வரலாற்றின் இருண்ட பக்கங்களில் மறைக்கப்பட்ட விடயங்களும், எமது நினைவுகளுக்குள் மட்டுமே தங்கியிருந்து நாம் படிப்படியாக மறந்து கொண்டிருக்கும் உண்மைகளும் என்றென்றைக்குமாக மறைந்துபோகட்டும் என்று கருதுபவர்களும் இருக்கலாம்.
செல்வியின் இழப்பை நியாயப்படுத்த முயல்பவர்களும் இருக்கலாம். அதனைத் தொடர்ந்து புதுவிதமான கதைகளை உருவாக்கிக் கொண்டிருப்பவர்களும் இருக்கலாம்.அனைவரும் என்னை மன்னித்துவிடுங்கள்.
சொல்லப்படாத செய்திகளைச் சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்லியே ஆக வேண்டும்.
நண்பர்களே,
ஒருகாலத்தில் ஒன்றாக வாழ்ந்து, ஒன்றாகச் சிந்தித்து, சமூக விடுதலையை நேசித்த என் நண்பர்கள் பலரை இழந்த துயரம் இன்றளவும் என்னைத் துரத்திக்கொண்டிருக்கிறது.
அந்த இழப்புகளின் ஆழத்தில் புதைந்திருக்கும் சொல்லப்படாத செய்திகளை இப்போதும் சொல்லாவிட்டால், இனி ஒருபோதும் சொல்ல முடியாமல் போய்விடும். அதனால்தான் இந்த நினைவுகளை மீண்டும் எழுதுகிறேன்.
“அர்த்தமற்ற நாள்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்…
அவலத்திலும் அச்சத்திலும் உறைந்து போன நாள்கள்…
மனிதம் மறந்து சவமாய்க் கிடந்து
வாழ்தலில் எனக்கு பிரியமேயில்லை…”
மேற்கண்ட வரிகள் செல்வியின் இதயத்திலிருந்து வெளிப்பட்ட இரு வேறு கவிதைகளிலிருந்து பெறப்பட்டவை. இந்த வரிகள் எழுதப்பட்ட காலம், வடக்கு–கிழக்கு அரசியல் வரலாற்றின் மிகக் கொந்தளிப்பானதும், அச்சம் நிறைந்ததுமான காலப்பகுதியாகும்.
யாழ்ப்பாணத்தில் மூடப்பட்ட மாற்றுக் குரல்களின் கதவுகள்!
1990ஆம் ஆண்டு ஜனவரி 21ஆம் திகதி இந்திய இராணுவம் யாழ்ப்பாணத்திலிருந்து முற்றாக வெளியேறியது. 1990 பங்குனியில் திருகோணமலையில் இருந்த கடைசி இந்திய இராணுவ அணிகளும் வெளியேறின.இந்த வெளியேற்றத்துக்குப் பின்னர் யாழ்ப்பாணக் குடாநாடு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் சென்றது.அதன் பின்னர், மெல்ல மெல்ல மாற்று அரசியலுக்கான கதவுகள் மூடப்படத் தொடங்கின.
இந்திய இராணுவத்துடன் இணைந்து செயற்பட்டவர்கள் மட்டுமல்லாது, தமிழீழ விடுதலை தொடர்பில் வேறுபட்ட அரசியல் நிலைப்பாடுகளைக் கொண்டிருந்தவர்களும் புலிகளின் கண்காணிப்புக்கும் அழுத்தத்திற்கும் உள்ளாகத் தொடங்கினர்.
புலிகளுக்கு எதிரான கருத்துக்களைக் கொண்டிருந்தவர்கள், குறிப்பாக பல்கலைக்கழக மாணவர்கள், எழுத்தாளர்கள், படைப்பாளிகள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் போன்றோர் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டனர்.
PLFT-இன் அன்ரன் – ‘ஐயர்’ என அழைக்கப்பட்டவர் – அவரை நான் இணுவிலில் சந்தித்து உரையாடிய சில நாட்களுக்குப் பின்னர், 1990ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் புலிகளால் கைது செய்யப்பட்டார்.
NLFT இயக்க உறுப்பினர்களும், மாற்று இயக்கங்களில் முன்னர் செயற்பட்ட சிலரும் அக்காலப்பகுதியில் கைது செய்யப்பட்டனர். அவர்களில் சிலர் பின்னர் விடுவிக்கப்பட்டனர். சிலர் கொல்லப்பட்டனர். இன்னும் சிலர் தலைமறைவாக வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். அதேவேளை, புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த குடாநாட்டை விட்டு வெளியேறுவதற்குக்கூட அனுமதிப்பத்திரம் – ‘பாஸ்’ – பெற வேண்டியிருந்தது. அதற்கான விதிமுறைகளும் படிப்படியாகக் கடுமையாக்கப்பட்டிருந்தன.
