தோழர் விசுவானந்ததேவன் அவர்களின் 40 ஆவது ஆண்டு நினைவுதினம்.

அக்காலகட்டத்தில் நிலவிய போர்க்கால நிலைமைகளால் தமிழ்நாட்டிற்கு போவதற்காக பலரும் படகுத்துறைகளில் காத்திருப்பது வழக்கம். அவ்வாறு கரையூரில் காத்திருந்த அண்ணளவாக 20 பேரே மனிதாபிமான ரீதியில் படகில் ஏற்றப்பட்டனர். மேலும் இந்த 20 பேர்களும் யார், அவர்களின் குடும்ப விபரங்கள் மற்றும் குடும்ப உறவுகள் இன்னமும் அவர்களைத் தேடிக்கொண்டு இருக்கிறார்களா போன்ற எந்த விபரங்களும் இதுவரையில் எங்களுக்குத் தெரியாது.


படகு விபத்துக்குள்ளாகியிருந்தால் அல்லது இலங்கை கடற்படை அதனைத் தாக்கியிருந்தால் உடனடியாகவே நிட்சயமாக ஒரு சில தடயங்கள் கிடைத்திருக்க வாய்ப்புகளுண்டு. ஆனால் தோழர்களும் ஏனைய பயணிகளும் யாரால், எப்படி, எங்கே மறைக்கப்பட்டார்களென்ற உறுதியான தகவல்களோ அல்லது தடயங்களோ இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை. எனினும் இவர்களைக் கொன்றவர்களோ அல்லது இவர்களின் கொலைக்கு உடந்தையானவர்களோ அல்லது இவர்களின் கொலை பற்றிய உண்மை தெரிந்தவர்களோ இன்னமும் உயிர் வாழ்கின்றார்கள் என்பதனை நாங்கள் உறுதியாக நம்புகின்றோம்.

‘காணாமல் போனார்கள்’, ‘காணாமலாக்கப்பட்டார்கள்’ போன்ற சொற்பிரயோகங்கள் சட்டத்திற்கு சரியானதாக இருக்கலாம். ஏனெனில் உடல்கள் கண்டெடுக்கப்படாததால் அவர்கள் இறந்து போனார்கள் என்றோ அவர்களின் இறப்பிற்கான காரணங்கள் பற்றியோ எதுவும் கூற முடியாது. அதனால் இதுவரையிலான நினைவஞ்சலிப் பதிவுகளில் நாங்கள் ‘காணாமல் போனார்கள்’ என்றே எழுதி வருகின்றோம். ஆனால் 1983 ஆம் ஆண்டுக்கு பின்னரான இலங்கையின் வடக்கு, கிழக்கு ஆயுதப்போராட்ட இயக்கங்களின் வரலாற்றை முற்றாக அறிந்தவர்கள், காணாமல் போய்விட்ட அந்தப் படகுக்கும் பயணிகளுக்கும் என்ன நேர்ந்திருக்கலாம் அல்லது படகும் பயணிகளும் எந்த ஆயுதக்குழுவின் இலக்கிற்கு உள்ளாகியிருக்கலாம் என்பதை இலகுவில் கூறிவிடுவார்கள்.


தோழர் விசுவானந்ததேவனைக் கொல்வதின் மூலம், அவர் கொண்டிருந்த அரசியல் கருத்துகளையும் அழித்தொழிக்கலாம் என்ற நோக்கிலேயே அந்தப் படகு குறிவைக்கப்பட்டிருக்கலாம் என்கின்ற கருத்தே கடந்த நாற்பது ஆண்டு காலமாக எம்மைப் போன்றவர்களிடம் நிலவுகின்றது. தோழர் விசுவானந்ததேவன் கரையூரிலிருந்து படகு மூலம் பயணம் செய்கிறார் என்பது கொலையாளிகளுக்கு நன்கு தெரிந்திருக்கின்றது. கொலையாளிகள் சாதாரண மக்கள் போன்று பயணித்து, படகைத் தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்து அனைவரையும் கொன்றிருக்கலாம். ஒருவேளை சிலர் விடுவிக்கப்பட்டு இன்னமும் உயிரோடுமிருக்கலாம்.

