உண்மையை வெளிப்படுத்தும் துணிச்சலால் நல்லிணக்கம் மலரும்

தங்களது உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்ற துயரத்தோடு பல ஆண்டுகளாக நீதிக்காக ஏங்கி நிற்கும் தாய்மார்களும் உறவினர்களும், மாவட்டச் செயலகத்திற்கு வெளியே ஜனநாயக ரீதியில் தமது எதிர்ப்பைப் பதிவு செய்ய முற்பட்டவேளை, அரச இயந்திரமும் பொலிஸாரும் கையாண்ட ஒடுக்குமுறை முறைகள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கவை.

இந்த மாநாடு ஒருபுறம் அரங்கேறிக் கொண்டிருக்க, மறுபுறம் கதறி அழுதபடி போராட்டத்தில் ஈடுபட்ட தாய்மார்களைப் பொலிஸார் மூர்க்கத்தனமாகத் தாக்கி, மாவட்டச் செயலகத்திற்கு வெளியே இழுத்துத் தள்ளிய விதம் மனிதாபிமானமற்றதன் உச்சமாகும்.

பெண்களின் மானம் காக்கப்பட வேண்டிய சமூகப் பண்பாட்டைக்கூடப் பொருட்படுத்தாமல், ஆடைகள் கழரும் நிலைக்கு அவர்களை இழுத்துச் சென்றமை அரச அடக்குமுறையின் கொடூர முகத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது.

மேலும், இந்த அவலங்களை மண்டபத்தினுள் இருந்தவாறே தனது கைபேசியில் வேடிக்கை பார்த்த நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் அலட்சியப்போக்கும், களத்தில் நின்று தனது கடமையைச் செய்ய முயன்ற ஊடகவியலாளர்களை அமைச்சர் சந்திரசேகர் பொதுவெளியில் வசைபாடிய செயலும் ஆட்சியாளர்களின் ஜனநாயக விரோத மனோநிலையைத் தெளிவாகப் பறைசாற்றுகின்றன.

இந்தச் சம்பவம் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மீது பொலிஸார் நடத்திய மோசமான தாக்குதலையும், அமைச்சர்களின் பொறுப்பற்ற, திமிர்த்தனமான செயற்பாடுகளையும் மிக வன்மையாகக் கண்டித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணத்தையும் நீதியையும் வழங்கவேண்டிய பொறுப்புள்ள பதவிகளில் இருப்பவர்களே இத்தகைய வன்முறைகளைக் கண்டு கொள்ளாமல் மௌனிப்பதும், அவற்றை நியாயப்படுத்துவதும் ஒட்டுமொத்த ஜனநாயகக் கட்டமைப்பிற்கும் விடுக்கப்பட்ட சவாலாகும்.

காணாமல் போனோர் அலுவலகங்கள் மூலமாக உண்மையை மூடிமறைப்பதற்கும், பாதிக்கப்பட்ட மக்களின் குரல்களை ஒடுக்குவதற்கும் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் எக்காலத்திலும் நீதியைத் தந்துவிடாது.

மாறாக, இது தமிழ் மக்கள் மீது தொடர்ச்சியாக இழைக்கப்படும் அநீதிகளின் நீட்சியாகவே பார்க்கப்பட வேண்டும். அடக்குமுறைகள் மூலம் மக்களின் நியாயமான கோரிக்கைகளை முடக்கிவிட முடியாது என்பதை அரசாங்கம் உணர்தல் வேண்டும். பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு உரிய நீதியும், உண்மையை வெளிப்படுத்தும் துணிச்சலும் எப்போது கிடைக்கிறதோ, அன்றே உண்மையான நல்லிணக்கம் மலரும்.

(Tamil Mirror)

Leave a Reply