செல்வியைச் சுற்றியிருந்த நண்பர்களின் வட்டம்!
இந்தக் காலகட்டத்தில் செல்வி யாழ்ப்பாணத்திலேயே இருந்தார். அவருடன் கவிஞரும் பல்கலைக்கழக மாணவியுமான சிவரமணி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களான தீப்பொறி தர்மலிங்கம், ஆசிரியர் தில்லை என அழைக்கப்பட்ட தில்லைநாதன், பல்கலைக்கழக மாணவர் மனோ என அழைக்கப்பட்ட மனோகரன் போன்றோர் மிக நெருக்கமான நண்பர்களாக இருந்தனர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தின் திண்ணைகளிலும், தேநீர் நேரங்களிலும் அவர்கள் அவ்வப்போது சந்தித்து உரையாடிக் கொண்டிருப்பார்கள்.
செல்வி, மனோ மற்றும் சிவரமணி ஆகியோருக்கு UTHR – University Teachers for Human Rights செயற்பாட்டாளர்களுடன் நெருங்கிய உறவும் தொடர்பும் இருந்ததாகப் பதிவுகள் குறிப்பிடுகின்றன. இதனை UTHR-ன் அறிக்கையொன்றும் பதிவு செய்துள்ளது (https://www.uthr.org/Book/Forward.htm). அந்தக் காலகட்டத்தில் UTHR-ன் முக்கிய செயற்பாட்டாளர்களில் சிலர் யாழ்ப்பாணத்தில் தலைமறைவாகச் செயற்பட்டுக்கொண்டிருந்தனர்.
அதேபோன்று, “பூரணி இல்லம்” என்ற பெண்கள் தொண்டு நிறுவனத்துடனும் செல்விக்கும் சிவரமணிக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது. போரினால் பாதிக்கப்பட்ட வடக்குப் பகுதி பெண்களுக்கு இந்த அமைப்பு நிவாரண உதவிகளை வழங்கி வந்தது.
செல்வி, யாழ்ப்பாணப் பெண்கள் ஆய்வு வட்டம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் அவை, இலக்கிய வட்டம் போன்ற அமைப்புகளிலும் செயற்பட்டார்.
இவ்வாறான சமூக, இலக்கிய, மனித உரிமை மற்றும் அரசியல் தொடர்புகளின் பின்னணியிலேயே செல்வியைச் சுற்றியிருந்த சந்தேகங்கள் தீவிரமடைந்தன.
அச்சத்தின் நிழலில் ஒரு தலைமுறை!
UTHR மீதான புலிகளின் சந்தேகப் பார்வை செல்வியின் மீதும் படர்ந்தது. விடுதலைப் போராட்டம் என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் எந்த அரசியல் நடவடிக்கையிலும் அடிப்படை மனித உரிமைகளும் ஜனநாயகமும் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம் என்பதை வலியுறுத்திய குரல்கள், அக்காலத்தின் ஆயுத அரசியலின் கடுமையான சூழலில் இடம்பிடிக்க முடியாமல் போனன.
செல்வியும் அவரது நண்பர்களும் அந்நிலையின் ஆபத்தை முழுமையாகப் புரிந்துகொள்ளவோ கணித்துக்கொள்ளவோ முடியாமல் போனது பின்னர் ஒரு வரலாற்றுத் துயரமாக மாறியது.
அப்போது நிலவிய தீவிரமான சூழலை நான் புரிந்துகொண்டிருந்தேன். எனது பல்கலைக்கழகக் கல்வியின் தொடர்ச்சியைப் பற்றிய கவலையைக்கூடத் துறந்து, யாழ்ப்பாணக் குடாநாட்டை விட்டு வெளியேற முடிவு செய்தேன்.
நண்பன் போலின் (Paul) உதவியுடன் தனியொருவராக எம்மை யாழ்ப்பாணக் குடாநாட்டிலிருந்து மீட்டு கொழும்புக்குக் கொண்டு சென்றார்.
யாழிலிருந்து புறப்படுவதற்கு முன்பும், கொழும்பை அடைந்த பின்னரும், செல்விக்கும் ஏனைய நண்பர்களுக்கும் நிலைமையின் தீவிரத்தை எடுத்துக்கூறி, குறைந்தபட்சம் தற்காலிகமாகவாவது யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறுமாறு கேட்டுக்கொண்டேன். ஆனால் அவர்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.
