தேசிய மீலாத் தினமும் தீராத ஆடை விவகாரமும்

இந்நிலையில அவர்களை அதிலிருந்து இரண்டரை கிலோமீற்றர் தொலைவில் உள்ள அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு இடம்மாற்றிவிட்டு, இதனை ஒரு தீர்வாகக் காட்டுவதற்கும் எத்தனிக்கின்றது. சமகாலத்தில் இது ஒரு நிரந்தர தீர்வல்ல என்பதையும் உட்கிடையாக ஏற்றுக்கொண்டுள்ளது.

இந்தப் பின்னணியிலேயே தேசிய மீலாத் விழாவை நீர்கொழும்பில் நடத்துவதற்கும் அதனையொட்டி வேறு பல நிகழ்ச்சிகளை வேறு பிரதேசங்களிலும் நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

உண்மையில், முஸ்லிம் சமூகத்தின் கலாசார உரிமைகள் கேள்விக்குள்ளாக்கப்பட்ட மேற்படி ஆடை விவகாரத்திற்கு ஒரு நிரந்தர தீர்வை வழங்கிவிட்டு அரசாங்கம் மீலாத் விழாவை நடத்தியிருந்தால், முஸ்லிம்களின் சந்தோஷம் இன்னும் அதிகரித்திருக்க இடமுள்ளது.

இன்னும் காலம் கடந்துவிடவில்லை. ஜனாதிபதியோ பொறுப்புவாய்ந்த அமைச்சரோ மீலாத் தினத்தில் அல்லது பிரதான மீலாத் தின உரையில் அதற்கான அறிவிப்பை வெளியிடுவதற்கும் வாய்ப்புக்கள் உள்ளன. ஆனால், அது நடக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

உண்மையில், கல்முனையில் குறிப்பிட்ட யுவதிகள் வேறு வைத்தியசாலைக்கு இடம்மாற்றப்பட்டமை இப்பிரச்சினையைத் தணிந்துள்ளது. அந்தப் குறிப்பிட்ட பெண்களின் தொழில் ஓரளவுக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று வைத்துக்கொண்டாலும், இதன்மூலம் முஸ்லிம் சமூகம் எதிர்கொண்ட நெருக்கடி தீரவில்லை.

அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் இந்தப் பெண்கள் எவ்வித தடங்கலுமின்றி சுமுகமாகப் பணியாற்ற முடிகிறது என்றால், அதே பெண்களால் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் ஏன் பணியாற்ற முடியாமல் போனது?

இந்த இரண்டு வைத்தியசாலைகளும் ஒரே அமைச்சின்கீழ் இயங்குகின்றன; ஒரே அரசாங்கத்தின் ஆளுகைக்கு உட்பட்டவை. நிலைமை இவ்வாறிருக்க, ஒரு நிறுவனத்தில் அனுமதி அளிக்கப்படும் கலாசார ஆடை நடைமுறை மற்றொரு நிறுவனத்தில் மறுக்கப்படுவது ஏன் என்ற வினா எழுகிறது.

சுற்றறிக்கைகளில் கட்டுப்பாடுகள் இருந்தாலும், இன ஐக்கியத்திற்காக, மத சகிப்புத்தன்மையுடனும் ஏனைய அலுவலகங்களைப் போல நெகிழ்ச்சித் தன்மையுடனும் கல்முனை வடக்கு வைத்தியசாலை நிர்வாகம் நடந்து கொள்ளாமை இன பாகுபாடு என்றுதானே முஸ்லிம்கள் பார்ப்பார்கள்?

இங்கு கவனிப்பிற்குரிய முக்கிய விடயம் யாதெனில், இந்த விவகாரம் தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் இடையிலான இன மோதல் அல்ல. அதுமட்டுமன்றி, இந்த விவகாரத்தில் பெரும்பாலான தமிழ் மக்கள் முஸ்லிம் சமூகத்தின் நியாயமான கோரிக்கையின் பக்கமே நிற்கின்றனர்.

தமிழ் அரசியல்வாதிகள், சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள் மட்டுமன்றி, சாதாரண தமிழ் சகோதரர்களும் பொதுவெளிகளில் முஸ்லிம்களின் பண்பாட்டு உரிமைக்கு ஆதரவாகக் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர். இது முஸ்லிம் சமூகத்திற்குப் பெரும் நம்பிக்கையையும் ஆறுதலையும் அளிப்பதாக உள்ளது.

கோடீஸ்வரன் எம்பி போன்ற சிலர் தவறாகச் சித்தரிப்பது போல, முஸ்லிம் ஊழியர்கள் ‘அபாயா’ (முழு ஆடை) அணிந்து பணிபுரிய அனுமதி கோரவில்லை. மாறாக, அவர்கள் சீருடையுடன் தலையின் பின்பகுதியையும் கால்களையும் மறைக்கும் எளிய ஆடைகளையே விரும்புவதாகக் கூறினர் என்பதை நாட்டின் யதார்த்த நிலையை உணர்ந்த தமிழ் மக்கள் அறிவார்கள்.

சுற்றறிக்கைகள் ஒருபுறமிருக்க, நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் இயங்கும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் முஸ்லிம்கள் தங்களின் மத நம்பிக்கைக்குரிய அடையாளங்களை வரையறைகளுக்கு உட்பட்டு வெளிப்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முஸ்லிம்கள் மட்டுமன்றி, தமிழ், சிங்கள, கத்தோலிக்க மக்களும் தத்தமது மத அடையாளங்களைச் சுதந்திரமாக வெளிப்படுத்தி வருகின்றனர். கைக் கயிறு, தாயத்து, நெற்றிப் பொட்டு, குங்குமம், காற்சலங்கை, சில முக்கிய காலத்தில் அணியும் கலாசார ஆடைகள் என்பவற்றை இவற்றிற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம்.