குறைந்தது மூன்று வெவ்வேறு தரப்பினருக்கு தோழர் விசுவானந்ததேவனின் அரசியல் கருத்துகளுடன் உடன்பாடுகள் இல்லாமல் இருந்திருக்கலாம். அந்த மூன்று தரப்பினரும் பின்வருமாறு:


• இலங்கையில் ஆயுதப்போராட்டத்தை முன்னெடுத்ததால், இலங்கை அரசு
• இந்திய புரட்சிகர மார்க்சிய-லெனினிசக் சக்திகளுடன் அரசியல் ரீதியாக நெருங்கிய தொடர்புகளைப் பேணியதால், இந்திய அரசு
• மாற்றுக்கருத்துகளைக் கொண்டிருந்த காரணத்தினால், தமிழீழ விடுதலைப் புலிகள்


படகில் பயணித்த அனைவரையும் இலங்கை கடற்படை கைது செய்திருந்தால் அவர்களை சிறையிலடைத்து இருப்பார்கள். ஒருவேளை இலங்கை கடற்படையின் துப்பாக்கிப் பிரயோகத்திற்கு படகு உள்ளாகியிருந்தால், படகு காயமடைந்த மற்றும் இறந்த பயணிகளுடன் கரையொதுங்கியிருக்கும்.


இந்தியப் புரட்சிகர சக்திகளுடன் அரசியல் உறவை வைத்திருந்தமை என்பது மாத்திரம், தோழர் விசுவானந்ததேவனை இந்திய அரசு பிரதான எதிரியாகக் கருதுமளவிற்கோ அல்லது அவரைக் கொலை செய்யுமளவிற்கோ போதுமான காரணமாக இருந்திருக்க முடியாது. அத்துடன் இந்திய அரசிடம் ஆயுதப்பயிற்சியும் ஆயுதங்களும் பெற்று, இந்தியாவுடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டிருந்த சில ஆயுதப்போராட்ட இயக்கங்களும் இந்தியப் புரட்சிகர சக்திகளுடன் அரசியல் உறவுகளைப் பேணினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


புலிகள் 1986 ஆம் ஆண்டு மே மாதத்தில் தமிழீழ விடுதலை இயக்கத்தை அழித்து, ஏனைய ஆயுதப்போராட்ட இயக்கங்களின் மீதும் அச்சுறுத்தல்கள் விடுத்து, மாற்றுக்கருத்தாளர்களை கொன்றழிக்கும் படலத்தை ஆரம்பித்த காலகட்டத்திலேயே இந்த சம்பவம் நடந்தது.

அதனால் புலிகளே அந்தப் படகையும் பயணிகளையும் கடத்தி தோழர்களைப் படுகொலை செய்திருக்கலாம் என்ற முடிவுக்கே நாங்கள் வரவேண்டியுள்ளது. கொலைகளைச் செய்து துப்புத்துலக்க முடியாதவாறு தடயங்களையும் ஆதாரங்களையும் அழிப்பதில் புலிகள் வல்லவர்கள் என்பது சகலருக்கும் தெரிந்ததே. அத்தோடு 1989-90 களில் NLFT/PLFT அமைப்பைச் சேர்ந்த 17 தோழர்கள் புலிகளால் கடத்தப்பட்டு, வதைமுகாம்களில் சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.


தோழர் விசுவானந்ததேவன் உருவாக்கிய அமைப்புகளுக்கு (NLFT/PLFT ) 1990 களின் பின்னர் எதுவித தொடர்ச்சியும் இல்லாது போய்விட்டதால், புலிகளால் கொல்லப்பட்ட சக தோழர்கள் தொடர்பில் அக்கறைகளும் தேய்ந்து வருகின்றன என்பது மிகவும் வருத்தத்திற்குரியது.


17 வயதிலிருந்து தனக்காக வாழாமல் மக்களுக்காக மட்டுமே வாழந்து, தனது முழு நேரத்தையும் சொத்துக்களையும் மக்களுக்காகவே செலவிட்ட தோழர் விசுவானந்ததேவன் படுகொலை செய்யப்பட்ட நாற்பதாவது ஆண்டில், தோழர் விசுவானந்ததேவன் அவர்களுக்கும் மற்றும் தோழர்கள் ரோய் ஜோன்சன் சந்தாம்பிள்ளை, நரேஸ் சர்மா ஆகியோருக்கும் புரட்சிகர அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்

Leave a Reply