செல்வி உட்பட குடாநாட்டிலேயே தங்கிச் செயற்பட விரும்பிய நண்பர்கள், நான் வெளியேறியதைக் கடுமையாக விமர்சித்தனர்.
“யாழ்ப்பாணத்தில் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கின்றன. அவற்றை விட்டுவிட்டு இப்படி ஒவ்வொருவரும் வெளியேறினால், யார் அவற்றைச் செய்வது?” என்று செல்வி என்னைக் கடிந்துகொண்டார்.எனது வெளியேற்றத்தை விமர்சித்து செல்வி எழுதிய கடிதமொன்றும் பின்னர் எனக்குக் கிடைத்தது.
அந்தக் கடிதத்தின் பின்னணியில் இருந்தது கோபம் மட்டுமல்ல; தாம் நம்பிய பணியையும், தமது மக்களையும் விட்டு வெளியேறக்கூடாது என்ற உறுதியும் இருந்தது.
1991 – துயரத்தின் ஆண்டாக மாறிய மே!
மாற்று அரசியல் சிந்தனைகளைக் கொண்டிருந்தவர்களுக்கு 1990களின் ஆரம்பம் மிகுந்த உயிராபத்து நிறைந்த காலமாக இருந்தது.அந்த நெருக்கடியான காலப்பகுதியில் 1991ஆம் ஆண்டு மே மாதம் துயரத்தின் மாதமாக மாறியது.
மே 19ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமை, கவிஞரும் பெண்ணிலைவாதச் செயற்பாட்டாளரும் பல்கலைக்கழக மாணவியுமான சிவரமணி, தனது 23ஆவது வயதில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார்.தற்கொலைக்கு முந்திய நாட்களில் சிவரமணி பதட்டத்துடனும் விரக்தியுடனும் காணப்பட்டதாக அவரது நெருங்கிய நண்பர்கள் மூலம் நான் அறிந்தேன்.
இரவுகளில் யாராவது வீட்டுக் கதவைத் தட்டினால், தன்னிடம் கேட்காமல் கதவைத் திறக்கக்கூடாது என்று அவர் தனது குடும்பத்தினரிடம் கூறியிருந்ததாகவும் அறியப்பட்டது. சிவரமணியின் மரணம் ஒரு தனிப்பட்ட இழப்பாக மட்டும் இருக்கவில்லை. அது அக்காலத்தின் அச்சம், அழுத்தம், விரக்தி ஆகியவற்றின் ஆழத்தையும் பிரதிபலிக்கும் நிகழ்வாக அவரது நண்பர்களின் நினைவுகளில் பதிந்தது.
அதே நாளில் மற்றொரு கைது!
சிவரமணி தற்கொலை செய்துகொண்ட அதே மே 19ஆம் திகதி இரவு, “புதியதோர் உலகம்” நாவலின் ஆசிரியரும் தீப்பொறியின் முக்கிய செயற்பாட்டாளருமான கோவிந்தன் – கேசவன், டொமினிக் ஆகிய பெயர்களாலும் அறியப்பட்டவர் – கொக்குவிலில் வைத்து புலிகளால் கைது செய்யப்பட்டார்.
காலையில் சிவரமணியின் மரணச் செய்தி பரவியது. அன்றிரவு கேசவன் கைது செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து, அவருடன் தொடர்புடையவர் எனக் கூறப்பட்ட மற்றொரு பல்கலைக்கழக மாணவரும் கைது செய்யப்பட்டார். தனது பெயரை இங்கு குறிப்பிட அவர் விரும்பவில்லை. சிவரமணியின் மரண வீட்டில் கலந்துகொண்ட பின்னர் வீடு திரும்பி சீட்டு விளையாடிக்கொண்டிருந்தபோது, அவர் கைது செய்யப்பட்டதாக அவரது நினைவுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிவரமணியின் இறுதிச் சடங்கும், அந்த மாணவரின் கைதும், இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட சம்பவமும் ஒரே காலப்பகுதியின் அதிர்ச்சிகரமான அரசியல் சூழலோடு பின்னிப் பிணைந்திருந்தன.
கேசவனுடன் கைது செய்யப்பட்ட அந்தப் பல்கலைக்கழக மாணவர் சுமார் எட்டு மாதங்களின் பின்னர் விடுவிக்கப்பட்டார். அவரது கூற்றுப்படி, அவரைத் தடுத்து வைத்திருந்த விடுதலை முகாமில் “புதியதோர் உலகம்” கோவிந்தனும் இருந்தார். அவரையும் விடுவிக்கத் திட்டமிடப்பட்டிருந்ததாகத் தெரிந்தபோதிலும், இறுதி நேரத்தில் அந்த முடிவு மாற்றப்பட்டதாக அவர் கூறியிருந்தார்.
