வலதுசாரிகளும், கம்யூனிஸ்ட் எதிர்ப்பாளர்களும்


எந்த ஒரு நாட்டிலும் கம்யூனிஸ்டுகள் பலவீனமாகி வருவது கம்யூனிஸ்டுகளின் இழப்பல்ல அது.
அந்நாட்டில் ஜனநாயகம் அழிக்கப்பட்டு
ஆட்சி அதிகாரம் அராஜகத்தாலும் சர்வாதிகாரத்தாலும் நிரப்பப்பட்டு வருகிறது என அர்த்தம்.
அதிர்ஷ்டவசமாக இந்திய ஜனநாயக இயக்கம் இன்னும் நம்பிக்கை இழக்கவில்லை.
ஜந்தர் மந்தர் 2.0 வாக்குத் திருட்டுக்கு எதிராக ஞானேஷ் குமார் பதவி விலகக்கோரி CJP மற்றும் இடதுசாரி மாணவர் அமைப்புகளால் பொதுவாக Gen Z என அறியப்படுகிற இளம் தலைமுறைகளால் அறிவிக்கப்பட்ட சாத்வீகமான போராட்ட அறிவிப்பாகும்.
ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு வயிற்றைக் கலக்கிக் கொண்டிருக்கும்
அச்ச உணர்வு இந்துத்துவ பாசிசத்திற்கெதிராக படித்த புதிய தலைமுறை இங்கு தெருவில் இறங்கி போராடத் தயாராகி விட்டது தான். சுதந்திர இந்தியாவில் இது ஒரு புதிய முன்னேற்றகரமான போராட்ட வரலாற்றில் முற்போக்கான அணி திரட்டல் வடிவமுமாகும்.
உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனைகளையும் மதிக்காமல் அக் 9 இரவு முதல் 254 ரயில் போக்குவரத்துகளையும், 57 மெட்ரோ ரயில் நிலையங்களையும் டெல்லி அரசு மூடியது. டெல்லியைச் சுற்றி, டெல்லிக்கு வரும் அனைத்து வழிகளையும் இரும்பு தடுப்புகள் கொண்டு அடைத்தது. 4 கிமீ சுற்றளவிற்கு இணையத் தொடர்பை துண்டித்தது. ஒவ்வொரு இரும்புத் தடுப்புக்கும் ஒருவர் என்ற கணக்கில் விமானங்கள் மூலம் CRPF, துணை ராணுவப் படை என 50000 பேரைக் கொண்டு டெல்லியை கலவரப் பகுதியைப் போல் சுதந்திர இந்தியாவில் முதல்முறையாக மாற்றியது ஒன்றிய, டெல்லி பாஜக அரசுகள் தான். இந்த நடவடிக்கைகள் ஆட்சியாளர்கள் பெரும் தொடை நடுக்கத்தில் இருப்பதை உலகிற்கு எடுத்துக் காட்டியது.
10ம் தேதி அதிகாலை யூட்யூபர் துருவ்ரத் கைது செய்யப்படுகிறார் CJP தலைவர் அபிஜித் டெல்லிக்கு வருகையில் விமானத்திற்குள்ளேயே வைத்து கைது செய்யப்படுகிறார். ஆனாலும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஜந்தர் மந்தரில் கூடுவதை டெல்லி காவல்துறையால் தடுக்க முடியவில்லை.
ஒருபுறம் டெல்லி CPM தலைமை அலுவலகத்திலிருந்து தலைவர்கள் பலர் அணிவகுக்கின்றனர். கேரள ஹவுசிலிருந்து முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் ஒரு குழு அணி வகுக்கிறது. DYFI தலைமை அலுவலகத்திலிருந்து AA ரஹீம் எம்பி தலைமையில் DYFI SFI குழு அணிவகுக்கிறது. AlSA நேஹா , பிரசாந்த பூஷன், யோகேந்திர யாதவ் தலைமையில் ஒரு குழு, CPI அஜோய் பவனிலிருந்து ஒரு குழு என டெல்லி நகரத்திற்குள்ளேயே பல முனைகளிலிருந்து போராட்டக்காரர்கள் ஜந்தர் மந்தர் நோக்கி அணி வகுத்தனர்.
