மீண்டும் புலிகள்… முட்டாளா நீங்கள்?

(சமஸ்)

நான் தமிழீழ விடுதலைப் புலிகளின் எதிரி கிடையாது. அதேசமயம் நண்பன் என்றும் கூற மாட்டேன். ஒரு மகத்தான போராட்டம் சீரழிந்து ஓர் இனமே அகதியானதற்கு நானும் ஒரு மௌன சாட்சி. இப்போது யோசித்துப் பார்க்கும்போது என்னுடைய தவறும் தெரிகிறது. சாகசத்தை நம்புபவர்களால் நீண்ட தூரம் பயணிக்க முடியாது. நாம் அதீதமாக எதிர்பார்த்தோம்; அதீதமாக நம்பினோம்; அதீதமாக ஏமாந்தோம். முட்டாள்தனமாக.

நண்பர்களே, ஈழப் போரின் இறுதிகட்டத்தில் எழுத்தாளர்கள் பலரையும்போல புலிகளை விமர்சிப்பதை நானும் தவிர்த்தேன். அதுபோன்ற ஒரு தருணத்தில் அவர்கள் பக்கம் நிற்பது ஒரு தமிழனாக என்னுடைய கடமை என்று குருட்டுத்தனமாக எண்ணினேன். ஆனால், இன்று அதற்காக வருந்துகிறேன். தமிழினம் அடைந்த தோல்விக்கு ஏதோ ஒரு வகையில் நானும் ஒரு காரணம் என்று நினைக்கிறேன். இனியும் அத்தகைய முட்டாள்தனம் தொடரக்கூடாது என்றும் நினைக்கிறேன்.

உலகெங்கும் ஈழத் தமிழர்கள் மீது கரிசனம் கொண்ட தமிழர்கள் – குறிப்பாக இந்தியாவிலும் அயல்நாடுகளிலும் வாழும் தமிழர்கள், ஈழத் தமிழர்கள் நலன் சார்ந்து பேசும் எந்த ஒரு போராட்டத்திலும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் நிழல் விழுவது எனக்குப் பெரும் கவலையை ஏற்படுத்துகிறது. மீண்டும் பிரபாகரன், மீண்டும் விடுதலைப் புலிகள் என்ற மாய அரசியல் வலை இப்படிப்பட்ட போராட்டங்களை முன்னெடுப்பவர்களின் பின்னணியில் அவர்களுக்குத் தெரியாமலேயே விரிக்கப்படுவது பதற்றத்துக்குள்ளாக்குகிறது.

ஈழத் தமிழர்கள் நலன் சார்ந்த போராட்டங்களில் பிரபாகரனின் படங்களோ, புலிகளின் கொடிகளோ பின்னிருப்பதன் நோக்கம் என்ன? ஈழத் தமிழர் அரசியல் இன்னமும் புலிகள் சாயையோடு இருக்க வேண்டிய தேவை என்ன? ஏன் மீண்டும் மீண்டும் புலிகளிலிருந்தே நாம் தொடங்குகிறோம் அல்லது புலிகள் சார்ந்தே சிந்திக்கிறோம்? இது வடிகட்டிய முட்டாள்தனம் என்று ஏன் இன்னமும் நமக்கு உறைக்கவில்லை?

இன்று புலிகள் அமைப்பு யார்? உலகின் 40-க்கும் மேற்பட்ட நாடுகளால் தடை விதிக்கப்பட்ட, உலகின் மோசமான பயங்கரவாத அமைப்புகளில் ஒன்றாக முத்திரை குத்தப்பட்ட, முற்றிலும் வலுவிழந்த, கிட்டதட்ட அழிந்தேவிட்டே ஓர் இயக்கம். சரியாக உதாரணப்படுத்த வேண்டும் என்று சொன்னால், பல் பிடுங்கப்பட்ட, அடித்து துவைக்கப்பட்ட, கிட்டத்தட்ட செத்தேவிட்ட அனைவராலும் வெறுத்து ஒதுக்கப்பட்ட ஒரு பாம்பு. நாம் எப்படி அதை நம்முடைய பிரதிநிதியாக்குகிறோம்? உலகம் அதற்கு ரத்தினக் கம்பளம் விரிக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறோம்?

