபகரமானதாகவும் அமைவது தவிர்க்க முடியாதனதொன்றாகும். இயேசு வாழ்ந்த காலங்களில் இப்படியான மரணங்கள் அடிக்கடி நடந்துள்ளன. இயேசு மரணிப்பதற்க்கு சில வருடங்களுக்கு முன்னர் யோவான்ஸ்ஞானகன் அரச அதிகாரிகளால் கொலை செய்யப்பட்டான். பின்னர் இயேசுவின் மரணம் நிகழ்ந்தது. இதற்க்கு சில காலங்களின் பின்னர் பேதுரு யாக்கோபு பவுல் அப்போஸ்தலர் போன்றவர்களும் இதே முடிவைத்தான் சந்தித்தார்கள். இவர்கள் ஏன் இவ்விதம் கொலை செய்யப்பட்டார்கள்? அதிகாரிகள் இவர்களை கொலை செய்ய ஏன் தூண்டப்பட்டார்கள்?

இயேசுவின் ஆசை, ஆர்வம், விருப்பம், அவரது செய்தி எல்லாம் கடவுளைக் குறித்தும் பரலோக இராஜ்சியத்தை குறித்துமே இருந்தது. அவர் அப்போது நிலவிய பொருளாதார அரசியல் சூழலையும் அது உருவாக காரணமான சமூக கட்டமைப்புகளையும் அதனால் பலனடையும் அதிகாரிகளையும் மதத்தலைவர்களையும் கடுமையாக விமர்சித்தார். இவற்றால் பாதிக்கப்பட்ட அநேகர் இயேசுவின் போதனைகளால் ஈர்க்கப்பட்டு அவரை பின்பற்ற ஆரம்பித்தார்கள். தன்னை பின்பற்றுவேரை அணிதிரட்டி பஸ்காபண்டிகைக் காலத்தில் அவர்களை எருசலேமுக்கு அழைத்துச் சென்று அங்கு பகிரங்கமாகவே தேவாலய அதிகாரிகட்கும் அரசியல் தலைவர்கட்கும் சவால் விட்டார்.

இது அதிகாரிகட்கும் மதத்தலைவர்கட்கும் கடும் விசனத்தை ஏற்படுத்தியது. இதனாலேயே அவர் சிலுவையில் அறையப்பட்டார். ஆண்டவர் மேலும், பரலோக இராஜ்சியத்தின் மேலும், அவருக்கிருந்த கட்டுக்கடங்காத ஆவலால், பாடுபட்டு, துன்புறுத்தப்பட்டு, கொடும் சித்திரவதைப்பட்டு இயேசு மரிக்க நேரிட்டது. ஆனால் இயேசுவின் மரணத்தை பெரிய வெள்ளியன்று நடந்த சம்பவத்துடன் மாத்திரம் மட்டுப்படுத்தி விடமுடியாது. அப்படி செய்வது அவரது வாழ்க்கையை மரணத்திலிருந்து பிரிப்பது போலாகிவிடும்.

நாம் அறிந்த அவரது குறுகிய கால வாழ்கை முழுவதும் மனிதகுல விடிவுக்காகவே அவர் பாடுபட்டார். இவ்வுலகில் பின்பற்றப்படுகின்ற மேலாதிக்க முறைமைகளை (Domination system) அவர் முழு மூச்சுடன் எதிர்த்தார். வறியவர்களும், பெண்களும், சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களுமே இம்முறைமைகளால் பாதிக்கப்பட்டனர். இவரின் இந்த எதிர்ப்பும், பரலோக இராஜ்ஜியத்தின் மேல் அவருக்கிருந்த அளவில்லா பற்றுமே இறுதியில் அவருக்கு சிலுவை மரணத்தை அளித்தது. ஆனாலும் இயேசுவின் மரணத்தின் ஊடாக ஆண்டவர் மனித மனமாற்றத்தை ஏற்படுத்தி மனித குலம் இருளிலிருந்து வெளிச்சத்திற்க்கு வருவதற்க்கான பாதையை ஏற்படுத்திக் கொடுத்தார்.