தர்மலிங்கத்தின் சரணடைதலும் மர்மமான முடிவும்!
கேசவன் கைது செய்யப்படுவதற்கு முன்னரே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவரான தீப்பொறி தர்மலிங்கம் புலிகளால் கைது செய்யப்பட்டிருந்தார்.
ஆயுத விவகாரம் ஒன்றைத் தொடர்புபடுத்தி, தனது நெருங்கிய நண்பரும் யாழ் நகரில் மருந்துக்கடை ஒன்றின் உரிமையாளருமான ஒருவரை புலிகள் கைது செய்ததையடுத்து, அவரை விடுவிப்பதற்காகத் தர்மலிங்கம் தானாகவே புலிகளிடம் சென்று சரணடைந்ததாகக் கூறப்படுகிறது.ஆனால் இருவரும் விடுவிக்கப்படவில்லை.
மே 21ஆம் திகதி கைது செய்யப்பட்டு எட்டு மாதங்களுக்குப் பின்னர் விடுவிக்கப்பட்ட அந்தப் பல்கலைக்கழக மாணவரிடம், புலிகள் விசாரணையின்போது தர்மலிங்கத்தின் கைது குறித்தும் உரையாடியதாகத் தெரிகிறது. அந்தத் தகவல்களின் அடிப்படையில், மே 21ஆம் திகதிக்கு முன்னரே தர்மலிங்கம் கைது செய்யப்பட்டிருக்கலாம் என ஊகிக்க முடிகிறது.
செல்வியைச் சுற்றி இறுகிய மரணத்தின் நிழல்!
நெருங்கிய தோழியான சிவரமணியின் மரணம், தன்னைச் சுற்றியிருந்த நண்பர்கள் தொடர்ச்சியாகக் கைது செய்யப்பட்டமை ஆகியவை செல்வியை ஆழமாகப் பாதித்திருந்தன. இந்தத் தொடர் கைதுகள் குறித்து தனது கவலையையும் விசனத்தையும் அவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வெளிப்படுத்தியதாகத் தெரிகிறது.
“ஒரு பைத்தியக்காரியைப் போல வெறுமையாக வீதிகளில் உலாவுகிறேன்” என்று தனது நண்பர் போலுக்கு எழுதிய கடிதத்தில் செல்வி குறிப்பிட்டிருந்தார். அந்த ஒரு வரிக்குள் அவரது மனநிலையின் பெரும் சிதைவு தெரிகிறது.
புலிகளால் கைது செய்யப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர், தனது பல்கலைக்கழக சக மாணவர் ஒருவரின் வீட்டுக்குச் சென்ற செல்வி,
“இனி உன்னிடம் வரமாட்டேன். என்னைப் பின்தொடர்கிறார்கள். அதனால் மற்றவர்களுக்கு என்னால் பிரச்சினை வரக்கூடாது” என்று கூறியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. அது, தனது மீது இறுகிவரும் ஆபத்தை அவர் உணர்ந்திருந்ததற்கான வேதனையான சாட்சியமாக இன்று நினைவில் நிற்கிறது.
30 ஓகஸ்ட் 1991 – செல்வி கைது செய்யப்பட்ட நாள்!
1991 ஓகஸ்ட் 30ஆம் திகதி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை அண்மித்த நாச்சிமார் கோவிலடிக் கலட்டியில் செல்வி வாடகைக்குத் தங்கியிருந்த வீட்டில் வைத்து புலிகளால் கைது செய்யப்பட்டார். நான் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுக்கொண்டிருந்த காலத்தில் அந்த வீட்டிற்கு பலமுறை சென்றிருக்கிறேன்.
செல்வி கைது செய்யப்பட்டபோது, அவர் எழுதியிருந்த கவிதைகள் உள்ளிட்ட அவரது வசமிருந்த ஆவணங்கள் அனைத்தையும் புலிகள் எடுத்துச் சென்றதாக அந்த வீட்டார் தெரிவித்திருந்தனர்.
அவரது கைது நிகழ்ந்த நாளும் தனித்துவமான ஒரு வரலாற்றுப் பதிவாகியது. அன்று செல்வி நடிக்கவிருந்த “The Accused” என்ற பாலஸ்தீன ஆங்கில நாடகம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அரங்கேறியது. செல்வி இல்லாமல், அவரது வசனங்களை வேறொருவர் வாசித்தார்.