“ஞானேஷ் குமார் பதவி விலகு”
என ஒற்றைக்கோஷம் டெல்லி வீதிகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் செங்கொடிகளுக்குள்ளிருந்து தீப்பிழம் பைப் போல் வெளிவரத் துவங்கியது. பிறகு போராட்டக்காரர்கள் மீது டெல்லி காவல்துறையும், துணை ராணுவப் படையும் மிருகத்தனமான தாக்குதலை நடத்தியது.
மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் MA பேபி அவர்களை காவல்துறை அநாகரிகமாக இழுத்துச் சென்று கைது செய்தது. முன்னாள் அமைச்சர்கள் சைலஜா டீச்சர், ஸ்ரீமதி டீச்சர் ஆகியோரைக் கூட காவல் துறையினர் அவ்வாறே நடத்தினர்.
மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்களை பல வாகனங்களில் ஏற்றி மூன்றரை மணி நேரத்திற்கும் மேலாக குடிநீர் கூட கொடுக்காமல் அலைக்கழித்தது.
குறிப்பாக தோழர் பினராயி விஜயன், முன்னாள் நிதியமைச்சர் பாலகோபால் MP ஜான் பிரிட்டாஸ் ஆகியோர் மூவரையும் பொலீரோ ஜீப்பில் ஒரே சீட்டில் அடைத்து வைத்து 3 1/2 மணி நேரம் டெல்லிக்குள் அலைக்கழித்து பின் காவல் நிலையத்தில் இறக்கி விடப்பட்டனர். இவர்களுக்கு மாலைக்குப் பிறகே குடிநீரும் உணவும் வழங்கப்பட்டிருக்கிறது. இது குறித்து தோழர் பினராயி விஜயன் செய்தியாளர்களிடம் ” இது போன்ற ஆட்சியாளர்களின் நடவடிக்கைகள் விசித்திரமாக உள்ளது. கைது செய்யப்பட்டவர்களை ஏன் பல மணி நேரம் அலைக்கழிக்க வேண்டும்? ஆட்சியாளர்களின் அச்சத்தையே இது காட்டுகிறது. காவல்துறையினர் மேல் மட்டத்தில் இருப்பவர்கள் என்ன உத்தர விடுகிறார்களோ அதனை அமுலாக்குகிறார்கள். காவல்துறையினர் மீது எனக்கு தனிப்பட்ட புகார் ஏதுமில்லை. ஆனால் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தைத் தொடர்வோம்” என
அரசியல் முதிர்ச்சியுடன் பதிலளித்தார்
பொதுவாக நேற்று டெல்லி போராட்டக் களத்தைக் கண்ட போது இது திருவனந்தபுரமா, கண்ணூரா என வியக்கும் வகையில் செங்கொடிகள் ஆவேசமாக வீசிய காட்சியைத்தான் உலகம் கண்டது.
அமைதியாக போராட்டத்தை நடத்த அனுமதித்திருந்தால் உலகம் முழுக்க இச்செய்தி எடுத்துச் சென்றிருக்க வாய்ப்பிருந்திருக்காது. அதற்காக
அந்த “தொடை நடுங்கிகள் இருவரு”க்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும்.
தோழர் வீரபாண்டியன் சொன்னது போல “எங்களைத் தேர்தல் களத்தில் மட்டும் தேடிக் கொண்டிருக்காதீர்கள்.
தேர்தல் தாண்டி போராட்டக் களத்தில் காணுங்கள்” என்று சரியாகவே சொன்னார்.
மீண்டு வருவோம்……
மீண்டும் வருவோம்

Leave a Reply