இதுதான் பல்லின சமூகங்கள் வாழ்கின்ற நாட்டுக்கு அழகாகும். இப்படி முகத்தை மூடாத ஆடைகளை முஸ்லிம்கள் அணிந்து பணிக்கு வருவதால் அல்லது ஏனைய சமூகங்களைச் சேர்ந்த மக்கள் தமது மத அடையாளத்தை ஏதோ ஒரு விதத்தில் வெளிப்படுத்துவதால், அரச துறைச் சேவைகளுக்கு எந்தப் பாதிப்பும் வரப் போவதில்லை.

நாட்டின் அரச நிறுவனங்களில் இருக்கின்ற வினைத்திறனற்ற செயற்பாடு, ஊழல், பணிநேரத்தை சொந்த வேலைக்குப் பயன்படுத்தல், அதிகார துஷ்பிரயோகம், பாலியல் சீண்டல்கள், சரியாக கடமையை நிறைவேற்றாமை என்ற ஆயிரத்தெட்டு பிரச்சினைகளுடன் ஒப்பிடுகையில், ஆடை அணிகலன் எல்லாம் ஒரு பிரச்சினையே கிடையாது.

ஆனால் இது திட்டமிட்டுப் பிரச்சினையாக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல பாகங்களிலும் இப்படியான சம்பவங்கள் நடக்கின்றன. அதிலும் குறிப்பாக கிழக்கில் முஸ்லிம்கள் இப்படியான கலாசார அடையாள நெருக்கடிகளைத் தொடர்ந்து எதிர்கொள்வதன் பின்னால் ஏதேனும் சதித்திட்டங்கள் இருக்கின்றனவா என்ற சந்தேகம் எழாமல் இல்லை.

சர்ச்சைகள் தீவிரமடைந்த பின்னரும் வைத்தியசாலை நிர்வாகம் தன் பிடிவாதப் போக்கிலிருந்து இறங்கி வரவில்லை. மாறாக, ஆடை மறுப்பை நியாயப்படுத்துவதற்காகக் கவனயீர்ப்புப் போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, சூழல் அறியாத தமிழ் ஊழியர்கள் அதில் களமிறக்கப்பட்டமை கவலையளிக்கும் விடயமாகும்.

இந்த விடயத்தில் சில தமிழ் அரசியல்வாதிகளும் சமரசமாக நடந்து கொள்ளுமாறும், முஸ்லிம்களின் உரிமை விடயத்தில் முடியுமானவரை விட்டுக் கொடுப்புடன் செயற்படுமாறு அறிவுரை வழங்காமல், வேறு விதமாகப் பேசுவது முஸ்லிம் சமூகத்தை முகம்சுழிக்க வைத்திருக்கின்றது எனலாம்.

இனவாதம் அற்ற ஆட்சி என்று தம்மைக் கூறிக்கொள்ளும் அரசாங்கம், இதுபோன்ற அநீதிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் என முஸ்லிம்கள் எதிர்பார்த்தனர். ஆனால், மீண்டும் மீண்டும் இத்தகைய ஆடை மறுப்புகள் இடம்பெறும்போதும், எதிர்பார்க்கப்பட்ட உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

பணியிட மாற்றம் என்பது நிரந்தரத் தீர்வாகாது. கடந்த காலங்களில் ஹலால் விவகாரம், கொத்துரொட்டிச் சர்ச்சை, பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்கள், குர்ஆன் பிரதி பிரசித்தி மற்றும் ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டமை போன்ற நிகழ்வுகளின் போது எடுக்கப்பட்ட தற்காலிக முடிவுகளே இன்றும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்வதற்குக் காரணமாகும்.

கிழக்கு மாகாணத்தில் இரு சிறுபான்மை சமூகங்களும் இணைந்து வாழும் சூழலில், இவ்வாறான சம்பவங்கள் தற்செயலானவையா அல்லது இதன் பின்னணியில் வேறு சக்திகள் உள்ளனவா என்பதை அரசாங்கம் நுணுக்கமாக ஆராய வேண்டும்.

சுகாதாரத் துறையில் மாற்றங்களைக் கொண்டு வருவது இலகுவான காரியமல்ல. தாதியர் ஆடை விவகாரத்தில் என்ன நடந்தது என்பதை நாமறிவோம். ஆனால், அரசாங்கம் செய்ய நினைத்தால் அதனைச் செய்ய முடியும். அதற்கான சூட்சுமங்களை ஆட்சியாளர்கள் அறியாதிருக்க மாட்டார்கள்.

அந்த வகையில், பல்லின, பன்மத நாடான இலங்கையில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் அனைத்து சமூக மக்களும் தத்தம் கலாச்சாரத்தைப் பின்பற்றுவதை உறுதிசெய்யும் தெளிவான, உறுதியான சுற்றறிக்கைகளை அரசாங்கம் வெளியிட வேண்டும்.

மீலாத் தினத்திற்கான பரிசாக அரசாங்கம் இப்பணியை மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் இழப்புக்களின் பட்டியலும், இடமாற்றங்கள், முரண்பாடுகளின் பட்டியலும் இனியும் நீளும்.

மொஹமட் பாதுஷா

Leave a Reply