அந்த நாடகத்தை நெறிப்படுத்தியவர், செல்விக்கும் எனக்கும் நெருங்கிய நண்பரும் அப்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவருமான, தற்போது கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளராக உள்ள கலாநிதி ஜெயசங்கர். அப்போதைய யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆங்கில மொழிக் கற்கைகள் துறையின் இணைப்பாளரான கலாநிதி சுரேஸ் கனகராஜா, ஆங்கிலப் போதனாசிரியரும் ஊடகவியலாளரும் எழுத்தாளரும் பேரறிஞருமான ஏ.ஜே. கனகரட்ணா ஆகியோரும் இந்த நாடகத்தின் மேற்பார்வைக்கும் அரங்கேற்றத்திற்கும் துணைபுரிந்தனர்.
“The Accused” – ஒரு நாடகத்தைச் சுற்றிய சர்ச்சை!
“The Accused” நாடகத்தின் கருப்பொருள் அன்றைய பல்கலைக்கழகச் சூழலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஒரு அரசியல் செயற்பாட்டாளர் விபத்து என்ற போர்வையில் இராணுவ அதிகாரியால் கொல்லப்படுகிறார். அவரைக் கொன்றுவிட்டதாக அதிகாரத்தில் இருந்தவர்கள் பெருமிதத்துடன் இருக்கும் நிலையில், கொல்லப்பட்டவர் மீண்டும் வந்து கதவைத் தட்டுகிறார். இதுவே நாடகத்தின் மையக் கரு.
UTHR-ன் ஸ்தாபகர்களில் ஒருவரும் “முறிந்தபனை” நூலின் இணை ஆசிரியருமான வைத்திய கலாநிதி ராஜினி திரணகம கொலைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் நாடகமாக இது இருப்பதாக சில இலக்கியவாதிகளும் நாடகவியலாளர்களும் அப்போது சர்ச்சையை உருவாக்கினர். ஆனால், நாடகத்தின் மையப்பொருள் இராணுவ எதேச்சாதிகாரத்துக்கு எதிரானது என்பதைப் புரிந்துகொள்ளாமல், அது புலிகளுக்கு எதிரான நாடகம் எனவும் சிலர் பிரசாரம் செய்ததாக இந்த நினைவுப் பதிவு குறிப்பிடுகிறது.
அந்தச் சூழலில், செல்வியைத் தொடர்ந்து பல்கலைக்கழக ஆங்கிலத் துறையைச் சேர்ந்த அவரது நண்பி ஒருவரும் புலிகளால் கைது செய்யப்பட்டார். ஆனால் அவர் ஒரு வாரத்திலேயே விடுவிக்கப்பட்டார். அவர் விடுவிக்கப்பட்டபோது, “உங்களில் பிரச்சினை இல்லை. ஆனால் உங்களுடன் இருந்தவர்கள் சிலர் உங்கள் வட்டத்தைப் பயன்படுத்தி எம்மைப் பற்றிய பிழையான தகவல்களைப் பிழையான தரப்பினருக்கு வழங்குகின்றனர்” என்று புலிகள் தெரிவித்ததாக அவர் மூலம் அறியப்பட்டது.
மூன்று தசாப்தங்களுக்குப் பின்னும் மறையாத செல்வி!
முப்பது ஆண்டுகளுக்குப் பின்னர், செல்வி – செல்வநிதி தியாகராஜா – குறித்த நினைவுகள் மீண்டும் மீண்டும் வந்து மனதைத் தொட்டுக்கொண்டிருக்கின்றன.
1980களில் புளொட்டின் மகளிர் அமைப்புச் செயற்பாட்டாளராகவும், “தோழி” சஞ்சிகையின் ஆசிரியராகவும், அசோக் என அறியப்பட்ட யோகன் கண்ணமுத்துவின் நண்பராகவும் செல்வி எனக்கு அறிமுகமானார். குறிப்பாக அசோக்குடன் நெருக்கமாக மாணவர் அமைப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த காலப்பகுதியில் செல்வியுடனான எனது நெருக்கமும் அதிகரித்தது.
1986ஆம் ஆண்டில் புளொட்டின் உட்கட்சி முரண்பாடுகளும், மாற்று இயக்கங்கள் மீதான புலிகளின் தடையும் காரணமாக அரசியலிலிருந்து ஒதுங்கிய பலர் மீண்டும் கல்விக்குத் திரும்பி பல்கலைக்கழகத்தில் சேர முயன்றனர். அசோக்–செல்வி வழியாக உருவான நெருக்கத்தின் தொடர்ச்சியாக, செல்வி எமது மருதனார்மட வீட்டில் தங்கியிருந்து கல்வியைத் தொடரத் தீர்மானித்திருந்தார். அவருடன் இணைந்து நானும் எனது கல்வியைத் தொடரத் தீர்மானித்தேன். அவர் எனக்கு ஆங்கிலம் கற்பித்தார். நான் அவருக்குப் பொருளியல் கற்பித்தேன்.
