சாதி வெறியர்களின் கொலைவெறித் தாக்குதல்…

ரத்தச் சேற்றில் கோயம்புத்தூர், புள்ளாக்கவுண்டன்பாளையம்; நிராதரவாக தாழ்த்தப்பட்ட அருந்ததியர் மக்கள்…
கோயம்புத்தூர் மாவட்டம், பேரூர் வட்டம், தொண்டாமுத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட புள்ளாக்கவுண்டன்புதூர் பகுதியில் சுமார் 30 தாழத்தப்பட்ட அருந்ததியர் சமூக குடும்பங்களும், 300க்கும் மேற்பட்ட ஆதிக்கச் சாதி கொங்கு வேளாளர் கவுண்டர் மக்களும் வாழ்ந்து வருகின்றனர்.

தாழ்த்தப்பட்ட, சிறுபான்மையினராக வாழ்ந்து வரும் அருந்ததியர் மக்கள் மீதான சாதிய ஒடுக்குமுறைகள் எல்லா வகையிலும் தொடர்ந்து வந்த நிலையில், எதிர்த்து நிற்கும் அரசயில் பொருளாதார பலமின்றி வழக்கம் போல ஒடுக்குமுறையை உள்ளக் குமுறலோடு அனுபவித்துக் கொண்டு மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 11.04.2017 அன்று மாரியம்மன் கோவில் திருவிழாவில் அருந்ததிய மக்கள் ஜமாப் இசைக்க ஆடிக்கொண்டிருந்த ஆதிக்க சாதி இளைஞர்கள், வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த அருந்ததிய பெண்கள் மீது வேண்டுமென்றே விழவும், இடிக்கவும், தள்ளிவிடவுமாகவும், ஆபாச வார்த்தைகள் பேசியும் சேட்டைகள் செய்த நிலையில் பொறுக்கமாட்டாத மக்கள் அதனைக் கேள்வியெழுப்பியுள்ளனர்.

எனவே ஆத்திரமடைந்த சில சாதி வெறிப்பிடித்த மிருகங்கள் அருந்ததிய இளைஞர்கள் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்த போதிலும் தொண்டாமுத்தூர் காவல்துறையினர் எத்தகைய நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சாதித் திணவெடுத்து அருந்ததியப் பெண்கள் மீது சீண்டல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட தங்களை எதிர்த்து கேள்வியெழுப்பியதையும், தவறுகளைத் தட்டிக் கேட்டதையும், பொறுக்க முடியாத ஆதிக்க சாதித் திமிர் வெறிகொண்டெழுந்து அருந்ததியர் மக்கள் மீதான வன்முறையை ஏவிவிட்டுள்ளது. இரவு நேரத்தில் 30க்கும் மேற்பட்ட நபர்களைக் கொண்ட கும்பலால் ஆண் பெண் பேதமின்றி அருந்ததியர் மக்கள் மீது கொடூரத் தாக்குதல் நடந்துள்ளது. வீடுகளும், வாகனங்களும் பெருத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன.

தாக்குதலுக்கு உள்ளான மக்கள் காவல்துறைக்கு தொடர்பு கொண்டால் தொண்டாமுத்தூர் காவல்நிலையத்தில் தொலைபேசியை எடுக்கக் கூட ஆட்கள் இல்லை.. எனவே தாக்குதலுக்குள்ளான அருந்ததியர் மக்கள் ஆதித்தமிழர் கட்சி நிர்வாகிகளால் பாதுகாக்கப்பட்டு பின்னர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மிகவும் மெத்தனமாக நடந்து கொண்ட காவல்துறையினர் தாக்குதலில் ஈடுபட்ட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத நிலையில் கடந்த 12.04.2017 அன்று கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியரிடமும், மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளரிடமும் பதுகாப்புக் கோரி மனு அளித்தனர். மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதாக வாக்குறுதியளித்த காவல்துறையின் நயவஞ்சகம் ஆதிக்க சாதியினரின் தாக்குதலை விட மோசமானது.

ஒடுக்கப்பட்டோர் இயக்கங்களின் தொடர் வலியுறுத்தல் காரணமாக சாதி வெறியர்கள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறை, சாதி வெறியர்களின் தாக்குதலால் காயமடைந்து மருத்துவ சிகிச்சை பெற்று வருபவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து ஆதிக்கச் சாதி விசுவாசத்தைக் வாலாட்டிக் காட்டிக் கொண்டுள்ளது. தாக்குதல் நடைபெற்ற பகுதி ஆதிக்கச் சாதியைச் சேரந்த தமிழக அமைச்சர் வேலுமணியின் தொகுதிக்குள் வருவதாகும். தாக்குதல் நடத்தியவர்களும் அவரது சாதி உறவுகளாகும். எனவே இன்று வரை ஒரு அரசியல் வாதிகள் கூட மக்களைச் சந்தித்து ஆறுதலளிக்க வரவில்லை.. ஓட்டுப்பொறுக்க அருந்ததிய மக்களிடம் மண்டியிடும் இத்தகைய அரசியல்வாதிகள் மக்கள் பாதிக்கப்படும் போது சாதிப்பாசத்தில் ஒடுக்கப்பட்ட மக்களை புறக்கணித்து நிற்கின்றனர்.

அன்றாடம் அரசினாலும், அதிகாரிகளாலும், ஆதிக்கச்சாதியினராலும், காவல்துறையாலும் ஒடுக்கப்படும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தரக் கூட முன்வராத இவர்கள் ஆதிக்கச் சாதியனர் தாக்கப்பட்டால் பதறியடித்து தமிழக அரசியலையே கலக்குகிறார்கள்.
அரசும், காவல்துறையும் கைவிட்ட நிலையில் தவிக்கும் அருந்ததியர் மக்களுக்கு பாதுகாப்பளிக்க, ஆதிக்கச்சாதி வெறி பிடித்தவர்களைத் தனிமைப்படுத்தும் விதமாக சாதி கடந்து சனநாயக சக்திகளும், உழைக்கும் மக்களும் ஒன்றிணைந்து போராடுவோம்! சாதியத்தை தகர்த்தெறிவோம்!!