போர்க்குற்றங்களைப் பற்றி நாம் பேசுகிறோம். போர்க் குற்றங்களுக்காக இலங்கை அரசும் இலங்கை ராணுவமும் தண்டிக்கப்பட வேண்டும் என்று கோருகிறோம். நல்லது. அதேசமயம், மறுபக்கம் புலிகளும் போர்க் குற்றங்களை இழைத்தவர்கள் என்பதை ஒப்புக்கொள்ளும் நேர்மையும் நமக்கு வேண்டும். ஒருபுறம், வெள்ளைக்கொடிகளோடு சரணடைந்த புலித் தலைவர்களைக் கொன்றது குற்றம் இல்லையா என்று இலங்கை ராணுவத்தை நோக்கிக் கேட்கும் நமக்கு, மறுபுறம், பச்சிளம் குழந்தைகளின் கழுத்தில் எல்லாம் சயனைடு குப்பிகளைக் கட்டி அனுப்பிய நீங்கள் உங்கள் உயிரைக் காத்துக்கொள்ள வெள்ளைக்கொடி ஏந்திச் சென்றதும் குற்றம்தானே என்று புலி ஆதரவாளர்களை நோக்கிக் கேட்கும் நெஞ்சுரமும் வேண்டும்.

நண்பர்களே, ஓர் உண்மையைத் தெரிந்துகொள்ளுங்கள். ஒரு விடுதலைப் போராட்ட இயக்கமாகத் தொடங்கப்பட்ட அமைப்பு இறுதியில் சொந்த மக்களையே பலி கொண்ட மோசமான பயங்கரவாத இயக்கமாகத் தன் கதையை முடித்துக்கொண்ட வரலாறுதான் விடுதலைப் புலிகளுடையது. தமிழர்களாகிய நமக்கு விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதும் பிரபாகரன் மீதும் உள்ள பரிவின் நியாயத்தை ஈழப் போராட்டத்தை முழுமையாக அறிந்த எவராலும் புரிந்துகொள்ள முடியும்.

ஆனால், எவருமே விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அல்லர். விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்களாக மாறியதாலேயே புலிகளும் பிரபாகரனும் இந்த அழிவைத் தேடிக்கொண்டார்கள். ஈழப் போரின் இறுதி நாட்களில் நாற்புறமும் எதிரிகளால் முற்றுகையிடப்பட்ட நிலையிலும்கூட, ’’புலிகளுக்குப் பிந்தைய காலகட்டம் என்று ஒன்று இருக்கப்போவதில்லை” என்று கூறிக்கொண்டே அழிந்தார்கள் புலிகள். அதே மாயைதான் ஈழ ஆதரவாளர்களையும் இன்று வாரிச் சுருட்டி இருக்கிறது. ஈழத் தமிழர்கள் அடுத்தகட்ட நகர்வு சார்ந்து நாம் முன்னெடுக்கும் எந்தப் போராட்டத்திலும் இது பின்னடைவையே ஏற்படுத்தும். ஈழத் தமிழர்களின்பால் அக்கறை உள்ளவர்களும் உரக்கப் பேச வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். ஆனால், நம்முடைய பேச்சை உண்மையான யதார்த்தத்திலிருந்து – புலிகளுக்குப் பிந்தைய காலகட்டத்திலிருந்து தொடங்குவதே ஈழத் தமிழர்களுக்கு நன்மை பயக்கும்.

நண்பர்களே… மூர்க்கத்தனமாகவும் முட்டாள்தனமாகவும் செயல்பட்டாலும் தாம் கொண்ட கொள்கைக்காகப் போராடிய புலிகள் எப்போதோ செத்துவிட்டார்கள். இன்று புலிகளின் பெயரால் இயங்குபவர்கள் அவர்களுடைய பினாமிகள்; அவர்கள் ஏன் இன்னமும் புலிகளின் பெயரை உச்சரிக்கிறார்கள் என்றால், அவர்களுக்கு அதில் ஆதாயம் இருக்கிறது. நீங்கள் ஏன் உச்சரிக்கிறீர்கள்?