ஆனால் 1986ஆம் ஆண்டு ஏற்பட்ட பாரிய விபத்தினாலும், தவிர்க்க முடியாத அரசியல் நெருக்கடிகளாலும் பல்கலைக்கழகப் புகுமுகப் பரீட்சையை எழுதும் வாய்ப்பை நான் இழந்தேன். செல்வி பரீட்சையை எழுதி பல்கலைக்கழகத்தில் இணைந்தார்.
பின்னர் யாழ்ப்பாணக் குடாநாட்டில் எனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதால் அங்கு தங்க முடியாத சூழ்நிலை உருவானபோது, செல்வி தனது சேமமடு வீட்டிற்கு என்னை அழைத்துச் சென்று அடைக்கலம் கொடுத்து பாதுகாத்தார். அந்த உதவியை நான் ஒருபோதும் மறக்க முடியாது.
பின்னர் 1987ஆம் ஆண்டு நானும் பரீட்சை எழுதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இணைந்தேன். 1990ஆம் ஆண்டு மீண்டும் அரசியல் நெருக்கடி தீவிரமடைந்தபோது, நாங்கள் குடாநாட்டிலிருந்து தப்பிக் காடுகளின் ஊடாக வவுனியா சென்றோம்.
அப்போது செல்வியின் மைத்துனரான செல்வன் – கிருஷ்ணகுமார், செல்வியின் தங்கை கலாவின் கணவர் – கொரவப்பொத்தனை வீதியில் வைத்திருந்த வீட்டில் தங்கியிருந்த பின்னரே கொழும்புக்குச் சென்றோம். வவுனியாவரை ஓட்டி வந்த சைக்கிளை செல்வனின் தந்தையிடம் கொடுத்து, அவர் வழங்கிய ஆயிரம் ரூபாய் பணத்துடனேயே நான் கொழும்புக்கான ரயிலில் ஏறினேன்.
அரசியலைத் தாண்டிய ஒரு சகோதர உறவு!
இவ்வாறு எனக்கும் செல்விக்குமான உறவு அரசியலைத் தாண்டி, சகோதர–குடும்ப உறவாக மாறியிருந்தது. போராட்டக் காலங்களில் அவரை “செல்வி” என்று அழைத்த நான், பின்னர் வயதில் மூத்தவரான அவரை “செல்வி அக்கா” என்று அழைக்கத் தொடங்கினேன். அவரோ என்னை தனது உரிமையோடு, “டேய் குரு!”என்று அழைப்பார். அந்த அழைப்புக்குள் ஒரு நட்பும், சகோதரத்துவமும், உரிமையும் இருந்தது.
மிகவும் வறுமைப்பட்ட பெண் தலைமைத்துவக் குடும்பத்தில், தாயின் அரவணைப்பில் வளர்ந்த செல்வியின் வறுமையிலும் இருந்த செம்மையை அவரது சேமமடு வீட்டில் நேரில் கண்டு வியந்திருக்கிறேன். வவுனியாவின் சேமமடுவில் பிறந்த செல்வி, தனது சொந்த முயற்சியால் வாழ்க்கையில் மேலெழுந்தவர். போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டவர். போராட்டம் பின்னடைவைச் சந்தித்தபோதும் அயராத முயற்சியுடன் மீண்டும் கல்விக்குத் திரும்பி பல்கலைக்கழகத்தில் நுழைந்தவர். பல்கலைக்கழகக் கல்வியை நிறைவு செய்வதே தனது எதிர்கால வாழ்வின் அடித்தளம் என்று அவர் உறுதியாக நம்பினார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நாடகமும் அரங்கியலும் பாடத்தில் சிறப்புக் கல்வியின் இறுதியாண்டில் பயின்றுகொண்டிருந்தார். “இன்னும் ஒரு வருடம் தாக்குப்பிடித்தால் கல்வியை நிறைவு செய்துவிடலாம்” என்ற நம்பிக்கையுடன் இருந்தார். புலிகளால் அவர் கைது செய்யப்படாமல் இருந்திருந்தால், செல்வி இன்று ஒரு பேராசிரியையாக மிளிர்ந்திருப்பார் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை.
கவிதையிலிருந்து உலக அரங்கிற்குச் சென்ற செல்வி!
ஈழத்துக் கவிஞராகவும் பெண்ணிலைவாதியாகவும் “செல்வி” என்ற பெயரால் அறியப்பட்ட செல்வநிதி தியாகராசா, எழுத்துச் சுதந்திரத்திற்காகக் குரல் கொடுத்த கவிஞராக சர்வதேச கவனத்தைப் பெற்றார்.
“தோழி” என்ற பெண் இலக்கிய இதழின் ஆசிரியராகச் செயற்பட்ட செல்வி, பல்கலைக்கழக வாழ்க்கையில் நாடக நெறியாளராகவும் நடிகையாகவும், நாடகங்களின் எழுத்துருவாளராகவும் விளங்கினார். அவரது கவிதைகள் “சரிநிகர்”, “திசை” போன்ற இதழ்களிலும் புலம்பெயர் சஞ்சிகைகளிலும் வெளிவந்தன. அவரது சில கவிதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு தொகுப்புகளிலும் இடம்பெற்றன.
ஈழத்துப் பெண் கவிஞர்களின் குரல்களாகத் தொகுக்கப்பட்ட “சொல்லாத சேதிகள்” என்ற தொகுப்பிலும் செல்வியின் கவிதைகள் இடம்பெற்றன.
1992ஆம் ஆண்டுக்கான எழுத்துச் சுதந்திரத்துக்கான சர்வதேச விருதும் செல்விக்கு வழங்கப்பட்டது.
1994ஆம் ஆண்டில் சர்வதேச கவிதை அமைப்பின் International Poetry Society Award விருதும் அவருக்கு வழங்கப்பட்டது.
மானுட சுதந்திரத்திற்காகவும் அடிப்படை உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்த, “சுதந்திரம் மறுக்கப்பட்ட” கவிஞர்களுக்காக வழங்கப்பட்ட அங்கீகாரமாக இவ்விருதுகள் பார்க்கப்பட்டன.
விருது வழங்கப்பட்ட பின்னர், ஏனைய சர்வதேச கவிஞர்கள் விடுதலை செய்யப்பட்டதைப் போலவே செல்வியும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று அந்த அமைப்பு கோரியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அந்தக் கோரிக்கை நிறைவேறவில்லை. முதன்முறையாக இலங்கையைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் அந்த விருதைப் பெற்றுக்கொள்ள செல்வி அழைக்கப்பட்டிருந்த போதிலும், அப்போதும் அவர் விடுதலை செய்யப்படவில்லை.
தடுப்புக்கைதியாக இருந்ததை ஒப்புக்கொண்ட புலிகளின் ஆலொசகர் அன்றன் பாலசிங்கம்!
1993 மார்கழியில் வெளியான “சரிநிகர்” பத்திரிகையில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்ட விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் கலாநிதி அன்ரன் பாலசிங்கத்தின் பேட்டியில், செல்வி தடுப்புக்கைதியாக இருந்தமை குறித்து அவர் ஒப்புக்கொண்டார். அந்தப் பேட்டி “Counterpoint” என்ற ஆங்கிலச் சஞ்சிகையில் வெளியாகியது. செல்வியின் புகைப்படங்களுடன் அந்தச் செவ்வியும் இணைக்கப்பட்டிருந்தது. இதன் மூலம் செல்வியின் கைது ஒரு வதந்தி அல்லது காணாமற்போன ஒரு தனிநபரின் மர்மம் என்ற நிலையைத் தாண்டி, அக்கால அரசியல் சூழலில் பதிவாகியிருந்த ஒரு உண்மையாகக் கருதப்பட வேண்டியதாகிறது.
1997 – மரண தண்டனை குறித்த ஒப்புதல்!
பல்கலைக்கழக மாணவர்களான செல்வி என்ற செல்வநிதி தியாகராஜா மற்றும் மனோ என்ற மனோகரன் ஆகியோருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டதாக விடுதலைப் புலிகள் 1997ஆம் ஆண்டு ஒப்புக்கொண்டனர். அதன் பின்னர் செல்வியின் விடுதலைக்காக பல சர்வதேச நாடுகளும் குரல் கொடுத்தன.
சர்வதேச மன்னிப்புச் சபை உள்ளிட்ட மனித உரிமை அமைப்புகளும் அவரது விடுதலையைக் கோரியிருந்தன ஆனால் அந்த விடுதலை இறுதிவரை சாத்தியமாகவில்லை. செல்வியின் வாழ்க்கை அங்கேயே ஒரு முடிவற்ற கேள்வியாக நின்றுவிட்டது.
சொல்லப்படாத சேதிகளின் சுமை
இப்போது, மூன்று தசாப்தங்களுக்குப் பின்னர், செல்வி நம் நினைவுகளாகவும், அவரது கவிதைகளாகவும் மட்டுமே எங்களுடன் பயணிக்கிறார்.
“செல்வி” என்ற தோழியின் நினைவு – பின்னர் எனக்கு “செல்வி அக்கா”வாக மாறிய அந்த உறவின் நினைவு – இன்னமும் மனதில் பாரமாகத் தங்கியுள்ளது.
ஒரு மனிதரின் மரணம் மட்டுமல்ல இது.
ஒரு கவிஞரின் குரல் மௌனமாக்கப்பட்ட வரலாறு.
ஒரு பெண்ணின் கனவுகள் பாதியிலேயே நிறுத்தப்பட்ட வரலாறு.
ஒரு பல்கலைக்கழக மாணவியின் எதிர்காலம் துண்டிக்கப்பட்ட வரலாறு.
ஒரு சமூகத்தின் மாற்றுக் குரல்கள் அச்சத்தின் கீழ் ஒடுக்கப்பட்ட காலத்தின் வரலாறு.
ஒரு நண்பனின் நினைவுக்குள் மட்டும் உயிருடன் இருக்கும் ஒரு தோழியின் வரலாறு.
விடுதலைப் போராட்டத்தின் பெயரால் மானுட அறத்திற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள எந்தப் போராட்ட அமைப்புக்கும் உரிமை இல்லை.
எந்த இலட்சியமும் ஒரு மனிதனின் அடிப்படை உரிமையை அழிப்பதற்கு நியாயமாக முடியாது.
செல்வி கொல்லப்பட்டதாகக் கூறப்படும் வரலாறு, எமது போராட்டம் மானுட விழுமியங்களை விட்டு விலகிச் சென்றதற்கான ஆதாரங்களில் ஒன்றாகவே நான் பார்க்கிறேன்.
விடுதலை என்ற சொல்லுக்கு மனித உயிரின் மதிப்பையும், சிந்தனைச் சுதந்திரத்தையும், கருத்து வேறுபாட்டுக்கான இடத்தையும் மறுக்கும் உரிமை இல்லை. அந்த உண்மையைச் சொல்லாமல் ஒரு வரலாற்றை முழுமையாக எழுத முடியாது.
மறக்க முடியாத ஒரு பெயர் செல்வி!
செல்வி உங்களின் விடுதலைக்காக பல சர்வதேச நாடுகள் குரல் கொடுத்தன. மனித உரிமை அமைப்புகள் குரல் கொடுத்தன. சர்வதேச மன்னிப்புச் சபை உள்ளிட்ட அமைப்புகள் உங்கள் விடுதலையைக் கோரின.ஆனால் நீங்கள் விடுதலை செய்யப்படவில்லை.
காலம் கடந்தது.
போர் முடிந்தது.
தலைமுறைகள் மாறின.
ஆனால் நீங்கள் திரும்பி வரவில்லை.
இன்று எங்களிடம் இருப்பது உங்கள் கவிதைகளும், உங்கள் நினைவுகளும், உங்களை அறிந்தவர்களின் சாட்சியங்களும் மட்டுமே.
உங்கள் குரல் மௌனமாக்கப்பட்டிருக்கலாம்.
ஆனால் உங்கள் கவிதைகள் இன்னும் பேசுகின்றன.
உங்கள் வாழ்க்கை இன்னும் கேள்வி கேட்கிறது.
உங்கள் காணாமற்போன காலம் இன்னும் பதில் கேட்கிறது. அந்தக் கேள்விகளுக்குப் பதில் கிடைக்கும்வரை, செல்வியின் நினைவு முடிவடையாது.
சொல்லப்படாத சேதிகள் சொல்லப்பட வேண்டும்.
மறைக்கப்பட்ட நினைவுகள் மீட்டெடுக்கப்பட வேண்டும். மனித உயிர்களின் பெறுமதி எந்த அரசியலுக்கும் மேலானது என்பதை வரலாறு நினைவூட்ட வேண்டும்.
குறிப்பு
என்னுள் உறைந்திருந்த அழியாத நினைவுகளுடனும், செல்வியுடன் நெருக்கமாக இருந்து செயற்பட்ட நண்பர்கள் பலரிடமிருந்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களுடனும் இந்தப் பதிவை உருவாக்கியுள்ளேன்.
இந்த நினைவுகளை மீட்டெடுக்கவும், பதிவை உருவாக்கவும் உதவிய பெயர் குறிப்பிட விரும்பாத நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்.
நினைவுகளுடன்,
உங்கள் நண்பன்
குரு என்ற நடராஜா குருபரன்
இந்தப்பதிவு எனது தனிப்பட்ட பதிவு. அதற்கு முழுமையாக நானே பொறுப்பு. ஆரோக்கியமான விவாதங்கள், கருத்தியல் ரீதியான விமர்சனங்கள் மகிழ்வுக்க உரியதாக இருக்கும்